குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ‘ என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறித்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும் குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் அரண்களும் குடியிருப்புகளும் அமைத்து வாழ்ந்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகள் முன்னர்க் கூறப்பட்டுள்ளன.
இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானது, சமூகமாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறிய நிலையில், தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள். தந்தை வழிச்சமூகத்தின் தலைவர்களாக இருந்த ஆண்கள் அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆயினர். உழைக்கும் மக்களும் பெண்களும் அடிமையாக்கப்பட்டனர். அடிமையாக்கப்பட்டது. தெதரியாமலே அடிமையாயினர். அவர்களின் உழைப்பால் பெறப்பட்ட மிகுவிளைச்சலும் உபரி உற்பத்தியும் அவர்களைச் சென்றடையவில்லை. ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. ஆண்டைகள் தம் ஆடம்பரம் மிக்க சுயநலமான சுகபோக வாழ்க்கைக்காக அவற்றைக் கவர்ந்து கொண்டனர். அடிமைச் சமூகத்தில் உற்பத்தி பெருகி உபரி நிலை ஏற்பட்டிருந்தும் கூட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தாழ்நிலையிலேயே இருந்தது. வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் இருந்தது போன்ற பற்றாக்குறையான நிலையே அவர்கள் வாழ்க்கையில்தொடர்ந்து நீடித்தது. உழைக்கும் மக்களது உழைப்பின்பயன் ஆண்டைகளால் சுரண்டப்பட்டதே இதற்குக் காரணம் ஆகும்.
இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பயனாகத் தொழில்கள் வளர்ந்தன. கொற்றொழில் தச்சுத்தொழில், மண் பாண்டத்தொழில் நெசவு முதலிய தொழில்கள் வளர்ந்தன. ஆனால் இத்தொழில்களைச் செய்த தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.கைத்தொழில் வளர்ச்சியால் கட்டடக்கலை பெரிதும் வளர்ந்தது. ஆண்டைகள் மற்றும் அரசர்களின் சுகபோக வாழ்க்கைக்காக வசதி மிக்க வளமனைகள் பல கட்டப்பட்டன. அவர்களின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டன. கோட்டைகளைச் சூழ ஆழம்மிக்க அகழிகள் அகழப்பட்டன. அவற்றின் பெருமையும் சிறப்பும் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. மனைகள் மற்றும் மதில்களின் உயர்ச்சி குறித்து,
‘விண்டோய்மாடத்து விளங்கு சுவருடுத்த நன்னகர் ( விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத்தீண்டும் மாடங்களையுடைய நகர் ) என்றும்.
( ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’
( சுட்ட செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த புறப்படை வீட்டைச் சேர்ந்த மதில் ) என்றும்
‘இடஞ்சிறந்துயரிய எழுநிலை மாடம்’
( தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழுநிலைகளையுடைய மாடம் ) என்றும் ‘மலைபுரை மாடம்’ என்றும் அவை பேசுகின்றன.
‘வான மூன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயாமாடம்’
( ஆகாயத்துக்கு முட்டுக்காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக் கோடு போல விண்ணைத் தீண்டும்படி ஓங்கினதும் தன்னிடத்துச் சார்த்திய ஏணியால் ஏறுதற்கரிய தலைமையினையுடையதும் கற்றை முதலியவற்றால் வேயாது தட்டோடிட்டுச் சாந்து வாரப்பட்டதுமான மாடம் ) என்று நூல்கள் புகழ்கின்றன.
அரசர்கள் அமைத்த அகழிகள் கோட்டைகள் மற்றும் கொத்தளங்கள் குறித்து,
‘மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண் போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாட மொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கிச்
சில் காற்றிசைக்கும் பல் புழை நல்லில்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெரு’
( மண்ணுள்ள அளவும் ஆழ்ந்து நீல மணி போலும் நீரையுடைய கிடங்கினையும் தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பலகற்படைகளையுடைய மதிலினையும் பழைய தாகிய வலி நிலைபெற்ற வாயிலில் தெய்வத்தையுடைத்தாகிய நிலையினையும் நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய செருவினையுடைய கதவினையும் மேகம் உலாவும் மலை போல் ஓங்கினமாடத்தோடே, வைiயாறு இடைவிடாது ஓடுமாறு போன்ற மாந்தரும் மாவும் வழங்குகின்ற வாயில் என்றும் ( மண்டபம் , கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலக் கூறுபாடாகிய பெயர்களைத்தாம் பெறும்படி உயர்ந்து, தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நன்றாகிய அகங்கள் ) என்றும் மதுரைக்காஞ்சி ( 531 – 59 ) கூறுகிறது.
தச்சர் முதலிய தொழில் வல்லார் அம்மனைகளை வகுத்தமைத்தது குறித்து. ‘நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர்மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇய ஓங்குநிலை வரைப்பு”
நெடுல்வாடை : 74-77
(சிற்பநூல் அறிந்த தச்சர் கூடுதலாக நூலை நேரே பிடித்து திசைகளைக் குறித்துக் கொண்டு அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப்பார்த்து பெரிய பெயரினையுடைய அரசர்க் கொப்பமனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் கூறுபடுத்தி, இவ்விடங்களையெல்லாம் சேரவளைத்து உயர்ந்த மதிலின் வாயில்) என்று, அடிமைகளான தொழிலாளர்கள் அவற்றை ஆண்டைகளுக்காகச் சிறப்புற அமைத்தது குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
மண்ணைக் குழைத்து மதில் எழுப்பி ஈந்தின் இலையும் தினைத் தாளும் வரகு வைக்கோலும் கொண்டு கூரை வேய்ந்த நிலை மாறியது. சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு மதில்களும் மனைகளும் கட்டப்பட்டன. மாடங்கள் தட்டோடிட்டுச்சாந்துவாரப்பட்டன. இதனை’செம்பியன்றன்ன செஞ்சுவர்” என்று சங்க நூல்கள் கூறுகின்றன. அம்மனைகளின் அகற்சிக்கும் உயர்ச்சிக்கும் சான்றளிக்கின்றன.
இவ்வாறு, அரசரும் ஆண்டைகளுமான சுரண்டும் வர்க்கத்தாரின் ஆடம்பரமான சுகபோகத்துக்காகவும் பாதுகாப்புக்காவும் வானுற உயர்ந்த வளமனைகள் பல வசதிகளோடு அழகுற அமைக்கப்பட்டன. இவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளின் உழைப்பு அளவற்றது. ஆண்டைகளுக்காகவும் அரசர்களுக்காகவும் அரண்மனைகளும் வளமனைகளும் அமைத்துக் கொடுத்த அடிமைகளான உழைப்பாளிகள் ஓட்டையும் பொத்தலுமான குடிசைகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் ஒதுங்கி வாழுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் வாழும் சேரிகளைப்பாடுவதும் கூடத்தீட்டு என்று புலவர்கள் கருதினர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. அடிமைகளின் வாழ்வில் அன்று தொடங்கிய இந்த அவலம் இன்றும் தொடர்வது மனித சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஆகும்.
Comments
Post a Comment