வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 7- நங்கையும் தேவியும்.
சோழபுரத்தின் ஆலயத்தருகே வேங்கி இளவரசன் நரேந்திரன் தனது உள்ளக்கிடக்கையை அம்மங்கை தேவியிடம் வெளியிட்ட பிறகு, அவர்கள் இருவரும் முன்போல் ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு திரை விழுந்துவிட்டது. இருவருமே அதை உணர்ந்து கொண்டார்கள்.

தனது ஆசையை அம்மங்கையிடம் வெளியிட்டு அவளையே அருள்மொழியிடம் தூது செல்லப் பணித்ததற்காக அவன் தனக்குள் மனக்கிலேசமுற்றான். அவனுடைய எண்ணத்தை அம்மங்கை தெரிந்துகொண்ட பிறகு, அவள் அவனைப் பரிகசிக்கவோ, அவனிடம் முன்போல் துடுக்காகப் பேசவோ இல்லை.

அவள் அடியோடு மாறிப் போய்விட்டாள். அதன் காரணத்தான் நரேந்திரனுக்குத் தெளிவாக விளங்கவில்லை. ‘அவள் எதற்காக அந்த நேரத்தில் சட்டென்று தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்? அவள் எதற்காக அப்படி விம்மினாள்?’

தலைவன், தோழியின் வாயிலாகத் தான் விரும்பும் தலைவியிடம் தம் உள்ளத்தைத் திறந்து காட்டுவது ஒன்றும் புதிய வழக்கமல்ல. தூது செல்லும் தோழி இதனால் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வாளே தவிர, தன்னுடைய பணியை ஒருபோதும் அவள் தவறென்று கருதமாட்டாள். அருள்மொழி நங்கைக்கு இவள் தங்கையாக இருப்பதால், இவளிடம் கூறியிருக்கக் கூடாதென்று நினைக்கிறாளா? தங்கையாக இருப்பவளும் ஒருவகையில் தமக்கைக்குத் தோழிதானே? நான் என்ன வேற்றுமனிதனா, இவள் இப்படி என்னை அந்நியனாக மதிப்பதற்கு?

காதல் என்கிற இந்த ஒரு விஷயத்தில் காலங்காலமாகவே ஆண்களும் பெண்களும் பல தவறுகளைச் செய்து வருகிறார்கள்.அவற்றில் ஒன்று தங்களைக் காதலிப்பவர்களைக் கண்டுகொள்ள முடியாமல் திண்டாடுவது. இதில் ஆண்களை முட்டாள்களென்று சொல்வதா? பெண்களுக்கு அறிவில்லை என்று சொல்வதா? பெண்கள் தங்கள் உள்ளத்தின் உறுத்தலை சரியானபடி வெளியிட்டுக் கொள்வதுமில்லை- ஆண்களுடைய விவேகம் அத்தனை தூரத்துக்கு எட்டுவதுமில்லை. இப்படியெல்லாம் இருப்பதால்தான் பழமையிலும் பழமையான அந்த உணர்வுக்கு அத்தனை மகத்துவம் இருக்கிறது போலும்! அம்மங்கை தேவியிடம் கூறியதற்குப் பதிலாக அருள்மொழியிடமே கூறியிருக்கலாம் என்று தோன்றியது நரேந்திரனுக்கு. திரும்பவும் அம்மங்கையை அழைத்து, ‘நீ ஒன்றும் எனக்காகத் தூதுபோக வேண்டாம்; அதை நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லவும் தோன்றியது. ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. மீண்டும் அவளிடம் அந்தப் பேச்சை எடுக்கவே அவனுக்குத் துணிவு கிடையாது. அதுவரையில் அம்மங்கை அவனைவிடச் சிறியவளாக இருந்தாள். அதற்குப் பிறகு அவள் பெரியவளாகவும் அவன் சிறியவனாகவும் மாறிப் போய்விட்டார்கள்.

அம்மங்கைதேவியின் நிலைக்கும் அவள் தமக்கையாரின் நிலைக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. தஞ்சை அரண்மனைத் தோட்டத்துச் செடிகளுக்கு, இளங்கோ தந்த அதிர்ச்சியால் அருள்மொழி கண்ணீர் வார்த்துக்கொண்டிருந்தாள். இங்கே பழையாறையில் அம்மங்கையோ நரேந்திரனுக்காக அழுது கொண்டிருந்தாள்.

