வேங்கையின் மைந்தன் - புதினம்-பாகம்- 3- 27-நிலவறையில் நிழலுருவம்.
அன்றைக்குப் பிற்பகலில் கொடும்பாளூருக்குப் புறப்பட நினைத்தவர்கள் இரவு முழுவதும் திருவெண்ணெயில் நகரத்தில் தங்கினார்கள். நகரத்தைச் சுற்றிலும் சின்னஞ்சிறு குன்றுகள் சோம்பலுடன் படுத்துக் கிடந்தன. சமணர் மலைக் குன்றின் அடிவாரத்தில் சமணர் பள்ளி இருந்தது. மேலே துறவிகளின் குகை. அங்கே திகம்பர முனிவர்கள் சிலர் தியானத்தில் இருந்ததால் பள்ளிவாழ் முனிவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு செல்வதில்லை. 

குன்று மிக நீண்டிருந்தது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்தன. அதன் பின்புறத்தில் ஒரு பள்ளத்தாக்கு. அரையர் குளம் என்று அதை அழைத்து வந்தார்கள். பட்டப் பகலில்கூட மனிதர்கள் அங்கு நடமாடுவதில்லை. இளங்கோவும் வல்லவரையரும் இருளோடு இருளாகச் சென்று மலையடிவாரத்தின் பக்கம் சுற்றி வளைத்துக் கொண்டு வந்தார்கள். மலையடிவாரத்தை ஒட்டிய புதர்களுக்கு மத்தியிலிருந்து குத்தீட்டிகள் வெளியில் தெரிந்தன. மலைப் பிளவுகளோடு ஒன்றியபடி சிலர் காவல் காத்து நிற்பது தெரிந்தது.

சந்தடி செய்யாமல் அந்த இடத்தை நன்றாகப் பார்த்துக் கொண்டு, வந்தது போலவே இருவரும் திரும்பினார்கள். நாச்சியப்பரின் மாளிகைக்கு வந்து சேர்வதற்குள் நடுச்சாமமாகிவிட்டது. நாச்சியப்பர் அவர்களது வரவு நோக்கி விழித்திருந்தார்.

“நாச்சியப்பரே! வீணாக நாங்கள் அலைந்து திரும்பியதுதான் கண்ட

பலன். மலையடிவாரத்துக்குச் சென்றால், அங்கே காட்டுப் பன்றிகளை வேட்டையாடித் திரியும் வேடுவர்களைத்தான் கண்டோம், வேறு யாருமே இல்லை’’ என்றார் வல்லவரையர்.

இளங்கோ வல்லவரையரைத் திரும்பிப் பார்த்தான். கண்ணால் கண்டது ஒன்று; காதால் கேட்பது வேறொன்று!

‘நீ பேசாமல் இரு’ என்று அவனுக்குச் சைகை செய்தார் வல்லவரையர்.

மறுநாள் கொடும்பாளூர் செல்லும் வழியில் அவனுக்குக் காரணத்தை விளக்கினார் வந்தியத் தேவர்.

“ஏற்கனவே நாச்சியப்பர் கலங்கிப் போயிருக்கிறார். அவரை மேலும் கலக்கிவிடக் கூடாது. அத்துடன், பகைவர்கள் அங்கு கூடிறயிருக்கும் காரணத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நிலைமையைக் கவனித்தால் இன்னும் பலர் இங்கே கூடாலாம் என்று தெரிகிறது. கூடுகிறவரைக்கும் ஒரே இடத்தில் கூடினால் நமக்கு நல்லதல்லவா? ஒற்றர்களை அனுப்பி உளவறியச் செய்வோம். ஊர்க்காவல் படையைப் பெருக்குவோம். தக்க சமயம் வரும் வரையில் காத்திருந்து தக்கபடி செயல்புரிய வேண்டும்.’’

சோழபுரப் புது நகரத்தைக் கண்டபோது இளங்கோவின் உள்ளம் பெருமை உணர்ச்சியால் நிரம்பியிருந்தது. தஞ்சை நகர எல்லையில் அவன் ரோகிணியின் நினைவால் தன்னை மறந்திருந்தான். திருவெண்ணெய்க்கு வந்தவுடன் அவனைக் கடமை நினைவுகள் பற்றிக் கொண்டுவிட்டன. 

இளங்கோ கடாரத்துக்குச் செல்லத் துடித்தான். சமணர் மலைக்குன்றை அப்படியே பெயர்த்தெடுத்து, அங்கு கூடியிருந்த பகைவர்கள் கூட்டத்தின் மீது வீச விரும்பினான். வங்கத்துக்குப் போய், போரில் கலந்து கொள்ள வேண்டு மென்றும் அவனுக்குத் தோன்றியது.

கொடும்பாளூர் அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அவனுக்கு அன்னை ஆதித்த பிராட்டியாரைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. ஓடோடிச் சென்று அந்தப்புரத்துக்குள் நுழைந்தான். அங்கே வழக்கத்துக்கு அதிகமான கலகலப்புக் காணப்பட்டது. ஏவலாட்களும் பணிப்பெண்களும் மிகுந்த சுறுசுறுப்போடு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.

