வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்குள்

பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்குள் 

முன்கோபக்காரர்களில் இரு வகையினர் உண்டு. முன்கோபத்தால்
செய்துவிட்ட முரட்டுத்தனத்துக்காக வருந்தி, அதை மாற்றிக்கொள்ளத்
தயங்காதவர்கள் ஒருவகை. செய்ததற்காக வருந்தினாலும், செய்துவிட்டதை
மாற்றக்கூடாது என்று உடும்புப்பிடியாக நிற்பவர்கள் மற்றொரு வகை
கொடும்பாளூர்ப் பெரிய வேளார் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
முன்கோபம், முரட்டுத்தனம், பிடிவாதம் இவற்றின் கலப்பு உருவம் அவர்.

வாகை சூடி இளங்கோவை வரவேற்கத் துடித்துக் கொண்டிருந்த அவரது
கரங்கள் அவன் வந்ததும் வராததுமாக அவனுக்குச் சிறைச்சாலையைச்
சுட்டிக்காட்டி விட்டன. ஆனைமங்கலத்தில் அவன் ஏன் தங்கி வந்தான்?
எதற்காகத் தங்கி வந்தான்? என்றுகூட அவர் அவனிடம் கேட்கவில்லை.
‘ஆயிரம்பேர் கூட்டத்துடன் ஈழத்திலிருந்து திரும்பியவன் எவளோ ஒரு
பெண்ணை உத்தேசித்து அங்கு தங்கலாமா? பகைவரின் புதல்வியிடம்
அவனுக்கு என்ன வேலை? அப்படித்தான் தங்கினான்; நடுப்பகலில்
மாளிகைக்குள் புகுந்த பகைவர்களை விட்டுவிட்டு வெறுங்கையோடு இவன்
எப்படித் தஞ்சைக்கு வரலாம்?’

பெரிய வேளாரின் முன்கோபம் தணிந்தவுடன் அவருடைய பின்
யோசனை தலைகாட்டத் தொடங்கியது. அருள்மொழி நங்கையின் அறிவுத்
திறனில் அவருக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. அவள் குறுக்கிட்டு
வினவின ஒவ்வொரு சொல்லையும் அவர் எடைபோட்டுப் பர்த்தார்.

நாளைக்கு முடிசூடிக் கொடும்பாளூரை ஆளப்போகிறவன்; சோழ
சாம்ராஜ்யத்தின் இளவரசியை மணந்து சக்கரவர்த்திகளுக்கு மருமகனாகப்
போகிறவன். சக்கரவர்த்திகள் அங்கிருந்தால் அவனை அநுதாபத்துடன்
விசாரித்திருப்பார்; காரியங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டிருப்பார்-
‘ஒருவேளை நாம் அவனுக்கு இழைத்திருப்பது தீங்குதானோ?’

‘குற்றத்தைச் சீர்தூக்காமல் கொடுந்தண்டனையளித்து, அவனுக்கு
மனைவியாகப் போகிறவள் முன்னிலையில் அவனை அவமானப்படுத்திவிட்டோமே! அவனுடைய பணியாளன் முன்னிலையில்
அவனைத் தலைகுனியவைத்து விட்டோமே! தன் மானமிக்க கொடும்பாளூர்
குலத்தவனாயிற்றே, அவன் தன் தந்தையைப் பற்றி என்ன நினைப்பான்?’

சிந்திக்கச் சிந்திக்க சிந்தை கலங்கியது பெரிய வேளாருக்கு. அத்துடன்
அவர் கண்களும் கலங்கின.

தமக்கெதிரில் கைகட்டி வாய்புதைத்து நின்ற மாங்குடி மல்லனிடம்
“இந்தச் செய்தி உனக்கும், நங்கையாருக்கும் தவிர வேறு யாருக்குமே
தெரியக்கூடாது. நங்கையாருக்கும் சொல்லிவிடு’’ என்றார்.

“சித்தம் அரசே!”

“ஆமாம், அவனை நீங்கள் இருவருமே கவனித்துக் கொள்ளுங்கள்.
அரண்மனையிலும் சரி, வெளியிலும் சரி, இது யாருக்கும் தெரியக்கூடாது.
ஈழத்திலிருந்து திரும்பியவனை நான் எங்கோ அவசரமாக வெளியூருக்கு
அனுப்பியிருப்பதாகச் சொல்லவேண்டும்.’’

சரியென்று தலையசைத்த மாறனை, வெளியில் செல்லும்படி சைகை
செய்தார் பெரிய வேளார். பிறகு ஏனோ அவனை மீண்டும் அழைத்து அவன்
முகத்தை உற்றுப் பார்த்தார். நடந்து விவரங்களை அவனிடம் விசாரித்தறிய
வேண்டுமென்று தோன்றியது அவருக்கு.

