போத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை

போத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை


யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் தொடர்பான ஆவணங்கள் இந்திய மாநிலமான கோவாவில் இருக்கின்றன. கோவா பழஞ் சுவடி காப்பகத்தில் போத்துக்கேயர்களின் காலனித்துவ ஆட்சி தொடர்பான ஆவணங்களின் மூலப்பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. கோவா (GOA) போத்துக்கேயர்களின் கிழக்கு தலைமை ஆட்சி பீடமாக இடம் பெற்றது.

அமைதிப் பிரியரான இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேரு படை நடவடிக்கை மூலம் கோவாவைக் 1961ல் கைப்பற்றினார். ஆதன்பிறகு கோவா யூனியன் பிரதேசமாக மத்திய அரசினால் ஆட்சி செய்யப்பட்டது. இன்று அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழஞ் சுவடிக் காப்பகமும் பழம் 
பொருள் காப்பகமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.


போத்துக்கேயர் யாழ் மன்னனை வென்று யாழ்ப்பாண மாவட்டத்தைக் கைப்பற்றினார்கள். அதன் பிறகு யாழ் மேட்டுக்குடிப் பிரதிநிதிகளான முதலியார்களுடன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையைச் செய்தனர். அதில் ஈழத்தமிழர்களின் இறையாண்மை தொடர்பான சரத்துக்கள் இருப்பதாக அந்த ஆவணத்தைப் படித்தறிந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேற் குறிப்பிட்ட உடன்படிக்கை போத்துக்கேய மொழியில் வரையைப்பட்டுள்ளது. பன்மொழி அறிஞரான யாழ்ப்பாணத்து அருட்தந்தை ஞானப்பிரகாசர் இந்த உடன்படிக்கையின் இருப்பு பற்றி 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதினார். கோவா பழஞ்சுவடிக் காப்பகத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ~pறொட்கார் (Dr.Shirodkar, Former Director, Goa Archives) உடன்படிக்கையின் மூலப்பிரதியின் இருப்புக்கு சான்று பகர்ந்துள்ளார்.

சிட்னி பல்கலைக் கழகத்தின் முன்னாள் நூலகர் முருகர் குணசிங்கம் ஈழத்தமிழர் தேசிய ஆதாரங்கள் பற்றிய ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் இதற்கான தேடல்களை பல நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் மேற்கொண்டார். இன்றும் அவுஸ்திரேலியாவில் வாழும் அவருடைய மேலான கவனத்திற்கு இந்தத் தகவலைக் கொண்டு வருகிறோம்.

போத்துக்கேயர்கள் வசம் இருக்கும் பழஞ் சுவடிகள் போத்துக்கல் தலைநகரம் லிஸ்பன் (Lisbon) முன்னாள் போத்துக்கல் கொலனியான பிறேசில் தலைநகர் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வில் ஈடுபடும் வரலாற்றுத்துறை மாணவர்கள் இவற்றைப் படித்துப் பயன் பெற வாய்ப்புண்டு.

யாழ்ப்பாண மக்கள் தொடர்பான ஆவணங்கள் பிரிட்டி மியூசியம் (Museum) நெதர்லாந்து பழஞ்சுவடிகள் காப்பகம் ஆகியவற்றிலும் வைக்கப்பட்டுள்ளன. கோணேசர் ஆலயத்தை இடித்தழித்த போத்துக்கேயர்கள் கோவிலின் வரைபடத்தைத் தயாரித்து எடுத்துச் சென்றுள்ளனர்.

போத்துக்கேயர்கள் தாயாரித்த கோணேசர் ஆலய வரைபடத்தின் பிரதியை முதலியார் இராசநாயகம் 1926ம் ஆண்டில் வெளியிட்ட புராதன யாழ்ப்பாணம். (Ancient Jaffna) என்ற நூலில் இணைத்துள்ளார். திருகோணமலையை யார் யார் ஆட்சி செய்வார்கள் என்று கூறும் பழம் பாடல் பிரிதியும் இந்த நூலில் காணப்படுகிறது.

பாடலின் இறுதி வரி பற்றிய சர்ச்சை இன்றும் தொடர்கிறது. வடுவாகிவிடும் என்ற சொல்லிற்கு விளக்கம் தேடி இன்னும் தூக்கம் இழப்போர் உள்ளனர். வடுகர் என்போர் தாமென்று சிங்களவர்கள் உரிமை கோருகின்றனர். ஒரு காலத்தில் வட இலங்கைத் தமிழர்கள் இந்தப் பாடல் வரி தமக்குச் சாதகமாக இருக்குமென நம்பினார்கள. குடியேற்றத்தின் மூலம் திருகோணமலைத் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு அவர்கள் நம்பிக்கையைக் கைவிட்டுள்ளனர்.

ஈழத்தமிழின அழிப்பிற்கு நேரடிப் பங்களிப்புச் செய்த இந்திய நடுவன் அரசு யாழ்ப்பாணத் தமிழர்களின் மேம்பாட்டில் தீவிர அக்கறை காட்டும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் ஒரு பழம் பொருள் மற்றும் பழஞ் சுவடிக் காப்பகத்தை உருவாக்கிக் கொடுக்க முன்வந்துள்ளது.

இவை ஏற்கனவே யாழ் நகர் பிரதான வீதியிலும் (Main Stree, Jaffna) பழைய நூலகத்திலும் இருந்தன. இன்று போரின் கொடூரத்தால் மறைந்துள்ளன. இந்தியாவின் தயவை நாடவேண்டி இருக்கிறது. கோவாவிலுள்ள போத்துக்கேயர்களும் யாழ் முதலியார்களும் செய்த உடன்படிக்கையின் பிரதி யாழ்ப்பாணம் வர வேண்டும் என்று இதன் வாயிலாகக் கேட்கிறோம்.

இந்திய மத்திய அரசு யாழ் மக்களுக்கு பழம் பொருள் பழம் சுவடிக் காப்பகத்தை உபகரிக்க விரும்பினால் இந்த முக்கிய ஆவணத்தின் பிரதியைக் கட்டாயமாகத் தரத்தான் வேண்டும். கோவாவில் இருக்கும் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் தொடர்பான ஆவணப் பிரதிகளையும் தரவேண்டும். போத்துக்கேயர்கள் அழித்த கோணேசர் ஆலையம், கேதீஸ்வரம் ஆலயம் தொடர்பான ஆவணப் பிரதிகளையும் வழங்க வேண்டும்.


நன்றி: http://www.tamilkath...ll_article.aspx

Comments