Skip to main content

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 30. காசிபன் மேல் ஆணை!

பாகம் 3 ,  30. காசிபன் மேல் ஆணை! 


நெஞ்சத்தை ஒரு நிலையில் நிறுத்தி, சுற்றுப்புற உலகத்தை மறந்து
தங்களுக்குள் தாங்களே மூழ்கிவிடும் தன்மை பக்தர்களிடம் உண்டு;
காதலர்களிடமும் உண்டு. ரோகிணி இப்போது அந்த நிலையில் தன்னை
மறந்திருந்தாள். எதிரில் வந்து நின்று வியப்போடு அவளைக் கவனித்த கந்துலனின்
மகளுக்குக் காரணம் தெரியவில்லை. பாதி திறந்தும் திறவாமலுமிருந்தன
ரோகிணியின் விழிகள். ‘இளவரசியாரே! தாங்கள் இப்போது எந்த உலகத்தில்
சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்க வேண்டும் போல்
தோன்றியது தோழிக்கு. ஆனால் தயங்கினாள்.

அவளுக்கு விந்தையான ஒரு யோசனை தோன்றியது. தஞ்சையிலிருந்து
உடன் கொண்டு வந்திருந்த கிளிக் கூண்டினருகில் சந்தடி செய்யாமல்
சென்றாள். அதை மெல்லத் திறந்து கிளியைத் தன் தலைவியிடம் பறக்கவிட்டு,
தான் மட்டிலும் தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.

கிளி பறந்து வந்து ரோகிணியின் மடியில் நின்றது. பிறகு அவள்
தோளுக்குத் தாவியது. கன்னத்தை நோக்கி மெல்ல நகர்ந்தது. மாங்கனி என்ற
நினைவு போலும்!

சிந்தை கலைந்து, சிரித்துக்கொண்டே கிளியைத் தன் கரங்களுக்குள்
சிறை செய்தாள் ரோகிணி. அதன் வண்ண விழிகளையே வேடிக்கை
பார்த்தாள். இதுவரையில் அவள் கண்டிராத பேரழகு இன்று அதனிடம்
தெரிந்தது.

“உன்னைப் போலவேதான் நானும் காடுகள் சூழ்ந்த ரோகணத்தில்
பறந்து திரிந்தேன். உன்னைப் போலவேதான் என்னையும் இங்கே சிறை
செய்துகொண்டு வந்தார்கள். இப்போது நானும் உன்னைப் போலவே
பழகிவிட்டேன்! கூண்டைத் திறந்துவிட்டாலும் மீண்டும் நீ பறந்து வந்து
அதற்குள் போய் அமர்ந்து கொள்ளுகிறாயல்லவா? நானும் இப்போது அதே
நிலைக்குத்தான் வந்திருக்கிறேன்.’’

அன்புப் பெருக்கால் கிளியை நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக்
கொண்டாள் ரோகிணி. பட்டுப்போன்ற அதன் இதயத்துக்குள் அவளுடைய
இதயத்தின் எதிரொலி தெரிந்தது.

“இனி என்னுடைய நாடு எது தெரியுமா? ரோகணமல்ல, இந்தக்
கொடும்பாளூர்க் கோனாடுதான். என் வீடும் இதே அரண்மனைதான்! நான்
இங்கு வரும்போது நீயும் என்னோடு வந்து விடுகிறாயா? இளவரசரிடம் கூறி
உனக்கும் ஒரு துணை தேடிவரச் சொல்லட்டுமா?’’

அந்தப் பொல்லாத பசுங்கிளி, தன்னிடமே கிள்ளைமொழி பயிலும்
ரோகிணியின் கொவ்வைக் கனி இதழ்களையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தது. பின்னர் சற்றும் அவள் எதிர்பாராத நேரத்தில் நறுக்கென்று
அவளைக் கொத்திவிட்டது.

