வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற பெருந்தெய்வம்.




ரோகிணியின் அறையை விட்டு அருள்மொழி எழுந்து செல்வதற்கு ஒரு நாழிகைப் பொழுதாயிற்று. அதற்குள் இளங்கோவைப் பற்றிய செய்திகள் ஏதும் அருள் மொழியிடமிருந்து ரோகிணிக்குக் கிடைக்கவிலலை.அருள்மொழி புறப்படும் வரையில் பொறுத்துக் கொண்டிருந்த ரோகிணி, மேலும்பொறுக்க முடியாதவளாய் “என்னை ஏமாற்றிவிட்டுப் போகப் பார்க்கிறீர்களே அக்கா! இது நியாயமா?’’ என்று கேட்டாள்.

“ரோகிணி! ஆத்திரப்படாதே, அம்மா. நானா உன்னை ஏமாற்றுவேன்? அம்மங்கையைப்போல் நீயும் எனக்கொரு தங்கையல்லவா? நான் யாரையுமே என்றைக்குமே ஏமாற்ற மாட்டேனம்மா!” குரல் தழுதழுக்க ரோகிணியைத் தழுவிக்கொண்டாள் அருள்மொழி. பிறகு திரும்பி நடந்தாள்.

“ஒன்றும் சொல்லாமலே போகிறீர்களே, அக்கா!”

“சொல்லக்கூடிய நிலையென்றால் சொல்லாமல் இருப்பேனா?’’

மாளிகையை விட்டு வெளியில் வந்த அருள்மொழி தான் தரையில் நடப்பதாக உணரவில்லை. அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் கடலுக்குள் எடுத்து வைப்பது போலிருந்தது. அவள் கணத்துக்குக் கணம் கீழே, கீழே போய்க் கொண்டிருந்தாள். கீழே, கீழே, கீழே கடலின் அடிவயிற்றுக்கே போய்ச் சேர்ந்தாள் அவள்.

அதிலிருந்து மீண்டும் எழும்பி வருவதற்கு அவளுக்குப் பல யுகங்கள் சென்றன.பல விநாடிகள் என்றாலும் அவை அவளுக்கு யுகங்களே.

சிறிது நேரம் அந்தப்புரத்தில் ஒதுங்கி, தன்னை மறு பிறவி எடுத்தவளாக மாற்றிக்கொண்டு, நிலவறைக்குச் சென்றாள் அருள்மொழி. வழக்கமாகக் கூண்டுப் புலி போல் உலவும் இளங்கோ, வழக்கத்துக்கு மாறாகத் தலையைக் கரங்களில் கவிழ்த்துக் கொண்டு, ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கவனம் எங்கோ வேறிடத்தில் நிலைத்திருந்தது. ரோகிணியை நினைத்துக் கொண்டிருந்தான் போலும்! அருள்மொழி வந்து காத்து நின்றது அவன் உணர்வில் படவில்லை.

“இளவரசே!”

திடுக்கிட்டுத் திரும்பினான் இளங்கோ. எழுந்து அருகில் வந்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட போது, இந்த உலகத்தின் துன்பமெல்லாம் இரு கூறாகப் பிரிந்து இருவர் முகங்களிலும் தேங்கி நின்றது.

“நங்கையாரே!”

“எனக்கு நீங்கள் ஒரு வரம் தரவேண்டும். தருவீர்களா?’’

“வேண்டாம், நங்கையாரே, வேண்டாம்! கடவுளிடம் தான் மனிதர்கள்வரம் கேட்பார்கள்.நான் இந்த நாட்டின் அடிமைகளில் ஒருவன்.என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் தெய்வத்துக் கொப்பானவர்கள்.இத்தனை பெரிய சொல்லால் என்னை உயர்த்த முயலாதீர்கள், இளவரசி! ஆணையிடுங்கள்.’’

“கொடுப்பீர்களா?’’

“கட்டளையிடுங்கள்!”

“ரோகிணி உங்களைப் பார்க்கத் துடிக்கிறாள். பார்ப்பதற்காகவே அவள் உடல் உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறது.அவளை அவள் தந்தையார் இங்கே சுமந்து கொண்டு வந்திருக்கிறார். பார்த்து விட்டால் கட்டாயம் அவள் பிழைத்துக் கொள்வாள்!”

