யார் இந்த ஆரியர்கள்?-கட்டுரை.




திராவிட அரசியலாளரும், இந்திய சரித்திரம் பற்றி எழுதிய அறிஞர்களும், "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த வெள்ளை இனத்தவர்கள்," என்று நம்பி வந்தார்கள். ஆனால், "ஆரியப் படையெடுப்பு" பற்றிய கோட்பாடுகள், வேறு பல அறிஞர்களால் மறுத்துரைக்கப் பட்டன. எனது ஆய்வு கூட அப்படி ஒரு படையெடுப்பு நிகழவில்லை என்று தான் தெரிவிக்கின்றது. உண்மையில் ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறுவதை விட, "ஆரியமயமாக்கல்" என்ற சொற்பத்தை பாவிப்பதே பொருத்தமானது. அனேகமாக, வெள்ளை நிறவெறிக் கொள்கைகளை ஆதரிக்கும் சரித்திர ஆசிரியர்கள் தான், "ஆரியர் படையெடுப்பு" என்ற கோட்பாட்டை உருவாக்கி பரப்பி வந்திருக்க வேண்டும். "வெள்ளை இனத்தவர்கள், உலகம் முழுவதும் அடக்கி ஆண்டார்கள்." என்று இனப் பெருமிதம் கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்துள்ளது.

உண்மையில், வெள்ளை-கருப்பு என்று இனவாத அடிப்படையில் சிந்திப்பது, 19 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய அரசியல் கோட்பாடு ஆகும். புராதன நாகரிகங்களில் அப்படியான நிறவேற்றுமை இருக்கவில்லை. தமிழர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் மத்தியில், வெள்ளை, கருப்பு, பொது நிறம் என்றெல்லாம் கூறக் கூடியவர்கள் கலந்துள்ளனர். அவர்களது மேனியின் தோல் நிறம் காரணமாக, யாரும் அவர்களை வேறு இனமாக கருதுவதில்லை. அவர்களது சிந்தனை, மொழி, குணம் எதிலுமே வித்தியாசம் காண முடியாது. இந்திய உப கண்டத்திற்கு "படையெடுத்து வந்து ஆக்கிரமித்த" ஆரியர்களும், தமிழர்கள் போன்ற கலப்பினம் தான். இது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வரலாற்றில் ஒரு மிகப் பெரிய வில்லனை நாங்கள் கண்டுகொள்வதில்லை. காலநிலை மாற்றம், மக்கள் இடப்பெயர்வுகளை மட்டுமல்ல போர்களையும் உருவாக்க வல்லது. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகளையும், கலவரங்களையும், தோற்றுவிக்க வல்லது. கோடிக் கணக்கான வருடங்களாக, நாம் வாழும் பூமியில் காலநிலை என்றும் ஒரே மாதிரி இருந்ததில்லை. வளமான புல்வெளிகள் மறைந்து பாலைவனங்கள் தோன்றலாம். வெப்பமான பிரதேசத்தில் பனி மழை பொழியலாம். எதுவுமே நிரந்தரமல்ல. இன்று மனிதர்கள் வாழ முடியாத, கடுங்குளிர் பிரதேசங்கள் என்று கருதப்படும், வட துருவத்தை அண்டிய ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமுதாயமே, வெள்ளையின ஆரியரின் மூதாதையராக இருக்க வேண்டும். 10000 வருடங்களுக்கு முன்னர், அந்தப் பிரதேசத்தின் காலநிலை ஓரளவு வெப்பமானதாக இருந்தது. அதனால் அங்கே சனத்தொகையும் அடர்த்தியாக காணப்பட்டது. குறைந்தது 5000 வருடங்களுக்கு முன்னர், அந்தப் பிரதேசத்தின் வெப்பநிலை தாழ்ந்து, குளிர் அதிகரித்தது. அதனால் அங்கு வாழ்வதும் இயலாத காரியமானது. வெப்பமான புதிய வாழிடங்களை தேடி, சைபீரிய மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அதைத் தான் நாங்கள் "ஆரியப் படையெடுப்பு" என்று படித்திருக்கிறோம்.

