வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 3- 23- பாதாள உலகம்.

  

ஆண் மகனின் ஒரு தோளைக் கடமையும், மற்றொரு தோளைக்காதலும் பற்றிக் கொண்டு தொங்கும்போது, அவன் இரண்டுக்குமிடையில் அகப்பட்டுக் கொண்டு விழிக்கும் விழிப்பு விந்தைக்குரிய காட்சி தான். பொதுவாகப் பெண்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. புரிந்து கொண்டாலும் உணர்ந்து ஏற்றுக் கொள்ள முடியாது. ரோகிணியும் இதற்கு விதிவிலக்கல்லவே!

அரை நாழிகைப் பொழுதில் கிளம்பி வருவதாக வல்லவரையரிடம் வாக்களித்துவிட்டு வந்த இளங்கோ, ரோகிணியின் அன்புப் பொறியில் வசமாக அகப்பட்டுக் கொண்டான். அவளோ தன் தந்தையார் அளித்துவிட்டுச் சென்ற உற்சாகத்தில் அவனைக் கைப்பாவையாகப் பாவித்துப் படாத பாடுபடுத்திவிட்டாள். என்னவெல்லாமோ பேசினாள்; சிரித்தாள்,சிணுங்கினாள். அவனை வேண்டுமென்றே சண்டைக்கு இழுத்து வேடிக்கை பார்த்தாள்.

வீராதி வீரனும் கண்டோர் நடுங்கும் காலனுமான இளங்கோவுக்குக்காதல் என்பது எவ்வளவு பயங்கரமானது என்று அப்போதுதான் தெரியவந்தது. குழந்தையிலும் குழந்தையான ரோகிணி இந்த உலகத்தில் அவனிடம் வேறு யாருமே கொண்டாடாத அளவுக்கு உரிமை கொண்டாடத் தொடங்கி விட்டாள். மழலைத்தனம் நிறைந்த அவள் உளறல்களுக்கு ஓர் ஓய்வே இல்லை. இப்படியெல்லாம்கூடக் காதலுணர்ச்சி ஒரு பெண்ணை ஆட்டி வைக்குமா என்ன!

“ரோகிணி! தாத்தா அவர்களுடன் நான் சோழபுரத்துக்குப் புறப்பட்டுச்செல்ல வேண்டும். சென்று திரும்புவதற்குச் சில தினங்களாகும்; விடை கொடுத்து அனுப்பு ரோகிணி!’’

திடீரென்று கோபம் வந்துவிட்டது ரோகிணிக்கு. விழிகளில் சிவப்பேற, “தமக்கையார் அருள்மொழி கூறியது சரியாகத்தான் இருக்கிறது’’ என்றாள்.

அருள்மொழியின் பெயரைக் கேட்டவுடன் சுருக்கென்று தைத்தது இளங்கோவுக்கு. அதைக் காண்பித்துக் கொள்ளாமல், “நங்கையார் என்ன கூறினார்கள்?’’ என்று கேட்டான்.

“கொடும்பாளூர்க்காரர்கள் கடமைவெறியர்கள் என்பதைச் சொன்னார்கள். மெய்தானே அது?’’

“ஆமாம். நாங்கள் கடமை வெறியர்கள்; நீங்கள் அன்பு வெறியர்கள்!’’

“இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இன்றைக்கு உங்களை எங்குமே விடப்போவதில்லை! இனி எப்போதுமே நீங்கள் என் அருகில்தான் இருக்க வேண்டும். என்னுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்ட பின்னர்தான் நீங்கள் எதையுமே கவனிக்க வேண்டும்!’’

நளினமான பொற்கொடியொன்று அவன் காலுக்கடியிலிருந்து

தளிர்விட்டு, சிறிது சிறிதாக அவனையே சுற்றிப் பிணைப்பது போல் உணர்ந்தான் இளங்கோ. எதற்குமே கட்டுப்பட விரும்பாத அவன் மனம் அன்புப் பிணைப்பைக் கூடத் தொல்லையாகவே நினைத்தது. ஆனாலும் அந்தக் கொடியின் தழுவலிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.

“ரோகிணி! இனிமேல் நம்முடைய தலைநகரம் தஞ்சையல்ல. இதைவிடப் பெரிய, இதை விட அழகான, இதை விட உறுதியுள்ள புதிய தலைநகரமொன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள படையிருப்புக்களை அங்கே மாற்றியமைக்க வேண்டும். தானிய பண்டாரம், தன பண்டாரம், ஆயுத சாலைகள், அலுவல் விடுதிகள் யாவுமே விரைவில் அங்கேதான் போகப் போகின்றன. ஏன், நீ கூடத்தான் இதைவிடப் பிரம்மாண்டமான மாளிகையில் அங்கே வசிக்கப் போகிறாய்!’’