“எத்தனை துணிவு உனக்கு!’’ என்று கூறி, சட்டெனக் கிளியைப்
பறக்கவிட்டாள் ரோகிணி. தூணின் மறைவிலிருந்து கந்துலனின் மகள்
மித்திரை கலகலவென்று நகைத்துக் கொண்டே வெளியே வந்தாள்.

“நீயும் இங்குதான் இருக்கிறாயா?’’

“என்ன செய்வது? நான் செய்யாத பாக்கியம் என் கிளிக்குக்
கிடைத்திருக்கிறது? என்னைத் திரும்பிக்கூடப் பாராதிருந்தவர்கள், அதனிடம்
மனம்விட்டுப் பேசுகிறீர்கள்!’ -சிணுங்கிக்கொண்டே வந்து ரோகிணியின்
காலடியில் அமர்ந்தாள் மித்திரை.

ரோகிணி ஒருகணம் மௌனமாக இருந்துவிட்டு, பிறகு அவளிடம்
பேசலானாள்.

“மலைச் சிகரத்தின் உச்சியை நெருங்கும்போது ஓர் ஆனந்தம்
ஏற்படுமல்லவா? அந்த ஆனந்தத்தில் அச்சமும் கலந்திருக்குமல்லவா?
அதைப் போன்ற நிலையில், அதைப் போன்ற நினைவில், நான்
மூழ்கியிருந்தேன். சிகரத்தை எட்டிவிடப் போகிறோம் என்ற ஆனந்தம் ஒரு
பக்கம்; திடீரென்று தடுமாறி வீழ்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்
மறுபக்கம்; விளங்குகிறதா மித்திரா?’’

“வீணாக நீங்கள் அஞ்சுகிறீர்கள்! கொடும்பாளூர்ப் பெரிய வேளாரே
இவ்வளவு பரிவு காட்டி நம்மை விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். மன்னரும்
உங்கள் விருப்பத்தை மறுக்கவில்லை. பிறகு ஏன் உங்களுக்குக் கவலை?’’
என்று கேட்டாள் மித்திரை.

“அதுதான் தெரியவில்லை’’ என்று கூறிப் பெருமூச்சு விட்டாள்
ரோகிணி. பிறகு, “இளவரசர் என்னிடம் ஏதோ முக்கியமான செய்தியைக் கூற
வந்தார். முதல் முறை கூற வந்தபோது என் தந்தையார் குறுக்கிட்டார்கள்.
மறுமுறை  கூறவந்த சமயத்தில் அவர்கள் அன்னையார் சாளரத்தைத் திறந்ததால்,
அப்போதும் அதைக் கூறவில்லை. ஏதோ என் மனத்தில் அச்சம்
புகுந்திருக்கிறது’’ என்றாள்.

மித்திரை நகைத்தாள். “இளவரசி! ஏதாவது ஒன்றில் உறுதியான பற்று
வைத்துவிட்டால், பிறகு எதற்கும் அஞ்சக் கூடாதென்பார்கள். அச்சமும்
உறுதியும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை. உங்கள் தந்தையைக் காண்பதில்
கூடவா உங்களுக்கு அச்சம்?’’

“ஆமாம்! தந்தையாரின் முகத்தில் என்னைக் குழப்பக்கூடிய ஏதோ
ஒன்று மறைந்திருக்கிறது. அதைக் கண்டு நான் அஞ்சுகிறேன்!’’

“இளவரசி! அச்சமென்று ஒன்றிருந்தால் அது உங்களுடைய மனதில்தான்
இக்கவேண்டும். உறுதியில்லாத மனமா உங்களுடையது? ஒரு வீரரின் மீது
உயிரையே வைத்திருப்பவர்களுக்கு அச்சமிருக்கக் கூடாது இளவரசி!’’

துணிவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த மித்திரை, ரோகிணிக்குப்
பின்னால் எதையோ கண்டு திடுக்கிட்டவள் போல் வாரிச் சுருட்டிக்கொண்டு
எழுந்தாள்.

