வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர்

பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர் 


“கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
கங்கா புரிபுரந்த கற்பகம்...
கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்.’’
-கவி ஒட்டக் கூத்தர்

மாபெரும் எண்ணங்கள் எண்ணி, திட்டங்கள் வகுத்த, முயற்சிகள்
செய்து, உழைப்பால் வெற்றி கண்ட மாவீரர்கள் சிலரை இந்த உலகம்
பெற்றெடுத்துப் பெருமை கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் தங்கள்
உறுதியான செயல்களை ஊன்றிவிட்டுச் சென்றவர்கள் அவர்கள்.

கிரேக்க மாவீரர் அலெக்சாண்டரை எந்த உலக வரலாற்று ஆசிரியரும்
மறந்துவிட முடியுமா? அவ்வாறே நமது வெற்றித்திருமகன் வேங்கையின்
மைந்தனை எந்த இந்திய வரலாற்று வல்லுநரும் மறந்துவிட முடியுமா?
அலெக்சாண்டரில்லாத உலக வரலாறும், இராஜேந்திரரில்லாத இந்திய
வரலாறும் வரலாறுகளாக மாட்டா.

மாமன்னரது பெருவாழ்வில் அவர் மேற்கொண்டு வெற்றி பெற்ற
சாதனைகள் அனைத்தையும் இங்கு குறிப்பது இந்தக்கதைக்குப்
புறம்பானதுதான். எனினும் ஒவ்வொரு தமிழ் மகனும் ஒவ்வொரு தமிழ்
மகளும் ஓரளவாவதுநமது பரம்பரையை உயர்த்திய ஒப்பற்ற பெருமகனைப்
பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை உன்னதமான நிலைக்குக் கொண்டு வந்த உயிர்த்
துடிப்புமிக்க வாழ்க்கை அவர் வாழ்க்கை. தமிழனின் திறமையிலுள்ள
தனித்தன்மையை உலகறியும்படிச் செய்த உயர்ந்த வாழ்க்கை அது.

கலைஞர்கள் கற்பனை பெற்றார்கள்; சிற்பிகள் சிந்தனை
மலர்ச்சியுற்றார்கள்; தமிழ்த்தாய் உலக மகாகவி கம்பனைத் தோற்றுவிப்பதற்கு
அப்போதே சூலுறத்தொடங்கி விட்டாள்.

மாமன்னர் காலத்தில் அவரது மெய்க்கீர்த்தி பாடிவைத்த புலவர்
இரத்தினச் சுருக்கமாகச் சக்கரவர்த்தியின் வீரச் செயல்களைப் பொறித்து வைத்துள்ளார். அவர் காலத்திற்குப் பின் வந்த
ஒட்டக்கூத்தரும், சயங்கொண்டாரும் அவரை மறக்கவில்லை.

கலிங்கத்துப்பரணி பாட வந்த சயங்கொண்டார், கங்கையைக்
கொண்டுவந்த சிங்கத்தைப் பற்றிப் பாடுவதைக் கேளுங்கள்:

“களிறு கங்கைநீர் உண்ண, மண்ணையில்
காய்ச்சினத் தோடே கலவு செம்மியன்;
குளிறு தென்திரைக் குரை கடாரமும்
கொண்டு மண்டலம் குடையுள் வைத்தவன்!”

காடுகளையும் மலைகளையும் தாண்டி மந்தை மந்தையாகச் சென்ற
தமிழகத்து யானைக்கூட்டம் கங்கைப் பெருநதியைக் கடப்பதற்குப்
பெருந்துணை செய்கிறது. பேரொலி எழுப்பி அலைவீசிக் குமுறும் கங்கைநதிப்
பிரவாகத்தை நமது வீரர்கள் கடந்து செல்ல வேண்டுமே? யானைகளைக்
கொண்டே இக்கரைக்கும் அக்கரைக்கும் யானைப் பாலம் அமைத்து
விட்டார்கள் நமது வீரர்கள்!

இராமன் சீதையை மீட்பதற்குத் தென்னிலங்கைக்கு சேது வெனும்
பாலம் கட்டினான். வேங்கையின் மைந்தனோ மணிமுடியை மீட்டு வருவதற்கு
மரக்கலத்தால் ஒரு பாலம் அமைத்தான். அவனுடைய வீரர்களோ
களிறுகளைக் கொண்டே கங்கையை வென்று விட்டார்கள்.

நீர்ச்சுழல் களிறுகளைச் சுற்றி வளைக்க, அதன் வெள்ளம் களிறுகளின்
வாய்வழியே பாய, களிறுகள் துதிக்கைகளை உயர்த்தித் தங்கள் மாமன்னருக்கு
வாழ்த்தொலி எழுப்புகின்றன. அவைகளின் கண்களில் சொரியும் ஆனந்தக்
கண்ணீர் கங்கைப் பிரவாகத்துடன் கலந்து கடலுக்குச் செல்லுகிறது.

யானைகளின் முதுகுகளின் மேல் பொருத்திக் கட்டிய மரப்பலகைகளின்
மீது புலிக்கொடி தாங்கிச் சாரிசாரியாக நடந்து செல்லுகின்றனர் நமது
கட்டிளங் காளையர்கள்.

பிற்காலத்தில் வந்த கவிஞர் தமது கற்பனைக் கண்களால் அந்தக்
காட்சியைக் காண்கிறார். தமிழ் ஊற்றுப்பெருக்கெடுத்துக் கவிதைமழை பொழிகிறது. கடல்கடந்து கடாரத்துக்குச்
சென்றுவந்த நிகழ்ச்சியையும் அத்துடன் இணைத்து விடுகிறார்.

இராஜேந்திரரின் தந்தையார் இராஜராஜ அருள்மொழித் தேவர் தமது
மத்திய வயதில் சிங்காதனம் ஏறினார். இளம் வயதிலேயே பட்டத்துக்கு
உரியவர் அருள்மொழித்தேவர். அவர் தந்தை சுந்தர சோழருக்குப்பின்,
தமையனார் ஆதித்த கரிகாலர் கொல்லப்பட்டு விட்டமையால், முறையான
ஆட்சி இவருக்கே உரியது. சோழநாட்டு மக்கள் அனைவரும் இராஜராஜர்
ஆட்சிக்கு வருவதையே விரும்பினார்கள்.

ஆனாலும், அவர் தமக்குரிய முடியைத் தமது சிறிய தந்தையார் உத்தம
சோழருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவருடைய இறுதிக் காலத்திற்குப் பிறகு
ஆட்சிக்கு வந்தார். பதினைந்து ஆண்டுகள் அவருக்காகப் பொறுத்திருந்தார்.

பொறுத்திருந்த அந்தப் பதினைந்து ஆண்டுகளில்தான்
இராஜராஜருடைய இதயத்தில் ஒரு பரந்த சாம்ராஜ்ய மாளிகை எழும்பியது.
கூடிய வரையில் தமது ஆட்சியில் அதற்கு அடிப்படை கோலி
உருவாக்கிவிட்டு, பிறவற்றைத் தமது மைந்தர் இராஜேந்திரரிடம் விட்டு
விட்டார்.

தியாகமும், வீரமும், தெளிந்த சிந்தனையும், திட்டமுள்ள செயலாற்றலும்
மிகுந்த அத்தகைய அருள்மொழிப் பெருந்தகையின் குமாரர்தான் நமது
மாமன்னர். தமிழ் நாட்டை ஒரே நாடாக்கியவரின் மைந்தர்; பெரிய
கோயிலைப் பிறப்புவித்தவருக்குப் பிறந்தவர்; வேங்கைக்குப் பிறந்து
வேங்கையைவிடப் பாயத் துடித்தவர்.

தமிழரின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் இமயத்தின் உச்சி வரையில்
கொண்டு செல்வதற்கு இராஜேந்திரர் விரும்பியதில் வியப்பொன்றுமில்லை.
ஆழ்கடலுக்கப்பால் கடாரம், ஸ்ரீவிஜயம், மாப்பாளம், மாநக்கவரம் முதலிய
நாடுகளில் தமிழ்க் கொடியை நாட்ட விரும்பி, அதில் பெரும் வெற்றியும்
கொண்டவர் அவர்.

