வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 21-ஓலை சுமந்தவன்.




ஈழ நாட்டிலிருந்து இரவோடு இரவாகத் தோணியில் புறப்பட்ட அமைச்சர் கீர்த்தி வீரமல்லனோடும் காசிபனோடும் பத்திரமாகப் பாண்டியக் கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். பொதிகை மலைச்சாரலில் அடுத்த போருக்கான ஆயத்தங்கள் மளமளவென்று நடைபெற்றுக் கொண்டிருந்தன. அமைச்சர் கீர்த்தியும் வீரமல்லனும் அடிக்கடி குதிரைகளில் ஏறிக்கொண்டு வடக்கே வெள்ளாற்றுப் பக்கம் சென்று திரும்பினர்.

மலையடிவாரங்களைப் படையிருப்புக்களாகவும், குன்றுகளைக் கோட்டைச் சுவர்களாகவும், பயன்படுத்துவதற்காகத் தீவிரமான திட்டம் வகுத்தார் கீர்த்தி. உள்நாட்டின் மறைவிடங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த வீரமல்லன்,அவருக்கு வலதுகரமாக இருந்து உதவிகள் செய்து வந்தான்.

சிறிது சிறிதாகக் கொடும்பாளூர் கோனாட்டைச் சுற்றிலும், சோழபுரம் புதுநகரத்தை அடுத்தும் வீரர்களைக் கொண்டுவந்து குவிக்க வேண்டுமென்பது கீர்த்தியின் ஏற்பாடு. உருவாகும் புதிய நகரத்தை கருவிலேயே கருக்கிவிட வேண்டுமென்பதற்காக அமைச்சர் எவ்வளவு முன்னேற்பாடுகள் செய்தாரோ, அதைவிட அதிகமாக வீரமல்லன் கொடும்பாளூர் ஆட்சியைக் குலைப்பதற்காக ஆத்திரப்பட்டான்.

வெள்ளாற்றங்கரைப் பகுதியில் சில தினங்கள் அலைந்து திரிந்துவிட்டு

இருவரும் பொதிகை மலைச்சாரலுக்குத் தங்கள் குதிரைகளைத் திருப்பினார்கள்; வழியில் ஒரு மரத்தடியில் இளைப்பாறும் நேரத்தில் தமது எண்ணங்களை வீரமல்லனிடம் வெளியிட்டார் அமைச்சர்.

“தம்பி, வீரமல்லா! வடக்கே கங்கைக்கரையிலிருந்தும் கிழக்கே கடாரத்தில் இருந்தும் நமக்குச் செய்திகள் வந்து சேருவதற்குச் சில மாதங்களாகும். எப்படிப்பட்ட செய்திகள் வரக்கூடும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அதற்குள் நாம் நமது வீரர்களுக்குச் சரியான பயிற்சி கொடுத்து, தக்க சமயத்தில் தாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். தோல்வி மேல் தோல்வியைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தபோதே நாம் சூறாவளியெனப் புகுந்து சோழநாட்டைச் சூறையாட வேண்டும்.’’

“ஆமாம், கொடும்பாளூரைக் கைப்பற்றினால் சோழ சாம்ராஜ்யத்தின் கால்கள் ஒடிந்துவிடும். பிறகு தலைநகரமான தஞ்சையை எளிதில் கிள்ளிவிடலாம்’’ என்றான் வீரமல்லன்.

“தஞ்சைத் தலைநகரத்திலிருந்து நான் மகிந்தரின் மூலமாகச் சில ஓலைகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னதான் நாம் வெளியிலிருந்துகொண்டு முயற்சிகள் செய்தாலும், தஞ்சை அரண்மனைக்குள்ளேயிருக்கும் அவர் துணை நமக்கு மிகவும் தேவையாக இருக்கிறது.’’

இதைக்கேட்ட வீரமல்லனின் முகம் வெளுப்பாக மாறியது. “மகிந்தரின் துணையையா இனியும் நம்புகிறீர்கள்?’’ என்று உற்சாகமற்ற குரலில் கேட்டான்.

“என்ன இப்படிச் சொல்கிறாய்? நீதானே எனக்கும் அவருக்கும் முதலில் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தவன்?’’

“மாமன்னர்மீது என்றைக்குமே எனக்கு நம்பிக்கை குறையாது. ஆனால் அவரால் எந்த இரகசியத்தையுமே இனிப் பாதுகாக்க முடியுமா என்று நான் சந்தேகப்படுகிறேன்.’’

“காரணம்?’’

“நெடுநாட்களாகவே தங்களிடம் கூறவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் போய் எப்படிக் கூறுவது என்ற தயக்கத்திலேயே நாட்கள் சென்றுவிட்டன. இனியும் தயங்குவதால் பயனில்லை. ரோகணத்து இளவரசியாரிடம் மன்னர் வைத்திருக்கும் அன்பே நமக்கெல்லாம் ஆபத்தாக முடியுமோ என்று நினைக்கிறேன்.’’

பிறகு விளக்கமாகவே கூறி முடித்தான் வீரமல்லன்.

“கொடும்பாளூர் இளவரசனான குலப்பகைவன் மீது ரோகிணியார் பேரன்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மன்னரின் இரகசியங்களை இளவரசியார் அவனிடம் மறைப்பதில்லை என்பதையும் கண்டிருக்கிறேன்.

இளவரசர் காசிபனும் நானும் ஆனைமங்கலத்துக்குச் சென்றபோதுகூட எங்களுக்கு இளங்கோவால் பெரும் ஆபத்து நேரவிருந்தது. எங்களின் வருகையைத் தெரிந்துகொண்டு ரோகிணியாரே அவனுக்குச் செய்தியனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கவும் இடமிருக்கிறது.’’

“ஆமாம்; இருக்கலாம்! காசிபனே முன்பு இதை என்னிடம் கூறியிருக்கிறான்’’ என்றார் அமைச்சர்.

பிறகு அவர் எதுவுமே கூறாமல் சிறிதுநேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். அடுத்தாற்போல் மௌனத்தைக் கலைத்துவிட்டு,

“சரி, விரைவில் நீ என்னுடைய ஓலையுடன் தஞ்சைக்குக் கிளம்பவேண்டியிருக்கும்’’ என்றார்.

மலைச்சாரல் மாளிகையை அடைந்தவுடன், அவரிடம் தனது வேலையைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டான் வீரமல்லன்.

“தஞ்சை நகரத்தின் எல்லையில் வாழும் உன் தாயாரின் வீட்டுக்குப் பௌர்ணமிதோறும் அரண்மனையிலிருந்து கந்துலன் வந்து செல்வான். வருகிற பௌர்ணமியன்று நான் கொடுக்கும் ஓலையை நீ கந்துலனிடம் நேரில் சேர்ப்பிக்க வேண்டும்.’’

அவ்வாறே செய்வதாக வாக்களித்த வீரமல்லன், “இளவரசி ரோகிணியைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி மன்னருக்குத் தெரிவிப்பீர்களல்லவா?’’ என்று கேட்டான்.

“அதற்குத்தானே ஓலையை அனுப்பப்போகிறேன்! இனி ரோகிணியும் கொடும்பாளூர் இளவரசனும் சந்திக்க முடியாதபடி செய்யவேண்டியது மன்னர் மகிந்தர் பொறுப்பு. அதிலிருந்து அவர் தவறிவிட்டதாகச் செய்தி கிடைத்தால் பின் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும் என்பதையும் அவருக்குத் தெரிவித்து எச்சரிக்கை செய்வேன்.’’

“ஆமாம், செய்யவேண்டியதுதான்!’’ என்று மிகுந்த ஆத்திரத்தோடு கூறினான் வீரமல்லன்.

அவனுடைய ஆத்திரத்தை அவனுக்குத் தெரியாமல் அளந்துவிட்ட அமைச்சர் தமக்குள் மெல்ல நகைத்துக் கொண்டார். காசிபனின் வாயிலாக வீரமல்லனின் ஆசைகளையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார் அவர்.

“வீரமல்லா! இனிமேல் உனக்குச் சில மாதங்கள் வரையிலும் சோழநாட்டில்தான் வேலைகள் கொடுக்கப்போகிறேன். கூடுமானால் அதற்குள் இங்கிருப்பவர்களில் பலரை மதுரைக்கு வடக்கே அனுப்பிவைக்க வேண்டுமென்பது என் எண்ணம். மெல்ல மெல்ல நாம் சோழநாட்டு எல்லையில் போய்க் குவிந்துவிட வேண்டும். ஆகவே, பெரும்பிடுகு முத்தரையரிடம் இப்போதே போய் விடைபெற்றுக் கொண்டு வந்துவிடு. அதற்குள் நான் ஓலையை எழுதிவைக்கிறேன்.’’

பெரும்பிடுகு முத்தரையரின் வீடு வீரமல்லனுக்குப் பேரின்பச் சோலையாக இருந்த காலம் ஒன்று உண்டு. பல நாட்கள் அங்கேயே தங்கியிருக்கிறான். பின்பு பாண்டியரின் மாளிகையில் தங்கியபோதும் முத்தரையரைக் காண்பது போல் திலகவதியைச் சந்தித்திருக்கிறான். அவர் வெளியில் சென்றிருக்கும் நேரங்களில் திலகவதியைத் தனிமையில் கண்டு மகிழ்ந்த நாட்கள் இப்போது மறைந்துவிட்டன. என்றைக்கு ரோகணத்திலிருந்து காசிபன் அங்கு வந்து சேர்ந்தானோ அன்றிலிருந்தே மாறத் தொடங்கி விட்டான், வீரமல்லன். எந்த நேரமும் காசிபனும் அவனும் இணை பிரிவதில்லை. முத்தரையரின் வீட்டுக்குச் செல்லும் போதுகூடக் காசிபனை அழைத்துக்கொண்டே சென்றான். திலகவதியின் உள்ளம் தீயை உமிழத் தொடங்கியது. ஆனால் அதை அவள் வெளியே காட்டவில்லை.

அமைச்சரிடமிருந்து கிளம்பிய வீரமல்லன் இன்றைக்கும் காசிபனின் துணையைத் தேடினான். அவன் கிடைக்காமற் போகவே தனிமையில் செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்தது. அப்போது பெரும்பிடுகு முத்தரையரும் எங்கோ வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். திலகவதியின் கண்களில் படாதவாறு கள்வனைப் போல் திரும்புவதற்கு முயற்சி செய்த வீரமல்லனை எப்படியோ கண்டுவிட்டாள் திலகவதி. அவனை வழிமறித்துக் கொண்டாள்.

“வீரமல்லரே! பெண்ணாகிய என்னைக் கண்டு அஞ்சும் அளவுக்கு உங்களுடைய வீரம் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டதா என்ன? ஏன் இப்படிக் கோழைபோல் நடந்து கொள்கிறீர்கள்? வழக்கமாக என்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களுடைய இளம் நண்பரைத் துணைக்கு அழைத்து வருவீர்களே, அவர் இப்போது எங்கே போய்விட்டார்?’’

வீரமல்லன் குற்றம் புரிந்துவிட்ட உணர்ச்சியோடு குன்றிப்போய் நின்றுகொண்டிருந்தான்.

“ஏன் வாய் திறவாது நிற்கிறீர்கள்? நீங்கள் பாராமுகமாக இருக்கும்படி நான் ஏதும் தவறு இழைத்திருந்தால் மனம் விட்டுச் சொல்லுங்கள்? நீங்கள் என்னை வெறுத்து ஒதுக்கும்படி நான் என்ன கொடுமை உங்களுக்குச் செய்தேன்?- சொல்லுங்கள்!’’

வீரமல்லனுக்கு என்ன மறுமொழி கூறுவதென்றே தெரியவில்லை. திலகவதியின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வேலாக அவன் மார்பில் பாய்ந்தது.

“கடமைகளில் நான் என்னையே மறந்துவிட்டு அலைந்து கொண்டிருக்கிறேன், திலகவதி! உன்னைக் கொடும்பாளூர் அரண்மனைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பார்க்க வேண்டுமென்ற ஆசையே என்னை இப்படியெல்லாம் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது’’ என்று குனிந்த தலை நிமிராமல் கூறினான் வீரமல்லன்.

கலகலவென்று வெறி பிடித்தவள்போல் வாய்விட்டுச் சிரித்தாள் திலகவதி.

“கடமைகளில் உங்களை மறந்து விட்டுத்தான் அந்த ரோகணத்துச் சிறுவரோடு அலைந்து கொண்டிருக்கிறீர்கள் போலும். நல்லது! உங்கள் சித்தப்படியே செய்துகொள்ளுங்கள். நான்தான் தவறிழைத்து விட்டேன். உங்களை ஒற்றரென்று நினைத்துக் கொல்ல முனைந்து என் தந்தையாரிடமிருந்து உங்களைக் காப்பாற்றினேனல்லவா, அதுதான் என் தவறு. அடுத்தாற்போல் உங்கள் மீது நான் செலுத்திய அன்பிருக்கிறதே...’’

அதற்குமேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது திலகவதிக்கு. அவள் விம்மி விம்மி அழுதாள். ஆனால் அவளது வெஞ்சினம் தணியவில்லை.

“நீங்கள் போய் வாருங்கள்! என் தந்தையார் வந்த பிறகு அவரிடம் வந்து உங்கள் கடமையைப்பற்றிப் பேசிக் கொள்ளுங்கள், போய் வருகிறீர்களா?’’ என்றாள். வீரமல்லன் தனது குரலை எவ்வளவு கனிவாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு கனிவாக வைத்துக்கொண்டு, “திலகவதி’’ என்று அழைத்தான். எதையோ அவளிடம் கூறுவதற்கு முற்பட்டான்.

“சென்று வாருங்கள்!’’ என்று கத்தினாள் திலகவதி.

வீரமல்லன் வடக்கே தஞ்சையை நோக்கிக் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது அவன் திலகவதியிடம் பெற்ற அனுபவத்தை அறவே மறந்துவிட்டான். அவனுடைய கரத்தில் அமைச்சர் கீர்த்தி எழுதிக் கொடுத்த ஓலை இருந்தது. அதை அவர் தமது தாய்மொழியில் எழுதியிருந்ததால் அவனுக்கு அதில் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் அவனுக்குத் தெரியாத இரகசியமல்லவே அது! நேரில் அவனிடம் அவர் கூறியுள்ள செய்தியாகத் தானே இது இருக்க முடியும்?

ஓலையைப் பற்றியிருந்த வீரமல்லன் ரோகிணியின் மென்றளிர்க் கரத்தைப் பற்றியிருப்பதாகவே நினைத்துக் கொண்டு தனக்குள் புன்னகை புரிந்தான். காய்ந்து போயிருந்த அந்தப் பனை ஓலையில் அவனுக்குப்பசுமையான ரோகிணியின் முகமலர் தெரிந்தது.

தொடரும்


Comments