வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒளி.நரேந்திரனுக்காக அருள்மொழியிடம் தூது சென்ற அம்மங்கை தேவி, தன் தமக்கையின் மறுமொழியைக் கேட்ட பிறகு, அவளுடன் பழகுவதையே நிறுத்திக் கொண்டாள். முன்பு, சோழபுரத்தில் நரேந்திரன் அவளிடம் தூது சொல்லிய போது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அருள்மொழியால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு முன் அற்பமானதுதான்.

‘தமக்கையார் நரேந்திரனிடம் நேரில் பேசுவதாகச் சொல்கிறார்களே, இதற்கு என்ன பொருள்? கொடும்பாளூர் இளவரசருக்குத் தமது மனத்தில் இடமில்லை என்கிறார்களே, இதற்கு என்ன பொருள்? இந்த இரண்டு செய்திகளையும் சேர்த்துப் பார்த்தால் அதன் முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியாதென்று நினைக்கிறார்களா? தமக்கையாரும் நரேந்திரருமே நன்றாகப் பேசிக்கொள்ளட்டும்! இவர்களை யார் வேண்டாமென்று தடை செய்கிறார்கள்? இடையில் நான் ஒருத்தி எதற்குத் தூதுபோய்ப் பலியாக வேண்டும்?’

இப்படியெல்லாம் நினைத்துத் தவிப்புற்ற அம்மங்கை ஒரு நாள் நரேந்திரனின் தொல்லை பொறுக்காமல், “நங்கையாரிடமே நேரில் கேட்டுக்கொள்ளுங்கள்! என்னிடம் எதையுமே வெளியிட மாட்டார்கள்!’’

என்று அழுகையும் ஆத்திரமாகக் கூறிவிட்டாள். அருள்மொழியைச் சந்தித்த விவரத்தை அவனிடம் தெரிவிக்கவில்லை. சோழபுரத்தில் தூது செல்வதாக ஒப்புக்கொண்டவள் தஞ்சைக்கு வந்தவுடன் திடீரென்று மாறிப்போனதை நரேந்திரனால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. முன்பெல்லாம் கலகலவென்று பேசிச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்த அம்மங்கை இப்போது அவனிடமே எரிந்து விழத் தொடங்கினாள். எதிர்பாராத சந்திப்புக்களின்போது கூட அவள் முகத்தைச் சுளித்துக்கொண்டு விலகிச் சென்றாள்.

ஆகவே, இனி அம்மங்கையை நம்பிப் பயனில்லை என்று கண்ட நரேந்திரன், தானே அருள்மொழியை அணுக நினைத்தான். ஆசை மிகுதியாக அச்சமும் அதிகரித்தது. பலமுறை அந்தப்புரத்துக்குச் சென்று அருள்மொழியின் கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டிடு, உள்ளே நுழையும் துணிவின்றித் திரும்பினான்.

கடைசியாகத் துணிவை வரவழைத்துக்கொண்டு சென்றபோது அங்கே அருள்மொழியும் சில பணிப் பெண்களுமாகச் சேர்ந்து இளங்கோவுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார்கள். இளங்கோ சிறைப்பட்டிருந்ததோ, சிறை மீண்டதோ நரேந்திரனுக்குத் தெரியாதாகையால், பாண்டிய நாட்டிலிருந்து திரும்பியதாக நினைத்துக் கொண்டான்.

அருள்மொழி அன்று பகல் இளங்கோவை உபசரித்துக் கொண்டிருந்தபோது, அவள் கண்களிலிருந்து எந்த இரகசியத்தை இளங்கோவால் காண முடியவில்லையோ அதை நரேந்திரன் கண்டுவிட்டான்.

‘கொடும்பாளூர்க்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்’ என்று தனக்குள் கூறிக் கொண்டே திரும்பினான். ஆனால் அதே கொடும்பாளூர்க்காரனையும் ரோகணத்து இளவரசியையும் அடுத்தாற்போல் ஒன்றாகப் பார்த்தபோது அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

இந்த நிலையில்தான் அருள்மொழியே நரேந்திரனைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தாள். அவளைக் கண்டபோது நரேந்திரனுக்கு ஏற்பட்டது ஆனந்தமா, அச்சப் பரபரப்பா என்று கூற முடியாது.

“அம்மங்கை தேவி உங்களிடம் வந்து என் மறுமொழியைச் சொல்லியிருப்பாள். அதன்படி நேரில் வந்து சந்திப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். வெகு நாட்களாகி விட்டன...’’ என்று தொடங்கினாள் அருள்மொழி.

