வேங்கையின் மைந்தன்- புதினம்- பாகம் 3- 25-ஆனந்தக் கங்கை.


இமயப் பனிவரையின் உச்சியில் பிறந்து, அதன் அடிவாரத்துப் பசுங்காடுகளில் தவழ்ந்து, இடையில் எத்தனை எத்தனையோ மக்களுக்கு உயிர் கொடுத்து, காசியம்பதியிலே மாந்தரின் மாசுக்களைக் கழுவி, வங்கத்துக் கடலில் சங்கமமாகிய கங்கை நல்லாளுக்கு நெடு நாட்களாகவே ஓர் ஆசை இருந்து வந்தது. 

தெற்குத் தமிழ் மண்ணைப் பொன் கொழிக்கும் பூமியாக மாற்றிய பொன்னித் திருமகளை, காவேரியை, அவள் கண்டுகளிக்க விரும்பினாள். தன்னைப் போலவே அழகிலும், வளத்திலும், தூய்மையிலும் சிறப்புப் பெற்ற காவேரியை அவள் தன் மானசீகத் தங்கையாகக் கொண்டிருந்தாள். அதோடு காவேரி நாட்டுக் கோவில்களின் வளமும் கங்கையின் சிந்தையில் குடி கொண்டிருந்தது. 

கங்கைத் தேவியின் ஆசை நிறைவேறும் நாள் வந்துவிட்டது. அவள் தெற்கு நோக்கிக் கிளம்பிவிட்டாள். அவளுக்குரிய பெருமைகளோடு அவளை அழைத்துவரத் தொடங்கினர் தமிழ்நாட்டு மாவீரர்கள். 

இமயவரம்பனின் புதல்வியல்லவா? எம்பெருமானின் திருமுடியை அலங்கரிப்பவளல்லவா? காலங்காலமாக வளர்ந்த கடவுளுணர்வோடு தானும் ஒன்றி வளர்ந்தவளல்லவா? 

சிவனை உடைய தென்னாட்டுக்கு, சிவனுக்குரியவளாகிய கங்கையைப் பக்திப் பரவசத்தோடு அழைத்து வந்தனர், சோழநாட்டுப் பெருவீரர்கள். 

சக்கரவர்த்திகள் இராஜேந்திரப் பெரிய உடையாரின் உயிர்த் தோழரும் முத்தரையர் குலத்துதித்த தொண்டை மண்டலத்து மாதண்ட நாயகருமான அரையன் இராஜராஜன் தலைமையில் தமிழ்ப்பெரும் படை வங்கத்திலிருந்து கங்கையுடன் திரும்பிக் கொண்டிருந்தது. 

நூற்றி எட்டுப் பொற்குடங்களுக்குள் கங்கை நிரம்பியிருந்தாள். நூற்றி எட்டுக் களிறுகள் அவனைப் பெருமிதத்தோடு சுமந்து கொண்டு கம்பீரநடை போட்டன. களிறுகளுக்கு முன்னே ஆயிரக்கணக்கான புரவிகள் அணிவகுத்துக் கொடிதாங்கிய வீரர்களுடன் குளம்பொலியெழுப்பின. பின்னே பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் வெற்றிச் செருக்கோடு வெள்ளமெனப் பாய்ந்து வந்தனர். 

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் புலிக் கொடிகள், மலைக் கூட்டம்போன்ற யானைக்கூட்டம், அவற்றிடையே மின்னிச் சிரிக்கும் வண்ணக் குடங்களில் புனித கங்கை. 

அடடா! விண்ணிலிருந்து மண்ணுக்குக் கங்கையைக் கொண்டு வந்த பகீரதன் மட்டிலும் அப்போது இருந்திருந்தால், அவன் ஓடோடியும் கோதாவரிக் கரைக்குச் சென்று, அங்கு கங்கைக்காகக் காத்து நிற்கும் இராஜேந்திரரைக் கண்டிருப்பான்! 

