Saturday, January 19, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 8. ரோகிணியின் தாபம்

பாகம் 3 , 8. ரோகிணியின் தாபம் 


இளங்கோவைப் போன்ற பேராற்றலும் பெருவலியும் கொண்ட வீரர்கள்
தங்கள் வாழ்வெல்லாம் போராடப் பிறந்தவர்கள். எந்த வேளையிலும்
அவர்கள் எதையாவது செய்துகொண்டிருப்பார்களே தவிர, அவர்களால்
வெற்றுப் பொழுது போக்கமுடியாது. அவர்கள் ஆக்கப் பிறந்தவர்கள்;
அல்லது அழிக்கப் பிறந்தவர்கள்.

தஞ்சைத் தலைநகரத்தில் இருந்தபோதெல்லாம் இளங்கோ தன்னுடைய
காலைப்பொழுதுகளைப் பயிற்சிக் களங்களிலேயே கழித்திருக்கிறான்.
அவனுடைய உடலும் உள்ளமும் என்றுமே சோம்பியிருந்ததில்லை. வில், வாள்,
வேல் இவற்றில் எதையாவது வைத்துக்கொண்டு யானை மீதோ குதிரை மீதோ பயிற்சிக் களத்தில் பம்பரமாயச் சுழன்று வருவான். களத்தில் அவனைக்
காணும் காளையரெல்லாம் புத்துயிரும் புத்துணர்ச்சியும் பெறுவார்கள்.

அத்தகைய இளங்கோவுக்கா இப்போது இருட்சிறை! கூண்டுப் புலிபோல்
அவன் குமுறினான். அவன் உள்ளம் உறுமியது. காலைப் பொழுதுக்கும்
மாலைப் பொழுதுக்கும் வேறுபாடு தெரியவில்லை. இரவும் பகலும் அவனுக்கு
ஒன்றாகவே தோன்றியது. நாளுக்கு நாள் அவன் இளைத்துக் கொண்டே
வந்தான்.

அது தஞ்சை அரண்மனைச் சிறையாக இல்லாதிருந்து அவனை
அடைத்தவரும் பெரிய வேளாராக இல்லாதிருந்தால் ஒன்று சிறைக் கதவுகள்
தூள் தூளாகியிருக்கும். அல்லது அவனே தூள் தூளாகச் சிதறிப்
போயிருப்பான்.

அருள்மொழி நங்கையும் மாங்குடி மாறனும் அங்கே தினந்தோறும்
மாறிமாறி வந்து சென்றார்கள். அவர்களுடைய வரவு அவனுக்கு வேதனை
அளித்தது. அதுவே அவனுக்கு ஆறுதலும் தந்தது.

உணவு கொள்ளும் வேலைகளில் மட்டும் அருள்மொழி அருகிலிருந்து
தவறாது அவனை வற்புறுத்தித் தந்தாள். உணவை மறுத்துப் பிடிவாதம்
பிடிக்கும் சின்னஞ்சிறு குழந்தையாக அவன் மாறிவிட்டது அவளுக்கு
என்னவோ போலிருந்தது. கெஞ்சினாள்; வேண்டிக் கொண்டாள்; கண்டித்துப்
பேசினாள். அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவள் அவனைப் பெற்று
வளர்த்த ஆதித்த பிராட்டியாகவே மாறிவிட்டாள்.

சிறைக்கம்பிகளுக்குப் பின்னே அவனுக்கு அருள்மொழி உணவு
பரிமாறும் அற்புதக் காட்சியை அவர்களுக்குத் தெரியாமல் மறைந்திருந்து
கவனிப்பான் மாங்குடிமாறன். தனது தலைவனுக்காக அவன் அனுபவித்த
துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்த காட்சி அது ஒன்றே ஒன்றுதான்.

“நீங்கள் என்ன குழந்தையா?’’ என்று கேட்டாள் அருள்மொழி.