மித்திரையின் பதற்றத்தைக் கண்ட ரோகிணி பின்புறம் திரும்பினாள்.
அங்கே மகிந்தர் யோசனையோடு நின்றுகொண்டிருந்தார். அவர் எப்படி
அங்கு சந்தடியின்றி வந்து சேர்ந்தார் என்பது இருவருக்கும் புரியவில்லை.

ரோகிணியின் நெஞ்சு ஒரு கணம் துடிப்பை நிறுத்தி விட்டு, மீண்டும்
இருமடங்கு வேகத்துடன் அடித்துக் கொண்டது.

தந்தையையும் மகளையும் தனியே விட்டுவிட்டு மித்திரை
விரைந்தேகினாள். வெளியே கந்துலன் நின்று கொண்டிருந்ததால்
அதுவரையில் அவர்களிருவரும் எதோ பேசிக் கொண்டு
வந்திருக்கக்கூடுமென்று மித்திரைக்குத் தோன்றியது.

மகிந்தர் ரோகிணியின் அருகில் வந்து மௌனமாக அமர்ந்தார்.
பேசவில்லை. அவருடைய கண்கள் ரோகிணியின் கண்களை ஊடுருவிப்
பார்த்தன.  


“என்ன செய்தி அப்பா?’’

“ஏதோ ஒரு செய்தி; அதை எப்படி உன்னிடம் கூறுவதென்றுதான்
தெரியவில்லை’’ என்றார் மகிந்தர். அவருடைய குரல், அவர் ஏதோ அதிர்ச்சி
தரும் செய்தியைக் கூறப்போகிறார் என்று ரோகிணிக்கு எச்சரிக்கை செய்தது.

“தெரியாவிட்டால் கூறாதிருங்களேன்’’ என்றாள் ரோகிணி.

“கூறித்தான் ஆக வேண்டும். அதற்காகத்தானே வந்திருக்கிறேன்!’’ சில
விநாடிகள் மீண்டும் பேசாதிருந்து விட்டு, “உன் தம்பி காசிபன் இப்போது
இங்கு வந்திருக்கிறான்’’ என்றார்.

“காசிபனா! எங்கே இருக்கிறான்?’’ பரபரப்போடு எழுந்தாள் ரோகிணி.

“மெல்லப்பேசு ரோகிணி!’’ என்று கையமர்த்திவிட்டு “அவன் இப்போது
கொடும்பாளூரில் இல்லை. எதோ பக்கத்து மலைக்காட்டில் ஒளிந்திருக்கிறான்.
அவனை நாம் இப்போது காணமுடியாது’’ என்றார்.

“உங்களுக்கு எப்படித் தெரிந்தது?’’

“நாம் இங்கு வந்திருக்கும் செய்தி அறிந்து அவனே சொல்லி
யனுப்பியிருக்கிறான். அவன் தனியாக இல்லை. அமைச்சர் கீர்த்தியும்
சுந்தரபாண்டியரும் இன்னும் ஆயிரக்கணக்கான வீரர்களும் அவனோடு
இருக்கிறார்கள்.’’

ரோகிணி தலையில் மலைசரிந்து விழுவதுபோல் செய்தி விழுந்தது.

“நீங்கள் இப்போது என்ன கூறுகிறீர்கள்?’’ என்று மீண்டும் அவரிடம்
கேட்டாள். “அவனோடு ஆயிரக்கணக்கான வீரர்கள் எதற்கு?’’

“உனக்கு இன்னுமா புரியவில்லை? சோழ சாம்ராஜ்யத்தின் மேல்
பாய்வதற்குச் சளுக்கர்கள், பாண்டியர்கள், நம்மைச் சேர்ந்தவர்கள் எல்லோரும்
ஒன்றாய்த் திரண்டு வந்திருக்கிறார்கள். நெடு நாட்களாகக் காத்து இருந்த சமயம் இப்பேது வந்துவிட்டது. உன்னுடைய தம்பி விரைவில் இங்கு வந்து நம் எல்லோரையும் மீட்டுச் செல்லப் போகிறான்!’’

