வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத் தென்றல்.




நட்ட நடு நிசியில், இருளடைந்த கானகத்தில் தள்ளாடித் தடுமாறி வழி நடக்கும்போது திடீரென்று கண்முன்னே ஒரு பெரிய மின்னல் தோன்றி மறைந்தால் எப்படியிருக்கும்? இருளுக்குப் பழகிப்போன விழிகளைப் பற்றி இழுத்து வெளியே வீசுவதுபோல், குபீரென ஒளிக்கற்றைகள் பொங்கி எழுந்து மறைந்தால் எப்படியிருக்கும்?

அருள்மொழியைப் பற்றிய வரையில் இதுகாறும் அறியாமை இருளில் உழன்று கொண்டிருந்த இளங்கோ, இப்போது அவளது அன்பின் தீவிரத்தைக் கண்டவுடன் அயர்ந்து போய்விட்டான். அந்த அன்பாகிய தூய நெருப்பால் துவண்டுபோன இளங்கோ பொறி கலங்கிப்போய், தன் கால்போன போக்கில் நடந்தான். எங்கு செல்கிறோம் என்ற உணர்வுகூட இல்லாமல், அரண்மனையின் மேல்மாடத்து உப்பரிகைக்கு வந்தான். துவண்டு போயிருந்த அவன் உடல் அங்கு ஓர் ஆசனத்தில் சரிந்து விழுந்தது.மேலே விண்மீன்கள் நீந்தும் வானவெளி; கீழே சுற்றிலும் விளக்கொளி கசிந்துருகும் அரண்மனைச் சாளரங்கள்.

அண்ணாந்து வானத்தைப் பார்த்த இளங்கோவுக்கு அங்கே குவியல் குவியலாய்ப் பூத்திருந்த நெருப்பு மலர்கள் அவனை நோக்கிக் கண்சிமிட்டிச் சிரிப்பது போல் தோன்றின. கீழே பார்த்தான்; அரண்மனையில் கசிந்த ஒளி, அருள்மொழியின் உள்ளத்தைப் போல் உருக்குலைந்து வழிந்தது.

‘நங்கையாரே!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு பெருமூச்சுவிட்ட இளங்கோ, ‘நான் உங்களுடைய அன்புக்குத் தகுதி உடையவன் என்றா நினைத்தீர்கள்?’ என்று குமுறினான். ‘அப்படி நினைத்திருந்தால் அதை ஏன் நீங்கள் முன்னமேயே என்னிடம் சொல்லியிருக்கக்கூடாது? எதற்காக மறைத்து வைத்தீர்கள்? வேங்கி நாட்டுத் தம்பியாரின் கைத்தலம் பற்றி அவரது பட்டத்தரசியாக விளங்கப் போகிறீர்கள் என்றல்லவா நம்பிக்கொண்டிருந்தேன். நான் கண்ட காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை, நங்கையாரே!’ அவன் முகத்தில் அதிசயமும் திகைப்பும் அவற்றின் ரேகைகளைப் பதித்தன.

நம்ப முடியவில்லை என்று அவன் சொல்லிக் கொண்டாலும், அவனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்றென்றோ நடந்த நிகழ்ச்சிகள் யாவும் அவன் மனக்கண்ணில் இப்போது மீண்டும் தோன்றி வட்டமிட்டன. முன்பு அவனால் உணர்ந்து கொள்ள முடியாத உண்மை களெல்லாம் இன்று தெளிவாகப் பளிச்சிட்டன.

முதன்முறை ஈழநாட்டுக்குப் புறப்படுவதற்கு முன்பாகக் கொடும்பாளூர்த் தோட்டத்தில் அருள்மொழியை அவன் தனிமையில் சந்தித்திருக்கிறான். அதற்கு முன்பு எத்தனையோ முறைகள் அவர்கள் சந்தித்திருந்தாலும், அன்றுபோல் முன்பெல்லாம் அவள் அவனிடம் பரிவு காட்டிப் பேசியதில்லை. வீரத்துடன் விவேகமும் வேண்டுமெனச் சுட்டிக் காட்டுகிறாள். போர்க்களத்தில் வீரமரண மெய்துவது பெரிதல்ல, வெற்றியுடன் திரும்புவதே பெரிதென வாதாடுகிறாள். ஓர் உயிரின் மேல் மற்றொரு உயிர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றுதலுக்கு என்ன பெயர்?

அடுத்தாற்போல், அருள்மொழி இளங்கோவின் நெற்றியில் வீரத்திலகமிட்டு அவனைப் போருக்கு அனுப்பி வைக்கிறாள். திலகமிடும்போது அவளுடைய மென்விரல் ஏன் இப்படி நடுங்குகிறது? அந்த நடுக்கத்துக்கு என்ன பெயர்?

