வேங்கையின் மைந்தன் - புதினம்-பாகம் - 3- 24-அழகும் அபாயமும்.



இளங்கோவின் கண்ணெதிரே பரந்து கிடந்த ஏரியின் சூழ்நிலைகள் தங்களுக்குள் ஏதோ இரகசியம் பேசிக் கொள்ளுவது போல் மெல்லச் சலசலத்துக் கொண்டிருந்தன. பின்புறம் திரும்பிப் பார்த்தான். மண்ணிலிருந்து முளைத்து முட்டித் துளைப்பது போல் நின்று கொண்டிருந்தது நகரத்தின் வெளிக் கோட்டை மதில். மதில்தான் எவ்வளவு உயரம்! ஏரிதான் எவ்வளவு அகலம்! 

ஏரியின் மையத்தில் சதுரமான வடிவில் ஏதோ ஒன்று தெப்பம் போல் மிதந்தது. ஆனால் அது எங்கும் நகரவில்லை. நங்கூரம் பாய்ச்சிய பெரியதொரு மரக்கலம்போல் தெரிந்தது அது. உற்று நோக்கினான் இளங்கோ. 

‘திருவாரூர் கமலாலயக் குளத்தின் மைய மண்டபம் போலல்லவோ தோன்றுகிறது. ஏரிக்குள்ளே ஒரு மண்டபமா?’ 

“தாத்தா! அதோ பாருங்கள் என்ன என்று?’’ வல்லவரையரிடம் கேட்டான் இளங்கோ. 

“சக்கரவர்த்திகள் தனிமையில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதற்கான வசந்த மண்டபம்.’’ 

“வசந்த மண்டபமா?’’ இளங்கோ மெல்ல நகைத்தான். அதைப் புரிந்து கொண்டார் வல்லவரையர். 

“எனக்கும் சக்கரவர்த்திகளுக்கும் இனி ஏது வசந்த காலம் என்கிறாயா? அல்லது குடும்பத்தோடு தனிமையில் மகிழ்ந்திருக்க எங்களுக்குப் பொழுதில்லை என்கிறாயா? உண்மைதான். முதிர்ந்த பருவத்தில் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகக் கட்டிய மண்டபம்.’’ 

ஆற்றங்கரையோரமாக அமைக்கப் பெறாத சோழபுரப் புது நகரம் இப்போது அந்த ஏரியால் கங்கைக்கரையின் அருகிலிருப்பதுபோல் தோன்றியது. இளவேனிற் காலத்து மாலை வேளையில் சித்திரை மாதத்துப் பௌர்ணமி இரவில் தானும் ரோகிணியும் மாத்திரம் அந்த மண்டபத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான் இளங்கோ. 

“வேளைக்காரப் படையைச் சேர்ந்த சிலர் எப்போதும் அங்கே காவலுக்கு நிற்பார்கள்’’ என்றார் வந்தியத் தேவர். 

‘அப்படியானால் சக்கரவர்த்திகள் மட்டும் அங்கு போய்க்கொள்ளட்டும். எங்களுக்கு வேண்டாம்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் இளங்கோ. 

சின்னஞ்சிறு படகொன்று மைய மண்டபத்திலிருந்து புறப்பட்டு நிழல்போல் நீரைக் கிழித்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தது! அதில் இருவர் இருந்தார்கள். “யாரது?’’ என்று கடுமையான குரலில் கேட்டுக்கொண்டே ஒருவன் வேல் தாங்கிய கரத்துடன் படகிலிருந்து குதித்தான். படகோட்டியோ படகைக் கட்டிவிட்டு அதன் ஓரத்தில் வந்து நின்றுகொண்டான். குரலுக்குரியவன், பாய்வதற்கு முன் பதுங்கும் புலியெனப் பதுங்கிப் பதுங்கி வந்தான். வேல்முனையென விழிமுனைகளையும் கூர்மையாக்கிக் கொண்டான். அருகில் நெருங்கி, இருவரையும் இனம் கண்டுகொண்டவுடன் பணிவோடு கரம் கூப்பினான். 

“நல்லது! விழிப்போடு தான் இருக்கிறீர்கள்’’ என்ற வல்லவரையர், 

“போய் வா!’’ என்று அவனுக்கு விடை கொடுத்தார். 

