பாகம் 3 , 5. மன்னருள் மறைந்த மாமனிதர்!
‘கண்டோர் நடுங்கும் காலன்’ என்று பெயர் பெற்ற மாதண்ட நாயகர்
அரையன் இராஜராஜன் தலைமையில் தமிழ்ப் பெரும்படை வடக்கே வங்கம்
நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
முயங்கியில் மேலைச்சளுக்க ஜயசிம்மனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த
சக்கரவர்த்தி காஞ்சிக்குத் திரும்பியிருந்தார். வல்லவரையர் வந்தியத்தேவரும்
மாமன்னரை விட்டுப் பிரியவில்லை.
காஞ்சி அரண்மனைத் தோட்டத்தின் பின்புறம்
பாலாற்றங்கரையோரமாகச் சக்கரவர்த்தியும் வந்தியத்தேவரும் உலவிக்
கொண்டிருந்தனர். சாளுக்க நாட்டுப் போர்க்களத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட
காயங்கள் இன்னும் ஆறவில்லை. மாமன்னருடைய வலது கரத்தில் வாள்
வெட்டுக்கள்; வந்தியத்தேவரின் மார்பில் வேல்முனைப் புண்கள்.
“மாமா! வங்கத்துக்குச் சென்றுள்ள வீரர்கள் திரும்பி வரும் வரையில்
என் கவனமெல்லாம் வடக்கேதான் இருக்கும். அவர்களுக்குத் தேவையான
உதவிகளை அவ்வப்போது அனுப்புவதற்காக நான் கோதாவரிக் கரைக்குச்
செல்லுகிறேன். வேங்கி நாட்டில் தங்கை குந்தவையாரின் விருந்தினனாக நான்
தங்கியிருக்க வேண்டும். நீங்கள் தஞ்சைக்குச் சென்று தமிழகத்தின்
பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்’’ என்றார் மாமன்னர்.
“தங்களைத் தனியே விட்டுச் செல்வதைவிட நானும் உடன் இருந்தால்
நல்லதல்லவா?’’ என்றார் வல்லவரையர்.
“நம்மைப் போன்றவர்களுக்கு வடக்கில் ஒன்றும் மிகுதியான
வேலையில்லை. நமது வீரர்களே அதைக் கவனித்துக் கொள்வார்கள்.
என்றாலும் அவசர உதவிகளுக்காகவும், செய்தித் தொடர்பை நேரடியாகக்
கண்காணிப்பதற்காகவும் நான் வேங்கிக்குச் செல்கிறேன். தெற்கேதான் நாம்
இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’’
“என்னுடைய வயது காரணமாக எனக்குத் தாங்கள் ஓய்வளிக்க
விரும்புகிறீர்கள் போலும்! தெற்கேதான் பகைவர்கள் ஓய்ந்து விட்டார்களே?
மேலும், பெரிய வேளார் இருக்கிறாரே, போதாதா?’’
“பகைவர்கள் ஒருபோதும் ஓயமாட்டார்கள், தோல்வியுற்றவர்களைவிட
வெற்றிபெற்ற நாம்தான் எப்போதும் விழிப்போடிருக்க வேண்டும். நம்முடைய
படைபலம் வடக்கே திரும்பியிருக்கும் வேளையில், தோல்வியுற்றவர்கள்
அதைப் பயன்படுத்திக் கொள்ள முனைவார்கள். மேலைச் சளுக்கரும்,
சுந்தரபாண்டியரும், அமைச்சர் கீர்த்தியும் இனி அமைதியோடிருக்க
மாட்டார்கள். அவர்களுடைய கூட்டுறவால் ஏதும் விபரீதங்கள் விளைந்து
விடக் கூடாதல்லவா?’’
ஈழத்திலிருந்து இளங்கோ வெற்றியுடன் திரும்பிய செய்தி
கிடைத்திருக்கிறது. அவனை வைத்துக் கொண்டு ஆவன செய்யுங்கள்.
தொண்டை மண்டலத்தைக் காஞ்சியில் இருந்தவாறு இராஜாதிராஜன்
கவனித்துக்கொள்வான்.’’