ஆம், வங்கத்துக்குச் சென்ற அவரது வீரர்கள் கங்கைக் கரையோரமாக
நின்று நீர்க்குடங்களை நிரப்பிக்கொண்டு மட்டும் திரும்பவில்லை. அங்கேயே
தங்கி ஆட்சியும் செலுத்தினார்கள். தங்களது பரம்பரை வித்துக்களை அங்கே ஊன்றி வளர்த்துவிட்டார்கள்.

சாமேந்தசேனன் என்பவர் வழியாக வந்து மேற்கு வங்கத்தை ஆட்சி
செய்த சேனமரபு என்பது தமிழ் மரபே என்பது ஆராய்ச்சியாளர் ஒப்புக்
கொள்ளும் உண்மை. காவிரியிலே பிறந்த மக்கள் கங்கையிலே தவழ்ந்து
வங்கத்தைக் கட்டி ஆண்டதுண்டு. இன்றுகூட வங்க நாகரிகத்துக்கும் தமிழர்
நாகரிகத்துக்கும் உள்ள ஒற்றுமை வியக்கத்தக்கதுதான்!

இவ்வளவு பெருமைக்குரிய ஆட்சி பொறாமையைக் கிளறிவிடுவது
இயல்புதானே. பரம்பரைப் பகைவர்களாக விளங்கிய மேலைச்சளுக்க நாட்டார்
இதனால் தங்களுக்குள் வெந்து தணியலானார்கள். பொறாமையோடு
பேராசையும் கொண்டவர்கள் அவர்கள்.

துங்கபத்திரை நதிக்கு வடக்கே அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்து,
அந்த நதியை அவர்களுடைய தெற்கெல்லையாகச் செய்து வைத்திருந்தார்
சக்கரவர்த்தி. வீரத்தால் மட்டிலும் அவர்களை வெல்ல முடியாதென்பதைக்
கண்டு தமது விவேகத்தாலும் அவர்களுக்கு முள்வேலி போட்டிருந்தார்.
சளுக்கர்களின் உறவினர்களான வேங்கி நாட்டாருடன் சோழப் பேரரசு
திருமண உறவு பூண்டது. மாமன்னரின் தங்கையார் சிறிய குந்தவை வேங்கி
மன்னர் விமலாதித்தரை மணந்து கொண்டார். வேங்கியும் சோழர் பேரரசுடன்
சேர்ந்து கொண்டு மேலைச்சளுக்கர்களுக்கு எதிராகத் திரும்பியது,
திருப்பிவிடப் பட்டது!

அந்தச் சளுக்கர்களுடன் நடந்த போரைப் பற்றித்தான் சோழபுரத்தில்
பெரிய வேளாரும் சிற்பியாரும் பேசிக் கொண்டார்கள். மேலைச்சளுக்க நாடு
தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் மன்னர் ஜயசிம்மன் முயங்கி
நகரத்தை விட்டு ஓடி எங்கோ ஒளிந்து கொண்டார்.

திரும்பிவந்து தாக்கும் மெய்த்துணிவு ஜயசிம்மனுக்கோ, அவனைப்
போன்ற பகை நாட்டாருக்கோ மீண்டும் ஏற்படக் கூடாதல்லவா? அதற்காகவே
தமது சாம்ராஜ்யத்தின் வலிமையை வடக்கிலும் நிலைநாட்டப் படை அனுப்பி
வைத்தார் சக்கரவர்த்தி. கங்கைநீரைக் கொண்டுவந்து தமது தலைநகரைத் தூய்மையுறச்
செய்யவேண்டுமென்பதும் ஒரு காரணந்தான். ஆனால் அந்த ஒரு
காரணத்துக்குள்ளே பல அரசியல் காரணங்களும் மறைந்திருக்கத்தான்
செய்தன.

இன்னும் நமது கதை நிகழும் காலத்துக்கு முன்னும் பின்னும் மாபெரும்
சக்தியைத் துணைக்கொண்டு அவர் செயற்கரிய அற்புதங்கள் பலவற்றைச்
செய்துவிட்டார். நமது வருங்காலச் சந்ததிகளுக்குப் புதிய ஊக்கத்தையும்
உற்சாகத்தையும் உழைப்புத் திறனையும் கொடுக்கத் தக்க வரலாறு
இராஜேந்திரருடையது.

தொடரும்


Comments