Skip to main content

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 22. புயலும் தென்றலும்

பாகம் 3 , 22. புயலும் தென்றலும்  


நாள்தோறும் தனிமையில் சந்தித்துத் தங்கள் உறவை வளர்பிறை
நிலவென வளர்த்து வந்தார்கள் இளங்கோவும் ரோகிணியும். இளங்கோவின்
கண்கள் மீண்டும் புத்தொளி பெற்றன; ரோகிணியின் இதழ்களில் மீண்டும்
குங்குமச் சிவப்புக் குடியேறியது.

சந்தடியற்றுப் போய்த் தனித்திருந்த தோட்டத்துச் செடி கொடிகள்
தாங்கொணாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தன. கூவும் குயில்களின் குரலில் புதிய
இசை கூடியது. கொஞ்சும் கிளிகள் ரோகிணியின் இன்மொழியைத்
தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. தினந்தோறும் அங்கு அன்புக்
கொள்ளைதான்!
ஆனால், ஏனோ சில தினங்களாக இளங்கோ தன் வருகையைத்
திடீரென்று நிறுத்திவிட்டான். மூன்று நாட்களாகத் தொடர்ந்தாற்போல்
ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை.

ரோகிணி அவனைக் கண்டு பேசுவதற்கு என்னவெல்லாமோ முயற்சிகள்
செய்தாள். பயனில்லை. ஒன்று அவன் பெரிய வேளாரின் அருகில் இருந்தான்;
அல்லது வல்லவரையருடன் நடமாடிக் கொண்டிருந்தான்.

தலை வெடித்துப்போகும் போலிருந்தது ரோகிணிக்கு. பால் கசந்தது,
பஞ்சணை நொந்தது; பாங்கியின்மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
கந்துலனின் மகளான அவள் தோழி காரணத்தைத் தெரிந்து கொண்டாள்.

ஆனைமங்கலத்தில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு இளங்கோவாக
அவளுடைய மாளிகைக்கு வருவதுமில்லை; வந்தாலும் மகிந்தரின் வரவேற்பு
முன்போலிருக்காதென்று அவனுக்குத் தெரியும். ரோகிணியும் அவனை
வற்புறுத்தவில்லை.

ஒருநாள் வழக்கம்போல் நீராடிவிட்டு ரோகிணி பொட்டெழுதி, மை
தீட்டி, செஞ்சாந்து பூசித் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வழக்கம்
போலவே அருகில் நின்ற தோழியிடம் அவளுக்குக் கோபம் வந்தது.
கந்துலனின் மகள் சிரித்தாள். “இளவரசி! தாங்கள் கோபித்துக்
கொள்ளாதிருந்தால் ஒரு செய்தி சொல்கிறேன்’’ என்று தொடங்கினாள்
அவள். “தங்களுக்கு விருப்பமென்றால் இப்போதே போய்க் கொடும்பாளூர்
இளவரசரை இங்கு அழைத்து வருகிறேன்.’’

“உண்மையாகவா?’’

“இங்கு அழைத்து வரட்டுமா? அல்லது தோட்டத்தில் காத்துக்
கொண்டிருப்பதாகச் சொல்லட்டுமா?’’

“இங்கேயே அழைத்து வா! இதுவும் அவர்களுடைய மாளிகைதானே!
அவரைத் தடுப்பவர்கள் இங்கு யாருமில்லை என்று சொல். கட்டாயம்,
எப்படியாவது இப்போதே அழைத்து வருகிறாயா?’’ கோபம் கொஞ்சலாக மாறிப் பின்பு கெஞ்சும் நிலைமைக்கு இறங்கி வந்தது. பரிவோடு அவளைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தாள்
ரோகிணி.