அவையெல்லாம் இருக்கட்டும், திரும்பி வந்த பிறகு, பழையாறையில் அவனுடைய விழுப்புண்ணுக்காகத் தானே மருந்து அரைத்துக் கொடுத்தாளே,அதன் காரணமென்ன? சித்த வைத்தியர் செய்ய வேண்டிய பணியின் மேல் நங்கையாரின் சித்தம் சென்றது எதற்காக?

இன்னும் அருள்மொழி தன் தந்தையாரையே எதிர்த்துத் தனக்காக வாதாடியது, சிறைக் கதவின் முன்பாக மயங்கி விழுந்தது, பெற்ற தாயைப்போல் தனக்குச் சிறைக்குள்ளே உணவளித்தது, இவ்வளவையும் எண்ணிப் பார்த்தான் இளங்கோ.

இவ்வளவுக்கும் மேலாகத் தோன்றிய ஒரே ஒரு காட்சி மட்டிலும் அவனைப் புல்லரிக்க வைத்து, உலுக்கி எடுத்து விட்டது. நடுச்சாமத்தில் சிறைக்கு ரோகிணியைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டுவந்து, அவளிடம் பரிவு காட்டச் சொல்லித் தன்னிடம் மன்றாடினாளே, அதைக் காண்பதற்கே அவனது மனக்கண்கள் கூசின.

காதல் என்பது புனிதமான உயர்ந்த உணர்வென்றால் காதலுக்காகக் காதலையே தியாகம் செய்யும் உணர்வுக்கு என்ன பெயர்? நினைவுச் சுழல்களிலிருந்து விடுதலை பெற விரும்பியவன் போல் சட்டென்று இளங்கோ உப்பரிகைச் சுவரின் விளிம்பருகே சென்று சாய்ந்தான். அந்தச் சுவருக்கு நேர் எதிரே கீழ்ப்புறத்திலிருந்து அருள்மொழியின் அறையில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.சாளரத்தின் வழியே தென்பட்ட உருவத்தைக் கண்ணுற்றான். கண்கள் இமைப்பை மறந்து விட்டன.

அருள்மொழி தனது முடியை அலங்கரித்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி மஞ்சத்தில் வீசினாள். அளகபாரம் கார்மேகம்போல் கீழே படர்ந்து தொங்கியது. சற்றுநேரம் சாளரத்தின் வழியே இருளை ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சரேலெனச் சென்று மஞ்சத்தில் விழுந்தாள். அவளுடைய பொன்னான மெல்லுடல் புயலில் அகப்பட்ட மலரைப்போல் குலுங்கிக்கொண்டே இருந்தது.

காதலுக்காக அவள் காதலையே தியாகம் செய்துவிட்டவள் என்று நம்பிய இளங்கோவுக்கு, சாளரத்தின் வழியே அவன் கண்ட காட்சி ஏமாற்றத்தையே அளித்தது. காதலுக்காக உயிரையே தியாகம் செய்துவிடலாம்; ஆனால் காதலை மட்டிலும் கொடுத்துவிட முடியாது போலும். உப்பரிகையிலிருந்து கொண்டே வெகு தூரத்திலிருந்த அருள்மொழியிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனக்குள் பேசத் தொடங்கினான் இளங்கோ.

“நங்கையாரே! ஒருவேளை, நான் ரோகணத்துக்குப் புறப்படுவதற்கு முன்னால் உங்கள் மனத்தின் இரகசியம் எனக்குத் தெரிந்திருந்தால் நான் ரோகிணியிடம் எப்படி நடந்து கொண்டிருப்பேனோ தெரியாது. என் மனத்தால்கூடத் தொடுவதற்கு முடியாத தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால், இப்போது காலம் கடந்துவிட்டது. எனக்காக ரோகிணி எதையுமே, யாரையுமே துறந்துவிடச் சித்தமாகி விட்டாள். உற்றம், சுற்றம், தாய், தந்தை, உயிருக்குயிரான சகோதரன் யாவரையுமே மறந்து விட்டாள்...என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், நங்கையாரே! என்னால் இனிமேல் ரோகிணியை மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது.’’

தழுதழுத்த குரலில் அவன் புலம்பிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அவனுக்கு மறுமொழி கூறுவது போலவே அருள்மொழியும் குமுறலானாள். “உங்களை என்னால் மறக்க முடியவில்லையே, இளவரசே! உலகத்தின்

முன்னிலையில் எவ்வளவுதான் என்னை மறைக்க முயன்றாலும் என்னிடமிருந்து என்னை மறைத்துக்கொள்ள முடியவில்லையே?’’ என்று தேம்பினாள்.அங்கு வீசிக்கொண்டிருந்த அரண்மனைத் தென்றலுக்கு அணுவளவும் கருணை இல்லை. இருந்திருந்தால் அது இருவருடைய சொற்களையும் இப்படித் தானே விழுங்கி, ஒருவரிடமிருந்து ஒருவரை விலக்கியிருக்காது.