எப்படியோ அவளிடம் மன்றாடி விடைபெற்றுக் கொண்டு கிளம்புவதற்குள் அவன் ரோகிணியிடம் கூறியது முழுவதையும் மறைந்து நின்று கேட்டுக்கொண்டார் மகிந்தர். அமைச்சர் கீர்த்திக்கு அனுப்பவேண்டிய மாற்றோலைக்கான புதிய செய்திகள் சில அவருக்கு எளிதில் கிடைத்து விட்டன.

கருக்கிருட்டு நேரத்தில் இளங்கோவும் வல்லவரையரும் சோழபுரப் புதுநகரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். திரும்பிய பக்கமெல்லாம் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களுமாக விளங்கின. அதே இடத்தை வெற்று வெளியாக இருந்தபோது கண்டு சென்ற இளங்கோவுக்கு இப்போது தன் கண்களையே நம்ப முடியவில்லை. நகர மத்தியில் நிமிர்ந்து நின்ற ஆலயத்தின் பெரும்பகுதி முடிந்து விட்டது. கோபுரத் திருப்பணி மட்டிலும் இன்னும் முற்றுப் பெறவில்லை.

“இளங்கோ! என்ன இப்படிச் சிலையாக நிற்கிறாய்!’’ என்று அவனைச்சுய நினைவுக்குக் கொண்டு வந்தார் வல்லவரையர் வந்தியத் தேவர்.

“மந்திர சக்தியால் மயன் படைத்த நகரங்களைப் பற்றிக் கதைகள் சொல்வார்கள், கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் இது...’’

“சக்கரவர்த்திகளின் கனவில் உதித்த நகரம் இது. இதற்கு மயன் யார் தெரியுமா? உன் தந்தை பெரிய வேளார் இருக்கிறாரே, அவர்தாம்! அவரது ஆணைப்படி லட்சோப லட்சம் ஆண்களும் பெண்களும் இதை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மனிதனால் ஆகாதது ஒன்றுமே இல்லை, இளங்கோ! அவர்கள் மனம் ஒன்றி உழைத்தால் மண்ணுலகத்தில் விண்ணுலகத்தையே நிறுவி விடலாம்.’’

“சக்கரவர்த்திகள் இன்னும் இதைப் பார்க்கவில்லையே!’’

“ஏன் பார்க்கவில்லை? இங்கே எழும்பியிருக்கும் அவ்வளவு மாளிகைகளும் முதலில் அவர் தம் மனதில் எழுப்பியவைதானே இளங்கோ! சக்கரவர்த்திகளின் கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டது, இளங்கோ!’’

நள்ளிரவுக்குப் பின்னர், வல்லவரையர் இளங்கோவை அழைத்து வைத்துக்கொண்டு, கோயில் பிரகாரத்திலுள்ள யாளிமுகக் கிணற்றின் மேடை மீது அமர்ந்திருந்தார். பகற்பொழுதில் அத்தனை ஆயிரம் பேர்கள் வேலை செய்து கொண்டிருந்த அந்த இடத்தில் அப்போது அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. தீப்பந்தத்தின் ஒளியோ, விளக்கொளியோ அங்கு அரிதாகத் தோன்றியது. ஏதோ ஒரு முக்கிய நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் போல் வல்லவரையர் சுற்று முற்றும் பார்க்கலானார். இளங்கோவின் மனதில் கூட அவனையறியாது சிறிது அச்சம் தலை நீட்டியது.

கடைசியாக எங்கிருந்தோ இருளில் நாற்பது ஐம்பது பேர்கள் கூட்டமாக வந்தார்கள். வந்தவர்கள் அனைவருமே குருடர்களைப் போல் கால் நிதானத்தில் நடப்பவர்களென்று தெரிந்தது. அந்தக் கூட்டத்தினருக்கு முன்னால் வந்தவரை உற்றுப் பார்த்தான் இளங்கோ. அவர் திருச்சிற்றம்பலச் சிற்பியார். கூட்டத்துக்குப் பின்னால் சேனாபதிகள் இருவர் நிமிர்ந்த தலை குனியாமல் வந்தனர்.

கூட்டம் நெருங்கவே, அவர்களைக் கண்டு திடுக்கட்டான் இளங்கோ. அவர்களுடைய கண்கள் இறுக்கமாக கட்டப் பெற்றிருந்தன. “குற்றவாளிகளா இவர்கள்? என்ன குற்றம் செய்தவர்கள்?’’

மெல்ல வல்லவரையரிடம் நெருங்கி வினவினான் இளங்கோ. “பொறுத்திருந்து பார்!’’ என்றார் சிரித்துக் கொண்டே.

திடீரென்று மற்றொரு அதிசயம் நடந்தது. அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த மேடைக்கல் ஆட்டம் கொள்ளவே கல்லும் மெல்ல ஒரு புறமாக நகர்ந்தது. கிணற்று வாயிலுக்கு அருகில் மற்றொரு கிணறா என்று திகைத்துப் போனான் இளங்கோ. வந்தவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கீழே இறக்கி விட்டார் சிற்றம்பலச் சிற்பியார். உள்ளேயிருந்து ஏதோ ஓர் உருவம் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றது.

“வாருங்கள் போகலாம்!’’ என்று அழைத்து அவனையும் சிற்றம்பலச் சிற்பியாரையும் அந்த வாயிலுக்குள் இறங்கச் செய்தார் வல்லவரையர். தீவர்த்தியுடன் சேனாபதிகள் இருவரும் முன்னே செல்ல அவர்களைப் பின் தொடர்ந்தனர் மூவரும்.

இளங்கோவின் தலைக்கு மேல் அந்த நிலவறைக் கதவு முன்போலவே மூடிக்கொண்டது. வல்லவரையரின் பிடி இறுக்கமாகத் தன் கரத்தில் விழுந்திப்பதை உணர்ந்தான் இளங்கோ.

படிகளில் இறங்குவதும் நிலவறைச் சுவர்களுக்கிடையில் நடப்பதுமாக அவர்கள் நெடுந்தூரம் சென்ற பின்பு ஒரு விசாலமான கூடமும் தீவர்த்தி வெளிச்சமும் தெரிந்தது. வந்தவர்களின் கண்களை மறைத்திருந்த கட்டுக்களை அவிழ்த்து விட்டார்கள். அவரவர்களுக்குரிய உழைப்புக் கருவிகள் வந்து சேர்ந்தன. ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களைத் தாண்டிச் சென்றவுடன், “இவர்கள் யார்? நடப்பதெல்லாம் என்ன?’’ என்று கேட்டான் இளங்கோ.

“கட்டடக் கலையிலே கைதேர்ந்த திறமைசாலிகள். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடைசியில் பரிசுகளும் விருதுகளும் பெறப் போகிறவர்கள்!’’

“அவர்களுக்கா இந்தக் கொடுமை!’’

“இது கொடுமையில்லை, இளங்கோ! உலகமெங்குமுள்ள எல்லாச் சாம்ராஜ்யங்களிலும் இப்போது இப்படித்தான் நடக்கிறது. நம்முடைய தலைநகரத்தின் இரகசியப் பாதைகளும் சுரங்க வழிகளும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்கிறாயா? வெளியில் தெரியாத மற்றொரு சிறிய நகரம் இங்கே அமைக்கப்பட்டு வருகிறது, இளங்கோ! இனிமேல் பற்பல தலைமுறைகளுக்கு இது தலைநகரமாக விளங்க வேண்டுமல்லவா?’’



ஒருவன் தீவர்த்திகளுடன் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்ல, இருவரும் அவனைப் பின்பற்றி நடந்தார்கள். பல கிளைகளாகப் பிரிந்த பாதை ஒரு திருப்பத்துக்கு வந்தவுடன் திடீரென்று முடிந்துவிட்டதுபோல் தோன்றியது. வல்லவரையர், வழி காட்ட வந்தவனின் தீவர்த்திகளைத் தமது கரத்தில் வாங்கிக்கொண்டு, அவனைத் திரும்பிச் செல்லுமாறு பணித்தார். அவன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களைத் தடுத்து நின்ற சுவரே அவர்களுக்கு வழிவிட்டது. நெடுந்தொலைவு ஒரே போக்கில் நடந்தார்கள்.

நேரம் செல்லச் செல்ல எங்கிருந்தோ சில்லென்று குளிர்க் காற்று வீசியது. தலையைத் தூக்கி மேலே பார்த்தபோது கூப்பிடு தூரத்துக்கு ஒன்று வீதமாகச் சின்னஞ்சிறு கோபுரங்கள் மேலே நிற்பதைக் கண்டான் இளங்கோ. அவற்றின் வழியாகத்தான் குளிர்க் காற்று வீசுகிறதா?

காற்று வரக்கூடிய வழிகள் ஏதும் கண்களுக்குப் புலப்படவில்லை. ஆனால் காற்று மட்டிலும் அதே வழியாகத்தான் நுழைந்து கொண்டிருந்தது.

“இவையெல்லாம் என்ன தாத்தா?’’

“நகரத்தில் உள்ள தீபக் கம்பங்கள். இரவு நேரங்களில், இவற்றின் உச்சியில் தீபம் ஏற்றுவார்கள்.’’



“ஓ! தெரிந்து கொண்டேன்!’’ என்று சிரித்தான் இளங்கோ. “நகரத்து மக்களுக்கு இது தீபத்தூண்கள். ஆனால் நிலவறைப் பாதைக்குச் சாளரங்கள்;அப்படித்தானே?’’

“இன்னும் நீ கண்டு தெரிந்து கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. நெருங்கி வா!’’ என்று அவனை அணைத்துக்கொண்டே நடந்தார் அவர். படிகளில் மேலே ஏறி, அவர்கள் கோட்டைச் சுவருக்கு வெளியில் வந்தவுடன், ‘சமுத்திரம் இங்கு எங்கே வந்தது?’ என்று திகைத்தான் இளங்கோ. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கருகருவென்று வெறும் தண்ணீரே மண்டிக் கிடந்தது.



தொடரும்


Comments