வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!
மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு

இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.

“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.

“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’

ஆதித்த பிராட்டியாரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு தோழிகள் இருவரும் ரதத்தில் திருமயில் குன்றத்துக்குக் கிளம்பினார்கள். தொலைவில் ரதத்தை நிறுத்திவிட்டு, இருவரும் குன்றின் மறுபுறச் சரிவுக்குச் சென்றார்கள்.

அங்கே ரோகிணிக்காக இளங்கோ காத்து நிற்பதைக் கண்டவுடன், மித்திரை மெல்ல நழுவிக்கொண்டு, மயில்களின் பின்னே ஓடி மறைந்துவிட்டாள். ரோகிணியின் வரவைக் கண்ட இளங்கோ கண்ணிமைக்க மறந்தான். இதிகாச புராணங்களில் பூத்துமலர்ந்த மோகினிப் பெண்ணெழிலை அவன் இதுவரையில் தன் கண்களால் கண்டதில்லை. கற்பனை செய்தும் பார்த்ததில்லை. யார், இவள்! தினந்தோறும் கண்டு மகிழ்ந்த அதே ரோகிணிதானா? இப்படியெல்லாம்கூட இவளுக்குத் தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தெரியுமா?

தோகை மயில்கள் அவளது ஒளியைக் கண்டுவிட்டுப் பறந்தோடி ஒளிந்து கொண்டன. மரங்களில் மலர்ந்த மலர்கள் அவள் புதுமுகம் கண்டு நாணித் தலைகவிழ்ந்தன.

“ரோகிணி!’’ என்று அழைக்க நினைத்தான். சொல் வெளிவரவில்லை. அவனுடைய நா இனித்தது; தொண்டை இனித்தது; நெஞ்சு இனித்தது.

“ரோகிணி! நான் எதைச் சொல்வதற்குத் துடித்துக் கொண்டிருந்தேனோ, அதை அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறாய் நீ! அப்படித்தானே?’’

மரங்களடர்ந்து கவிந்திருந்ததால், துணிவோடு அவள் கரங்கள் இரண்டையும் பற்றிச்சென்று ஒரு பாறையின் மீது அமர்த்தினான். ரோகிணி மறுமொழி ஏதும் கூறாமல் அவனைப் பார்த்து மலர மலர விழித்தாள்.

“என்ன ரோகிணி? நான் கூற விரும்பியதையெல்லாம் நீயே தெரிந்து கொண்டுவிட்டாயா?’’

“இல்லை!’’ என்று கூறித் தலையசைத்தாள் ரோகிணி. அந்த ‘இல்லை’ என்ற செல்லில் இளங்கோவின் பாதி உயிர் போய்விட்டது. மோகினிபோல் தோன்றிய அவள் தோற்றம் அவன் விழிகளில் தடுமாறியது.

அவன் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளாதவள்போல், “நீங்கள் அதைக் கூறுவதற்கு முன்பு, நான் உங்களிடம் ஒன்று புதிதாய்க் கூற வந்திருக்கிறேன்’’ என்றாள் ரோகிணி.

மறுபாதி உயிரும் மன்றாடியது இளங்கோவுக்கு. முன்பு மகிந்தர் குறுக்கிட்டபோதோ, அடுத்தாற்போல் சாளரத்துச் சத்தம் வந்த போதோ, அவன் கலக்கமுறவில்லை. ஆனால் ரோகிணியே அவன் சொல்லுக்குச் செவி சாய்க்காமல் குறுக்கிடுகிறாளே!

“ரோகிணி! ஒரே ஒரு கணம் பொறுமையாக இருந்து நான் சொல்வதைக் கேட்டுக்கொள். பொறுமையோடு யோசனை செய். பிறகு நீ கூற விரும்பியதைச் சொல்.’’

“சரி, கூறுங்கள்’’ என்றாள் ரோகிணி. ஆனால், அவன் கூறப்போகும் செய்தியில் அவ்வளவு ஆர்வம் கொண்டதாகத் தெரியவில்லை. இளங்கோ கூறினான்:

“நம்முடைய அன்பைச் சக்கரவர்த்திகளே தெரிந்து

வைத்திருக்கிறார்களாம். தாத்தா அவர்கள் என்னிடம் இந்தச் செய்தியைக் கூறினார்கள். கங்கையை வெற்றி கொண்டு வந்தவுடன், சோழபுரத்துப் புதுநகரத்தில் விழா நடைபெற இருக்கிறது. அந்த விழாவின்போது

சக்கரவர்த்திகள், நான் விரும்பும் பரிசை எனக்கு அளிக்கப் போகிறார்கள். நான் விரும்பும் பரிசு எது தெரியுமா? யார் தெரியுமா?’’

ரோகிணியின் கரங்களைப் பற்றிக்கொண்டு, அவள் கண்களையே உற்றுப் பார்த்தான் இளங்கோ. அந்தக் கண்களிலிருந்து ஓர் அருவி பெருக்கெடுத்தது.

“என்ன ரோகிணி?’’

“சக்கரவர்த்திகள் எப்போது திரும்புவார்கள்? வெற்றி விழா எப்போது நடைபெறும்? நீங்கள் எப்போது எனக்குக் கிடைப்பீர்கள்?’’ பெருமூச்சு விட்டுக்கொண்டே நம்பிக்கையற்ற குரலில் கேட்டாள் ரோகிணி.

இளங்கோவுக்குக் கோபம் வந்துவிட்டது. “நேற்று நான் சந்தித்த அதே ரோகிணிதானா நீ? அதற்குள் ஏன் இப்படி மாறிப் போனாய்? நம்பிக்கை என்பதே சிறிதுகூட இல்லாமல்தானா நாம் இவ்வளவு காலம் ஒன்றாகப் பழகி வருகிறோம்? -நல்ல செய்தியைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வதற்குக் கூடப் பொறுமை வேண்டும், ரோகிணி!’’

“கொடும்பாளூர்க் குலத்தில் பிறந்தவர்கள் பொறுமையைப் பற்றிப் பேசுவது விந்தையாகத்தான் இருக்கிறது!’’ என்றாள் ரோகிணி. இளங்கோவின் முன்கோபம் எங்கேயோ பறந்துவிட்டது. சின்னஞ்சிறு குழந்தைபோல் அவன் கலகலவென்று சிரித்தான். ரோகிணியும் தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டாள்.

“சரி, இனிமேல் நீ கூற வந்ததைக் கூறலாம்’’ என்றான் இளங்கோ.

“கேட்டுக்கொண்டால் மட்டும் பயனில்லை. அதன்படி நடக்கவும் நீங்கள் சித்தமாக இருக்கவேண்டும்.’’

“எனக்குக் கட்டளையிடப் போகிறாயா ரோகிணி?’’

“இல்லை, வேண்டுகோள் விடுக்கப்போகிறேன்; கெஞ்சப் போகிறேன்! மன்றாடப் போகிறேன். உங்கள் காலடியில் விழுந்து...’’

சொற்களை முடிப்பதற்கு முன்பே அவன் கால்களில் விழுந்து விம்மி அழுதாள் ரோகிணி!

“சொல் ரோகிணி!”

ரோகிணி தன் உணர்ச்சிக் குமுறல்களை இயன்றவரையில் அடக்கிக்கொண்டு கூறினாள். அவளுடைய குரல் எங்கோ காற்றில் இழைந்து வான வெளியில் மிதப்பது போலிருந்தது.

“கதிர்காமத்துத் தெய்வம் நம் இருவருக்குமே பொதுவான தெய்வம். அதற்கு நாங்கள் மலர் கொடுத்து வணங்குகிறோம். நீங்கள் கனி கொடுத்து வணங்குகிறீர்கள். அதே தெய்வம்தான் இந்த மலையின் உச்சியிலும் இருக்கிறது.’’

“ஆமாம்’’ என்று கூறிக் குன்றின் உச்சியில் உள்ள கோயிலைப் பார்த்தான் இளங்கோ. “மாலை நேரத்துப் பூசைக்கு இன்னும் நேரமிருக்கிறது. இப்போது கோயில் கதவுகளைச் சாத்தியிருப்பார்கள். சற்று நேரம் சென்றவுடன் போய் வருவோமா?’’“நானும் அதைத்தான் கூற வருகிறேன்’’ என்று தொடங்கி, தொடங்கியதை முடிக்காமல் நிறுத்தினாள் ரோகிணி. இளங்கோ அவளை ஏறிட்டு நோக்கினான்.

“போகும்போது இருவராகச் செல்வோம்! திரும்பும்போது ஒருவராகத் திரும்புவோம்! உங்களுக்குப் புரிகிறதா?’’ என்றாள் ரோகிணி. திடுக்கிட்ட இளங்கோ, “நீ என்ன சொல்கிறாய்?’’ என்று கேட்டான்.