ஆரம்பத்தில், "ஆரியரின் வருகை" குறித்து எந்த நாட்டு சரித்திர ஆவணங்களிலும் குறிப்பிடப் படவில்லை. அதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்:

1. அன்று வாழ்ந்த மனிதர்கள் யாரும், வெள்ளை-கருப்பு வித்தியாசம் பார்க்கவில்லை. ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் பின்னர் தான், தோல் நிறத்தை வைத்து சரித்திரத்தை ஆராயும் வழக்கம் தோன்றியது.

2. அன்றைய நாகரிக சமுதாயங்கள் எல்லாமே கலப்பின மக்களால் உருவானது தான். பாபிலோனியா மட்டுமல்ல, "திராவிட நாடு" என்று கருதப்பட்ட எலமிய ராஜ்யத்திலும் (ஈரான்), கருப்பர்களும்,வெள்ளையர்களும் கலந்து வாழ்ந்தார்கள்.

3. ஆரியர்கள் பெருந்திரளாக படையெடுத்து வரவில்லை. இன்று வறிய நாடுகளை சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயர்வதைப் போல, வடக்கே இருந்து புலம்பெயர்ந்த வெள்ளையினத்தவர்கள், கறுப்பினத்தவரின் இராச்சியங்களில் குடியேறினார்கள். இன்று வட அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் பணக்கார நாடுகளாக கருதப் படுகின்றன. ஆனால், அன்றிருந்த நிலைமை வேறு. வட ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் மட்டுமே நாகரிக வளர்ச்சி கண்ட பணக்கார நாடுகள் இருந்தன. அதனால், சைபீரியாவில் மாடு மேய்க்கும் நாடோடி சமூகமாக வாழ்ந்த வெள்ளையினத்தவர்கள், நாகரீகமடைந்த மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் சென்று குடியேறியதில் வியப்பில்லை. பொருளாதார வசதிகளை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. யாரும் நாடு பிடித்து ஆள நினைக்கவில்லை.

இன்றைய மொங்கோலியா, சீனா (உள்ளக மொங்கோலியா மாநிலம்) ஆகிய நாடுகளை இணைக்கும் எல்லையில் கோபி பாலைவனம் இருக்கின்றது. சஹாரா பாலைவனம் போன்றல்லாமல், மணல் மேடுகளையும் கட்டாந் தரைகளையும் கொண்டது. கோடை காலத்தில் அதி உச்சத்தில் இருக்கும் வெப்பநிலை (+40° C), குளிர் காலத்தில் தாழ்ந்து விடும் (-40° C). அங்கே பனிமழை பொழியும். பொதுவாக மனிதர்கள் வாழ முடியாத இடமாக இருந்தாலும், ஒரு காலத்தில் அது பச்சைப் பசேல் என்று வளம் கொழிக்கும் பூமியாக இருந்தது. குறைந்தது 10000 வருடங்களுக்கு முன்னர், மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. கோபி பாலைவனத்தில், ஒரு காலத்தில் பல நகரங்கள் இருந்திருக்கலாம். அவை பின்னர் மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கலாம். மொங்கோலிய நாடோடிக் குழுக்கள், அப்படியான பாழடைந்த நகரங்கள் இருக்கும் இடங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதைப் பற்றி யாரும் வெளியே சொல்வதில்லை.

ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் மத்திய ஆசியாவில் மறைந்த மனித நாகரீகங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை செய்துள்ளனர். அவர்களிடமும் அது பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். ஆனால், அவை எல்லாம் ரஷ்ய மொழியில் இருக்கின்றன. இதுவரையில் எதுவும் மொழிபெயர்க்கப் படவில்லை. கோபி பாலைவனத்திற்கு மேலாக பறந்த ரஷ்ய விமானிகளும், விசித்திரமான நில அமைப்புகளை கண்டதாக தெரிவித்துள்ளனர். இன்று தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், வீட்டில் இருந்த படியே "கூகுள் ஏர்த்" செய்மதிப் படங்களை பார்த்தவர்களும் அவற்றைக் கண்டுள்ளனர். (Lost cities? Bizarre structures spotted in China's Gobi desert by Google Map, http://www.whatsonni...google-map.html) ஆகவே, அந்தப் பிரதேசம் பாலவனமாவதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள், காலநிலை மாற்றம் காரணமாக தெற்கு, அல்லது மேற்குத் திசை நோக்கி புலம்பெயர்ந்திருக்கலாம்.