அரண்மனைகள் இருந்தென்ன? அரச போகங்கள் இருந்தென்ன?மாபெரும் சோழ சாம்ராஜ்யத்துச் சக்கரவர்த்தியின் அருமைக் குமாரத்திகளாக இருந்தென்ன? அவர்கள் பெண்கள்; அழுதுகொண்டிருந்தார்கள்.

பழையாறையில் அதிக நாட்கள் தங்காமல், தஞ்சைக்கு விரைந்து செல்லத் துடித்தாள் அம்மங்கைதேவி. அவளுடைய நம்பிக்கை அடியோடு நசித்துப் போய்விடவில்லை. அருள்மொழியிடம் அது ஓரளவு ஒட்டிக்கொண்டிருந்தது.

அருள்மொழி எவனை நினைத்துக் கொண்டிருந்தாள் என்பது அம்மங்கைக்குத் தெரியும். அம்மங்கையின் ஆசைகளையும் அவள் ஓரளவு அறிந்திருக்கக்கூடும். ஒரே இடத்தில் ஒன்றி வளர்ந்தவர்களாதலால் ஒருவரைப் பற்றி ஒருவர் அறியாதிருக்க வழியில்லை.

தஞ்சைக்குத் திரும்பி வந்தவுடன், பரபரப்போடு அந்தப்புரத்து அறைகளில் தன் தமக்கையைத் தேடிப் பார்த்தாள் அம்மங்கை. அங்கெல்லாம் அவளைக் காண முடியவில்லை. பூங்காவுக்குள் நுழைந்தாள்.ஒரு சண்பக மரத்தடியில் புறாவும் கையுமாக அருள்மொழி அமர்ந்திருப்பது தெரிந்தது. புறாவிடம் அவள் ஏதோ தனித்துப் பேசிக் கொண்டிருந்தாள் போலும். தன் தங்கையைக் கண்டவுடன் அதைப் பறக்க விட்டுவிட்டு மேல் எழுந்து வந்தாள். “அம்மங்கை! பழையாறையில் எல்லோரும் நலந்தானா? நரேந்திரருக்கும் உனக்கும் அங்கே நன்றாகப் பொழுது போயிருக்குமே? ஏன் சோர்ந்து காணப்படுகிறாய்?’’ என்று தன் தங்கையை வரவேற்றாள் அருள்மொழி. இருவருமே அருகருகே அமர்ந்திருந்தார்கள். சட்டென்று அம்மங்கை தேவி தன் தமக்கையின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். சில விநாடிகளுக்கு ஒன்றுமே பேசாமல் அருள்மொழியை உற்றுப் பார்த்தாள். இந்த மௌனத்தை அருள்மொழியால் தாங்க முடியவில்லை.

“அம்மங்கை! பேச முடியாத அளவுக்கு அவ்வளவா நீ களைத்துப் போய் விட்டாய்? என்மேல் என்ன கோபம் உனக்கு? நீ வருந்தும்படி நான் உனக்கு என்ன செய்துவிட்டேன்?’’

விரைந்து தமக்கையின் வாயைப் பொத்தினாள் அம்மங்கை தேவி. ஏனோ இருவரின் கண்களும் கலங்கின. இருவருமே மற்றவரின் கலக்கத்தைக் கண்டு துணுக்குற்றார்கள்.

“பேசமாட்டாயா அம்மங்கை?’’

அம்மங்கை சிரித்தாள். “உங்களிடம் முக்கியமானதொரு செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதை எப்படிக் கேட்பதென்று தெரியவில்லை.’’

“ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக என்னவோ சொல்கிறாயே? அங்கே என்ன நடந்தது?’’

“அங்கே ஒன்றும் நடக்கவில்லை. அப்படி ஏதும் நடந்திருந்தால் அதைப் பின்னால் சொல்கிறேன். உங்களிடம் கேட்பதற்காகத்தான் இவ்வளவு விரைவில் திரும்பினேன்.’’

“நரேந்திரர் திரும்பிவிட்டாரா? இருவரும் ஒன்றாகத்தானே வந்தீர்கள்?’’

“ஆமாம்! நான் கேட்பதை முதலில் சொல்லுங்கள்.’’ கேட்பதற்குத் தயங்கினாள் அம்மங்கை.