படகு மீண்டும் மையமண்டபத்தை நோக்கி நகர்ந்தது. பாதி வழியில் அது செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு வல்லவரையரும் இளங்கோவுடன் திரும்பினார். 

வெளிக்கோட்டை மதிலோடு ஒன்றியிருந்த தூணின் அடிப்பாகத்தில் ஒரு யாளிமுகம் தெரிந்தது. வல்லவரையர் என்ன அற்புதம் செய்தாரோ, தெரியவில்லை; திடீரென்று அதன் வாய் திறந்து கொண்டது. பிறகு அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் மூடிக் கொண்டது. சுரங்கப்பாதையில் அவர்கள் முன்போலவே நடந்தார்கள். ஆனால் இப்போது அந்தப் பாதை தொடக்கத்தில் இருந்தது போல் வெப்பமாக இருக்கவில்லை. திடீரென்று இளங்கோவின் உடல் குளிரால் நடுங்கியது. கைபட்ட இடமெல்லாம் பனிபடர்ந்த இடம் போல் சில்லிட்டிருந்தது. 

“தாத்தா! இதெல்லாம் என்ன?’’ என்று சுவர் வழியே மேலே கசியும் தண்ணீர்த் துளியைத் தொட்டுக் கேட்டான் இளங்கோ. 

“இப்போது நாம் ஏரிக்குக் கீழே போய்க் கொண்டிருக்கிறோம். மறுகரைக்குப் போகிறோம்!’’ 

“என்ன?’’ 

“இனி நாம் சந்தடி செய்யாமல் நடக்க வேண்டும். பேசாமல் மௌனமாக வருவது நல்லது’’ என்று அவன் காதருகே கூறினார் வல்லவரையர். 

சிறிது தூரம் இவர்கள் இப்படி நடந்தவுடன் எங்கிருந்தோ பேச்சுக்குரல் எழுந்தது. திகைப்புற்றுச் சற்றே நின்றுவிட்டு, உற்றுக் கேட்டான் இளங்கோ. பேசும் குரல் வேறு யாரைப் பற்றியும் பேசவில்லை. சாமந்த நாயகர் வல்லவரையரைப் பற்றியும் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோவைப் பற்றியுமே பேசியது! 

இருள், குளிரால் ஏற்பட்ட நடுக்கம், பனிக்கட்டியில் நடப்பது போன்ற உணர்வு அவ்வளவும் போதாதென்று இந்தக் குரல் வேறு எங்கிருந்தோ வருகிறது! ஆயிரமாயிரம் வீரர்களைக் கண்டு அஞ்சாத இளங்கோ அந்த ஒற்றைக் குரலைக் கேட்டு உடல் குலுங்கினான். மந்திரவாதிகளைக் கொண்டு பேய் பிசாசுகளை அங்கே நடமாட விட்டிருக்கிறார்களா? 

“தாத்தா?’’என்று அவன் ஏதோ கேட்க வாயெடுத்தான். சட்டென்று அவன் வாயைப் பொத்தினார் வல்லவரையர் வந்தியத்தேவர். பிறகு அவனைப் பற்றி இழுத்து நிறுத்திக் கொண்டு மேலே சுட்டிக் காட்டினார். அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் மேலே சமதளமில்லை. அப்புறம் விசாலமாகவும், மேலே போகப் போகச் சிறியதாகவும் நீண்டதோர் இடைவெளி தெரிந்தது. காற்றுக்காக ஏரிக்குள்ளே கூட இப்படியொரு கோபுரத் தூண் எழுப்பியிருக்கிறார்களா? 

ஆனால் அந்தத் தூணோ காற்றையும் கொண்டு வந்தது. காற்றோடு உருவமற்ற குரலையும் உள்ளே அனுமதித்தது. குரல் மேலே உச்சி முகட்டிலிருந்து வருகிறது என்பதைக் கண்ட இளங்கோ, உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றான். ஒரு குரல் இரண்டு குரல்களாக மாறியதே தவிர வேறு ஒன்றுமே தென்படவில்லை. 

பின்னர் அவர்கள் இருவரும் கூப்பிடு தூரம் தொடர்ந்து நடந்த பிறகு, தங்கள் மௌனத்தைக் கலைத்தார்கள். அப்போது அவர்களை எந்தக் குரலும் பின் தொடரக் காணோம். 

“பேசியது யார் தெரியுமா?’’ 

“பூத கணங்களாகவோ, பேய் பிசாசுகளாகவோ இருக்கலாம்’’ என்றான் இளங்கோ. 

“நாம் கரையில் நிற்கும்போது நம்மைப் பார்த்துச் சென்றானே ஒரு காவலாளி, அவன் தன் தலைவனிடம் தான் பார்த்து வந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்தக் கோபுரத் தூண் வசந்த மண்டபத்துக்கு மத்தியில் இருக்கிறது. கீழேயிருந்து நாம் பேசினால் அவர்கள் கேட்டு விடுவார்களென்பதற்காகவே உன்னை மௌனமாக வரச் செய்தேன்.’’ 

“கேட்டு விட்டால் என்ன? நாம்தானே பேசுகிறோம்?’’ 

“அந்த வீரர்களுக்கே ஏரிக்கு அடியில் இப்படி ஒரு சுரங்கப்பாதை இருப்பது தெரியாது. மண்டபத்தின் மையத்தில் இருக்கும் தூண் எதற்காக என்பதையும் அவர்கள் அறியாதவர்கள். இளங்கோ! இந்த ஒரு பாதை மட்டும் மிகமிக இரகசியமானது.’’ 

“இரகசியம் தெரியாமலா காவல் காக்கிறார்கள்?’’ 

“ஏரிக்கரை வழியாகவோ, ஏரியை கடந்தோ யாரும் பகைவர்கள் வந்துவிடக் கூடாதல்லவா? அதிலும் சக்கரவர்த்திகளின் வசந்த மண்டபத்தை சக்கரவர்த்திகளின் உயிரைப் போல் பாதுகாக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளை! தங்கள் உடலில் உயிர் உள்ளவரை வேறு யாரையும் அவர்கள் இங்கு அநுமதிக்க மாட்டார்கள்.’’ 

‘அந்த ஓர் இடத்துக்கு மட்டிலும் ஏன் அவ்வளவு பயங்கரமான பாதுகாப்பு!’ யோசனை செய்து பார்த்தான் இளங்கோ. 

அதையும் வல்லவரையரே விளக்கினார். “ஏன் தூண் தண்ணீருக்கு அடியிலிருந்து தொடங்கி, தண்ணீருக்கு வெளியே தலை தூக்கி நிற்கிறது. ஏரியில் எவ்வளவுதான் நீர் நிறைந்தாலும் தூணின் உச்சியைத் தொடமுடியாது. ஆனால் தூணின் அடிப்பாகம் உடைந்து போய்விட்டால், உடைக்கப்பட்டால்...’’ 

குபுகுபுவென்று வெள்ளம் பாய்ந்து தன்னையே அதல சுழலுக்குள் இழுப்பது போல் உணர்ந்தான் இளங்கோ. சுரங்கப்பாதையில் வெள்ளம் பாய்ந்தால் பிறகு நகரத்தின் கதி என்ன ஆவது? 

ஏரியின் மறுகரைக்கு வந்துவிட்டார்கள் அவர்கள். அங்கே நின்றுகொண்டு அந்த மண்டபத்தையே கண்ணிமைக்காது கவனித்தான் இளங்கோ. பலபலவென்று பொழுது புலர்ந்து கொண்டு வந்தது. விடியும் புதுப்பொழுதைப் போலவே, சோழபுரப் புது நகரமும் ஏரியும் எதிர்ப்புறத்தில் விரிந்து கண் கொள்ளாக் காட்சியைத் தந்தன. 

வெளிக்கோட்டை மதில்கள், உட்கோட்டை மதில்கள், கோயிலின் வெளிப்பிரகார மதில்கள்... கோயிலைக் கூடவல்லவோ மாமன்னர்கோட்டையும் கொத்தளமுமாக மாற்றியமைத்து எழுப்பியிருக்கிறார்! இவ்வளவும் போதாதென்று ஒருபுறம் ஏரியையும், மற்றொரு புறம் கருவேலங்காட்டையும் பாதுகாப்பு எல்லைகளாக அமைத்துக் கொண்ட மாமன்னரின் கூர்மதியை எண்ணி வியந்தான் இளங்கோ. ஏரிக்கு மத்தியில் நின்ற வசந்த மண்டபம் மட்டிலும் ஏனோ அவன் கண்களுக்கு ஒரே சமயத்தில் அழகும் அபாயமும் நிறைந்ததாகத் தோற்றமளித்தது. 

தொடரும்

Comments