வேதனையோடு சிரித்தான் இளங்கோ. “என்னைப் பார்க்காமல் அவள் இறந்துவிடுவாள் என்றால், அதை நான் வரவேற்கிறேன் இளவரசி!”

“இளவரசே!”

“நான் இப்போது இளவரசனில்லை.அப்படி இருந்தவனைத்தான் இப்படி மாற்றிவிட்டாள் அவள்.அவள் என்னை எந்த நிலைமைக்குக் கொண்டுவந்து

விட்டாள். பார்த்தீர்களா? என்னுடைய சிறை வாழ்க்கையை நாளைக்கு நீங்கள் மறந்துவிடலாம்; என்னைச் சிறையிட்ட கொடும்பாளூர் அரசர்கூட மறந்துவிடலாம். என்னால் மறக்கவே முடியாது, இளவரசி!”

“எனக்கு நடந்தவையெல்லாம் தெரியும்’’ என்று அழுத்தமாகக் கூறினாள் அருள்மொழி.“உங்களுக்காக அவள் செய்தவற்றையெல்லாம் மறந்துவிடாதீர்கள்.அவற்றை நினைத்துக்கொண்டால், இந்த ஒரே குறை மறைந்து போகும்.நல்லவற்றையே நினைத்துப் பார்த்துத் தீயவற்றை மறந்துவிட வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?’’

“உங்களை வேண்டிக்கொள்கிறேன், என்னிடம் அவளைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள்.அவள் செய்திருக்கும் துரோகத்துக்கு மரணம்கூடச் சரியான தண்டனையாகாது.’’

“அவள் துரோகிதான்’’ என்று அருள்மொழி கூறியவுடன், துணுக்குற்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் இளங்கோ. “அவள் துரோகிதான்’’ என்று மீண்டும் கூறினாள் அருள்மொழி. “அவள் உங்களுக்காக அவளுடைய தாய்த் திருநாட்டுக்கே துரோகம் செய்திருக்கிறாள். அவளுடைய தந்தையாருக்கும், குடும்பத்தாருக்கும் துரோகம் செய்திருக்கிறார்கள். அவளுடைய துரோகத்தால் உங்களையே காப்பாற்றி உங்கள் நாட்டின் மானத்தையும் உயர்த்தியிருக்கிறாள். கொடும்பாளூர் இளவரசே! இப்போது சொல்லுங்கள்; கொடுமை நிறைந்த துரோகிதானே அவள்?’’

வெறி கொண்டவன்போல் விழித்தான் இளங்கோ.

“தயவு செய்து என்னைத் துன்புறுத்தாதீர்கள். முடியாது, முடியாது, முடியவே முடியாது’’ என்று குமுறிக்கொண்டே மூலைக்கு ஓடினான். பிறகு அருள்மொழி கால் கடுக்க நின்று பார்த்தாள். அவன் திரும்பவே இல்லை. எனவே, பேசாமல் திரும்பி நடந்தாள்.

நள்ளிரவு நேரம். தஞ்சை அரண்மனையும் அதைச் சூழ்ந்திருந்த மாளிகைகளும், தோட்டங்களும், விடுதிகளும் இருட்போர்வைக்குள் துயின்றுகொண்டிருந்தன. காவலர்களின் கவனம் அரண்மனைக் கோட்டைக்கு வெளிப்புறம் திரும்பியிருந்தது.

மகிந்தரின் மாளிகையில் ரோகிணியைத் தவிர மற்றவர்கள் உறங்கிவிட்டார்கள். மகிஷியாரையும் கந்துலனின் மகளையும் கூட உறக்கம் விடவில்லை. ரோகிணி மட்டிலும் விளக்கேற்றும் நேரத்தில் அருள்மொழி தன்னிடம் வந்து கூறிய சொற்களை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். “இரவில் உறங்கிவிடாதே, ரோகிணி! எந்த நேரமானாலும் நான் வருகிறேன்’’ என்று சொல்லிப் போனாள் அவள். அறைக்குள்ளே காற்று வீசுவதுபோல் ஓசை புகுந்தது. அதற்குள் நிழல்களும் தெரிந்தன. கதவோரத்தில் வந்து நின்ற அருள்மொழி, மற்றவர்களின் உறக்கத்தைக் கலைக்காமல் கட்டில் அருகில் வந்தாள். மெல்ல ரோகிணியைக் கைத்தாங்கலாகப் பற்றி அறைக்கு வெளியே கொண்டு வந்தாள்.