“தாராளமாகக் கேடகலாம், நான் என்ன உன் தமக்கைதானே?’’

“இருந்தாலும் நீங்கள் என்னைப் போலில்லை. நான் எதையுமே மனத்தில் வைக்காமல் வெளியில் கொட்டி விடுவேன்; நீங்கள் ஒன்றையுமே சொல்வதில்லை.உங்களுடைய புறாவிடம் எதையாவது சொன்னாலும் சொல்வீர்களே தவிர, உங்கள் தங்கையிடம் நீங்கள் மனம் விட்டுப் பேசியதே இல்லை.’’

அருள்மொழி புன்னகை பூத்துக்கொண்டாள். அன்போடு தன் தங்கையின் கேசத்தை வருடினாள். கலகலப்பே உருவான கள்ளங்கபடமற்ற தன் தங்கையின் வாய்ச் சொற்கள், அவளுடைய அப்போதைய மனவேதனைக்கு அருமருந்தாக இருந்தன. உடனே அந்த வேதனையைக் கிளறிவிடத் தொடங்கினாள் அம்மங்கை.

“நம்முடைய தந்தையாரின் சித்தம் எதுவோ, அதுதான் முடிவில் நடக்கப் போகிறது. என்றாலும் அவர்களுடைய விருப்பத்தை ஒட்டியதாக நம்முடைய நினைவும் இருந்தால், அதை அவர்கள் கட்டாயம் ஆலோசனை செய்வார்கள். அதனால் உங்கள் எண்ணத்தை முதலில் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.’’

“எதைப் பற்றிக் கேட்கிறாய் நீ?’’

“வேறு எதைப் பற்றிக் கேட்பேன்? உங்களைப் பற்றியே கேட்கிறேன். சொல்லுங்கள், நீங்கள் யாரை உங்கள் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’’

“நீ மிகவும் பொல்லாதவள்!’’ என்று சிரித்தாள் அருள்மொழி.

“இப்படியெல்லாம் பேசுவதற்கு நீ எங்கே கற்றுக் கொண்டாய்? யாரிடம் கற்றுக்கொண்டாய்? நான் இதுவரை யாரையுமே நினைக்கவில்லை.’’

“அக்கா!” என்று கத்தினாள் அம்மங்கை. “நீங்கள் சொல்லாதவரை

நான் உங்களை விடப் போவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்காதீர்கள்!” அம்மங்கையின் குரலில் ஆவேசம் ஒலித்தது. குழந்தைத்தனமான பிடிவாதத்துடன் அவள் தன் தமக்கையின் இடுப்பை வளைத்துக் கொண்டாள்.அழப் போவதாக அவள் விழிகள் அச்சுறுத்தின.

“இதோ பார்! நான் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதானா இப்போது முக்கியமான விஷயம்? இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் எத்தனை எத்தனையோ பெரிய விஷயங்கள் நடக்கின்றன.வேதனை தரும் காரியங்களும் நடக்கின்றன.நமது தந்தையார் இப்போது எங்கே இருக்கிறார்களோ? என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ? அவர்களுக்கு நம்மைப்பற்றி நினைவில்லாமலா இருக்கும்?’’

“தந்தையார் இருக்கட்டும்; உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்? நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?’’

“வேண்டாம்! என்னை வற்புறுத்தாதே?’’ அருள்மொழியின் குரல் கம்மியது.

அப்படியும் அம்மங்கையின் பிடிவாதம் தணியவில்லை. தன்னுடைய தமக்கை தன் விருப்பத்தை வெளியிடுவதால், அவளுக்குத் துன்பம் வந்தாலும் சரி என்று துணிந்துவிட்டாள். அருள்மொழியின் அழுத்தம் நிறைந்த நெஞ்சைப் பஞ்சாக்கத் தொடங்கினாள் அம்மங்கை தேவி. பின்னர், முயற்சியில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பவள் போல், “அக்கா! உங்களுடைய மனத்தை நீங்கள் கொடும்பாளூர் இளவரசருக்குப் பறி கொடுத்திருக்கிறீர்கள். நான் அப்படித்தான் நினைக்கிறேன். என்னுடைய நினைவு சரியா, தவறா என்பதையாவது சொல்லி விடுங்கள்’’ என்று கெஞ்சினாள்.

“இல்லவே இல்லை!’’ என்றாள் அருள்மொழி அழுத்தந்தோய்ந்த குரலில்.

“என்ன?’’

“இல்லை, அம்மங்கை!”

ஒரு வேளை ஈழத்திலிருந்து இளங்கோ திரும்பி வருவதற்கு முன்பு அவனுடைய மனப்போக்கை அவள் கண்டு கொள்வதற்குமுன்பு, அம்மங்கைதேவி அவளிடம் கேட்டிருந்தால் அவள் என்ன சொல்லியிருப்பாளோ தெரியாது. ஆனால் அருள்மொழி இப்போது அறிந்து கொண்டவள்.

“அக்கா! இது பொய்! தாங்கள் கூறுவது பொய்’’ என்று பதறித் துடித்தாள் அம்மங்கை. அவளுக்கு அது பொய்யாகவும் தோன்றியது.அது பொய்யாக இருக்க வேண்டுமென்றும் அவள் விரும்பினாள்.

“உன்னை நம்பச்சொல்ல என்னால் முடியாது.எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள். நீ கேட்டதற்கு நான் பதிலளித்தேன்’’ என்றாள் அருள்மொழி திடமான குரலில்.

“அக்கா! கொடும்பாளூராரிடம் நீங்கள் கொண்டிருந்த அன்பு உங்களைப் பலமுறை என்னிடம் காட்டிக் கொடுத்திருக்கிறது. நீங்கள் பழையாறையில் மறைவாகப் போய் அவருக்காக மருந்து அரைத்ததையும், ஈழத்துக்கு அவர் போன பிறகு சித்தம் கலங்கித் தவித்ததையும் நேரில் கண்டவள் நான். இப்போது உங்கள் தங்கையென்றும் பாராமல் என்னிடம் ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மறைக்க முடியாத ஒன்றை மறைத்துப் பயனில்லை, அக்கா?’’

“அம்மங்கை!” என்று தன் ஆத்திரத்தையெல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவளை அடக்கிட முயன்றாள் அருள்மொழி. இருவராலுமே தங்கள் கண்ணீர் வெள்ளத்துக்கு அணைபோட முடியவில்லை.பிறகு அருள்மொழி தன் தங்கையை அன்போடு தழுவிக்கொண்டு, “நான் சொல்வதை நீ நம்பத்தான வேண்டும். உறவு முறையால் நான் கொண்டுள்ள அன்பை நீ வேறுவிதமாக நினைத்துக் கொண்டுவிட்டாய்’’ என்றாள்.

சிறுபொழுது மௌனத்தில் கழிந்தது.அம்மங்கை நன்றாகவே யோசனை செய்துவிட்டுக் கூறினாள்.

“அப்படியானால் நான்தான் விவரம் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். தவறு என்னுடையதுதான்.’’

“என்ன?’’ என்றாள் அருள்மொழி.

“உங்களை வேங்கி நாட்டரசியாராக்க வேண்டுமென்று நரேந்திரர் நினைத்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாது. சோழபுரத்தில் அவர் என்னிடம் கூறியபிறகுதான் தெரிந்து கொண்டேன்.நேரில் உங்களிடம் கேட்பதற்குத் தயங்கி என்னிடம் சொல்லிக் கேட்டுவரப் பணித்தார். இப்போது அவர் சார்பில் கேட்கிறேன்; நீங்கள் கொடும்பாளூர் இளவரசரைப் பற்றி நினைக்காததால் நரேந்திரரின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளலாமல்லவா?’’

அருள்மொழியின் கண்கள் கூரியவேல்களைப் போன்று அம்மங்கையின் விழிகளைத் துளைத்தெடுத்தன.அவற்றின் வாயிலாக அவள் இதயத்துக்கே சென்றன.

“நல்ல ஆண் பிள்ளைகள் இவர்கள்! அவர் எதற்காக இதை என்னிடம் நேரடியாகக் கேட்காமல் உன்னிடம் சொல்லியனுப்புகிறார்! அவரிடம் நீ போய்ச் சொல்; என்னிடமே அவரைப் பேசும்படி சொல்லிவிடு.நானே மறுமொழி சொல்கிறேன்.’’

அம்மங்கை வைத்திருந்த அரைகுறை நம்பிக்கையும் அடியோடு காற்றில் கலந்துவிட்டது.கரங்களால் தன் முகத்தை மூடிக்கொண்டு அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றாள்.

தொடரும்


Comments