“எப்படித்தான் இளங்கோ, பதுங்கியிருந்த பாண்டியர்கள்
அனைவரையும் பூண்டோடு அழித்தானோ, தெரியவில்லை!” என்று
வியப்போடு கூறினார்வல்லவரையர் வந்தியத்தேவர்.
“எதையும் சாதிக்கவல்ல தீரன் அவன். நம்முடைய காலத்துக்குப் பிறகு
அவனும் இராஜாதிராஜனும் தான் நம்முடைய நாட்டைக் காப்பாற்றப்
போகிறவர்கள். தாங்கள் எப்படித் தந்தையார் காலத்திலிருந்து எங்களுக்கு
உறுதுணையாக விளங்குகிறீர்களோ, அப்படியே அவனும் எதிர்காலத்தில்
விளங்குவான் என்று நம்புகிறேன். சோழபுரப் புதுநகரம் உருவான பிறகு அவனையும் இராஜாதிராஜனையும் ஒன்றாக இணைத்துவிட
வேண்டும்.’’
“இணைத்து விடுவதற்கு வாய்ப்பாகத்தான் இடையில் இளவரசியார்
இருக்கிறாரே; நங்கையாரின் கரத்தை இளங்கோ பற்றிவிட்டானென்றால்
பிறகு அவன் எங்கே இணைப்பிலிருந்து விலக முடியும்?’’
மாமன்னர் உடனே மறுமொழி சொல்லவில்லை. எதையோ அவர்
யோசனை செய்தார். பிறகு நீண்ட பெருமூச்சுடன், “தாங்கள் அப்படி ஏதும்
நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கிறீர்களா?’’ என்று வினவினார்.
“ஏன் நடக்காது?’’
“எனக்கு நம்பிக்கையில்லை’’ என்று தலையசைத்தார் மாமன்னர்.
“என்ன! நம்முடைய உறவுக்குத் தகுதியில்லாதவன் என்றா
இளங்கோவைக் கருதுகிறீர்கள்?’’
“அவனைவிடத் தகுதியுள்ள வேறு எவனுமே இந்தச் சோழ
சாம்ராஜ்யத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அந்தப்
பாக்கியம் அருள்மொழிக்குக் கிடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.
அவனுடைய மனத்தில் அருள்மொழி இல்லை.’’
“சக்கரவர்த்திகளே எனக்கு இப்போது புரிகிறது. புரிந்து கொண்டேன்.
அந்த ரோகணத்துப் பெண்...’’
‘ஆமாம்’ என்பதுபோல் தலையசைத்தார் சக்கரவர்த்தி. வல்லவரையரோ
சக்கரவர்த்திக்கு ஆறுதல் கூறுவதாக எண்ணிக்கொண்டு, “இளங்கோவின்
மனம் அந்தப் பெண்ணைச் சார்ந்திருப்பதற்கு நானும் ஒரு காரணம். வேறு
பல காரணங்களுக்காக அவனை நான் அவளுடன் பழக அனுமதித்தேன்.
அந்தப் பழக்கம் இப்படி முதிர்ந்து போய்விடும் என்று நான்
எதிர்பார்க்கவில்லை’’ என்றார்.
“பழியைத் தங்கள்மீது மட்டும் சுமத்திக் கொள்ளாதீர்கள். அதில்
எனக்கும் பங்கு உண்டு’’ என்றார் இராஜேந்திரர். “மூலகாரணமே நான்தான்;
ஆனால் அதற்காகவும் நாம் கலக்கமுற வேண்டியதில்லை. நாம் எதிர்பார்த்த முக்கியமான பலனும் கிடைத்துவிட்டது. எதிர்பார்க்கத் தவறிய மற்றொன்றும் அத்துடன் வளர்ந்திருக்கிறது.’’
“வளர்ந்துவிட்டதாக எனக்கு ஒன்றுமே தோன்றவில்லையே!’’
“மாமா! தாங்கள் தங்களுடைய இளமைக் காலத்தை மறந்துவிட்டீர்கள்
போலிருக்கிறது!” என்று நகைத்தார் இராஜேந்திரர். அவரது நகைப்பில் உயிர்
இல்லை.