“அம்மா!’’ என்று தாவிக் கொண்டு சென்றவன் அன்னையாருக்கு அருகில் ஒரு வண்ணக்கிளி நிற்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். நின்று கொண்டிருந்தவள் ரோகணத்துப் பொற்கொடி!

ஆதித்தபிராட்டியாருக்கு அடுத்தாற்போற் மகிந்தரின் மகிக்ஷி அமர்ந்திருந்தார். இளங்கோவைக் கண்ட ரோகிணி நாணித் தலை கவிழ்ந்து மின்னலென அந்த இடத்தை விட்டு மறைந்தாள். எதிர்பாராத ஆனந்தத் திகைப்பிலிருந்து மீள்வதற்குள் சில விநாடிகள் சென்று விட்டன. “எப்போது வந்தீர்கள்?’’ என்று மகிக்ஷியை வரவேற்றான் இளங்கோ.

“என்றுமில்லாதபடி உன் தந்தையார் இவர்களை இங்கே விருந்துக்கழைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் வந்தவர்களுக்குத் தங்கியிருந்து உபசரிக்க நேரமில்லை. நேற்றுத் தான் தஞ்சைக்குத் திரும்பினார்கள், ஆமாம் நீ சோழபுரத்துக்குச் சென்றிருந்தாயாமே?’’

அதற்குள் வல்லவரையரும் அங்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத விதமாகத் தாங்கள் அங்கு வந்ததைக் கூறி “ஆமாம், பெரிய வேளார் என்னிடம் இவர்களை அழைக்கப் போவதைச் சொல்லவில்லையே! மகிந்தர் வந்திருக்கிறாரா என்ன? எங்கே அவர்?’’ என்று கேட்டார். 

மகிந்தர் வந்த பிறகு சுவை நிறைந்த பகல் உணவு முடிந்தது. சிறுபொழுது களைப்பாறிவிட்டு இளங்கோவை அழைத்து, “இரண்டு தினங்கள் நீ இங்கு தங்கியிருந்து விட்டு இவர்களுடன் தஞ்சைக்குப் புறப்பட்டு வா! நான் இப்போதே கிளம்புகிறேன்’’ என்றார் வல்லவரையர்.

“நானும் வருகிறேன்’’ என்று அரைமனதோடு கூறினான் இளங்கோ.

“உன்னுடைய அரண்மனைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். நீ உடனிருந்து அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும். மேலும் நீ வருவதாய்ச் சொல்வதை நான் நம்பவும் முடியாது! இப்போதைக்கு இங்கே உல்லாசமாக இருந்து விட்டு வா. பின்னால் உனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.

வல்லவரையர் தஞ்சைக்குக் கிளம்பிவிட்டார். அவருடைய பேரன்பு அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. வேண்டும் என்றே அவர் தனக்கு விடுதலை அளித்துச் சென்ற விஷயம் அவனுக்குத் தெரியாததல்ல. ரோகிணியை தனக்குப் பரிகாசப் பெற்றுத் தருவதாக வாக்களித்தவரல்லவா அவர்?

ரோகிணியைத் தனியாகச் சந்தித்து முதன் முதலில் இந்த நற்செய்தியைக் கூற நினைத்தான் இளங்கோ. கொடும்பாளூர் அரண்மனையில் தனிமை கிடைக்கவே கிடைக்காது போல் தோன்றியது.

தஞ்சை அரண்மனையைப் போன்று அவ்வளவு பெரியதல்ல இது. அங்கே ரோகிணிக்கென்று தனி மாளிகை இருந்தது. அரண்மனைப் பூங்காவும் அங்கே மிகப் பெரியது. கொடும்பாளூர்ப் பூங்காவிலே காணுமிடமெல்லாம் பணியாட்கள் நிறைந்திருந்தார்கள். அந்தப்புரத்திலிருந்து ரோகிணி தலை நீட்டும் சமயம் பார்த்திருந்து, அவளை மெல்ல அழைத்தான் இளங்கோ. நாணத்துடன் ஒரு கணம் போராடிவிட்டு, பின்னர் மெதுவாக அவனருகில் வந்தாள்.

‘எங்கள் அரண்மனையைச் சுற்றிப் பார்த்ததில்லையே நீ! வா, பார்த்துவிட்டுத் திரும்பலாம்.’’

அரண்மனைக்கு உள்ளே பல கூடங்களை அவர்கள் பார்த்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் அன்போடு பார்த்துக் கொள்ளவோ ஒருவரோடொருவர் அந்தரங்கமாகப் பேசிக் கொள்ளவோ முடியவில்லை. எங்குமே கோலாகலமான சுறுசுறுப்பு நிறைந்திருந்தது.

கடைசியாக ஒரு மூலையில் உள்ள பெரிய அறையைத் திறந்தான் இளங்கோ. ரோகிணியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அவனது தந்தையார் தனித்திருந்து ஆலோசனை செய்யும் கூடம் அது. பெரிய கட்டிலும் வேலைப்பாடுகள் நிறைந்த ஆசனங்களும் அங்கு காணப்பட்டன.

மேற்குப்புறச் சுவர் ஓரமாக ஒரு சிலை நின்று கொண்டிருந்தது. பார்ப்பதற்குப் பயங்கரமான சிலை. ஒரு வீரனின் நெடிய உருவம். ரோகிணி அதையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இவர்தான் பூதி விக்கிரம கேசரி. என் பெரிய தாத்தா. இங்குள்ள மூவர் கோயில், ஐவர் கோயில் எல்லாவற்றையும் எழுப்பியவர். இவருடைய வீரச் செயல்கள் தெற்கே உங்கள் நாடு வரையிலும், வடக்கே காஞ்சி வரையிலும் பரவியிருந்தன. சக்கரவர்த்திகளின் தந்தையார் இராஜராஜ சோழர் இளைஞராக இருந்த காலத்தில், அவரது தந்தையார் சுந்தர சோழருக்கு இவர்தாம் வலது கரம் போன்று விளங்கினார்.’’

இப்படிக் கூறியவாறே ரோகிணியை மெல்லப் பற்றி அந்தச் சிலைக்குப் பின்புறம் தள்ளினான் இளங்கோ. தானும் உடன் வந்தான். திடீரென்று

ரோகிணியின் கண்கள் இருண்டு கொண்டு வந்தன. அருகில் இளங்கோ வந்ததால் அவள் வாய்விட்டுக் கத்தவில்லை.

எல்லாம் சில விநாடிகளுக்குத்தான். கண்கள் நன்றாக இருளுக்குப் பழகியவுடன் அவர்கள் நிலவறைப் படிகளில் இறங்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தாள்!

“இளவரசே! இதெல்லாம் என்ன?’’

“நீதான் பார்த்துக்கொண்டு பின்னோடு வருகிறாயே!’’

கண்களை அகல விழித்துக் கொண்டு அவன் தோள் மீது சாய்ந்தவாறே நடந்து வந்தாள் ரோகிணி. அவளுக்கு அச்சமாகவும் இருந்தது; ஆனந்தமாகவும் இருந்தது. ஏதேதோ சிற்பங்கள் இருபுறங்களிலும் தெரிவது போல் தோன்றின. கரத்தை நீட்டித் தொட்டுப் பார்க்க முயன்றாள். அச்சம் அகன்றபாடில்லை.

“இங்கு எதற்காக என்னை அழைத்து வந்து அச்சுறுத்துகிறீர்கள்?’’

“தனிமை, ரோகிணி தனிமை!’’ என்று அவள் செவிகளில் கூறினான் இளங்கோ.

அவள் நாணித் தலை கவிழ்ந்ததையோ, அவள் முகம் செஞ்சாந்தின் நிறம் பெற்றதையோ அவன் கவனிக்கவில்லை. அடிமேல் அடிவைத்து அவர்கள் ஊர்ந்து சென்றார்கள். ரோகிணியின் கூந்தலில் நிறைந்திருந்த மலர் மணம் இளங்கோவை என்னவோ செய்தது.“உன்னிடம் மிகமிக முக்கியமான ஒரு செய்தி சொல்லப் போகிறேன்’’ என்றான் இளங்கோ.

அவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த ரோகிணிக்கு அதற்குமேல் ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. முகத்தை உயர்த்தி அவன் விழிகளைத் தேடினாள்.

அதற்குள் ஏதோ படபடவென்று சத்தம் கேட்டது. ராட்சஷ வௌவால் ஒன்று அவர்கள் தலைக்கு நேரே மோதி விழுவதுபோல் சிறகடித்துப் பறந்து சென்றது. ரோகிணி அப்படியே உணர்விழந்து அவனது நெஞ்சத்தில் சாய்ந்து விட்டாள். 

ஒரே ஒரு கணம் இளங்கோ கூடத் திகைத்துப் போனான். பிறகு வௌவாலைக் கண்டவுடன் அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதை தன் மனமார வாழ்த்தினான் இளங்கோ. பயத்தால் அவன் மீது துவண்டு விழுந்த பூங்கொடி, இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. 

கைலயங்கிரியை அசைத்ததற்காக இராவணனைத் தன் மனதார ஒரு கணம் வாழ்த்தினாராம் சிவபெருமான். உமாதேவி பயத்தினால் அவரைத் தழுவிக் கொண்டதற்காக அவரிடமிருந்து பிறந்த வாழ்த்து அது. அதே நிலையில் தான் இப்போது இளங்கோவும் இருந்தான். சற்றுநேரம் சென்றது. ரோகிணி மெல்லச் சுய உணர்வு பெற்றாள். இந்த நேரத்தில் நிலவறையின் ஓரத்தில் ஏதோ ஒரு நிழலுருவம் தெரியவே, இளங்கோ தன் உடைவாளைப் பற்றினான்.

தொடரும்

Comments