சோழபுர புது நகரத்தின் பொறுப்புகளை இரு பகுதிகளாகப் பிரித்து, அவற்றைக் கொடும்பாளூர் பெரியவேளாரிடமும் வல்லவரையர் வந்தியத் தேவரிடமும் ஒப்புவித்திருந்தார் மாமன்னர். நகர நிர்மாணத்தின் வெளிப்புற அமைப்புகளும், கோயில் குளங்களும், அரண்மனை மாளிகைகளும், மக்களுக்கான பிற வசதிகளும், பெரிய வேளாரைச் சேர்ந்தவை.
நகரத்தின் எல்லைப் பாதுகாப்புகள், உட்கோட்டை, வெளிக்கோட்டை மதில்கள், நிலவறைகள், சுரங்கப்பாதைகள் முதலிய இரகசியப் பொறுப்புகள் வல்லவரையரைச் சார்ந்தவை.
இவர்கள் இருவரது யோசனைகளையும் அவ்வப்போது கேட்டுக்கொண்டு செயலில் நிறைவேற்றி வைத்தார் சிற்றம்பலச்சிற்பியார். மாமன்னரது கனவுகளை நிறைவேற்றும் ஆர்வமும், அத்துடன் மாமன்னர்களுக்கெல்லாம் மாமன்னரான எம்பெருமானின் திருப்பணி என்ற பற்றுதலும் சிற்றம்பலச் சிற்பியாரைச் சிறிதுகூட ஓய்ந்திருக்கவிடவில்லை.
ஆயிற்று! சக்கரவர்த்திகளின் கனவு மாளிகைகள் நனவு மாளிகைகளாக மண்ணில் மலர்ந்து விட்டன. கோயில் எழும்பிக் கோபுரமும் உயர்ந்து நின்றது. எங்கு திரும்பினாலும் மாடமாளிகைகள்; நிழல் தரும் மரங்கள்; சோலைகள். பெரும் பகுதி வேலைகள் நிறைவு பெற்று, நகரத்தை அழகு செய்யும் வெளிப்பூச்சுகளே எஞ்சியிருந்தன. ஆலயத்திருப்பணியும் ஒரு குறைவுமின்றி முழுமை பெற்றுக்கொண்டிருந்தது. சக்கரவர்த்திகள் திரும்பி வந்தபிறகு கோயிலின்
கும்பாபிஷேகமும் நகர்புகு விழாவும் ஒன்றாக நடைபெற வேண்டியதுதான். தரைமடத்துக்குக் கீழே சிற்சில இடங்களில் நிலவறைப் பகுதிகள் மட்டிலும் நிறைவு பெறாத நிலையில் இருந்தன. ஆனால் வெளித் தோற்றத்துக்கு நகரம் உருவாகிவிட்டதாகவே தோன்றியது. ஓரிரு மாதங்களில் யாவுமே செம்மையாக முடிந்து விடுமென்று வல்லவரையரிடம் உறுதி கூறினார் சிற்பியார்.
சோழபுரத்தில் சில தினங்கள் தங்கிப் பார்த்துவிட்டு, இளங்கோவும் வல்லவரையரும் தெற்கே தஞ்சாவூர்ச்சாலை வழியே கிளம்பினார்கள். ஆனால் தஞ்சை மாநகரத்தின் எல்லை வரையில் சென்றவர்கள் நகரத்துக்குள் நுழையவில்லை. நகருக்கு வெளியிலிருந்த ஒரு படையிருப்பில் அன்றைக்கு அவர்கள் இரவுப்பொழுது கழிந்தது. உணவு முடிந்தபின் இளங்கோவின் அருகில் வந்து அமர்ந்து,
“இவ்வளவு அருகில் வந்தும் அரண்மனைக்குப் போகவில்லையே என்று நினைக்கிறாயா?’’ என்று கேட்டார் வல்லவரையர்.
இளங்கோ அதை நினைத்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவரிடம் ஒப்புக் கொள்ளவில்லை.
இரவு நேரமாக இருந்ததால் இளங்கோவிடம் மனம் விட்டுப் பேசத் தொடங்கினார் அவர். “நானும் அந்தக் காலத்தில் உன்னைப் போல் தான் ஓரளவு சித்தப் பிரமை கொண்டிருந்தேன். நீ இப்போது எந்த நேரமும் ரோகிணியை நினைத்துக் கொண்டிருப்பது போல் நானும் குந்தவைப் பிராட்டியாரின் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தேன். அடடா! என்ன அற்புதமான நாட்கள் அவை.’’
இளங்கோவை நாணம் சூழ்ந்து கொண்டது. அவரை நிமிர்ந்து நோக்கவே அவனுக்குத் துணிவில்லை, “நான் யாரையும் நினைத்துக் கொண்டிருக்கவில்லை’’ என்று மழுப்பி வைத்தான்.
“என்னிடம் மறைக்காதே! எனக்கு இதிலெல்லாம் ஓரளவு அனுபவம் உண்டு’’ என்று நகைத்தார் வல்லவரையர். “நான் எதற்காக உன்னிடம் தணியாத பற்றுதல் வைத்திருக்கிறேன், தெரியுமா? உன்னிடம் நான் என் இளம் வயது வாழ்க்கையைக் காணுகிறேன். என்னைப் போலவே நீயும் ஒருவகையில் வீரன்; மற்றொரு வகையில் கோழை, அதாவது பெண்களைப் பொறுத்தவரையில் கோழை!’’
வயது மிகுதியானாலும் வைரம் பாய்ந்த கருங்காலிக் கட்டையல்லவா வல்லவரையர்! தம்முடைய இன்ப நினைவுகளைப் பற்றி அவனிடம் ஓரிரு செய்திகளைக் கூறிவிட்டு மீண்டும் அவனைப் பற்றியே பேசினார்.
“பொறுத்துக் கொள்! சக்கரவர்த்திகள் வெற்றியுடன் திரும்பி வரும்வரையில் பொறுத்துக் கொள்! அந்த வெற்றி விழாவுடன் மற்ற எல்லா விழாக்களையும் ஒன்றாக நாம் சோழபுரத்தில் வைத்துக் கொள்ளப் போகிறோம். விழாவின்போது முக்கியமானவர்களுக்கெல்லாம் விருதுகளையும் பரிசுகளையும் சக்கரவர்த்திகள் வழங்குவார்கள். உனக்கும் நீ விரும்பும் பரிசு கிடைக்கும். நானே கூறி வழங்கச் சொல்கிறேன்!’’
தன்னுடைய ஆவலை அழுத்தி மறைக்கமுடியாமல் “தாத்தா?’’ என்று தடுமாறினான் இளங்கோ.
“பொறுத்துக் கொள், உன் ரோகிணியும் உனக்குப் பரிசாகக் கிடைப்பாள்’’ என்றார் வல்லவரையர்.
“ரோகிணியும்’’ என்று அவர் அழுத்திக் கூறியதை, அப்போது அவனால் உணர முடியவில்லை. அவளுடைய பெயரை அவர் வாயால் கேட்டவுடனேயே அவனுக்கு வானத்தில் சிறகடித்துப் பறப்பதுபோல் தோன்றியது. உடனே பறந்து சென்று இதை ரோகிணியிடம் கூறினால் என்ன?
இரவெல்லாம் அவன் உறங்கவில்லை. மறுநாள் அதிகாலையில் அவர்கள் கொடும்பாளூர்ச் சாலையில் குதிரைகளை விரட்டிக் கொண்டு சென்றார்கள். நடுப்பகலில் வணிகர்களது நகரமாகிய திருவெண்ணெயிலில் தங்கி விட்டுப் பிற்பகலில் மீண்டும் புறப்பட நினைத்தார் வல்லவரையர்.
திருவெண்ணெயில் நகரத்து வணிகத் தலைவர் ஜெகவீர நாச்சியப்பரின் நினைவுதான் முதலில் வல்லவரையருக்கு வந்தது. தெற்கே பாண்டிய நாடு முழுவதும் அவரைச் சேர்ந்தவர்கள் வாணிபம் நடத்தினார்கள். கீழ்க்கடற்கரை நாடுகளிலும் அவர்கள் கலம்செலுத்திப் பொன் குவித்தார்கள்.
வாணிபமே ஜெகவீர நாச்சியப்பருக்கு முதன்மையானதென்றாலும், அதோடு அயல் நாடுகளின் அரசியல் உறவு வளர்ச்சிக்கு அவர் ஆவன செய்து வந்தார். இரகசியச் செய்திகளைச் சேகரித்துக் கொடுப்பதற்காகவே அவரிடம் சிலர் வணிகர்களாகப் பணிபுரிந்து வந்தார்கள்.
வல்லவரையருக்கும் நாச்சியப்பருக்கும் ஓலைத் தொடர்புகள் இருந்தன. முக்கியமான செய்திகள் இருந்தால் அவரே நேரில் தஞ்சைக்கு வந்து விடுவார். நாச்சியப்பரின் மாளிகையை இருவரும் அடைந்த அதே சமயத்தில் அவரும் வல்லவரையரைக் காணத் தஞ்சைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.
“தங்களைத் தரிசிப்பதற்காகவே புறப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய மாளிகை தங்களை வரவேற்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது’’
என்று இருவரையும் முகமும் அகமும் மலர வரவேற்றார் நாச்சியப்பர். பகல் உணவு முடிந்த பின்னர் மூவரும் தனிமையில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். நாச்சியப்பரின் போக்கில் ஏதோ இனம் விளங்காத அச்சமும் அவசரமும் காணப்பட்டன.
“முக்கியமான செய்தி இருப்பதுபோல் தோன்றுகிறதே? பாண்டிய நாட்டில் ஏதும் பரபரப்பான நிகழ்ச்சிகள் நிகழ்ந்தனவா?’’ என்று கோட்டார் வல்லவரையர்.
“பரபரப்பு மிகுந்த செய்திகள் ஒன்றுமில்லை. என்றாலும்...’’ என்று தயங்கினார் நாச்சியப்பர். வல்லவரையரின் நெற்றி சுருங்கியது,
“என்ன?’’
“குழப்பம் விளைவிப்பதற்காக அங்காங்கே சிற்சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நமது பெரும் படை கங்கைக் கரையில் அழிந்து விட்டதாக ஒரு வதந்தி உலவத் தொடங்கியிருக்கிறது. முதலில் மக்கள் அதை நம்பவில்லை. ஆனால் இப்போது எங்களைச் சேர்ந்த வணிகர்கள் கூடப் பீதியுற்றிருக்கிறார்கள்.’’
கலகலவென்று சிரித்தார் வல்லவரையர். “வணிகர்களைத்தான் முதலில் பயம் பற்றிக் கொள்கிறது. செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்களல்லவா? சரி,
இருக்கட்டும்! பிறகு ஏதாவது செய்தி உண்டா?’’
“சில தினங்களாகவே இந்த நகரத்துக்கப்பால் சமணர் மலைப்பக்கம் அன்னியர்கள் நடமாடுவதுபோல் தெரிகிறது. ஊர்க் காவலர்கள் கண்காணித்து வந்து ஐயத்துக்கிடமில்லை என்று கூறுகிறார்கள். வந்தவர்கள் தங்களைக் கொல்லி மலையைச் சேர்ந்த நாடோடி மக்களென்று சொல்லிக் கொள்கிறார்களாம். இருபது முப்பது பேர்கள் இருக்கக்கூடும்.’’
வல்லவரையரும் இளங்கோவும் ஒருவரையொருவர் பொருள் பொதிந்த பார்வையில் பார்த்துக் கொண்டார்கள்.
“தோற்றத்தில் நாடோடிக் குறவர் கூட்டம் என்று தான் நம்பவேண்டியிருக்கிறது. நரிகளையும் முயல்களையும் வேட்டை யாடுகிறார்கள். நகரத்துக்குள் அதிகமாக நடமாடுவதில்லை.’’
“ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா? எல்லோரும் ஆண்கள்தானா?’’ என்று கேட்டான் இளங்கோ. “பெண்களும் குழந்தைகளும் உடன் இருந்தால் நாம் அஞ்சவேண்டியதில்லை.’’
“இனிமேல்தான் அவர்களை ஊன்றிக் கவனிக்க வேண்டும். பெண்களும் குழந்தைகளும் இருப்பதாய்த் தெரியவில்லை.’’
“பார்த்துக் கொள்வோம்’’ என்று கூறிவிட்டுச் சிறுபொழுது யோசனை செய்தார் வல்லவரையர். பின்னர் “எல்லாம் எதிர்பார்த்த செய்திகள்தான்; புதியனவாக ஒன்றுமில்லை’’ என்றார்.
“முக்கியமான ஒன்றை நான் இன்னும் கூறவில்லை. எப்படிக் கூறுவது என்ற யோசனையிலிருக்கிறேன்’’ என்றார் நாச்சியப்பர். அவரது குரலில் தென்பட்ட குழப்பம் கண்டு மற்ற இருவரும் திடுக்கிட்டார்கள்.
“கடாரத்துக்குச் சென்ற மரக்கலங்களில் இரண்டு மாநக்கவரம் தீவுகளைத் தாண்டியவுடன் கடற் கொள்ளைக் காரர்களிடம் அகப்பட்டுக் கொண்டன.’’
“என்ன?’’
“ஆமாம். கொள்ளையடித்தவர்கள் கடாரத்தரசரின் வீரர்கள் என்பதற்குப் போதிய சான்றுகள் இருக்கின்றன.’’
“வியப்பாக இருக்கிறதே!’’ என்றார் வல்லவரையர். “கடாரத்தரசர் சங்கிராம விசயோத்துங்க வர்மர் நம்முடைய நெடுநாள் நண்பர். நாகைப்பட்டினம் சூடாமணி விகாரத்துக்காக எவ்வளவோ பொன்னும் பொருளும் வழங்கி வருபவர். சென்ற ஆண்டுகூடச் சக்கரவர்த்திகளுக்கு வெகுமதிகள் அனுப்பி யிருந்தாரே!’’
“சூடாமணி விகாரத்துப் புத்த பிக்ஷு க்களையும், பொதுவாகவே மற்ற சமயத்தரையும் நாம் கொடுமைப் படுத்துவதாகச் செய்தி போயிருக்கிறது. அவர் அதை நம்பி விட்டாரென்பதிலும் ஐயமில்லை. கொள்ளைக்காரர்களாக வந்த வீரர்களே வஞ்சம் தீர்ப்பதாகச் சொல்லிக் கொண்டுதான் கலங்கள் மீது பாய்ந்திருக்கிறார்கள்.’’
இளங்கோவின் மீசை துடித்தது. புஜங்கள் இரண்டும் விம்மிப் புடைத்தன. விழிகளில் சிவப்பேறியது.
“சமயப் பேதங்களின்றி அனைவரையும் சமமாக மதித்துப் போற்றும் நமது ஆட்சிமீதா பழி சுமத்துகிறார்கள்? பிற சமயத்தாருக்குத் தனிச் சலுகைகள் வழங்கி அவர்களைக் கண்ணெனக் காக்கும் நம்மையா குறை கூறுகிறார்கள்? நமது கலங்களையா வழிமறித்துக் கொள்ளையடித்தார்கள்?’’ வல்லவரையர் அவன் கரத்தைப் பற்றி,
“பொறு, இளங்கோ!’’ என்றார்.
“தாத்தா! ஆணையிடுங்கள் தாத்தா! சக்கரவர்த்திகள் கங்கை நாட்டிலிருந்து திரும்புவதற்குள் நான் நமது கலங்களுடன் கடாரம் சென்று திரும்புகிறேன்’’ என்றான் இளங்கோ.
“அவசரப்படாதே இளங்கோ. இப்போது ஏதும் நடந்து விடவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்’’
என மீண்டும் கூறினார் வந்தியத்தேவர். இளங்கோ தன் கரங்களை அவர் கட்டிவிட்டதுபோல் உணர்ந்து தவிக்கத் தொடங்கினான்.
தொடரும்
Comments
Post a Comment