“போர் தொடங்கப் போகிறதா, அப்பா?’’ என்று கலங்கும் குரலில்
கேடடாள் ரோகிணி.

“போரென்றால் தூது அனுப்பி, முரசு கொட்டி முன் அறிவிப்போடு
நடத்துகிற போரல்ல; புலியை அதன் குகைவாயிலில் பிடித்து மடக்கும் போர்.
சோழநாட்டுக் கிழட்டு வேங்கை வடக்கே போய் அகப்பட்டுக் கொண்டு
விட்டது. இங்கே அதன் பரிவாரங்களைப் பதறச் செய்யப் போகிறோம் நாம்!
பெயரளவுக்குத்தான் இது பெரிய சாம்ராஜ்யம். உள் வலிமை சிறிதுகூடப்
போதாது. எல்லாப் படைகளும் வெளியே சிதறிக்கிடக்கும் இந்தச் சமயத்தில்,
புதிதாக உருவாகும் சோழபுரத்தைப் புதைத்துவிடத் தீர்மானித்திருக்கிறார்
அமைச்சர்!’’

‘சோழநகரம் புதையப் போகிறதாமே?’’ அதைப் பற்றி இளங்கோ கூறிய
விவரங்கள் அவள் நினைவில் வந்து நிழலாடின.

“உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? நம்பியவர்களுக்குத்
துரோகம் செய்யலாமா? தஞ்சையில் கொடும்பாளூர் இளவரசரை
வைத்துக்கொண்டு நீங்கள் கூறியதை நினைத்துப் பாருங்கள்! நாங்கள்
இருவரும் மணந்து கொண்டு வாழ்வதற்கு நீங்கள் ஆசி கூறவில்லை?’’

“ஒன்று, ராஜதந்திர விஷயம்! மற்றொன்று குடும்ப விஷயம்’’ என்றார்
மகிந்தர். “நம்பிக்கை, துரோகம், போர், சமாதானம் இவையெல்லாம்
ராஜதந்திர விஷயங்கள். இதே குற்றங்களை நாம் அவர்கள் மீதும் சுமத்தலாம்.
ஆனால், உன் சொந்த விருப்பம் குடும்ப விஷயத்தைப் பொறுத்தது. அதில்
நான் சொன்ன சொல் தவறப்போவதில்லை. சோழ நாட்டார் சம்மதித்தால் நீ
இளங்கோவையே மணந்து கொள்ளலாம். என்றைக்குமே நான் அதைத் தடுக்க
மாட்டேன்.’’

“எப்படி அப்பா மணந்து கொள்வது?’’ என்று மகிந்தரை ஆத்திரத்தோடு
பற்றி உலுக்கினாள் ரோகிணி. “முன் அறிவிப்பு இல்லாமல் போர் தொடங்கி நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்கள். பிறகு  நான் அவருக்கு மாலையிட வேண்டும், அப்படித்தானே?’’

ரோகிணியின் அறியாமையைச் சுட்டிக்காட்டுவது போல் நகைத்தார்
மகிந்தர். “இளங்கோவை அவ்வளவு எளிதாக யாராலும் வீழ்த்திவிட முடியாது
ரோகிணி. உங்கள் இருவரைப் பற்றியும் நான் ஏற்கனவே அமைச்சருக்குச்
செய்தி அனுப்பியிருக்கிறேன்; அவரும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அவனுடைய உயிரும், காசிபனின் உயிரும் எனக்கு இனி ஒன்றுதான்.
உனக்காகவே நான் அவனிடம் அன்பு செலுத்தப் பழகிவிட்டேன். ஆனால்...’’

மகிந்தர் யோசனை செய்தார். ரோகிணி துடித்தாள்.

“ஆனால் என்ன அப்பா... சொல்லுங்கள்!’’

“நாடிழந்து அடிமையிலும் அடிமையான ஒருவனின் பெண் என்ற
முறையிலா நீ அவனை மணக்க வேண்டும்? நமக்கு வெற்றி கிடைத்தால் ஓர்
அரசன் மகளை மற்றொரு இளவரசன் மணப்பான். தோல்விக்குப்பின் அவன்
உன்னை மறுத்தாலும் அவனை ரோகணத்துக்குச் சிறைபிடித்துச் சென்று
உனக்கு மாலையிட வைப்பேன்.’’

“நடைபெற முடியாத ஆசைகள், அப்பா’’ என்று பெருமூச்சுவிட்டாள்
ரோகிணி. “நண்பர்களாகப் பழக முன் வந்திருப்பவர்களை நீங்கள் வீணாகப்
பகைத்துக் கொள்ளாதீர்கள். நட்பை விரும்பினால் தாங்கள் நாளைக்கே
நாட்டைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம். பெரிய வேளார் இங்கு நம்மைப்
பெருமைப்படுத்துவதற்காக அழைத்து வந்திருக்கிறார். அவருடைய குமாரரும்
குடும்பத்தாரும் நம்மோடு அந்தரங்கமாகப் பழகுகிறார்கள். நீங்களோ
அவர்களை வீழ்த்தப் பார்க்கிறீர்கள்.’’

“பெரிய வேளார் செய்திருப்பது நட்புக்காக அல்ல ரோகிணி!
ராஜதந்திரம்’’ என்றார் மகிந்தர். “கங்கைக் கரையில் அவர்கள் அடைந்த
தோல்விச் செய்தி தஞ்சைக்கு எட்டியிருக்கும். அந்தச் சமயத்தில் நாம்
அங்கேயிருந்து  அவர்களுடைய வீழ்ச்சியைக் காண வேண்டாம். என்பதற்காக நம்மை இங்கு நயவஞ்சகமாக அழைத்து வந்திருக்கிறார்கள். பெரிய வேளாரும் பெரிய ராஜதந்திரி! அவருடைய குமாரனும் அவருக்கு இளைத்தவனல்ல!’’

ரோகிணியின் முகம் சுருங்கியது. இளங்கோவை அவர் குறை கூறுவது
போலப் பேசியது அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.

“காரணத்தோடுதான் கூறுகிறேன் ரோகிணி! பிற்பகலில் எதேச்சையாக
அந்த நிலவறைக்கு வந்த என்னை அவன் எதற்காகத் திருப்பி அனுப்ப
வேண்டும்? எதற்காக என்னிடம் அவன் உண்மையை மறைக்கவேண்டும்?
எனக்கு நேர்ந்த அவமானம் உனக்கு மட்டிலும் இல்லையா?’’

ரோகிணியின் தலை மெல்லச் சுற்றத்தொடங்கியது. யார் செய்தது
நியாயம், யார் செய்தது தவறு என்று அவளுக்குப் புலப்படவில்லை.
நிலவறைக்குள் மகிந்தரின் பிடரியைப் பற்றி இளங்கோ தள்ளிக்கொண்டு வந்த
காட்சி அவள் கண்களைக் கலங்க வைத்தது.

மெல்ல அந்த இடத்தைவிட்டு எழுந்த சாளரத்தருகே சென்றாள்
ரோகிணி. தந்தையின் பேச்சு அவளை என்னவோ செய்தது. பகற்பொழுதில்
நடந்ததெல்லாம் பகற்கனவாக இவள் கண்ணீரில் கரையத் தொடங்கியது.

மகிந்தர் மெல்ல எழுந்து வந்து அவள் கரத்தை அன்போடு பற்றினார்.

சட்டெனக் கரத்தை உதறிக்கொண்டு, “இதையெல்லாம் எதற்காக
என்னிடம் கூற வந்தீர்கள்? உங்கள் ராஜதந்திரப் பேச்சுகள் எதுவும்
என்னிடம் வேண்டவே வேண்டாம்! நாம் நட்போடு வாழ்ந்தாலும் சரி;
போரிட்டு மாய்ந்தாலும் சரி! என்னைக் கேட்டுக்கொண்டு எதுவும் நின்றுவிடப்
போவதிலை. நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்
என்னிடம் ஒன்றும் கூறாதீர்கள்’’ என்று கத்தினாள்.