சீனர்கள் போல தோற்றம் கொண்ட துருக்கி மொழி பேசும் இனங்கள் மட்டுமே, மத்திய ஆசியாவில் பூர்வீகத்தை கொண்டதாக, பல்லாண்டுகளாக நம்பப்பட்டது. ஆனால், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வெள்ளையர் போன்ற தோற்றமளிக்கும் இனங்கள் பல அங்கே வாழ்ந்துள்ளன. சீனாவின் உய்குர் மாநிலத்தில் வாழ்ந்த தொக்காரியன் இனம், மற்றும் சீனாவின் மேற்கு எல்லையில் இருந்த சொக்டியா நாட்டு மக்களை உதாரணமாக குறிப்பிடலாம். இவை தவிர வேறு பல வெள்ளை இனங்களும் வாழ்ந்துள்ளன. ஆனால், தொச்சாரியன், சொக்டியா ஆகிய நாகரீகங்கள் பற்றிய வரலாற்று ஆவணங்கள் பல அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை எல்லாம் வெள்ளை இன மக்களின் நாகரீகங்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

இப்போது அந்த இனங்கள் எங்கே? ஒரு பகுதியினர், இன்றைய துருக்கி மொழி பேசும் உய்குர் மக்களுடன் கலந்திருக்கலாம். இன்னொரு பிரிவினர், இன்றைய தஜிக்கிஸ்தான் தேசத்திலும், வட ஆப்கானிஸ்தானிலும் தாஜிக் மொழி பேசும் மக்களாக மாறி இருக்கலாம். தாஜிக் இன மக்களை, அயலில் வாழும் பல்வேறு துருக்கி மொழிகளை பேசும் மக்களிடம் இருந்து இலகுவாக வித்தியாசம் காண முடியும். மேலும் அவர்கள் பேசும் மொழி கூட முழுக்க முழுக்க வித்தியாசமானது. தாஜிக் என்பது பார்சி என்ற ஈரானிய மொழிக்கு நெருக்கமானது. தாஜிக், பார்சி, பஷ்ட்டூன், சமஸ்கிருதம், ஹிந்தி, உருது ஆகிய மொழிகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்ட மொழிகள். ஆகவே இவர்களின் பூர்வீகமும் ஒன்றாக இருக்க வேண்டும்




ரோமர்களும், கிரேக்கர்களும் தமக்கு சவாலாக விளங்கிய "சீத்தியர்கள்" (Scythian) என்ற போர்வெறி கொண்ட இனம் குறித்து எழுதி வைத்துள்ளனர். சீத்திய வம்சாவளியினர் பற்றிய எந்த தகவலும் பிந்திய வரலாற்றில் கிடைக்கவில்லை. அவர்கள் இன்றைய உக்ரேனியர்களின் மூதாதையராக இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. கிரேக்கர்கள் தான் அவர்களை சீத்தியர்கள் என்று அழைத்தார்கள். சீன நாட்டு சரித்திரக் குறிப்புகளில் அந்த இனத்தின் பெயர் "சாய்". இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஒரு காலத்தில் வாழ்ந்த "சாகா" இனத்தவரும், சீத்தியரும் ஒருவரே என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மை இனமான பட்டாணியர்கள் பேசும் பஷ்டூன் மொழியில் சாகா என்ற சொல், இரத்த உறவுகளை குறிக்கும். ஆகையினால், அவர்களின் முன்னோர்கள் சாகா அல்லது சீத்தியராக இருக்க வாய்ப்புண்டு.(Indo-Scythians, http://en.wikipedia..../Indo-Scythians) அந்த இனத்தவர்கள் இந்தியாவிலும் குடியேறி இருக்கலாம். சீத்தியர்கள், சம்ஸ்கிருத மொழி பேசிய வட இந்திய பிராமணர்களின் மூதாதையராக இருக்கலாம். அதனை உறுதிப்படுத்த நிறைய சான்றுகள் உள்ளன. தமிழில் நாம் பாவிக்கும் வடமொழிச் சொற்களான, "சகோதரர்", "சகா" என்பன, சாகா இனத்தின் பூர்வீகத்தை சுட்டி நிற்கின்றது. (Scythians, http://en.wikipedia.org/wiki/Scythians) இதைவிட இந்து மத கலாச்சாரமாக அறியப்பட்ட, கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் கூட, சீத்திய (சாகா) இன மக்களுக்குரியது.(Chandragupta Maurya, By: Purushottam Lal Bhargava) இந்திய உப கண்டத்தில் ஒருபோதும் இருந்திராத, இது போன்ற வழக்கங்களை, மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளையின மக்கள் புகுத்தினார்கள்.

நாங்கள் "இந்து மதம்" என்ற பெயரில் வெள்ளையின குடியேறிகளின் பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றோம். "இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்று நான் முன்பொரு தடவை எழுதிய கட்டுரைகளுக்கு பல காரசாரமான எதிர்வினைகள் வந்திருந்தன. அவர்கள் கேட்க விரும்புகிறார்களோ இல்லையோ, இந்துக்களின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பது மட்டும் உறுதியானது. அப்படியானால், ஆரியர்கள் யார்? ஆரியர்கள் என்பது தனித்துவமான வெள்ளைநிற மேனியைக் கொண்ட இனத்தவரைக் குறிக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. அது, 19 ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் காலனிப் படுத்திய ஐரோப்பிய நிறவெறியர்களின் புனைவு. இன்று இந்திய உபகண்டத்தை சேர்ந்த, நாகரீகமடைந்த மொழிகளை பேசும் இனங்கள் எல்லாம் ஆரியமயமாக்கப் பட்டவர்கள். பலருக்கு கேட்க கசப்பாக இருந்தாலும், தமிழர்களும், சிங்களவர்களும் ஆரியமயமாக்கப் பட்ட இனங்கள் தான்.

எங்களது மொழி, மதம், கலாச்சாரம் எல்லாவற்றிலும் ஆரியம் கலந்திருக்கிறது. நாங்கள் எல்லோரும் கலப்பினம் தான் என்பதை, எம் மத்தியில் எத்தனையோ பேர், வெள்ளையாகவும், கருப்பாகவும் தோன்றுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். "மத்திய ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆரியர்களில் ஒரு பகுதியினர் கிழக்குத் திசை நோக்கி சென்று, இந்தியாவில் குடியேறினார்கள். இன்னொரு பகுதினர் மேற்குத் திசை நோக்கி சென்று ஐரோப்பாவில் குடியேறினார்கள்," என்று ஆரியக் கோட்பாட்டை ஆதரிக்கும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப்படியானால், எதற்காக ஐரோப்பாவில் குடியேறியவர்கள்,"ஆரியர்" என்ற சொல்லைப் பாவிக்கவில்லை? இதற்கான விடை மிக எளிது. உண்மையில் வரலாற்றில் ஆரிய ராஜ்ஜியம் என்று அழைக்கப் பட்ட தேசம் ஒன்று இருந்தது. ஈரானியரின் வேத நூலான அவெஸ்தாவில் "அர்யானம் டக்யுனம்" என்றும், இந்துக்களின் ரிக் வேதத்தில் "ஆரிய வர்த்தா" என்றும், ஆரிய நாட்டின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. அது இந்தியாவின் மேற்கு எல்லையோரம், இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. பல இந்து மத புராணக் கதைகள் அங்கே தான் உற்பத்தியாகின. காலப்போக்கில் ஆரிய ராஜ்ஜியம் அழிந்து விட்டாலும், அந்நாட்டு மக்கள் இந்தியாவில் குடியேறி இருந்தனர். தமது மத நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் விடாமல் பின்பற்றி வந்தனர். இதற்குப் பிறகு நடந்தவை எல்லாம், இந்திய சரித்திரத்தில் பதியப் பட்டுள்ளன.






Comments