கதவை ஒட்டி நின்றுகொண்டிருந்தான் மாங்குடி மாறன்.அருள்மொழி சைகை செய்யவே, அடிபட்ட மானைத் தூக்குவதுபோல், மெல்ல ரோகிணியைத் தூக்கிக் கொண்டு இருளோடு இருளாக நகர்ந்தான் மாறன். அருள்மொழியும் நெருங்கி வந்து கொண்டிருந்ததால் ரோகிணி அச்சுறவில்லை.

“நாம் எங்கே அக்கா போகிறோம்?’’ என்று அருள்மொழியின் செவி ஓரத்தில் கேட்டாள் ரோகிணி. பதிலளிக்காது அவள் வாயைப்பொத்தி, மௌனமாக வரும்படி எச்சரிக்கை செய்தாள் அருள்மொழி.

வானத்துத் தாரகைகளின் ஒளிகூட ரோகிணியின் மேல் படாதவாறு, அவளை எங்கெங்கோ மறைத்துக்கொண்டு நடந்தான் மாறன்.மூச்சு விடுவதற்கே அஞ்சியவள்போல் அருள்மொழி அவனைப் பின்பற்றினாள். நிலவறையின் சுரங்க வழி வாயிலுக்கு வந்தவுடன், மாங்குடிமல்லனின் பணிமுடிந்து விட்டது போலும். மெதுவாக ரோகிணியை இறக்கி விட்டு, அருள்மொழியிடம் ரகசியமாக, “இங்கேயே காத்திருக்கிறேன் இளவரசி;இளவரசருக்குக்கூட நான் செய்திருப்பது தெரியக்கூடாது’’என்றான்.

சங்கிலி விளக்கை ஒரு கரத்தால் பற்றிக்கொண்டு, ரோகிணியைத் தோளில் சாய்ந்தவாறே அடிமேல் அடி வைத்து நடந்தாள் அருள்மொழி. ரோகிணி வைத்த ஒவ்வொரு அடியும் அவள் மரணத்தை நோக்கி வைக்கும் அடி போல் அருள்மொழிக்குத் தோன்றியது. அவளைச் சுமந்து செல்ல முயன்றாள் அருள்மொழி. ரோகிணி இணங்கவில்லை.

“ஏனக்கா அஞ்சுகிறீர்கள்? அவரைக் காணாதவரையிலும் எமனே என் எதிரில் வந்து அழைத்தாலும் நான் போக மாட்டேன், அக்கா!” தள்ளாடித் தடுமாறி நடந்தார்கள் இருவரும். மேல் மூச்சுக் கீழ்மூச்சு வாங்கியது ரோகிணிக்கு. என்றாலும் அவள் சிரித்தாள். அருள்மொழிக்காகச் சிரித்தாள். இப்படி ஓர் உடன் பிறவாத் தமக்கை தனக்குக் கிடைத்ததற்காக அவள் மனம் பூரித்து வெடித்துவிடும் போலிருந்தது.

விளக்கொளியால் படிகளில் நிழலாடுவதைக் கண்ணுற்ற இளங்கோ திடுக்கிட்டு எழுந்தான். சந்தடிசெய்யாமல் வந்து ஓர் ஓரமாக நின்றுகொண்டு வந்தவர்களை உற்றுப் பார்த்தான். விளக்கொளி அவர்களை அவனுக்குக் காட்டிக் கொடுத்து விட்டது.இருள் அவனை விழுங்கிக்கொண்டு அவர்கள் கண்களிலிருந்து அவனை மறைத்தது.

‘யாரது! ரோகிணியா! ரோகிணிதானா அவள்!’

எலும்புக் கூடொன்று எங்கிருந்தோ நள்ளிரவில் நடனம் பயின்றாடிக்கொண்டு வருவதுபோல் தோன்றியது அவனுக்கு. தன்னுடைய நெஞ்சத்தை இருகரங்களாலும் இறுகப்பற்றிக் கொண்டான். இருளில் வழியேவிழிகளைச் செலுத்தி அவளை அணு அணுவாக மென்று தின்றான். ஓரளவு ஒட்டிக் கொண்டிருந்த அவள் உயிரை அவன் விழிகள் உறிஞ்சின.பிறகு சரேலென்று அம்பென எதிர்மூலைக்குத் திரும்பிப் போனான்.இதயம் வெடிப்பதுபோல் இருமலும், விம்மலும், தேம்பலும் ஒலித்தன,அவன் செவிகளில்.

ரோகிணியின் விழிகள் நிலைகுத்திவிட்டன. அங்கே வரும் வரையில் இளங்கோவை அந்த இடத்தில் காணப்போகிறோம் என்ற எண்ணமே ஏற்படவில்லை அவளுக்கு. ‘இது நிலவறைச் சிறைச்சாலையல்லவா? கதவுகளும் பூட்டப்பட்டிருக்கின்றனவே! இளங்கோவின் உருவந்தானா இருளுக்குப்பின்புறம் தெரிவது?’

“இளவரசே!” என்று விம்மினாள் ரோகிணி.

தலையைக் குனிந்துகொண்டு வந்திருப்பவர்களை ஏறிட்டுப் பாராமல் கதவருகே நடந்து வந்தான் இளங்கோ.

விளக்கை உயர்த்திப் பிடித்த அருள்மொழி அவனுடைய குனிந்த பார்வையைக் கண்டுகொண்டாள். ரோகிணி அவனை நன்றாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக விளக்கொளியை அவன் பக்கம் திருப்பினாள். அவனும் சரேலென்று பின்புறம் திருப்பிக் கொண்டான்.

“இளவரசே!” என்று கெஞ்சினாள் அருள்மொழி. ரோகிணி விம்மி விம்மிஅழுதாள்.

“நான் யாரையும் இப்போது பார்க்க முடியாது நங்கையாரே! தயைசெய்து திரும்பிச் செல்லுங்கள்!”

“இளவரசே! ஒரே ஒருமுறை என்னைச் சற்றே திரும்பிப்பார்க்கமாட்டீர்களா? நான் இப்பொழுது எப்படியிருக்கிறேன் என்று பார்ப்பதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா?’’ ரோகிணி கெஞ்சினாள்; கதறினாள்; அழுதுகொண்டே தரையில் சாய்ந்தாள்.

அருள்மொழியின் முறையீடுகள் சிறைச்சாலையின் இரும்புக் கதவுகளைக்கூட உருக்கக்கூடியவை.ஆனால் அவைகளால் அவனை உருக்கமுடியவில்லை போலும்.

பின்புறம் திரும்பி நின்றவன் முன்புறம் திரும்பவே இல்லை. அவன்மீதுபடிந்த விளக்கொளி அவனை வானத்துக்கும் பூமிக்கும் உயர்ந்தவனைப்போல் எடுத்துக்காட்டியது.பின்புறம் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு அவன் சிலைபோல நின்றான்.அவன் செவிகள் அருள்மொழிக்குக்கூட அப்போது செவிடாகிவிட்டன.

“இளவரசே! என்னை நீங்கள் முகம் கொடுத்துப் பாராதது முற்றிலும் சரிதான்.எனக்கு இந்தத் தண்டனை போதவே போதாது.‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று நான் இனிச் சொல்லமாட்டேன்.எனக்கு இனிமன்னிப்பே கிடையாது. நீங்கள் என்னைப் பார்க்காவிட்டாலும், நான் உங்களைப் பார்த்துவிட்டேன்.இது போதும் எனக்கு.’’

பின்புறம் திரும்பிக்கொண்டிருந்த இளங்கோவின் விழிகள் தாரை தாரையாகக் கண்ணீரைப் பொழிந்தன.அவர்கள் அங்கிருந்து திரும்பும் வரையிலும் அவர்களைப் பாராமலே அவன் நின்றுகொண்டிருந்தான். பிறகு விளக்கொளி விலகிவிலகிச் சென்றது. படிகளில் ஓசை கேட்டது.இருள் அவனை நன்றாகச் சூழ்ந்து கொண்டது.

அவன் சட்டென்று திரும்பிச் சிறைக்கதவில் தன் முகத்தை அழுத்திக்கொண்டே அவர்கள் செல்வதைக் கண்ணிமைக்காது கவனித்தான். சிறைக்கம்பிகள் கண்ணீர் வடித்தன

தொடரும்







Comments