“முன் யோசனையின்றி எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடியவனல்ல
இளங்கோ! தங்களுடைய விருப்பத்துக்கு மாறாகவோ, பெரிய வேளார்
ஆணைக்குப் புறம்பாகவோ என் யோசனைக்கு எதிராகவோ அவன் ஏதும்
செய்துவிட மாட்டான். வீரத்தைப் போலவே அடக்கமும் அவனிடம் உண்டு.’’
மாமன்னர் சிறிது நேரம் மௌனமாக எதையோ சிந்தித்தார். பின்னர்
தெளிவான குரலில், “இளங்கோவின் விருப்பம் எதுவோ அதுவே என்
விருப்பமாகவும் இருக்கும்!’’ என்றார்.
வல்லவரையர் பேரதிச்சியுற்றார். ‘மாமன்னரா இவ்வாறு பேசுகிறார்.
அருள்மொழி நங்கையின் அன்புத் தந்தையாரா இங்ஙனம் கூறுகிறார்?’
“சக்கரவர்த்திகளே!” - வல்லவரையரின் குரல் நடுங்கியது.
“ஆமாம்! அவன் விருப்பமே என் விருப்பமாகவும் இருந்துவிட்டால்
யாரும் குறுக்கிட மாட்டார்கள் அல்லவா!”
“வேண்டாம் சக்கரவர்த்திகளே! இதைக் கேள்வியுற்றால் பெரிய வேளார்
பித்தாகி விடுவார். அரண்மனைப் பெண்கள் அலறித் துடிப்பார்கள்.
அருள்மொழியாரின் ஆசைகள் அடியோடு பொசுங்கிவிடும்.’’
அதுபற்றிச் சிறிதும் கவலையுறாதவர்போல், “இந்தச் செய்தி
அரண்மனையில் வேறு யாருக்கும் தெரிந்திருக்காதல்லவா?’’ என்று கேட்டார்
மாமன்னர்.
“தெரிந்திருக்க வழியில்லை.’’
“இப்போதைக்குத் தெரியாமலே இருக்கட்டும். ஒருவேளை யாரும் அதைத் தெரிந்துகொண்டு அதைத் தடுக்க முனைந்தாலும்
அவர்களிடம் என் கருத்தைக் கூறுங்கள். பெரிய வேளார்கூட இந்த
விஷயத்தில் அவன் மனதைப் புண்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.’’
“சக்கரவர்த்திகளே! நங்கையாரின் தந்தையார் என்ற முறையில் தயை
செய்து இளவரசியாரின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பாருங்கள்.
கொடும்பாளூர் குலத்துக்கும் சோழர் குலத்துக்கும் ஏற்பட்ட உறவு எத்தனை
பழமையானது என்பதையும் சிந்தனை செய்யுங்கள்.’’
“மாமா! உங்கள் எல்லோரையும்விட இதனால் வேதனை அடையப்
போகிறவன் நான்தான். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் எனது நலத்தைவிட,
என் குமாரத்தியின் வாழ்வைவிட, இளங்கோவின் எண்ணத்தையே நான்
பெரியதாக மதிக்கிறேன்! அவன் விரும்பும் பெண்ணை என்னால்
மறுக்கமுடியாது.
“இளங்கோவுக்கு என் மனதில் சரியானதொரு இடம் ஒதுக்கி
வைத்திருக்கிறேன். என் தந்தையாரின் இறுதிக் காலத்தில் நான்
அவருக்களித்த வாக்கை நிறைவேற்றியதில் அவன் பெரும் பங்கு
கொண்டிருக்கிறான். அவன் யாரை விரும்புகிறானோ அவளும் அவனுக்குத்
துணை செய்திருக்கிறாள். அவனுடைய உயிரைக் காப்பாற்றியதின் மூலம்
அந்த முடியையே நமக்குத் திருப்பித் தந்திருக்கிறாள். மேலும் அவன்
விரும்பக்கூடிய பெரியதொரு பரிசை அவனுக்கு அளிப்பதென்று முன்னமே
முடிவு செய்துவிட்டேன். ரோகிணியே அவன் விரும்பும் பரிசாக இருந்தால்...’’