“வீரத் தமிழ்மகனே! நான் என்னுடைய தவ வலிமையால் கங்கையைப் பூவுலகுக்குக் கொண்டு வந்தேன். தனி மனிதனுடைய இந்த முயற்சியையும் பிடிவாதத்தையும் உலகம்போற்றக் கற்றுக் கொண்டது. நீயோ உன் முயற்சியால் ஆற்றலால், உழைப்பால் என்னையே திகைக்க வைத்து விட்டாய். உன் நாட்டு மக்கள் உன்னையே மறக்க முடியாதபடி செய்து விட்டாய், மகனே!’’ 

ஆம், நூற்றுஎட்டுக் குடங்களில் கங்கை நீர் கொண்டு வருவதற்குள் நூற்று எட்டுப் போர்க்களங்களையாவது கண்டிருப்பார்கள், சோழ நாட்டு வீரர்கள். சக்கரக் கோட்டத்தில் முதல் எதிர்ப்புத் தொடங்கியது. எங்கோ தெற்கு மூலையில் காவேரிக் கரையில் உள்ள ஒரு சக்கரவர்த்திக்கு வடக்கே என்ன வேலை! கங்கை நீரைக் கொண்டு வருவதற்காக அவர் ஏன் இப்படிப் பேராசைப் பட வேண்டும்? 

வேங்கி நாட்டுக்கு வடக்கே இருந்த சக்கரக் கோட்டம் முதலில் எதிர்த்து நின்றது. பிறகு தன் கோட்டைகளைக் கைவிட்டுத் தவித்தது. அடுத்தாற் போல ஒட்டார தேசம், கோசலநாடு, தண்டபுத்தி, தக்கணலாடம், உத்திரலாடம் இவ்வளவு நாடுகளும் போரிட்டுப் பார்த்தன. 

பயன்? - எதிர்த்தவர் காலன், வேல்பிடிவீமன், சோழ சக்கரன், சாமந்தாபரணன், பூஷணம், வயரிநாராயணன், வீரவீமன் இத்தனை விருதுப் பெயர்களையும் ஒன்றாகப் பெற்ற முத்தரையப் பெருமகன் அரையன் இராஜராஜனல்லவோ படை நடத்திச் சென்றவர்! தமிழனின் வீரத்தை, ஆற்றலை, ஆவேசத்தைக் கண்டவர்கள், எதிர்த்தவர்கள், பிறகு பணிந்தார்கள். அன்பு கொண்டார்கள். 

தாங்களே தங்களது சிரங்களில் கங்கை நீர் சுமந்து வந்து அவற்றைக் களிறுகள் மீது ஏற்றி வைத்தார்கள். கங்கைக் கரைக்குக் கடைசி யாத்திரைக்காகப் புறப்பட்டவர்களல்லவே இவர்கள்! பொற்காலத்தின் உதய நேரத்துக்கு இசைபாடுவதற்காகக் கங்கைக் கன்னியை அழைத்து வரவல்லவோ சென்றார்கள். 

கோதாவரிக்கரை மாளிகைக்குள் இரண்டு குதிரைவீரர்கள் பறந்தோடி வந்து புகுந்தனர். அவர்கள் வாய்விட்டுக் கூறுவதற்கு முன்பே மாமன்னர் செய்தியை அறிந்துகொண்டார். காததூரத்துக்குள் வெற்றி வீரர்கள் வந்து கொண்டிருக்கும் நற்செய்தி கிடைத்தது. 

இராஜேந்திரர் திடீரென இளைஞராக மாறிவிட்டார். அவருடைய மனோவேகத்துக்கு இரதத்தின் வேகம் போதாது. தமது புரவியைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டு, வீரர்கள் புடைசூழ வரவேற்பதற்காகக் கிளம்பினார். காற்றைக் கிழித்துக் கொண்டு, கால்கள் தரையில் பாவுவது தெரியாமல் கடுகி விரைந்தது அவர் புரவி. மெய்க்காவலர்களால் கூடச் சக்கரவர்த்திகளோடு ஒன்றிச் செல்ல முடியவில்லை. 