“சக்கரவர்த்திகளின் குடும்பத்தாருக்கு நாட்டு மக்கள் எல்லோருமே
குழந்தைகள்தானே?’’ என்றான் இளங்கோ இளநகையோடு.

“நீங்களும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தாம்! உணவை
வெறுக்காதீர்கள்’’ என்பாள் அருள்மொழி.

அவளிடம் அடங்கி ஒடுங்கி அரை வயிற்றையாவது நிரப்பிக்
கொள்வான் இளங்கோ. அருள்மொழிக்கு அவன் நாளுக்குநாள் இளைத்து
வந்தது நன்றாகத் தெரிந்தது. ஆனால் அதை அவளாக அவனிடம்
வெளியிடவில்லை.

ஒருநாள் மாங்குடிமாறன் இளங்கோவிடம் வந்து, ஆனை
மங்கலத்திலிருந்து ரோகிணி தஞ்சைமாளிகைக்குத் திரும்பி விட்டதை
அறிவித்தான்.

“இளவரசே! ரோகணத்து இளவரசியார் அங்கு குற்றுயிரும் குலை
உயிருமாகக் கிடந்தார்களாம். நம்முடைய அவசரத்தில் நாம் அவர்களை
மிகவும் அபாயகரமான நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டோமென்று
தெரிகிறது. பிழைத்து எழுந்ததே மறுபிறவி என்கிறார்கள். ஆனால் இன்னும்
அவர்களுக்கு முற்றிலும் குணமாகவில்லை.’’

மறுமொழி கூறாது மாறனின் சொற்களை உற்றுக் கேட்டான் இளங்கோ.

“நாகையிலிருந்து தஞ்சைக்குப் பிரயாணம் செய்ததால் அவர்களுடைய
நிலைமை மறுபடியும் மோசமாகிவிட்டது. நானே சென்று அவர்களை நேரில்
பார்த்தேன். நோயோடு நோயாக இளவரசியை இங்கே கொண்டு வந்திருக்கக்
கூடாது முற்றிலும் குணமான பிறகு திரும்பி வந்தால் என்ன? அதற்குள்
என்ன அவசரம் வந்துவிட்டதோ?’’

இதைக் கேட்டபிறகு இளங்கோவின் மௌனம் கலைந்தது. “நான்
இங்கிருப்பது மற்றவர்களுக்குத் தெரியாத ரகசிய மென்றாயே, அது
உண்மைதானே?’’ என்றான்.

“என்னையும் இளவரசியாரையும் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது.
அடிசில் சமைப்போருக்கு யாரோ ஒருவரை அமைச்சர் நிலவறையில் வைத்திருப்பது தெரியும். அமைச்சர் தமது குமாரரையே அங்கு வைத்திருக்கிறாரென்றால் யாருமே அதை நம்பமாட்டார்கள். யாருக்கும் தெரியாது.’’

“ஆம்! இந்த ரகசியத்தை நீ காப்பாற்றினால் போதும்’’ என்று கூறினான்
இளங்கோ. ரோகிணியிடம் சொல்லக் கூடாதென்று மறைமுகமாக அவனுக்குக்
கட்டளையிட்டான். இதே ரகசியத்தைத் தெரிந்து கொண்ட மற்றொருத்தியை
அவன் அப்போது பொருட்படுத்தவில்லை. அருள்மொழியின் வாயிலிருந்து
அந்தரங்கச் செய்திகள் தப்பிவிட முடியாதென்பதில் அவனுக்கு அளவற்ற
நம்பிக்கை.

அருள்மொழி இந்த வேளையில் மகிந்தரின் மாளிகையை நோக்கித்தான்
சென்று கொண்டிருந்தாள். உள்கூடத்தைத் தாண்டி ரோகிணியின் அறைப்
பக்கம் அவள் திரும்பும்போது அறைக்குள்ளிருந்து மகிந்தரின் சொற்கள்
கோபாவேசத்துடன் வெளிவந்தன.

சட்டென்று திரும்பிப் போய்விட நினைத்தாள் அருள்மொழி. ஆனால்
ரோகிணியைப் பார்க்காமல் திரும்புவதற்கும் மனமில்லை. மகிந்தரின்
சொற்களும் இளங்கோவைப் பற்றியதாக இருந்தன. ஆகவே சற்றுத் தயங்கி
நின்றாள்.

“ரோகிணி! நான் பெற்ற மகள்தானா நீ? நீயா இப்படி மாறிப்
போனாய்? இல்லை, உன்னை அந்தக் கொடும்பாளூர் இளவரசன் இப்படி
மாற்றிவிட்டனா?’’

“அப்பா! அவரைப் பற்றி ஒன்றுமே பேசாதீர்கள்.’’

“ரோகிணி! எவன் உனக்கு எமனாக வந்தானோ, அவனுக்காகவே நீ
பரிந்து பேசுகிறாய்! வேண்டுமென்றே உன்னைக் கொல்ல நினைத்துக்
கொலையும் செய்துவிட்டான் அவன். இப்போது அவனைப் பார்க்க
வேண்டுமென்பதற்குத்தான் பிடிவாதம் பிடித்து இங்கே வந்திருக்கிறாய். மகளே
நீ இப்படி மாறுவாய் என்று நான் கனவுகூடக் காணவில்லை.’’

“இல்லையப்பா! நான் அவரைப் பார்க்க வரவில்லை!” என்றாள்
ரோகிணி. ரோகிணியின் குரல் உயிரற்று ஒலித்தது.

மகிந்தர் தமது மகளிடம் சீறினார். “பொய்! பொய்! அவ்வளவும் பொய்!
இனி நீ கூறுவது எதையுமே என்னால் நம்ப முடியாது. இப்படிதான் நீ
தொடக்கத்திலிருந்தே என்னை ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கிறாய் என்று
தெரிகிறது. ரோகணத்தில் அவனுக்கு நான் அளித்த மரண தண்டனையிலி
ருந்து நீதான் அவனைக் காப்பாற்றியிருக்கிறாய். அவன் மணிமுடியை எடுத்து
வருவதற்கும் நீதான் காரணம். நான் சோழர்களிடம் சரணடைவதற்கும் நீதான்
காரணம். இப்போது நான் என்னுடைய நகரத்தையும் சொந்த மகனையும்
இழந்து நிற்பதற்கும் நீதான் காரணம். இவ்வளவையும் நீ அவன்
ஒருவனுக்காகத்தான் செய்திருக்கிறாய். நினைத்துப் பார்த்தால் என்னுடைய
நெஞ்சு கொதிக்கிறது, ரோகிணி.’’

ரோகிணி தேம்பினாள். அவளுடைய தேம்பல் ஒலியைக் கேட்ட
அருள்மொழியின் மனம் ரோகிணிக்காகப் பாகாக உருகியது. ‘அவளுடைய
தந்தையார் கூறுவதெல்லாம் மெய்தானோ! கொடும்பாளூர் இளவரசருக்காகவே
அவள் இவ்வளவையும் செய்திருக்கிறாளா?’’

மெல்லக் கதவைத் திறந்துகொண்டு அருள்மொழி அறைக்குள்
நுழைந்தவுடன், மகிந்தர் அவளை வரவேற்பது போல் நடித்துவிட்டு, வேகமாக
வெளியேறினார். கட்டிலில் ரோகிணியின் அருகில் அமர்ந்து அவள்
கரங்களைப் பற்றித் தன் மடிமீது வைத்துக்கொண்டாள் அருள்மொழி.
ரோகிணியின் உருவமே அடியோடு மாறியிருந்தது. அவளுக்கு நெற்றிக்காயம்
இன்னும் முற்றிலும் ஆறவில்லை.

அருள்மொழியின் கண்களில் தெரிந்த கனிவு ரோகிணிக்கு ஆறுதல்
தந்தது.