“நங்கையாரின் ஆசைகள் இதனால் அழியக்கூடுமென்று தெரிந்தால்,
இளங்கோவே தன் மனத்தை மாற்றிக் கொண்டு விடுவான்.’’
“அரண்மனையில் பிறந்த பெண்களுக்கு ஆசைகளே இருக்கக்கூடாது
மாமா. அவர்கள் தங்களது வாழ்வைப் பற்றி நினைக்கவே கூடாது. பெண்களை
மட்டும் நான் பிரித்துச் சொல்லவில்லை. தங்களையும் என்னையும்
இளங்கோவையும் சேர்த்துச் சொல்கிறேன். காதல், ஆசை, பாசம் இவற்றுக்கெல்லாம் நமக்கு எங்கே பொழுதிருக்கிறது? தாங்கள் கூடத்தாம் என் அத்தையாரைக் காதலித்துக் கரம் பற்றினீர்கள். எவ்வளவு நாள் சேர்ந்து வாழ முடிந்தது தங்களால்? நமக்கெல்லாம் போர்க்களங்கள்; பெண்களுக்கெல்லாம்
அந்தப்புரங்கள். மெய்யான அடிமைகள் இந்தச் சாம்ராஜ்யத்தில் நாமும்
நம்மைக் கரம்பற்றிய பெண்களும்தாம்!
“மாமா! என் ஆசை, என் தந்தையாரின் விருப்பம், அரசியல்
காரணங்கள் இவற்றுக்காக ஐந்து பெண்களை மணந்து கொண்டவன் நான்.
சோழ சாம்ராஜ்யத்துச் சக்கரவர்த்தியின் மனைவியர் என்ற பெருமையைத்
தவிர, வேறு என்ன சுகத்தைக் கண்டார்கள்? ஐந்து மாதங்களோ ஐந்து
வாரங்களோ ஒவ்வொருவருடனும் நான் கழித்திருந்தால் அதுவே
எங்களுடைய இன்பம் நிறைந்த பொழுது. துன்பம் நிறைந்த பொழுதும்
அதுதான். இந்த அளவுக்குக் குறுகியுள்ள இல்லற வாழ்வுக்காக, ஒரு வீரம்
மிக்க இளைஞன் ஆசை கொண்டானென்றால் அதை ஏன் நாம் தடுக்க
வேண்டும்? அவன் விரும்பும் பொருளை நாம் அவனுக்கு அளித்துவிட்டால்,
அவனுடைய காதலே அவனைக் கடமை உணர்ச்சியில் உந்தித் தள்ளிவிடும்’’
என்றார் மாமன்னர்.
பின்னர், “தாங்கள் தஞ்சை சென்று ஆக வேண்டியதைக் கவனியுங்கள்’’
என்றார் சக்கரவர்த்தி. “கங்கை நீர் வந்த பின்னர், சோழபுரம் முழுமை
பெறும் வரையிலாவது நான் உயிருடன் வாழ நினைக்கிறேன். ஒருவேளை
நமது வீரர்கள் திரும்புவதற்கு ஓராண்டுக்காலம் ஆகலாம். அவசியம்
நேர்ந்தால் நானும் அவர்களுடன் சென்று கலந்து கொள்ள நேரிடும் - நான்
திரும்பி வராதபடி அப்படி ஏதும் நேர்ந்துவிட்டால், தாங்கள் இருந்து நகர்புகு
விழாவைச் சிறப்புற நடத்துங்கள். நான் கூறியவற்றையெல்லாம் மறந்து
விடாதீர்கள். சோழபுரத்துக்கு ‘கங்கைகொண்ட சோழபுரம்’ என்று பெயர்
சூட்டுங்கள்.’’
“கட்டாயம் தாங்கள் வெற்றியுடன் திரும்புவீர்கள் சக்கரவர்த்தி!
தாங்களே விழாவை முன்னின்று நடத்துவீர்கள்’’ என்று மனம் பொங்கக்
கூறினார் வல்லவரையர்.
தொடரும்

Comments
Post a Comment