முதலில், வெள்ளம் பாய்ந்து வருவது போன்று பேரொலி கேட்டது. பிறகு குதிரைக் குளம்பால் எழும்பிய புழுதி மண்டலம் வானத்துக்கும் பூமிக்கும் திரையிட்டு மறைத்தது. குதிரைகள் பாய்ந்து வந்தன. களிறுகளின் மணியோசை செவியில் தேன் வார்த்தது. பின்னர் மலைகளின் உச்சியில் முளைத்தெழுந்த மாமணிகள் போல் பொற்குடங்கள் ஒளி உமிழ்ந்தன. சக்கரவர்த்திகளின் கண்கள் கூட்டத்தில் மாதண்ட நாயகரைச் சலித்தெடுத்தன. அதற்கு முன்பே சக்கரவர்த்திகளை இனம் கண்டு கொண்டார் அரையன் இராஜராஜன். இரண்டு குதிரைகள் சட்டென்று நின்றன. இருவரும் ஒரே சமயத்தில் குதித்திறங்கி ஓடோடியும் வந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் அன்பு வெறியோடு தழுவிக் கொண்டார்கள். இருவரது கண்களிலிருந்தும் ஆனந்தக் கங்கை பொங்கினாள். 

கூடி நின்ற அனைவருடைய கண்களிலும் அவள் வெள்ளப் பெருக்கேடுத்தோடினாள். இருவருக்குமே பேச நா எழவில்லை. 

“அரையரே! - முத்தரையரே! இராஜராஜரே!...’’ என்று அவருக்கே ஆசிகூற முயன்றார் மாமன்னர். நன்றி சொல்வதற்கு முன் வந்தார். ஒன்றுமே கூற முடியவில்லை. மாமன்னரின் கண்ணீர் அரையரின் விழுப்புண்கள் மீது உதிர்ந்து, அவரால் கூற முடியாததையெல்லாம் கூறிவிட்டன. 

“சக்கரவர்த்திகளே! இறைவனின் திருவருளாலும் தங்களது ஆசியினாலும் தாங்கள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றி விட்டேன். நம்முடைய வீரர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தாங்கள் நிறைந்திருந்து வெற்றி தந்தீர்கள்...’’ 

“சுமையை உங்கள் மீது இறக்கிவிட்டு நான் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டேன். என்றாலும் நினைவெல்லாம் உங்களிடம்தான்.’’ 

“என் வாழ்நாளில் நான் அடையக்கூடிய மிகப் பெரும் பேறு இது. தாங்கள் எதற்காக நேரில் எங்களுடன் வரவில்லை என்று எனக்குத்தான் தெரியும். ஈரேழு பிறவிகள் எடுத்தாலும் இந்த நன்றிக் கடனை என்னால் செலுத்த முடியுமா, சக்கரவர்த்திகளே?’’ 

“முதுமைக் காலம். ஓய்வெடுத்துக் கொண்டேன்; வேறொன்றுமில்லை’’ என்றார் சக்கரவர்த்தி. 

“எனக்கு நன்றாகத் தெரியும், காரணம்! இந்த வெற்றியின் புகழைத் தாங்கள் சுமக்க விரும்பாமல் எனக்கு அளிக்க முன்வந்தீர்கள். எத்தனையோ ஆண்டுகளாக நான் ஆற்றிய செஞ்சோற்றுக் கடனை நினைத்து, என்னை உயர்த்துவதற்காக தாங்கள் ஒதுங்கி நின்றுகொண்டீர்கள். வெற்றிக்குப் பொறுப்பை என்னால் ஏற்கமுடியாது! எய்தவர் தாங்கள், நான் தங்களது கரத்திலுள்ள சிறு வேல்!’’ 

சக்கரவர்த்திகள் சுற்றும் முற்றும் பார்த்தார். வாழ்த்தொலி விண்ணதிர எழும்பிக் கொண்டேயிருந்தது. வீரர்களைக் கையமர்த்தி விட்டு, “வாழ்க, அரையன் இராஜராஜன்!’’ என்று கூவினார். ஆயிரம் பல்லாயிரம் குரல்கள் அவர் குரலை எதிரொலித்தன. 

“முத்தரையர் குலத்தையே உயர்த்திவிட்டீர்கள், சக்கரவர்த்திகளே!’’ 

என்று கூறிச் சக்கரவர்த்திகளின் திருவடிகளில் வீழ்ந்தார் அரையன் இராஜராஜன். பொற்குடங்களின் விளிம்புகளில் தளும்பிக் கங்கை நல்லாள் இக்காட்சி கண்டு பரவசம் கொண்டாள். 

தொடரும் 
Comments