“மகளே!’’ என்று அவள் உதறியதையும் பொருட்படுத்தாமல் அவளைத்
தழுவிக்கொண்டார் மகிந்தர். “உன்னிடம் கூறவேண்டும் என்பதற்காகத்தான்
கூறி வைத்தேன். நீ உன்னுடைய தந்தையையும், தாயையும், தம்பியையும்
காட்டிக் கொடுத்துவிட மாட்டாய் என்று எனக்குத் தெரியும். நாம்
விரும்பாமலே, நம்மால் தடுக்க முடியாமலே, நம்மைச் சுற்றிக் காரியங்கள்
நடந்து கொண்டிருக்கின்றன. என்னைவிட உனக்கும் பல ரகசியங்கள்
தெரிந்திருக்கும். அதோடு நானும் என் ரகசியங்களையெல்லாம் சொல்லி
வைக்கிறேன்.’’

“அப்பா!’’ - ரோகிணி அலறினாள்.

அவளுடைய அலறல் அவளை அவள் தந்தையிடம் காட்டிக்
கொடுத்துவிட்டது.

“ரோகிணி! இனி எந்தச் சமயத்தில் என்ன நடக்குமென்று கூற முடியாது.
நீ உன் குடும்பத்தை மறந்து விடாதே. நானும் உன் ஆவலை
மறந்துவிடவில்லை. சமயம் நேர்ந்து, உன்னுடைய தந்தைக்கு உன்னால் ஏதும்
உதவி செய்ய முடிந்தால், அப்போது நீ நிச்சயமாகச் செய்வாய் என்று
எனக்குத் தெரியும். நான் உன்னை நம்புகிறேன் மகளே!’’

‘வேண்டாம், என்னை நம்பவேண்டாம்!’ என்று கதறியழத் தோன்றியது
ரோகிணிக்கு. அப்படிக் கூறிவிட்டால் அவளுடைய நம்பிக்கைக்கு அவர்
உலைவைத்து விடுவாரோ என்று அஞ்சினாள்.

தந்தையாகவும் அவர் அவள் முன்பு நின்றார்; ராஜதந்திரியாகவும்
பேசினார். அவர் கூற்றில் எந்த அளவுக்குப் பாசம் இருந்தது, எந்த அளவுக்கு
வேஷம் இருந்தது என்று அவளால் கண்டுகொள்ள முடியவில்லை.

‘இளங்கோவை எனக்குத் தருவதற்காக அவர் என்னிடமிருந்து எதை
எதிர்பார்க்கிறார்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் ரோகிணி.
‘ஒரு வேளை இளவரசர் என்னிடம் கூறிய ரகசியங்களெல்லாம் இவருக்கும்
தெரிந்திருக்குமோ?’

“உன் தம்பி காசிபன் மேல் ஆணை! நீ எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதே’’ என்று கூறிவிட்டு வெகுவேகமாக வெளியில் நடந்தார் மகிந்தர். அவர் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரோகிணி.


தொடரும் 


Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 31. காதல் வெறி; கடமை வெறி!

பாகம் 3 ,  31. காதல் வெறி; கடமை வெறி! மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு  அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது.
கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில்
துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம்.

கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த  அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான்.

நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.

“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.

“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போக…

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 11. கடமை வெறியர்!

பாகம் 3 ,  11. கடமை வெறியர்! 


ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான்
அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று
அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக்
கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள்
எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்
கொட்டிவிடுகின்றன.

“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய
வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப்
புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று
மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.

“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா
நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.

“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக்
காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து
ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார்.
தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை
செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும்
தான் இருக்கும்.’’

இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல்
தழுதழுத்…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:

· புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.

· பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.

புதுக்கவிதையின் தோற்றம் :

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற…