Saturday, February 16, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 28. விவேகம் விளக்கிய முகம்

பாகம் 3 ,  28. விவேகம் விளக்கிய முகம் தேடிக் கிடைக்காத தனிமை இன்பத்தை ரோகிணியுடன்
நாடிக்கொண்டிருந்த இளங்கோவுக்கு, நிலவறைக்குள்ளே மற்றொரு நிழலுருவம்
புகுந்தது, கடுஞ்சினத்தைக் கொடுத்தது, விழிகள் வேல்முனையாக உருமாறித்
திரும்பின. யார் இந்தச் சமயத்தில் இங்கே வருவது! நிலவறையின் வழி
அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

தன்னைத் தழுவி நின்ற ரோகிணியைச் சரேலென்று உதறித்
தள்ளிவிட்டு, உருவத்தை நோக்கிப் பாய்ந்தான் இளங்கோ. ரோகிணி
வெலவெலத்துப் போனாள். இருளில் எதையும் அவளால் இனம் கண்டு
கொள்ள முடியவில்லை. மறுகணத்தில் அந்த உருவத்தின் பிடரியில் இளங்கோவின் இரும்புக்கரம் விழுந்தது. அது தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றதே தவிர, இளங்கோவை எதிர்க்கத் துணியவில்லை. அதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான். இருளுக்குப் பழகியிருந்த ரோகிணியின் கண்கள் கூர்ந்து நோக்கின.

“இளவரசே! விட்டுவிடுங்கள்! விட்டுவிடுங்கள்!’’ என்று பதறினாள்
ரோகிணி. “என் தந்தையார் இளவரசே! தெரியவில்லையா உங்களுக்கு!’’
என்று கதறினாள்.

இளங்கோவின் பிடி நழுவியது. வெட்கிப்போய்த் தலை குனிந்தான்.
தன்னுடைய செய்கைக்காக மட்டிலும் அவன் வருந்தவில்லை. அவரது
செய்கைக்காகவும் இரங்கினான்.

“மன்னித்து விடுங்கள், அரசே! தங்களை நான் இந்த இடத்தில் சிறிதும்
எதிர் பார்க்கவில்லை. தவறு நேர்ந்து விட்டது.’’

“தவறுதான்! குழந்தைகளின் தனிமையில் நான் குறுக்கிட்டது தவறுதான்’’
என்று, ஏதுமே நடக்காததுபோல் கூறினார் மகிந்தர். தமது செய்கைக்கும்
அவரே விளக்கம் கூற முற்பட்டார்.

“அரண்மனையின் அழகைப் பார்த்துக்கொண்டே வந்தபோது, உங்கள்
இருவரையும் கண்டேன். நான் அருகில் வருவதற்குள் நீங்கள் இருவரும்
மாயமாய் மறைந்து விடவே என்னால் வியப்பை அடக்க முடியவில்லை.
அந்த அதிசயத்தைக் காணும் ஆவலால் தேடிப் பார்த்தேன்.
வேறொன்றுமில்லை.’’

வந்தவர் வந்த வழியே திரும்பிச் செல்வார் என்று நினைத்தான்
இளங்கோ.

அவர் திரும்பாதிருக்கவே, “வாருங்கள், இந்த வழி அந்தப்புரத்துக்குப்
பின்புறமுள்ள சிறுபூங்காவுக்குச் செல்கிறது, அமைதியாகப் பொழுது
போக்கலாம்’’ என்றான் இளங்கோ.

இப்படிக் கூறிவிட்டு, அவன் மகிந்தரின் முகத்தை நோக்கவே, அதில்
ஏமாற்றம் படர்ந்தது.

“அப்படியானால் இது கோட்டைக்கு வெளியே செல்லும் சுரங்கப்
பாதையில்லையா?’’ என்று கேட்டார் மகிந்தர்.

“சுரங்க வாயிலே கிடையாது இந்த அரண்மனைக்கு! அந்தப்புரத்தில்
இருப்பவர்கள் தனிமையாகச் சென்று வருவதற்கான வழி இது. யாரும்
இப்போது இந்த வழியாக வருவதில்லை. வௌவால்களின் வாசத்தைப்
பார்த்தீர்களா?’’

“அப்படியா?’’ என்று கேட்டுக்கொண்டே அசையாமல் நின்றார் மகிந்தர்.
விடைபெற்றுக் கொள்பவராகத் தோன்றவில்லை.

இளங்கோ சிறிது யோசனை செய்துவிட்டு, அவர்களை அழைத்துக்
கொண்டு முன்னால் நடந்தான். படிகள் தட்டுப்பட்டன. மெல்லச்
சுவர்ப்புறத்தே தடவிப் பார்த்து ஒரு கதவைத் திறந்தான். ஒளியும் காற்றும்
ஒன்றாக உள்ளே புகுந்தன. வெளியில் ஓர் அற்புத உலகம் கண்களுக்குத்
தெரிந்தது. சட்டெனப் பறந்து போய் அந்த சிங்கார உலகத்தில் சிறகடித்துத்
திரிந்தாள் ரோகிணி.

மல்லிகையின் மணம் அந்தப் பூங்காவில் மண்டிக் கிடந்தது.
சின்னஞ்சிறு பொய்கை போன்றதோர் நீர்த்தொட்டி பளிங்கு நீரால் வழிந்தது.
அதைச் சுற்றிலுந்தான் எத்தனை சிற்ப வேலைப்பாடுகள்!

அந்த அழகு உலகத்தைக் கண்டவுடன் உற்சாகம் குன்றிவிட்டது
மகிந்தருக்கு. நிலவறை வழியில் நெடுந்தொலைவு நடந்து கோட்டைக்கு
வெளிப்புறமுள்ள மறு வாயிலைக் காணமுடியும் என்று நம்பிக்
கொண்டிருந்தவர் அவர். வேண்டுமென்றே இளங்கோ திசைமாற்றி
விடுகிறானா? அல்லது மெய்யாகவே சுரங்கப்பாதை இதோடு தான் முடிந்து
போய் விடுகிறதா?

“சரி, நீங்கள் இருந்து பொழுது போக்கிவிட்டு வாருங்கள், நான்
திரும்பிச் செல்கிறேன்’’ என்றார் மகிந்தர்.

பத்திரமாக அவருடன் சென்று வந்த வழியாகவே அவரைத் திருப்பி
அனுப்பி வைத்தான். அவசரத்தில் தாழிட மறந்த கூடத்தின் கதவை நன்றாகத் தாழிட்டான். பிறகு ஓட்டமும் நடையுமாக
ரோகிணியைக் காண்பதற்குக் குதித்து வந்தான்.

பூங்காவின் வாயில் மண்டபத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தபோது,
ரோகிணியை அங்கு காணவில்லை; உற்றுக் கவனித்தான்.

நீர்த்தொட்டிக்குள்ளிருந்து நீர்க்குமிழ்கள் பூத்துச் சொரிந்தன. அடுத்தாற்
போல் அழகியதோர் பெருந்தாமரை அதற்குள்ளிருந்து முளைத்தெழுந்தது.
ரோகிணி தனது அடர்ந்த கருங்கூந்தலை முகத்திலிருந்து ஒதுக்கி விட்டுக்
கொண்டே நீருக்கு மேல் மெல்ல எட்டிப் பார்த்தாள். கார்மேகத்திரள் விலகிக்
கடலோர விளிம்பிலிருந்து முழுமதி உதயமாகிறதா?

முழுமதி என்ன? முழு நிலவில் கடைந்தெடுத்த முத்தொளிச்
சிற்பமென்ன, ரோகிணியின் மெல்லுடல் நீரிலிருந்து மேலே வந்தது. இளங்கோ
இரும்புச் சிலையானான்.

சிலைக்கு உயிர் திரும்பி அது உணர்வு பெறுவதற்கு முன்னால் சிற்பமே
தனது பழைய உடையலங்காரத்துடன் அவன் அருகில் வந்தது. இருவரும்
அந்த வாயில் மண்டபத்தின் விளிம்பில் வந்து அமர்ந்தார்கள்.

“தண்ணீரைக் காணும்போதெல்லாம் எனக்குக் கெண்டை மீனாகப்
பிறக்கவில்லையே என்று ஏக்கம் வரும். எங்கள் நாட்டிலுள்ள பாடும்
மீன்களைப் பற்றி நீங்கள் கேள்வியுற்றிருக்கிறீர்களா?’’ என்று ரோகிணி
குழந்தைபோல் அவனிடம் பேசினாள்.

“பாடும் மீன் என்ன? ஆடி ஓடிப் பேசும் மீனே என் அருகில்
இருக்கிறதே!’’ என்று சிரித்தான் இளங்கோ. பிறகு “உன் விழிகளே எனக்கு
மீன்கள்; உன் பேச்சே எனக்கு இன்னிசை; உனது நாட்டிலுள்ள இயற்கை
வளத்தையெல்லாம் நான் உன்னிடமே காணுகிறேன் ரோகிணி!’’ என்றான்.

நீண்ட பெருமூச்சு விட்டாள் ரோகிணி. இத்தகைய பாக்கியத்தை அவள்
இதற்கு முன்பு அனுபவித்ததில்லை. இளங்கோ அவளிடம் புகழ்மொழிகள் கூறி
அவளை இன்புறச் செய்வது மிகமிக அபூர்வம்.


“ஆமாம்! ஏதோ என்னிடம் கூற விரும்புவதாய்க் குறிப்பிட்டீர்களே?’’
என்று ஆவலுடன் அவனை நோக்கினாள்.

“அதற்குள் உன் தந்தையார் வந்து குறுக்கிட்டு விட்டார், ஆனால்
அவருடைய நோக்கமும் நிறைவேறவில்லை.’’

“நோக்கமா?’’

“வேறென்ன? இந்த அரண்மனையின் சுரங்க வழிகளைத் தெரிந்து
கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவருக்கு. அவ்வளவு எளிதாக அவர்
என்னை ஏமாற்றி விட முடியாது, ரோகிணி! அவரைப் போல எனக்கு
அவ்வளவு முதிர்ந்த வயது ஆகா விட்டாலும் நானும் ஆண் மகனல்லவா?’’

ஆண்மக்கள் எவ்வளவு தான் விவேகமுடையவர்களாக இருந்தாலும்
அவர்களும் சிற்சில இடங்களில் ஏமாறத்தான் செய்கிறார்கள். அதிலும் பெண்
மக்கள் முன்னிலையில் அவர்களுடைய விவேகம் அவர்களிடமிருந்து
விடைபெற்றுக் கொள்வது இயல்பான நிகழ்ச்சி. வீரனாக இருந்தாலும்,
விவேகியாக இருந்தாலும் இளங்கோ ஆண் மகன். தன் காதலியிடம் தன்னைப்
பறிகொடுத்து மகிழ்ந்திருக்கும் இளைஞன்.

ரோகிணி அவனிடம் கேட்காதபோதே, அவனாக அவளிடம் பல
ரகசியங்களைக் கூறத் தொடங்கினான்.

“ரோகிணி! இந்தச் சுரங்க வாயில் இத்துடன் முடிந்து போய்
விடவில்லை. இது நேரே எங்கு போகிறது தெரியுமா உனக்கு? மூவர்
கோயிலில் முன்பொரு நாள் நடைபெற்ற நடனம் நினைவிருக்கிறதா!’’ என்று
கேட்டான் இளங்கோ.

“எப்படி அது என் நினைவை விட்டு அகலும்?’’ என்று கேட்டாள்
ரோகிணி. “திருமயில் குன்றத்திலிருந்து நாம் திரும்பிய பிறகு, கோயிலில்
மங்கையொருத்தி மயில் போல் ஆடிய ஆட்டத்தை நான் மறக்கவே
மாட்டேன்!’’

“ஆமாம்! அவள் அங்கே எம்பெருமானை நினைத்துக் கொண்டு
ஆடினாள். நீயோ அவள் ஆட்டத்தைக் கண்டு விட்டு மெய்சிலிர்த்துப்
போனாய். நெக்கு நெக்குருகி, உள்ளமெல்லாம் தேன் பாகாய் உயிரெல்லாம் பறி கொடுத்தாய் நினைவிருக்கிறதா, ரோகிணி?’’

ரோகிணியின் கண்களில் பனி படர்ந்தது. மறுமொழி கூறுவதற்கு
இயலாதவளாக இளங்கோவின் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.

“அந்த மூவர் கோயிலுக்குப் பின்புறமுள்ள பிரகார ஆலயம் ஒன்றுதான்
இதன் வெளிவாயில். நாம் இங்கிருந்தே கோயிலுக்குச் சென்று திரும்பலாம்.
ஆனால் கோயிலுக்குச் செல்வதற்காக ஏற்பட்ட வழியில்லை இது.’’

“பிறகு?’’ என்றாள் ரோகிணி.

“போர்க்காலங்களில் பயன்படும் புறவாயில்.’’

“உண்மையைச் சொல்கிறேன், ரோகணத்து அரண்மனையில்
இப்படியெல்லாம் சுரங்க வழிகளே கிடையாது. அரண்மனை மதில்களில்
உள்ள சில ரகசியக் கதவுகளைத் தவிர இது போன்ற அதிசயங்கள் அங்கே
இல்லை. நீங்கள் மிகவும் திறமைசாலிகள்’’ என்றாள்.

“உங்களுடைய நாட்டில் அரசர்களாக இருப்பதும் அவ்வளவு கடினமல்ல,
மனிதர்களாக வாழ்வதும் அவ்வளவு துன்பமல்ல’’ என்றான் இளங்கோ.

ரோகிணி துணுக்குற்றாள். “ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?’’

“அரசர்கள் தங்களுடைய சுகபோகங்களில் மூழ்கியிருந்தாலும்
சூழ்ந்திருக்கும் கடல் அவர்களைக் காப்பாற்றுகிறது. காடுகள் காவல்
புரிகின்றன. மலைகள் மதில்களாக இருக்கின்றன. இயற்கையின் செல்வக்
குழந்தைகள் நீங்கள் - செல்லக் குழந்தைகள்!’’

நகைத்துவிட்டு அவன் மேலே கூறினான்: “மக்களும் கொடுத்து
வைத்தவர்கள்தாம். வானம் மழை பொழிகிறது. பூமி தானாக விளைகிறது.
எங்கும் ஆறுகள், அருவிகள், ஓடைகள். எங்களுடைய நாட்டில் எங்களுக்கு
இயற்கை மிஞ்சிய வளத்தைக் கொடுக்கவுமில்லை; அது எங்களைக் காவல் காக்கவுமில்லை. நாங்களே கடவுளின் கருணையையும் எங்கள் வலிமையையும் நம்பி வாழ வேண்டியிருக்கிறது.’’

“மெய்தான் இளவரசே! காவிரி பாயும் சோழ நாடாவது ஒரு வகையில்
தேவலாம். உங்கள் கொடும்பாளூர்க்கோனாடு பாலை நிலம் போலல்லவா
இருக்கிறது!’’

“பாலை நிலத்தில்தான் நாங்கள் பால் பெருகச் செய்ய வேண்டும். திறந்த
வெளி எல்லைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள மறைந்த
வெளிகளுக்குள்ளெல்லாம் நாங்கள் நிலவறைகள் அமைக்க வேண்டும்.
மலைகளைப் போல் மதிற்கோட்டைகள் எழுப்பவேண்டும்.’’

“இன்றைக்கு நாம் வந்தோமே இந்தச் சுரங்கப்பாதை, என்னை பிரமிக்க
வைத்துவிட்டது. இதற்குள்ளேகூட உங்கள் சிற்பிகள் தங்கள் கைத்திறனைக்
காட்டியிருக்கிறார்களே!’’

அவளுடைய வியப்பைக் கண்டு அலட்சியமாக நகைத்தான் இளங்கோ.

“கொடும்பாளூர் மிகப் பழைய நகரம். இந்தப் பாதையெல்லாம்
என்னுடைய பெரிய பாட்டனார் காலத்துக்கு முன்பே அமைக்கப்பட்ட
பாதைகள். இப்போது எங்கள் சக்கரவர்த்திகள் அமைத்திருக்கும் புதிய
நகரத்தை நீ வந்து உன் கண்களால் காணவேண்டும். கண் படைத்தவர் தங்கள்
வாழ்நாளில் ஒரு முறையாவது காண வேண்டிய நகரம் அது. அதன்
கோயிலையும் கோயிலைச் சுற்றியுள்ள சிற்பங்களையும் காணாதவர்கள்
குருடர்களுக்குச் சமமானவர்கள்தான்.

“ஆமாம். ஏரிக்கு மையத்தில் இருக்கும் வசந்த மண்டபம் ஒன்றே
போதும், நம்மைப் போன்றவர்களுக்கு. காலமெல்லாம் நம்மிருவரையும்
யாராவது அங்கு கொண்டுபோய்ச் சிறை வைக்க மாட்டார்களா என்று
ஏங்குகிறேன்.’’

“அப்படியானால் மறவாது என்னையும் நீங்கள் அங்கு அழைத்துக்
கொண்டு போக வேண்டும்’’ என்றாள் ரோகிணி.


“அதுதான் முடியாது! அழகு நிறைந்த அந்த இடத்தில்தான் அபாயமும்
இருக்கிறது. சக்கரவர்த்திகள் ஒருவரைத் தவிர வேறு யாருக்குமே அங்கு
செல்ல அநுமதியில்லை.’’

ரோகிணியின் முகம் வாட்டமுற்றது.

“இதையெல்லாம் கூறி என் ஆவலை எதற்காக வீணே கிளறி
விடுகிறீர்கள்? போக முடியாத இடத்தைப் பற்றி ஏன் என்னிடம்
பேசுகிறீர்கள்?’’ என்று சிணுங்கினாள்.

“கூறியது தவறுதான்; ரோகிணி! அது மெய்யாக வசந்த மண்டபமில்லை;
வசந்த மண்டபம் என்ற பெயரில் உள்ள காவல் மண்டபம். ஏரிக்கு அடியில்
செல்லும் சுரங்க வழிக்கு அந்த மண்டபத் தூண் வழியாகத்தான் காற்று
வருகிறது. அந்தத் தூண் பகைவர்களின் கண்களில் படாமலிருப்பதற்காக
அப்படியொரு மண்டபம் எழுப்பியிருக்கிறார்கள்.’’

ரோகிணி வியப்போடு விழித்தாள்.

“காற்றுக்காக உள்ள தூண் வழியே கடல்போன்ற ஏரித் தண்ணீர்
பாய்ந்தால் நகரத்தின் கதி என்ன ஆவது? அதற்காகத்தான் மண்டபத்தை
அவ்வளவு கட்டுக்காவலுடன் வைத்திருக்கிறார்கள்’’ என்றான் இளங்கோ.

“போகட்டும்! நாம் அவ்வளவு அபாயம் நிறைந்த இடத்துக்குச் செல்லவே
வேண்டாம்’’ எனறான் ரோகிணி.

அப்போது, தூரத்தில் நேர் எதிர்ப்புறத்து மாடத்தில் ஏதோ சத்தம்
கேட்டது. இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். சாளரத்தின் கதவு திறக்கப்பட்ட
சத்தம் அது. அதைத் தொடர்ந்து இளங்கோவின் அன்னை ஆதித்த
பிராட்டியாரின் உருவமும் தெரிந்தது.

அவர்கள் அங்கே கவனித்த வேளையில், பூங்காவின் மதிலுக்கு
வெளியில் கேட்ட காலடி ஓசை அவர்களை எட்டவில்லை.

“வாருங்கள்! உங்கள் அன்னையார் பார்த்து விட்டார்கள்’’ என்று
நாணத்துடன் எழுந்தாள் ரோகிணி. எழுந்தவள் சுரங்க வாயிலுக்குள்
நுழைந்தாள். அவனும் பின்பற்றி ஓடிவந்தான். பின்னர் ரோகிணி எதையோ நினைத்துக்கொண்டு “ஆமாம், கூறவந்த செய்தியை மறந்துவிட்டு, வேறு ஏதேதோ கூறிவிட்டீர்களே!’’ என்றாள்.“முக்கியமான செய்தி என்றீர்களே, கூறுங்கள்!’’

“உன்னைக் கண்டவுடன் எதை உன்னிடம் பேச விரும்புகிறேனோ
அதையெல்லாம் மறந்து விடுகிறேன். உன்னுடைய முகத்தில் என் நினைவைத்
தடுமாறச் செய்யும் ஏதோ ஒரு மந்திர சக்தி மறைந்திருக்கிறது.
இல்லாவிட்டால் அந்தரங்கச் செய்திகளையெல்லாம் உன்னிடம் அம்பல
மாக்கிவிட்டு, கூற வந்ததை மட்டிலும் மறந்துபோய் விடுவேனோ?’’

“இப்போதாவது மறக்காது சொல்லுங்கள்’’ என்றாள் ரோகிணி.

“வேண்டாம். இந்த அவசரத்தில் சொல்லக்கூடிய செய்தி அல்ல அது.
அதைச் சொல்ல நினைத்தபோது உன் தந்தையார் குறுக்கிட்டுவிட்டார்.
அதனால் நாளைக்கு அவசியம் அதைப்பற்றிச் சொல்கிறேன்.’’

“அப்படியானால் நாளைக்கு என்னைத் திருமயில் குன்றத்துக்கு
அழைத்துச் செல்கின்றீர்களா? அங்கு யாருமே வரமாட்டார்கள்.’’

“ஆம், அந்தச் செய்திக்கேற்ற இடம் அதுதான்!’’ என்றான் இளங்கோ.
அவன் குரலில் ஒலித்த குதூகலம் ரோகிணியின் விழிகளில் புத்தொளி
உமிழச் செய்தது.


தொடரும்

No comments:

Post a Comment