அரண்மனையின் மற்றொரு பகுதியான பெரிய வேளாரின் கூடத்தில் அப்போது வல்லவரையரும் பெரிய வேளாரும் அருகருகே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். முன்பு வல்லவரையர் தம்மிடம் இரகசியமாகக் கூறிய செய்தியை அவருக்கு நினைவுபடுத்தி, அதைப்பற்றி விளக்கமாகப் பேசினார் பெரிய வேளார்.

“ஐயா! இளங்கோவைப் பற்றிச் சக்கரவர்த்திகளின் கருத்து எப்படியிருக்கக்கூடும் என்று முன்பு என்னிடம் தெரிவித்தீர்களல்லவா? நானும் அதை நன்றாக யோசித்துப் பார்த்தேன். சக்கரவர்த்திகள் எதையுமே ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகுதான் செய்யக்கூடியவர்கள். ஆகவே அவர்களுடைய விருப்பத்துக்கு இசைந்து விடுவதே நல்லதென்று எனக்கு தோன்றுகிறது’’ என்று கூறினார் பெரிய வேளார்.

“சக்கரவர்த்திகள் என்னிடம் முடிவாக எதையும் கூறிவிடவில்லை. நானாக யூகித்துச் சொல்கிறேன்’’ என்றார் வந்தியத் தேவர்.

“அதனால் என்ன? தங்கள் யூகம் சரியாகத்தான் இருக்கவேண்டும். சக்கரவர்த்திகளின் ராஜதந்திர உறவுக்காக அந்த ரோகணத்துப் பெண்ணை நான் மருமகளாக ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றால் அதற்கொன்றும் தடை கூறவில்லை. ஆனால் இந்தப் புதிய உறவுக்காக நாங்கள் எங்களுடைய பரம்பரை உறவையும் விட்டுவிட முடியாது. ஏகதார விரதம் என்பது அரசகுலத்தவர்களாகிய நமக்கு முக்கியமானதல்லவே? அதனால்தான் ரோகிணியையும் நங்கையாரையும் இளங்கோவுக்கு ஒன்றாக மணம் முடிப்பதில் தவறில்லை என்கிறேன். ஆனால் அதிலும் ஆலோசனைக்குரிய விஷயம் ஒன்றிருக்கிறது.’’

“என்ன?’’

“நங்கையார்தான் கொடும்பாளூர்ப் பட்டத்தரசியாக விளங்கவேண்டும். இளங்கோவுக்குப் பிறகு இளவரசப் பட்டத்துக்குரியவன் நங்கையாருக்குப் பிறக்கும் குழந்தையாக இருக்க வேண்டும்.’’

“இப்போது இதற்கெல்லாம் அவசரம் ஒன்றுமில்லை. இடையில் இன்னும் எத்தனையோ காரியங்கள் நடைபெற வேண்டியிருக்கின்றன’’ என்றார் வல்லவரையர் வந்தியத்தேவர்.

“எத்தனையோ காரியங்கள் இருந்தாலும் அதோடு இதற்காக வேண்டிய சூழ்நிலைகளையும் நாம் உருவாக்க வேண்டுமல்லவா! மன்னர் மகிந்தருடன் இனி நான் சிரித்துப் பழகிக் கொள்ள வேண்டும். எப்போதாவது அவர் குடும்பத்தைக் கொடும்பாளூருக்கு அழைத்துச் சென்று அவர்களை விருந்தினர்கள் என்ற முறையில் கௌரவிக்க வேண்டும். அரண்மனைப் பெண்டிரையும் இந்த ஏற்பாட்டிற்கு வளைந்து கொடுக்கச் செய்ய வேண்டும்.’’

“இவ்வளவு காரியங்களையும்கூட நாம் எளிதில் செய்து விடலாம்.

ஆனால் இளங்கோவோ, அருள்மொழியோ இதற்கு எப்படி இணங்கி வருவார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?’’ என்று கேட்டார் வந்தியத்தேவர்.

“அவர்கள் என்ன இணங்கி வருவது? சக்கரவர்த்திகள் வந்த பிறகு நாமாகச் சேர்ந்து முடித்து வைக்கவேண்டியதுதான்’’ என்றார் பெரிய வேளார். வல்லவரையர் இதற்கு ஏதும் மறுமொழி கூறவில்லை. அரண்மனைத்தென்றல் இதையும் கேட்டுக் கொண்டு அசையாமல் நின்றது.

தொடரும்

Comments