“என்னை மன்னித்துக்கொள் ரோகிணி. ஆனைமங்கலத்துக்கே நேரில்
வந்து உன்னை நான் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்போது நீ
ஆபத்தான நிலையில் இருந்தது எனக்குத் தெரியாது’’ என்றாள் அருள்மொழி.

“ஏன் கொடும்பாளூர் இளவரசர் சொல்லவில்லையா, அக்கா?’’ என்று
கேட்டாள் ரோகிணி. உடலைப்போல் குரலும் ரோகிணிக்கு நலிந்து
போயிருந்தது.

“ஒருவேளை அவருக்கே அது தெரியாமல் இருந்திருக்கலாம். அவர்
கூறியதைக் கேட்டபோது எனக்கு அது அபாயகரமானதாகத் தோன்றவில்லை.
சிறுகாயம் என்றுதான் அவர் நினைத்திருந்தார்.’’

“இப்போது இளவரசர் எங்கே அக்கா இருக்கிறார்?’’

அருள்மொழி பதிலளிக்கவில்லை. இரக்கத்துடன் ரோகிணியைப் பார்த்துச்
சிரிக்க முயன்றாள்.

“ஏன் அக்கா, சொல்லக்கூடாதா?’’ என்று மீண்டும் கேட்டாள் ரோகிணி.

நேரடியாக அதற்கு விடையளிக்காமல், “ரோகிணி உன் தந்தையார்
பேசிய பேச்சில் ஒரு பகுதி என் செவிகளில் விழுந்தது; அவர்
கூறியதெல்லாம் மெய்தானா?’’ என்றாள் அருள்மொழி.

“உங்களை நான் ஒன்று கேட்கிறேன்; நீங்கள் என்னிடம் வேறு
எதையோ கேட்கிறீர்களே?’’

“இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள
விரும்புகிறேன், ரோகிணி.’’

“தெரிந்து கொண்டால் அவர் எங்கே இருக்கிறார் என்பதக்
கூறுவீர்களா?’’

அருள்மொழி பதிலளிக்கவில்லை. ரோகிணியையே கண்ணிமைக்காது
கவனித்துக் கொண்டிருந்தாள். ரோகிணியின் உள்ளத்தில் மறைந்து
கொண்டிருந்த ஏதோ ஒன்றை அவள் தேடுவதுபோல் தோன்றியது.

“அக்கா! உங்களிடம் இனியும் நான் எதற்காக மறைக்கவேண்டும்?
ஆனைமங்கலத்திலேயே நான் இறந்து போயிருந்தால் அது என்னோடு
ஒன்றாய்ப் போயிருக்கும். ஆனால் நான் சாக விரும்பவில்லை; அவரைப்
பார்த்து என்னைமன்னிருக்கும்படியாகக் கேட்ட பிறகே சாக விரும்பினேன். தந்தையார் கூறியது அவ்வளவும் உண்மைதான். இந்தமுறை அவர் ஈழத்துக்குப் போனபோதுகூட அவர் பத்திரமாகத் திரும்பவேண்டுமென்பதற்காகச் சில விவரங்களைச் சொல்லித் தான் அனுப்பினேன்.’’

அருள்மொழியின் இருதயத்தையே இரு கூறாகப் பிளந்துகொண்டு
வெளிப்பட்டது ஒரு நெடுமூச்சு.

“அக்கா! அவரை நான் எப்படியும் பார்க்கவேண்டும் அக்கா! அவரைப்
பார்ப்பதற்காகத்தான் இந்த உயிர் பத்திரமாக இருந்திருக்கிறது; அதற்காகவே
நான் இங்கு வந்திருக்கிறேன். அவர் இப்போது எங்கே அக்கா இருக்கிறார்?’’

ரோகிணியை அணைத்துக்கொண்டு மாலை மாலையாகக் கண்ணீர்
சொரிந்தாள் அருள்மொழி. ஆனால் ரோகிணியின் கேள்விக்கு மட்டிலும்
அவள் வாய் திறந்து விடையளிக்கவில்லை.

தொடரும்

No comments:

Post a Comment