உடனே அந்த எண்ணமும் மாறியது. அவனிடம் கேட்பது சரியில்லை
என்பதுபோல், “ஒன்றுமில்லை, நீ போகலாம்’’ என்றார். அவன் போன
பிறகும் அவருடைய தடுமாற்றம் அவரை விட்டுப் போகவில்லை.

சிறைச்சாலைக் கதவுக்கு முன் மயங்கி விழுந்த அருள்மொழி தன்
மயக்கம் தீர்ந்து எழுந்திருப்பதற்குக் கால் நாழிகைப் பொழுதாயிற்று.
அதற்குள் அவள் நிலையைக் கண்டு பதறிய இளங்கோ, “நங்கையாரே!
நங்கையாரே!” என்று பலமுறை அழைத்துவிட்டான். அவனுடைய சொற்கள்
ஒன்றும் அவள் செவிகளில் விழவில்லை. தவியாய்த் தவித்து எண்ணாத
எண்ணமெல்லாம் எண்ணத் தொடங்கினான் இளங்கோ.

என்றுமே எதற்குமே உணர்சசி வயப்படாத இளவரசி இன்று எதற்காக
இப்படி நடந்து கொள்ளவேண்டும்?- அவனடைய நெற்றிச் சுருக்கம்
அருள்மொழியின் பக்கம் திரும்பிப் பெரியதொரு வினாவை எழுப்பிக்
கொண்டு நின்றது.

தங்கப் பேழையைப் போன்ற உறுதியான உள்ளம் படைத்த பெண்கள்,
எத்தனையோ சமயங்களில் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்தே தங்கள்
மனத்தை மூடி மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதை எப்போதுமே
அவர்களால் அப்படி வைத்துக்கொள்ள முடிவதில்லை. சிரிப்பிலோ,
குதூகலத்திலோ, ஆனந்தப் பெருக்கிலோ அந்தப் பேழை
திறந்துகொள்ளாவிட்டால் கூடத் துன்பத்தில் அது தன் இரகசியங்களை
வெளியில் வாரி இறைந்து விடுகிறது.

அறிவு நிரம்பிய பெண்மணிதான் அருள்மொழி. அழுத்தமும், கம்பீரமும்,
அஞ்சாமையும் அவளுடைய பிறவிக் குணங்களே. என்றாலும் அவள் பெண்.
பெண்மனத்துக்கு இயல்பாக உள்ள பேதைமையை மறைக்க முடியுமே தவிர
அதை அழிக்க முடியாது. பெண்மையின் மென்மைக்கும் நளினத்துக்கும் தனிச்
சிறப்புக் கொடுத்து அவர்களை மெல்லி யவர்களாக்கியிருப்பது அந்தக்
கனிவுணர்ச்சித்தானே?

சிறைக் கம்பிகளில் முகம் தோய அருள்மொழியின் துவண்ட
உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்த இளங்கோவுக்குத் திடீரென்று
மெய்சிலிர்த்தது.

யாரிடமும் மிகுதியாகப் பேசாதவள். பொறுமையே உருவானவள் இன்று
பெரிய வேளாரிடமே எதிர்த்துப் பேசத் துணிந்து விட்டாள். அவளுடைய
பொறுமையின் அடித்தளத்தையே தூளாக்குகிற வகையில் அவரோடு போராடி
விட்டாள்.

மலை குலைந்தாலும் மனங் குலையாதவள், வெட்டி எறியப்பட்ட இளம்
வாழைக் குருத்தைப்போல் எதிரில் துவண்டு கிடக்கிறாள். இவ்வளவும்
யாருக்கா? எதற்காக? ஏன்?

‘ஒரு வேளை அப்படியும் இருக்கக்கூடுமோ!...’ என்று நினைத்தான்
இளங்கோ; ‘ஒரு வேளை நங்கையாரின் மனம்...என்னை நினைத்துக்
கொண்டு...எனக்காக...’

என்றோ ஒருநாள் அவனிடம் விவேகத்தைப்பற்றி வலியுறுத்திப் பேசிய
வித்தகி இல்லை அவள். எட்டமுடியாத உயரத்தில் அவள் நிற்பதாக அவன்
நினைத்துக்கொண்ட சோழப்பேரரசின் இளவரசியில்லை அருள்மொழி.
அவனிடம் பயபக்தியை எழுப்பிவிட்டு, அவனுக்கு வீரத்திலகமிட்டு, அவனை
ஈழத்துப் போருக்கு அனுப்பி வைத்த ஆதிசக்தியின் பிரதிபிம்பமல்ல அவள்.
பிறகு?

ரோகிணியைப் போன்றே இவளும் சாதாரணப் பெண்தானா! வெறும்
மனிதப்பிறவிதானா! தன்னையொத்த இரத்தமும் சதையும் ஆசாபாசங்களும்
உள்ள உயிர்தானா?

ரோகிணியை நினைத்த இளங்கோ தன் பற்களை நறநறவென்று
கடித்துக்கொண்டான். ஆனைமங்கலம் மாளிகையில் கிடைத்த வீரமல்லனின்
வளைஎறி இன்னும் அவனிடம்தான் இருந்தது. வீரமல்லனைத்
தப்புவிப்பதற்காகத் தன் உயிரைக் கொடுக்க வந்த துரோகியல்லவா ரோகிணி!
அவளுடன் அருள்மொழியை ஒப்பிடுவது எவ்வளவு அறியாமை?

மெல்லக் கீழே மண்டியிட்டு உட்கார்ந்து, தன் வலக்கரத்தைக் கம்பிக்கு
வெளியே நீட்டி அருள்மொழியின் சிரத்தை அன்போடு வருடினான்
இளங்கோ. “நங்கையாரே!” என்று உருக்கமான குரலில் மீண்டும் மீண்டும்
அவளை அழைத்தான்.

அவனுடைய மெல்லிய ஸ்பரிசமும், கனிந்த குரலும் அவளை விழிப்புறச்
செய்தன. கனவிலிருந்து விழித்துக் கொண்டவள் போல் கண்களைத் திறந்து
அவனைப் பார்த்தாள். பிறகு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றாள்.

“கோழைபோல் நடந்துகொண்டீர்களே, இளவரசி!” என்றான் இளங்கோ.

தன்னையறியாது நடந்த நிகழ்ச்சியில் நாணமுறுகிறவள் போல்,
“ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை’’ என்று தடுமாறினாள்.

உடனே அவ்விடத்தை விட்டு அவள் போய்விடுவாள் என்று இளங்கோ
நினைத்தான். அதையே அவனும் விரும்பினான். தஞ்சை அரண்மனைச்
சிறைக்குள் அவள் எதிரில் அடைக்கப் பட்டு நிற்கும் காட்சி அவனுக்கு
என்னவோ போலிருந்தது.

அவள் போகவில்லை. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர்
ஏறிட்டுப்பார்க்க மனமின்றி குனிந்த தலை குனிந்தவாறே நின்றனர்.

“மாமா அவர்கள் மாபெரும் தவறு செய்துவிட்டார்கள். நீதியை
நிலைநாட்டுவதாக எண்ணி நீதியின் வரம்பையே மீறிவிட்டார்கள்’’ என்றாள்
அருள்மொழி. அவனுடைய தந்தையின் செய்கைக்காக அவள் மன்னிப்புக்
கோருவது போல் பேசினாள்.

“தந்தையார் எது நியாயமோ, அதைத்தான் செய்திருக்கிறார்கள்; தவறு
என்னுடையதுதான்.’’

“அப்படியென்றால்?’’ என்று அவனைத் தனது வியப்புற்ற கண்களால்
வினவினாள் அருள்மொழி.

“நாகைத் துறைமுகத்தில் நாங்கள் வந்து இறங்கியபோது அங்கு
ரோகிணி வந்திருந்தாள். நான் அவளுக்குப் பலவகையில் கடமைப்பட்டவன்,
நன்றிக்கு உரியவன். அதனால்...’’

‘ரோகிணிக்குக் கடமைப்பட்டவரா? அவளிடம் நன்றிக்குரியவரா!’
முத்துக்கள்போல் திரண்ட கண்ணீரை இளங்கோவுக்குத் தெரியாமல்
துடைத்துக் கொண்டாள் அருள்மொழி.

அவன் மேலே தொடர்ந்து கூறினான். “கூட்டத்தில் அவளைச் சந்தித்து
என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்
அன்றிரவே அவளைத் தனிமையில் காணச் சென்றேன். இம்முறை நான்
ஈழத்துக்குச் செல்லும்போது, எனக்குப் பாண்டியர்களின் மறைவிடங்களை
அவள் தான் தெரிவித்தவள். பகைவர்கள் விரித்த வலைகளிலிருந்து நான்
மீள்வதற்கு அவள்தான் எனக்கு வழிகள் கூறி அனுப்பினாள். என் நன்றியைச்
சொல்லிக்கொள்ள எனக்கு வேறு நேரம் கிடைக்கவில்லை.’’

“அப்போது யாரோ அங்கு மறைந்திருந்து உங்களைக் கொல்ல
வந்தார்களாமே!”

“உண்மைதான்! ஆனால் அந்த நிகழ்ச்சிக்கும் ரோகிணிக்கும்
தொடர்பே இருக்க முடியாது. அவளை எனக்கு நன்றாகத் தெரியும்.’’

“அவன் யாரென்று தெரியுமா?’’

அந்தக் கேள்வியை அருள்மொழி கேட்டவுடன் இளங்கோவுக்குத்
தலைசுற்றுவது போலிருந்தது. உடனே அவன் மறுமொழி கூறவில்லை,
தயங்கினான்.

அவனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. வந்தவன் வீரமல்லன்தான்
என்பது. தன்னைக் கொல்ல வந்தவனுக்குத் தஞ்சம் அளித்த ரோகிணியைப்
பற்றியும் அவனுக்கு உயர்வாக நினைக்கத் தோன்றவில்லை.

ஆனால் அவன் யாரென்று அருள்மொழியிடம் சொல்லி விட்டாலோ,
அதனால் ரோகிணிக்கு இழுக்கு ஏற்படும். அவனுடைய தந்தையாரின்
திறமைக்கும் அது மாசு கற்பித்தது போலாகும். உயிருடன் உலவிய
வீரமல்லனை இறந்தவனாக நம்பச் செய்தவர் பெரிய வேளாரல்லவா!

“எனக்கு அவன் யாரென்று தெரியவில்லை, இளவரசி!” என்று
உண்மையை மறைத்தான் இளங்கோ. “ஒருவேளை மறுநாளோ அதற்கு
மறுநாளோ அவனைக் கண்டுபிடிக்க முடியுமென்றுதான் அங்கு தங்கினேன்.
நான் தங்கிய காரணத்தைத் தந்தையார் வேறுவிதமாக எடுத்துக் கொண்டு
விட்டார்கள்.’’

“தவறு செய்துவிட்டார்கள்!” என்றாள் அருள்மொழி.

“இல்லை; தவறு செய்தவன் நான்தான். குறுக்கிட்டவளைக் கொன்று
போட்டுவிட்டு மேலே விரைந்திருக்க வேண்டும். அவளைக் குற்றுயிராக்கி
விட்டு, அதற்காக மனமிரங்கிப் போனேன்.’’

“என்ன. ரோகிணிக்கு ஆபத்தா?’’

இளங்கோ சட்டென்று தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.
எவளை மனதார வெறுத்துவிட்டு அங்கிருந்து திரும்பி வந்தானோ அவளை
இப்போது அவனால் வெறுக்க முடியவில்லை. இதற்குள் ரோகிணி என்ன
ஆனாளோ?

அவளுடைய தலை பிளந்து அதிலிருந்து பெருக்கெடுத்த இரத்தம்
இப்போது அவன் கண்களில் வழிந்தது.

அவன் திரும்புவான் என்று காத்திருந்த அருள்மொழி

பின்புறம் யாரோ வருவதுபேல் சத்தம் கேட்கவே, சட்டென்று திரும்பிப்
பார்த்தாள். பெரிய வேளார் வந்து கொணடிருந்தார். அவரிடம் முகம்
கொடுக்காமல் சரேலென்று அவ்விடத்தை விட்டு விரைந்து சென்றாள்.

“இளங்கோ!” என்ற வேளாரின் குரல் இளங்கோவைத் திடுக்குறச்
செய்தது. அருள்மொழி நின்றுகொண்டிருந்த இடத்தில் இப்போது அவன்
தந்தை நின்றுகொண்டிருந்தார்.

“நீ ஏதோ என்னிடம் காரணம் கூறுகிறேனென்று சொன்னாயே!”

“ஒரு காரணமும் இல்லை’’ என்றான் இளங்கோ தலையைத் தூக்காமலே.

“நான் சோழபுரத்துக்குப் போக வேண்டும். அதற்கு முன்னால்
உன்னிடம் கேட்டு, காரணத்தில் காரியமிருந்தால் உனக்கு
விடுதலையளிக்கலாமென்று நினைக்கிறேன்.’’

“மாமன்னர் வந்த பிறகு எனக்கு நீதி வழங்குவார்’’ என்று துடுக்கான
மறுமொழியை அடக்கத்தோடு கூறினான்.

தான் கூற முனைந்தபோது செவிசாய்க்காமல் செய்ததையும் செய்துவிட்டு,
இப்போது என்ன விடுதலை வேண்டியிருக்கிறது? கொடும்பாளூர்
இரத்தத்துக்குப் பிறந்த அதே கொடும்பாளூர் இரத்தம்தானே இதுவும்!

கோபம் பொங்கும் கண்களுடன் சூறாவளியென அங்கிருந்து
திரும்பினார் பெரிய வேளார். ‘என்ன துடுக்கு இவனுக்கு? சக்கரவர்த்திகள்
வந்த பிறகு அவரிடம் சொல்கிறானாமே! என்னை யாரென்று நினைத்தான்
இவன்?’

தொடரும்



Comments