சிட்டாக அவள் பறந்தோடிய அதே நேரத்தில் அங்கு பயந்துகொண்டு
வந்து சேர்ந்தார் மகிந்தர். கண்களை உருட்டி விழித்துக்கொண்டு தமது
குமாரத்தியை விழுங்கி விடுவது போல் பார்த்தார். ‘தடுப்பவர்கள்
யாருமில்லையா?’ என்று கேட்டன அவருடைய விழிகள்.

ரோகிணி ஒன்றுமே நடக்காததுபோல் மௌனம் சாதிக்கவே,
அவருடைய ஆத்திரம் பன்மடங்கு பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டது. அவள்
எதிரில் தென்பட்ட மைக்கிண்ணங்களை எடுத்து வீசினார். மலரைப் பற்றிக்
கசக்கி எறிந்தார். குலத்தைக் கெடுத்துவிட்ட துரோகி என்று குமுறினார்;
கோபாவேசமாகச் சொற்களைக் கொட்டிக் கொண்டு போனார்.

அவ்வளவுக்கும் அமைதியோடு இருந்த ரோகிணி, பின்னர், தனது
மௌனத்தைக் கலைத்து, “அப்பா! காலங்கடந்து விட்டதப்பா! இனி நீங்கள்
என்னைச் சினந்து கொள்வதால் சிறிதும் பயனில்லை!’’ என்று உறுதியோடு
கூறினாள்.

“என்ன?’’

“ஆமாம், இன்றோ, நாளையோ அல்லது என்றோ ஒருநாள் உங்களிடம்
கூறவேண்டுமென்று நினைத்ததை இப்போதே கூறிவிடுகிறேன். நான் இனி
முன்போல் உங்களுக்குச் சொந்தமாக இருக்கமுடியாது. யாரை நீங்கள் மனதார
வெறுக்கிறீர்களோ, அவரை என் முழு மனத்தோடு விரும்புகிறேன்.
கொடும்பாளூர் இளவரசரை நான் என்னுடையவர் என்று எப்போதோ
வரித்துவிட்டேன். அவரை இந்த ஐன்மத்தில் என்னால் மறக்க முடியாது.’’

ஒவ்வொரு சொல்லும் ஒரு பாறாங்கல்லென மகிந்தரின் தலையில் வந்து
விழுந்தது. வெகு நாட்களாக ரோகிணி குறி பார்த்து வைத்து, அவற்றைத்
தமது சிரத்தின் மேல் எறிவது போலுணர்ந்தார்.

இனிப் பேசி பயனில்லை. பொங்கிப் பொருமியது அவர் மனம் தங்களை
வென்றவனை, தங்களைத் தாழ்த்தியவனை, தாங்கள் இந்த இழிநிலைக்கு வரக்
காரணமாக இருந்தவனை, ஏன் அவளையோ கொல்ல முயன்றவனை, அவள்,
தம்பியைச் சிறை செய்யத் துடித்தவனை-அவனை மனத்தால் வரித்து
விட்டாளா?

“இந்த ஜன்மத்தில் உன்னால் மறக்க முடியாதா? ஜன்மம் என்ற ஒன்றே
உனக்கு இல்லாமல் செய்துவிட்டால்?’’ என்று கத்தினார் மகிந்தர்.
கத்திக்கொண்டே கழுகெனப் பாய்ந்து ரோகிணியின் கழுத்தைப் பற்றி
இறுக்கத் தொடங்கிவிட்டார்.

“கொன்று விடுகிறேன்! உன்னால் நான்பட்ட துன்பம் எல்லாம் போதும்!
இனிமேல் உனக்கு இந்த ஜென்மமே வேண்டாம். நீ போய்விடு! போய்விடு!’’

ரோகிணிக்கு மாளிகை சுழன்றது. அவள் தந்தை பம்பரமாய்ச்
சுற்றிக்கொண்டு வந்தார். அவளுடைய கண்கள் இருண்டு விட்டன.
இளங்கோவை நினைத்துக் கொண்டு அவள் கூவிய குரல் அவள் இதயத்தை
விட்டு வெளியே வரவில்லை.

வாயிற்கதவை யாரோ அவரசமாகத் தட்டினார்கள். பிறகு
தள்ளிக்கொண்டு திறந்தார்கள். வந்தவர்கள் யாரென்று ரோகிணிக்குத்
தெரியவில்லை. அவள் நினைவிழந்து கட்டிலில் கிடந்தாள்.

மகிந்தர், கதவருகில் கந்துலனைக் கண்டவுடன் ரோகிணியை அப்படியே
விட்டுவிட்டு, மாடத்தை நோக்கி ஓடினார். கந்துலன் அவரைப் பின்பற்றச்
சென்றான். சற்று நேரம் பொறுத்திருந்து தமது உணர்ச்சிகளை அடக்கிக்
கொண்டு “செய்தி ஏதும் வந்திருக்கிறதா?’’ என்று கேட்டார் கந்துலனிடம்.

பணிவுடன் ஓர் ஓலையை நீட்டினான் கந்துலன். அமைச்சர் கீர்த்தி
வீரமல்லனின் வாயிலாகக் கொடுத்தனுப்பிய ஓலை அது. அதை மகிந்தர்
ஒருமுறை படித்தார். மறுமுறை படித்தார். மீண்டும் படித்து முடித்து விட்டு,
தமது நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.
யோசனை செய்தார். கந்துலனும் ஏதோ மிகவும் முக்கியமான செய்தி என்பதைக் கண்டு, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

ஓலை கூறியது:

“என்னுடைய திட்டங்கள் நிறைவேறுவதற்கு இனி மன்னரவர்களின்
பரிபூரண ஒத்துழைப்பும் துணையும் வேண்டும். தொடர்ந்து அங்குள்ள
செய்திகளையெல்லாம் அனுப்பி வந்தால்தான் அதற்கேற்ப நான் இங்கு
நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

தலைநகரம் சோழபுரத்துக்கு மாறுவதற்குக் காரணம், புதிய நகரத்தில்
அமைக்கும் வலிமையான கோட்டை மதில்களும், நகரத்தின் எல்லைப்
பாதுகாப்பும் என்று நினைக்கிறேன். படைவீரர்கள் நகர அமைப்பு வேலையில்
ஈடுபட்டிருக்கிறார்களா? சுரங்க வாயில்களைப் பற்றித் தெரிந்து கூற முடிந்தால்
மிகவும் நல்லது.

கங்கை நாட்டிலிருந்து அவ்வப்போது அரண்மனைக்கு வரும் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

கொடும்பாளூர் அரண்மனைக்கு நிலவறைப் பாதை எந்தத் திசையில்
இருக்கிறது? மிகவும் சாதுரியமாக அறிந்து சொல்ல வேண்டிய விஷயம் அது.

இன்னும் ஒரு முக்கியமான செய்தி: கொடும்பாளூர் இளவரசன்
இளங்கோவும் நமது இளவரசியார் ரோகிணியும் காதல் கொண்டிருப்பதாக
என்னிடம் வீரமல்லன் கூறினான். அவனுக்கும் இளவரசியாரை
அடையவேண்டுமென்று ஆசை. அதை நான் தூண்டிவிட்டு, சமயம் வாய்க்கும்
போதெல்லாம் அவனுடைய ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
தங்களது குறுக்கீட்டால் இளங்கோவை ரோகிணியார் மறந்து விட்டதாகவும்
(அவனிடம் சொல்வதற்காக) ஒரு செய்தி அனுப்புங்கள்.

ஆனால், உண்மையில் தாங்கள் அவர்களுக்கிடையில்
குறுக்கிட்டுவிடக்கூடாது. தாராளமாக ரோகிணியாரை இளங்கோவிடம்
பழகவிடுங்கள். தாங்களும் அவனோடு நண்பராகப் பழகுங்கள். கொடும்பாளூர்
இளவரசனோடு நம் இளவரசி பழகுவது, நம்முடைய திட்டங்களுக்குத் துணை புரியக்கூடும். நம்முடைய சரித்திர புருஷனான துட்டகமுனு என்ற மாவீரனைப் பற்றி மறந்திருக்க மாட்டீர்கள். பகைநாட்டுச் சேனாதிபதியை அவன் மகிழ்வித்து,
கோட்டையைக் கைப்பற்றினான். ராஜதந்திர விஷயங்களில் பெண்கள்
அப்படியெல்லாம்கூடப் பேருதவி செய்திருக்கிறார்கள். ஆகவே
ரோகிணியாரின் அன்பை வளர்த்து விட்டு, தக்க சமயத்தில் அதற்குக்
கைம்மாறு கேளுங்கள். தங்களிடம் நன்றியும், அவனிடம் காதலும் வளரும்
வகையில் இளவரசியாரைப் பழக்கி விடுங்கள்.

கீர்த்தி.’’

ஓலை எழுப்பிய சிந்தனைகளிலிருந்து விடுபட்ட மகிந்தர், கந்துலனைப்
பார்த்து, “வீரமல்லன் வேறு ஏதாவது கூறினானா?’’ என்று கேட்டார்.

“இளவரசர் தமது கண்காணிப்பில் பத்திரமாக இருப்பதாகக் கூறினார்.
மற்றோலை வாங்கிக்கொண்டு, மன்னர் அவர்கள் தமக்கு ஏதும்
வாய்மொழியாகக் கூறினால் அதையும் கேட்டுக்கொண்டு வரும்படி
பணித்தார்.’’

“நாளைக்கு மாற்றோலையை அவனிடம் சேர்ப்பிக்கும் போது,
அமைச்சர் கீர்த்தியின் விருப்பப்படி ரோகிணியை நமது மாளிகைக்குள்
சிறையிட்டு வைத்திருப்பதாகச் சொல்லிவிடு.’’

கந்துலன் தனக்குள் நகைத்துக்கொண்டே தலையசைத்தான்.

“என்ன? நீ நேரில் பார்த்ததாகச் சொல்!’’

“நேரில்தான் பார்த்தேனே’’ என்றான் கந்துலன். அறைக்குள்
வருவதற்குள், மகிந்தர் தமது முகத்தில் எவ்வளவு சோகத்தை
வரவழைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவையும் வரவழைத்துக்கொண்டார்.

ரோகிணியைத் துன்புறுத்தியதற்காக வருந்தும் கோலத்தில் அவளுடைய
அறைக்குள் வந்து சேர்ந்தார். அப்போது ரோகிணி இளங்கோவின் மடிமீது
முகம் புதைத்து விக்கிக் கொண்டிருந்தாள். அதைக் கவனியாதவர்போல்
மகிந்தர் அறைக்குள் நுழையவே, இளங்கோ சட்டென்று எழுந்து நின்றான்.

எரிமலை மீண்டும் குமுறப்போகிறதென்று பயந்தாள் ரோகிணி.
இளங்கோவின் விழிகளும் மீசைத் துடிப்பும் அவளை நடுங்கச்செய்தன.
தனக்கு எதிரிலேயே இருவரும் போரிட்டுக் கொள்ளப் போகிறார்களா?
தந்தையின் கதி பிறகு என்ன ஆவது?

ஆனால், மகிந்தர் ஓடோடிச் சென்று ரோகிணியை அணைத்துக்
கொண்டு கண்ணீர் பெருக்கலானார். அவள் தலையை வருடிக்கொண்டே;
“என்னை மன்னித்துவிடு மகளே! என்னை மன்னித்துவிடு!’’ என்று விம்மினார்.
“ஏதோ பெற்றெடுத்த பாசம் என்னைப் பித்தனாக்கி விட்டது! ஆத்திரத்தில்
அறிவிழந்து அப்படி நடந்து கொண்டேன். என்னை மன்னித்து விடு!’’ என்று
கூறினார்.