“மித்திரைக்குப் புரிந்த அளவுகூட உங்களுக்குப் புரியவில்லை! நான் புத்துடைகளை உடுத்திக் கொண்டபோதே அவள் கூறினாள். நான் புது மணப்பெண்ணைப் போல் இருக்கிறேனென்று. ஆம்! அந்த முடிவோடு தான் நான் இங்கு வந்திருக்கிறேன்!’’

“என்ன?’’

இளங்கோவின் கண்களுக்கு முன்னால் திருமயில் குன்றம் சுழலத் தொடங்கியது. சாட்டை வாய்ப் பம்பரம் போல் அது சுழன்று கொண்டே இருந்தது. அவனுடைய அதிர்ச்சியைக் கண்ணுறாதவள்போல் அவள் மேலும் தொடர்ந்து பேசலானாள்:

“இன்றைக்கே இதே இடத்தில் நம் திருமணத்தை முடித்துக் கொள்வோம். நானும் உங்களோடு உங்கள் குதிரையில் வருகிறேன். நேரே நாகைப்பட்டினத்துக்கோ வேறு எந்தக் கடற்கரை நகரத்துக்கோ போய்ச் சேருவோம். எத்தனையோ மரக்கலங்கள் ஈழத்துக்குச் செல்வதுண்டு. கலங்கள் கிடைக்காவிட்டாலும் நமக்குத் தோணியொன்று கிடைக்காமற் போகாது.

ஈழநாட்டின் ஏதாவது ஒரு கடற்கரையில் ஒதுங்கி அதன் காட்டுக்குள் புகுந்துவிடுவோம். பிறகு நீங்கள் இளவரசராகவோ, நான் இளவரசியாகவோ இருக்கவேண்டாம். கட்டற்ற இரண்டு பறவைகளைப்போல், கூவும் குயில்களாக ஆடும் மயில்களாக...’’

ரோகிணி இந்த உலகத்தில் இல்லவே இல்லை. ஏதோ ஓர் உலகத்தில் மிதந்துகொண்டு ஏதேதோ சொற்களை உதிர்த்துக் கொண்டிருந்தாள். தனியாக மிதந்து செல்லும் மேகம் மழைத் துளிகளைச் சிதறுவதுபோல் சொற்களைச் சிதறிக்கொண்டிருந்தாள். இளங்கோ கற்சிலையாக மாறி அதில் நனைந்தான்.

“இளவரசே! என் தாய், தந்தை, தம்பி, நாடு, நகரம் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டு ஒரே ஆசையுடன் இங்கு வந்திருக்கிறேன். ஈழத்துக்குச் செல்லலாம் என்று கூறுவதற்குக் காரணம் அது நான் பிறந்த நாடு என்பதற்காக அல்ல. நாம் மறைந்து வாழ்வதற்கேற்ற நாடு. நம்முடைய ஆசைக் கனவுகள் மலரக்கூடிய நாடு. கடற்கரையோரத்து நிலவில் நாம் களித்து விளையாடுவோம். காடுகளிலும் மலைகளிலும் நாம் கரம் கூட்டிச் சுற்றி வருவோம். மலராடை புனைந்துகொண்டு அங்கே நடனமாடும் மங்கையர் கூட்டத்தைக் கண்டிருக்கிறீர்களா நீங்கள்? எனக்காக நீங்கள் உங்கள் இன் குரலில் பாடுங்கள். நான் உங்களுக்காக நடனமாடுகிறேன். உங்கள் வீரம் மிகுந்த விளையாட்டுகளுக்கு அங்கே மந்தை மந்தையாக யானைக்கூட்டம் உண்டு. நீங்கள் விரும்பினால் நாம் இருவர் மட்டிலுமே அங்கே ஒரு தனி நாட்டை உருவாக்கலாம். மாதம் மூன்று மழை பொழியும். மண் தானாக விளைந்து கொழிக்கும். மலர்கள் தாமாகப் பூத்துச் சொரியும். இளவரசே! என்னோடு புறப்படுங்கள், இளவரசே! அருவியில் குளித்து, கனிகளைப் புசித்து, மலைகளையே நம்முடைய மாளிகைகளாகக் கொள்வோம். வேறு எந்த மனிதர்களின் கண்களிலும் நாம் படவேண்டாம். உங்களுக்கு நான்; எனக்கு நீங்கள்!’’

மழலை பயிலும் குழந்தையென அவள் பேசிக் கொண்டே போனாள். இளங்கோவின் விழிகள் சுருங்கி இரண்டே இரண்டு நீர் முத்துக்களை உதிர்த்தன.

“என்ன கூறுகிறீர்கள் இளவரசே!’’