“உங்களைச் சந்தித்ததாகவே என்னிடம் அம்மங்கை கூறவில்லையே!’’

அருள்மொழி அதன் காரணத்தை யூகித்துத் தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டாள்.

“அவள் கூறாவிட்டால் போகட்டும்; இப்போது நானே வந்துவிட்டேன்.’’

அவளிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று புலப்படாமல் தவித்துக் கொண்டிருந்த நரேந்திரனிடம் அவள் தன் தங்கையின் பொருட்டுத் தூது வந்திருப்பதாகக் கூறினாள். “அம்மங்கை அனுப்பவில்லை; ஆனால் அவள் மனத்தைத் தெரிந்துகொண்டு நானே வந்திருக்கிறேன்’’ என்றாள்.

இவ்வாறு அருள்மொழி தன் தங்கைக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தபோதுதான் அந்த வழியே சென்ற இளங்கோ தாழ்வாரத்தின் ஓரமாகத் தயங்கி நின்றான். இருளில் அவன் மறைந்திருந்ததால் மற்றவர்கள் அவனைக் கவனிக்கவில்லை.

அருள்மொழி நரேந்திரனிடம் தன் தங்கைக்காக உருக்கத்தோடு பேசினாள்.

“இளவரசே! பெண்களாகிய எங்கள் மனத்தை தெரிந்து கொள்வதுதான் கடினமென்று உலகம் சொல்கின்றது. ஆனால், எங்களைவிட ஆண்களாகிய உங்களைத்தான் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களுடன் ஒரு பெண் பேசுவதிலிருந்து, உங்களிடம் அவள் பழகுவதைக் கொண்டு, உங்களை அவள் உபசரிப்பதிலிருந்து உங்களால் அவளைப் புரிந்துகொள்ள முடியாதா? உங்களை அவள் எந்தக் கண்களால் பார்க்கிறாள் என்று கூடவா நீங்கள் உணர்வதில்லை? பெண்கள் தங்கள் மனத்தில் இருப்பதை வாய் திறந்து என்றாவது கூறுவார்களா?’’

வெளியே நின்றுகொண்டிருந்த இளங்கோ திகைப்புற்றான். அவன் உள்ளத்தில் ஏற்பட்ட பரபரப்பு அவன் தலையைச் சுற்ற வைத்தது.

அருள்மொழியோ நரேந்திரனிடம், “இளவரசே! நீங்கள் தஞ்சைக்கு வந்ததிலிருந்து உங்களது நிழலாகவே தொடர்ந்து வரும் அம்மங்கையை

நீங்கள் அறிந்துகொள்ள வில்லையா?’’ என்று கேட்டாள். “அவள் என்ன, இன்னுமா விவரந் தெரியாத சிறுமி? அவளிடம் எப்படித்தான் உங்களுக்கு என்னைப் பற்றிச் செய்தி கூற முடிந்ததோ, தெரியவில்லை’’ என்றாள்.

வேங்கி இளவரசன் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். ஆனால் அவன் உள்ளம் கொதிப்படைந்து கொண்டிருந்தது. ‘இதையெல்லாம் என்னிடம் வந்து கூறுவதற்கு இவர்கள் யார். தமக்கு விருப்பமில்லையென்றால் அதை மட்டும் கூறிவிட்டுப் போகலாமே!’

“நீங்கள் ஒரு நாட்டு இளவரசராக இருக்கிறீர்கள். பற்பல போர்க்களங்களைக் கண்டிருக்கிறீர்கள். பலரோடு பழகி, பலரைத் தெரிந்துகொண்டு பாராளப் போகிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு உங்களுக்காகவே வளரும் ஒரு பெண்ணின் மனமா தெரியவில்லை?’’

“இளவரசியார் எனக்கு இவ்வளவு தூரம் அறிவுரை கூறிய பிறகு, நானும் சில விஷயங்களைக் கூறவிரும்புகிறேன்’’ என்றான் நரேந்திரன்.

“என்ன?’’

“நங்கையாரின் மனம் என்னை மறுப்பதற்குக் காரணம் இருக்கிறது. அங்கே கொடும்பாளூர் இளவரசர் குடியிருக்கக் கூடும் என்று முன்பே நான் ஐயமுற்றேன். அந்த ஐயம் நான் தஞ்சைக்கு வந்தவுடனேயே உறுதிப் பட்டுவிட்டது. இன்று பிற்பகலில்தான் அது ஐயத்துக்கே இடமில்லாத உண்மை என்பதையும் கண்டுகொண்டேன். தங்களுடைய அந்தப்புரத்தில் கொடும்பாளூர் இளவரசர் கொலுவீற்றிருந்தபோது அவருக்கு நடந்த உபசரிப்புகள் என் கண்களைத் திறந்துவிட்டன இளவரசி!’’

காவலனால் கைப்பற்றப்பட்ட கள்வனின் நிலை இப்போது அருள்மொழிக்கு. தன் தங்கையிடம் அதை மறுத்துக் கூறிய அதே துணிவு ஏனோ அவளுக்கு நரேந்திரன் முன் ஏற்படவில்லை. “இல்லை இளவரசே... தங்களது ஐயம் தவறானது... அப்படி ஒன்றும் இல்லை!’’ அருள்மொழி தடுமாறினாள். அருள்மொழியின் தடுமாற்றத்தைத் தன் வாழ்நாளில் முதன் முறையாக கண்ணுற்றான் இளங்கோ.

நரேந்திரனோ அவளது தடுமாற்றத்தால் துணிவு பெற்று மேலே பேசினான்.

“நங்கையாரே! நாமெல்லோரும் உற்றார் உறவினர்கள். அதனால்தான் நீங்கள் அம்மங்கையைப் பற்றி என்னிடம் உரிமையோடு பேசுகிறீர்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கு முன்பு, பிற்பகலில் தங்கள் கூடத்தில் இளங்கோவைப் பார்த்தவுடனேயே நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். கொடும்பாளூர்க்காரர்கள் பாக்கியம் செய்தவர்களே! அதனால், தங்களை மணக்க முடியும் என்றிருந்த ஆசையை அப்போதே களைந்துவிட்டேன். காரணம். அவர் அங்கேயிருந்தது மட்டிலுமல்ல! தங்களுடைய கண்களில் அவருக்காகச் சுடர்விட்ட கனிவைக் கண்டு விட்டேன்.’’

“போதும், இளவரசே’’ திரும்பிச் செல்ல முயன்றாள் அருள்மொழி.

“ஒரே ஒரு கணம் நின்று விட்டுச் செல்லுங்கள். நீங்கள் யோசனை செய்து பார்க்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. தங்களது பணிவிடைகளையும் உபசரிப்பையும் பெற்றுக் கொண்டு அவர் நேரே எங்கு சென்றார், தெரியுமா? ரோகணத்து இளவரசியைக் காண...’’

“இளவரசே! எனக்கு எல்லாமே தெரியும். நீங்கள் ஒன்றுமே கூறவேண்டாம். நான்தான் அவரை அங்கு அனுப்பி வைத்தேன்!’’ என்றாள்.

வெளியில் நின்ற இளங்கோ, கால்கள் தடுமாறத் தூணில் சாய்ந்தான்.

“தெரியுமா? உங்கள் மனத்தில் குடியிருப்பவரையா நீங்களே வேறு பெண்ணிடம் அனுப்பி வைக்கிறீர்கள்? இதை என்னால் நம்ப முடியவில்லை! அரண்மனையில் மற்றவர்களுக்கு இது தெரியுமா?’’

“இப்போது தெரியவேண்டாம், காலம் வரும்போது தெரிந்து கொள்வார்கள். அப்போது யாரும் அவர்களைத் தடை செய்யவும் மாட்டார்கள்.’’

“அதுவரையில் நான் பொறுத்திருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி உங்கள் தங்கைக்காக என்னிடம் வந்தீர்களோ. அதே போல் நான் உங்களுக்காக என் தமையனாரிடம் செல்கிறேன். என்ன இருந்தாலும் இளங்கோ எனக்குத் தமையனார் முறை உள்ளவர்தாமே?’’

“வேண்டாம் இளவரசே! வேண்டவே வேண்டாம். எனக்கு அதன் மூலம் ஒரு போதும் நன்மை செய்ய முடியாது! அவருடைய இன்பத்தைக் கெடுத்தால் அது என் அமைதியைக் குலைத்துவிடும். நீங்கள் அவரிடம் போகவும் வேண்டாம்; ஒன்றும் கூறவும் வேண்டாம். நீங்கள் எனக்குச் செய்யும் பேருதவி-எதையுமே யாரிடமும் கூறாதிருக்கும் உதவிதான்! அம்மங்கையிடம்கூட உங்களை மறந்து எதையும் சொல்லிவிட வேண்டாம், நான் வருகிறேன்.’’

அருள்மொழி தேவியார் வெளியில் வருவதற்குள், அரண்மனைக்கு வெளியே சூழ்ந்திருந்த இருள் இளங்கோவை விழுங்கி விட்டது.

தொடரும்

Comments