பிறகு மெதுவாக வந்து இளங்கோவின் கரத்தைப் பற்றித் தமது
கண்களில் ஒற்றிக்கொண்டார். அவன் கரத்தின் மீதும் தன் கண்ணீரை
வடியவிட்டார்!

இவையெல்லாம் மெய்யாகவே நடைபெறுகின்றனவா? சொப்பன
உலகத்திலோ கற்பனை உலகத்திலோ நடை பெறுகின்றனவா? வியப்பு
மிகுதியினால் வாயடைத்துப் போய்விட்டது இருவருக்கும்.

மகிந்தர் பேசினார்.

“இளவரசே! எனக்கு உங்கள் மீதோ, என் குமாரத்தியின் மீதோ
என்றைக்கும் வெறுப்பு இருந்ததில்லை. ஆனால் ஆனைமங்கலத்தில் நடந்த
காரியத்தால் நான் கோபம் கொண்டிருந்தேன். நீங்கள் வேண்டுமென்றே
ரோகிணியைக் கொல்ல வந்ததாக நினைத்தேன். ‘தன்னைக் கொல்பவரை ஒரு
பெண் விரும்பினால், அவளைத் தந்தையாகிய நானே கொன்று விட்டால்
என்ன?’ என்று ஆத்திரப்பட்டேன். அதைத் தவிர, உங்கள் இருவர் மீதுமே
எனக்கு வெறுப்பில்லை. அவளும் என் குழந்தை. நீங்களும் என்
குழந்தையைப் போன்றவர்!-நீங்கள் மணம் செய்து கொண்டு ஒன்றாக வாழும்
ஒருநாள் வந்தால், அந்த நாளே நான் பாக்கியம் செய்த நாள்!’’

தன் செவிகளை நம்ப முடியவில்லை இளங்கோவுக்கு.

“அப்பா!’’ என்று அலறியபடி, தன் தந்தையைக் கட்டிக் கொண்டு
ஆனந்தக் கண்ணீர் சொரியத் தொடங்கினாள் ரோகிணி. இளங்கோ பொறி
கலங்கிப் போய்த் திகைத்து நின்றான். மகிந்தரா இவர்...?

மகிந்தர் இருவரிடமும் கூறுவதுபோல் ரோகிணியிடம் மேலே கூறினார்:

“ஆனால் உங்களுடைய எண்ணம் எளிதில் நிறைவேறக் கூடியதல்ல.
இன்னும் வேறிடங்களிலிருந்தெல்லாம் உங்களுக்குத் தடைகள் வரக்கூடும்.
ஒன்றுமட்டும் தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எல்லோரும் இசைந்து
வரும் காலத்தில், நான் உங்களுக்குத் துணையாக நிற்பேனே தவிர,
உங்களைப் பிரித்துவிட மாட்டேன்! என்னை நம்புங்கள்!’’

சரேலென்று அவர்களைத் தனியே விட்டு, வெளியே விரைந்து சென்றார்
மகிந்தர். “இளவரசே!’’ என்று கூவிக் கொண்டே இளங்கோவின் தோளில்
சாய்ந்தாள் ரோகிணி!
தொடரும்

Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 31. காதல் வெறி; கடமை வெறி!

பாகம் 3 ,  31. காதல் வெறி; கடமை வெறி! மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு  அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது.
கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில்
துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம்.

கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த  அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான்.

நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.

“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.

“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போக…

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 11. கடமை வெறியர்!

பாகம் 3 ,  11. கடமை வெறியர்! 


ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான்
அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று
அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக்
கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள்
எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்
கொட்டிவிடுகின்றன.

“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய
வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப்
புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று
மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.

“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா
நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.

“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக்
காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து
ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார்.
தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை
செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும்
தான் இருக்கும்.’’

இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல்
தழுதழுத்…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:

· புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.

· பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.

புதுக்கவிதையின் தோற்றம் :

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற…