வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 29.





இளங்கோவின் கூற்றைச் சிறிதுகூட நம்பாத மகிந்தர் அவனால் வெளியே திருப்பி அனுப்பப்பெற்ற பின்னர் ஒரு கணம் நடந்துகொண்டே யோசனை செய்தார். சுரங்க வழிக்கு, எப்படியும் கோட்டை மதிலுக்கு அப்பால் ஒரு வாயில் இருக்குமென்பதில் அவருக்குச் சந்தேகமே கிடையாது.

உள்வாயிலைத் தெரிந்து கொண்டாயிற்று. ஆனால் அதனால் பலன் ஒன்றுமில்லை. வெளியிலிருந்து வேற்று மனிதர்கள் வருவதற்கு வழி தெரிந்தாக வேண்டும். வருபவர்கள் ஓரிருவராக இருந்தால், காவலர்களின் கண்ணெதிரேகூட உருமாறி வந்து விடலாம். கூட்டம் கூட்டமாக வரவேண்டிய அவசியம் ஏற்பட்டால்...? ஏற்படாமலா போகும்?

ஏற்கனவே மகிந்தர் தம்மை சிற்பக்கலை ரசிகர் என்று சொல்லிக்கொணடிருந்தார். ஆதலால், அரண்மனைச் சிற்பங்களைக் கண்டு அநுபவிக்கும் ‘காரணம்’ அவருக்குக் கை கொடுத்தது. எங்கெங்கோ சுற்றிப் பார்த்துவிட்டு, மதில்சுவரின் ஒரு மூலைக்கு வந்தார். பேச்சுக் குரல்கள் கேட்டன. உற்றுக் கேட்டார். தெளிவாகச் சொற்கள் காதில் விழவில்லை. ஆனால் பேசுபவர்கள் ரோகிணியும் இளங்கோவும் என்பதைக் கண்டு கொண்டார் அவர். நீர்த் தொட்டியை அடுத்திருந்த சுவருக்குப் பின்புறமாகவே அவர் வந்து நிற்பது, அப்போதுதான் தெரிந்தது. இவ்வளவு தூரம் அலைந்த பிறகும் அதே இடத்துக்குத் தானா வரவேண்டும்?

சலிப்போடு அவர் திரும்பப் போகும் சமயத்தில் இளங்கோவின் வாயிலிருந்து சோழபுரப் புது நகரத்தைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. உருவமற்ற சொற்களை இணைத்து அவரால் ஒன்றும் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் ரோகிணியிடம் இளங்கோ ஏதோ முக்கியமான செய்திகளைக் கூறிக்கொண்டிருக்கிறான் என்ற வரையில் தெரிந்தது.

அமைச்சர் கீர்த்தியின் திட்டத்தை எண்ணி அவர் பூரிப்படைந்தார். தம்மிடம் இரும்பைப்போல் நடந்து கொண்டவன், தமது குமாரியிடம் உருகிக் குழைவது அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

குரல்களைத்தான் அவரால் சிறிதளவு கேட்க முடிந்தது. உருவங்களைக் காண முடியவில்லை. அவர் பேசி முடியும் வரையில் நின்று விட்டு மேலே சாளரக் கதவுகள் திறக்கப்பட்டதும், குரல்கள் மறைந்ததையும் கவனித்தார். அவர்கள் திரும்பிவிட்டார்களென்று தெரிந்தது. தாமும் திரும்பினார். சரசரவென்று ஏதோ சத்தம் கேட்டது. தொட்டிக்குச் செல்லும் நீர்த் தாரைக்குள்ளிருந்து ஒருவன் நனைந்துகொண்டே வெளியில் வந்தான். வந்தவன் வீரமல்லன்.

“நீ எப்படி இங்கு வந்தாய்?’’ என்று திகைப்போடு கேட்டார் மகிந்தர்.

வீரமல்லனின் விழிகள் கோவைக் கனிகளாய்ப் பழுத்திருந்தன. தனது மதிப்புக்குரிய ரோகணத்துக்கு மன்னர் அவர் என்பதையும் மறந்துவிட்டான். அவரை மென்று விழுங்குபவன்போல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான்.

“எப்படியோ வந்தேன்! எப்படி வந்திருந்தால் தங்களுக்கென்ன? தாங்கள் பெரிய வேளாரின் விருந்தினராக அவரது அன்பைத் தேடிக்கொள்வதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்! தங்கள் குமாரரும் நானும் வேட்டைக்கு அஞ்சிய மான்களாக, புகலிடமில்லாமல் மருண்டோடிக் கொண்டிருக்கிறோம்.’’

“மெல்லப் பேசு, நண்பா!’’ என்று அவனைப் புதருக்குள் இழுத்து விட்டார் மகிந்தர்; தாமும் மறைந்தார். “என்னிடம் என்ன கோபம் உனக்கு?’’

“அமைச்சர் கீர்த்தியையும் என்னையும் ஏமாற்றிவிட்டு இங்கே இளவரசியாரின் காதலுக்கு வேலிபோட்டு நிற்கிறீர்கள்! இனி நான் யாரைத்தான் நம்புவது? எதற்காக நம்புவது?

மகிந்தர் வீரமல்லனை அணைத்துக் கொண்டு மெல்ல நகைத்தார். “கண்ணால் கண்டதை வைத்துக்கொண்டு நீ ஆத்திரப்படுகிறாய். அவர்களை அவர்கள் போக்கில் விடுவதென்றால் நான் எதற்காக இங்கு வந்து நிற்கிறேன்? வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழியை உடைத்து விடாதே! காற்று நம் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. கொடும்பாளூர்ச் சுரங்க வாயிலைக் கண்டுபிடிக்கும் நிலையில் இருக்கிறேன்.’’

வீரமல்லன் மிகுந்த வியப்போடு மகிந்தரை நோக்கினான்.

“ஆமாம்! கொடும்பாளூர்க் கோட்டையும் கொடும்பாளூர் இளவரசனும் ஒன்றாகச் சரிந்து விழுந்துவிட்டால், பிறகு ரோகிணிக்கு யார் இருக்கிறார்கள்? சமயம் வந்து கொண்டி ருக்கிறது; ஒரு விநாடிகூடத் தாமதியாமல் ரோகிணியை அவனிடமிருந்து பிரிக்கும் வழி எனக்குத் தெரியும்’’ என்றார்.

மேலும் அவர் கூறிய செய்திகள் பலவும் அவனுடைய கோபத்தை வெகுவாகத் தணித்து உற்சாகமளித்தன.

“அமைச்சர் கீர்த்தி அல்லும்பகலும் அலைந்து திரிந்து தமது திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பிரான் மலைப்பகுதி, திருவெண்ணெயில் குன்றுகள், சித்தன்ன வாயில் குன்று இங்கெல்லாம் நம் வீரர்கள் திரண்டிருக்கிறார்கள்.திருவெண்ணெயில் குன்றுகளைத்தான் நம்முடைய முதலிடமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். சக்கரவர்த்தி திரும்பி வரவில்லையென்று பீதி நிறைந்திருக்கும்போதே ஏதாவது செய்ய வேண்டுமென்கிறார் அமைச்சர்.’’

“வெற்றியோடு திரும்பி விடுவார் என்று தோன்றுகிறதே!’’ என்றார் மகிந்தர். 

“இதுவரை கிடைத்த செய்தியைப் பார்க்கும் போதும் தோல்விக்கு வழியில்லையென்று தோன்றுகிறது.’’

“வெற்றியோடு திரும்பினாலும் கவலையில்லை. வெற்றி விழாக் கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் நமக்குச் சாதகமானவைதாம். சோழபுரப் புது நகரம் பிறப்பதற்கு முன்பே இறந்தொழிய வேண்டும்!இதற்காகத்தான் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.’’

நீண்ட பெருமூச்சு விட்டார் மகிந்தர். “ஒருவேளை நாம் நினைப்பதைவிட எளிதாகவே நமக்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்கலாம்’’ என்றார்.

“எப்படி?’’

“அந்த நகரத்தைப் பற்றிய செய்திகளைத்தான் சற்று முன்பு இளங்கோ ரோகிணியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.’’

“என்ன? தங்களுக்கு என்ன கூறினானென்று தெரியுமா?’’

“தெரியாது!’’

“எனக்கும் அவர்கள் பேசியது கேட்கவில்லை. ஏதோ அவர்கள் தங்கள் ஆசைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்தேன்’’ என்றான் வீரமல்லன். 

“ஆனால், ரோகிணி அதை யாரிடமும் வெளியிடமாட்டாள், துன்பம் அங்கேதான் இருக்கிறது.’’

வீரமல்லன் சிறிது நேரம் ஆழ்ந்து யோசனை செய்தான். பிறகு “தங்கள் பகுதிக் கடமையைத் தாங்கள் எப்படியும் நிறைவேற்றித்தான் தீரவேண்டும். தங்களுக்காகவே பாண்டிய நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களைத் திரட்டியிருக்கிறார் அமைச்சர். சுந்தரபாண்டியரும் மற்றவர்களும் திருவெண்ணெயிலில் இருக்கிறார்கள்’’ என்றான்.

“காசிபன்?’’

“அவரும் அங்குதான் இருக்கிறார்.’’

“வீரமல்லா! காசிபனைக் கண்களைக் காப்பதுபோல் காத்து வா. அமைச்சர் வேற்றிடங்களுக்குச் செல்லும் வேளைகளில் நீதான் அவன் உடனிருக்க வேண்டும்’’ என்றார் மகிந்தர்.

வீரமல்லனின் விழிகள் கூர்மையாகின, மகிந்தரின் விழிகள் கலங்குவதை அவன் கருத்தோடு கவனித்தான்.

“நான் என்னால் முடிந்தவரையில் இளவரசரைக் கண்காணித்துக் கொள்கிறேன். இளவரசியாரிடமிருந்து எப்படியாவது செய்தியை அறிந்து சொல்லவேண்டியது தங்கள் பொறுப்பு. அதைத் தாங்கள் எனக்காகச் செய்யவில்லை. தங்களுக்காகவும் தங்கள் குமாரருக்காகவும் செய்கிறீர்கள்’’ என்றான்.

அதற்குள் அங்கு ஆளரவம் கேட்கவே வீரமல்லன் மெல்ல மறைந்தான்.

“தங்களை மீண்டும் தஞ்சையில் சந்திக்கிறேன், செய்தியுடன் சித்தமாக இருங்கள்!’’

மகிந்தருக்கு வீரமல்லனின் வேண்டுகோள் வேண்டுகோளாக இல்லை!கட்டளையாக ஒலித்தது!

தொடரும் 



Comments