மறுமொழி கூறும் நிலையில் இளங்கோ அப்போதில்லை. அவனும் அவளோடு ரோகணத்துக் காடுகளில் ஒன்றி அலைந்து கொண்டிருந்தான்.

கோயில் மணி ‘டாண், டாண்’ என்று முழங்கியது. மாலைப் பூசையின் தொடக்க மணி. ரோகிணி பதறினாள்; இளங்கோ விழிப்புற்றான். “என்ன கூறுகிறீர்கள்?’’ என்று சீறினாள் ரோகிணி.

“நிச்சயம் சோழபுரப் புதுநகரத்தில் நடக்கத்தான் போகிறது. மீண்டும் உன்னைத் தஞ்சையில் சந்திக்கிறேன். அப்போது நமக்குத் திருமணத் தினம்கூட நிச்சயமாகிவிடும்!’’

“இன்றுதான் நம்முடைய திருமணத் தினம்!’’ என்றாள் ரோகிணி.

துன்பம்தோய்ந்த சிரிப்பு இளங்கோவிடமிருந்து பிறந்தது. “அரச குலத்தில் பிறந்வர்களாகிய நமக்கு நீ விரும்பும் வாழ்க்கை கிடையாது ரோகிணி! நான் ஒருபுறம் கொடும்பாளூர் மக்களின் அடிமை; மறுபுறம் சோழ சாம்ராஜ்யத்தின் அடிமை; இந்த அடிமையின் இதயத்தில்தான் நீ அரசியாக இருந்துகொண்டு ஆட்சிபுரியப் போகிறாய். கொடும்பாளூர் மண்ணில் உருவானவன் நான்; இந்த மண்ணோடு நான் கலக்கும் வரையில் இதிலிருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது.’’

மாலை மாலையாகக் கண்ணீர் சொரிந்தாள் ரோகிணி. “நான் படும் துன்பம் உங்களுக்குத் தெரியவே தெரியாது. நான் எதற்காக இப்படிக் கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்காது.’’

“சோழ நாட்டுப் பணியைவிட்டு என்னை சொர்க்கத்துக்கே அழைத்தாலும் நான் வரமாட்டேன்’’ என்றான் இளங்கோ.

“கடமை வெறியர்கள்!’’

“மெய்தான்! நாளையிலிருந்தே எனக்குக் கடமை தொடங்குகிறது. ஆட்சியைக் கலைப்பதற்காக இப்போதுகூடப் பல இடங்களில் சதிகாரர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சரித்துத் தள்ளிவிட்டு வரவேண்டாமா? மாமன்னர் தரும் பரிசுக்கு ஏற்றவனாக வேண்டாமா? உன்னுடைய கரத்தை இந்த நேரத்தில் நான் கோழைபோல் பற்ற விரும்பவில்லை ரோகிணி. நான் வீரன்; என் வேலுக்கு வேலை காத்திருக்கிறது! வேலையை வெற்றியோடு முடித்துவிட்டு வந்து உனக்குமாலை சூட்டுகிறேன்.’’

ரோகிணியின் மெல்லுடல் புயல்பட்ட மென்மலராக நடுங்கியது. ‘சதிக்கூட்டமா? சரித்துத் தள்ளவேண்டுமா? நேற்றுத் தந்தையார் கூறியதற்கும் இதற்கும் தொடர்பில்லாமலா இருக்கும்?’

“வேண்டாம், இளவரசே!’’

அதற்குள் குன்றத்தை அடுத்த சாலையில் முரசங்கள் முழங்கின. குதிரை வீரர்கள் சாரை சாரையாய்க் காற்றெனக் கடுகி விரைந்தார்கள்; பெரியதொரு யானையின் முதுகிலிருந்து கங்கை நீர்க்குடம் பளிச்செனத் துலங்கியது.

“கங்கை கொண்ட சோழப் பெருமகன் வாழ்க!’’ என்று எண்ணற்ற குரல்கள் ஒன்றாக ஒலித்தன.

“வாழ்க கங்கை கொண்ட சோழர்!’’ என்று எதிரொலித்துக் கொண்டே, ஆனந்தப் பெருக்கில் தன்னை மறந்து அருகிலிருந்த ரோகிணியின் கழுத்தை வளைத்துக் கொண்டான் இளங்கோ.

“வெற்றி ரோகிணி! நாட்டுக்கு வெற்றி! நமக்கும் வெற்றி’’ என்று கூறியபடியே, அவளை இழுத்துக்கொண்டு விரைந்து சென்றான்.தொடரும் 

Comments