வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 32. காசிபன் எங்கே?



 


யானைமீது பவனி வந்த பொற்குடத்துக் கங்கை கொடும்பாளூர் நகரத்தைச் சுற்றிக்கொண்டு அரண்மனைக்கு வந்து சேர்வதற்குள் இளங்கோவும் ரோகிணியும் அரண்மனையை அடைந்துவிட்டார்கள். அரண்மனையின் மேல்மாடத்து முகப்பில் கொடும்பாளூர் அரச குடும்பம் காத்திருந்தது. அதோடு மகிந்தரின் குடும்பத்தாரும் கலந்து கொண்டார்கள். மகிந்தரின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சியில்லை. கந்துலனின் கண்களும் இடுங்கிப் போயிருந்தன.

யானையின் மத்தகத்தின் மீது வல்லவரையர் அமர்ந்து கொண்டு அதை நடத்தி வந்தார். பெரிய வேளாரோ கரங்களில் பயபக்தியோடு பொற்குடத்தைத் தாங்கிய வண்ணம் வீற்றிருந்தார். நானாவித வாத்திய முழக்கங்களோடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் வாழ்த்தொலிகளோடும், கங்கை நீர் முதலில் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. ஒரு குடம் கங்கை நீருக்காகவா இத்தனை ஆரவாரம்? இத்தனை உற்சாகம்? - அதை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அரண்மனையின் உள் முகப்பில் குடத்தோடு யானையை நிறுத்திவிட்டு பெரியவர்கள் இருவரும் மேல் மாடத்துக்கு விரைந்தார்கள். அங்கிருந்து கொண்டே பெரிய வேளார் எதிரில் குழுமியிருந்த மக்களிடம் புனித கங்கை நீருக்காக நடைபெற்ற போராட்டத்தை விளக்கலானார்.

“சக்கரவர்த்திகள் வெற்றி முரசத்தோடு தஞ்சைக்குத் திரும்பிவிட்டார்கள். வடக்கே அவர்கள் புறப்பட்டுச் சென்று ஓராண்டு காலத்துக்குமேல் ஆகிவிட்டது. எதற்காக அவர்கள் எண்ணற்ற வீரர்களுடன் வங்கம் நோக்கிச் சென்றார்கள்? நாடுகளைக் கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொள்வதற்காகவா? அல்லது பிற நாடுகளிலிருந்து பொன்னையும் பொருளையும் பெண்டிர் பண்டாரத்தையும் வாரிக்கொண்டு வந்து இங்கே குவிப்பதற்காகவா?’’

கடல்போல் பரந்திருந்த கூட்டம் அமைதியோடு பெரிய வேளாரைப் பார்த்துக் கொண்டிருந்தது. பெரிய வேளார் எழுப்பிவிட்ட வினாக்களுக்கு அவரிடமே விடையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள்.

“நூற்று எட்டுக் குடங்களில் கங்கை நீர் கொண்டு வந்தார் சக்கரவர்த்திகள். அவற்றிலும் பல குடங்களில் நிரம்பியிருந்த நீரை வழியில் உள்ள சிவாலயங்களில் வழிபாட்டுக்கு வழங்கிவிட்டார். தஞ்சைக்கு வந்த போது சில குடங்களே எஞ்சியிருந்தன. அவற்றில் ஒன்றுதான் இங்கு வந்திருக்கிறது. இன்னும் சில குடங்கள் சோழபுரப் புது நகரத்துக்காகத் தஞ்சையில் இருக்கின்றன.

“நம்முடைய புது வாழ்வின் சின்னம் இந்தப் புனித கங்கை. மூவர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் மணிமுடியைக் குளிரச்செய்ய இது இங்கு வந்திருக்கிறது. இது நமது கொடும்பாளூர்க் கோனாட்டுக்குரிய வெகுமதி.

“இதற்காகவா நாம் ஆயிரமாயிரம் வீரர்களை அனுப்பி வைத்தோம் என்று கேட்கிறீர்களா?’’

கூட்டத்தில் யாரும் கேட்கவில்லை. கேட்கக்கூடிய அறியாமை அந்த நாட்டு மக்களிடம் இல்லை.

“தமிழரின் வீரத்தை தமிழரின் வலிமையை, தமிழரின் புகழை நாம் கங்கைக் கரை வரையில் நிலைநாட்டி விட்டு வந்திருக்கிறோம்! தமிழரின் நாகரிகத்தை நாம் வங்கத்தாரிடம் பரப்பிவிட்டு வந்திருக்கிறோம்! நம்மை எதிர்க்கத் துணிவோருக்கு இது ஓர் எச்சரிக்கை. நம் அமைதியில் குறுக்கிட்டு நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு இது ஓர் அறிவுரை. நமது சக்கரவர்த்திகள் கண்ட மாபெரும் கனவு அவர்களது வாழ்நாளிலே நனவாக மலர்ந்துவிட்டது. சேரன் செங்குட்டுவன் இமயத்துக்குச் சென்று பத்தினித் தெய்வத்தின் சிலைக்காகக் கல்பெயர்த்து வரவில்லையா பற்பல அசுவமேத யாகங்கள் இங்கே நடைபெறவில்லையா? சக்கரவர்த்திகள் சோழபுரப் புது நகரத்தைக் கங்கை கொண்ட சோழபுரமாக உருவாக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார்கள். நிறைவேற்றியும் விட்டார்கள். அங்கே எழுப்பியுள்ள சோழீசுவரர் இனி, கங்கை கொண்ட சோழீசுவரர்!’’

“வாழ்க, கங்கை கொண்ட சோழர்!’’ என்ற வாழ்த்தொலி வானுயர எழுந்தது.

“வடக்கே நமக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றவர்கள் நமது அன்பைப் பெற்றவர்கள். நம்மை எதிர்க்கத் துணிந்தவர்கள் நமது வலிமையைக் கண்டார்கள். நமது வாழ்வில் பொற்காலம் உதயமாகிவிட்டது. விரைவில் நமது வெற்றி விழாவைக் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடுவோம். ஒன்பது தினங்கள் தொடர்ந்து நடைபெறக் கூடிய பெரிய விழா அது. நாள் குறிப்பிட்டு முரசும் அறிவிப்போம். எல்லோரும் அங்கு ஒன்று கூறுங்கள்!’’

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மூவர் கோயிலில் புனித நீராட்டு வைபவம் முடிந்தது. நகர மக்களுக்கு வேறு எந்த நினைவும், வேறு எந்தப் பேச்சுமே இல்லை. கோயிலுக்குச் சென்ற கூட்டத்துக்கு முன் அரச குடும்பத்தாரும் இருந்தார்கள்.

இளங்கோ ரகசியமாக ரோகிணியின் செவிகளில், “கேட்டுக் கொண்டாயா ரோகிணி? நமது வாழ்வின் பொற்காலமும் கங்கை கொண்ட சோழபுரத்தில்தான் உதயமாகப் போகிறது!’’ என்றான்.

“அவசரத்தில் நான் அறியாது ஏதேதோ பேசிவிட்டேன், அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்றாள் ரோகிணி.

மகிந்தரின் கண்கள் அந்தக் கூட்டத்தின் இடையிலும் கூர்மை பெற்றிருந்தன. கந்துலனை விட்டு இளங்கோவின் நடவடிக்கைகளையெல்லாம் கண்காணிக்கச் செய்திருந்தார். மறுநாள் அதிகாலையில் கொடும்பாளூர் அரசகுடும்பமும் மகிந்தர் குடும்பமும் ஒன்றாகத் தஞ்சைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தன. பெரிய வேளாரும் அவர்களுடன் கிளம்பினார். இளங்கோவையும் வல்லவரையரையும்

மட்டிலும் அரண்மனையில் காணவில்லை. இரவோடு இரவாக அவர்கள் எங்கே சென்றார்கள்! மகிந்தர் தமது மகளிடம் மெல்லக் கேட்டுப் பார்த்தார். அவளுக்கே இந்தச் செய்தி வியப்பைத் தந்தது. அவளிடம்கூட அவன் சொல்லிக் கொண்டு புறப்படவில்லை. பிறகு முதல் நாள் மாலையில் அவன் திருமயில் குன்றத்தில் கூறியதை நினைவுபடுத்திக் கொண்டாள். ‘சதிகாரர்களைச் சரித்துவிட்டு

வரவேண்டுமென்று அவர் கூறிக்கொண்டிருந்தாரே?’

“இளங்கோ எங்கு சென்றானென்று உனக்குத் தெரியுமா?’’

“தெரியாது, அப்பா!’’

மகிந்தர் அவள் கூறியதை நம்பவில்லை.

“பெற்றவனிடமே நீ பொய்கூறக் கற்றுக் கொண்டாய். நாம் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. சரி, சரி புறப்படு! உன் தம்பி காசிபன் இந்தப் பக்கம்தான் ஒளிந்து கொண்டிருக்கிறானென்று அவனிடம் சொல்லவில்லையே? இல்லை, அதையும் கூறிவிட்டாயா?’’

“புத்தர் மீது ஆணையப்பா! நான் சொல்லவில்லை.’’

“பிறகு ஏன் என்னிடம் மறைக்கிறாய்? எங்கே இளங்கோ?’’

“தெரியாது!’’ என்றாள் அழுத்தமாக. அவன் சதிக்கூட்டம் பற்றி அவளிடம் கூறியதையெல்லாம் ரோகிணி மகிந்தரிடம் வெளியிடவில்லை. கொடும்பாளூரிலிருந்து ரதங்கள் புறப்படுவதற்கு முன்பே, திருவெண்ணெயில் குன்றுகளில் குழுமியிருந்த சதிக்கூட்டம் கலகலக்கத் தொடங்கிவிட்டது. முப்பது நாற்பது பேர்களை மட்டிலும் எதிர்பார்த்துச் சென்றார்கள் இளங்கோவும் வல்லவரையரும். அவர்களோடு சென்றிருந்த வீரர்களின் எண்ணிக்கையும் அதிகமில்லை. அங்கே சமணர் மலைக்குகையை அடுத்துக் கூடியிருந்தவர்களோ நூற்றுக்கணக்கானவர்கள். எங்கிருந்து எந்த நேரத்தில் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்றே தெரியவில்லை.

நிலவு வீசிக்கொண்டிருந்தது. குதிரைகளை நகரத்துப் படையிருப்பில் விட்டுவிட்டு எல்லோரும் காட்டுக்குள் கால்நடையாகக் கிளம்பினார்கள். சுற்றிலும் செடிப் புதர்கள் மண்டிக்கிடந்ததால், மறைந்தும் நகர்ந்தும் செல்வது சிரமமாக இல்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று, குகையின் வெளிப் புறத்ததில் சற்றுத் தொலைவில் வட்டமிட்டுப் பதுங்கினார்கள் வீரர்கள்.

படைத்தலைவனுக்குக் கட்டளைகளை இட்டுவிட்டு இளங்கோவும் வல்லவரையரும் தனியே பின்புறத்தின் வழியாகக் குன்றின்மீது ஏறினார்கள். செங்குத்தான சரிவுதான் என்றாலும் ரோகணத்துக் குன்றுகளுக்கே பழக்கமானவர்கள் அவர்கள்.

முன்புறத்துச் சரிவில், செடிகளுக்கு மேலே முன் முனைகளைப் போன்ற வேல்முனைகள் தெரிந்தன. குகையின் இடுக்கு அதற்குள் எரிந்து கொண்டிருந்த தீவர்த்திகளால் தெரிந்தது. உள்ளே குழுமியிருந்தவர்களின் முகம் சரியாக இளங்கோவுக்குத் தெரியவில்லை. ஆனால் மத்தியில் பாறை மீது சாய்ந்து கொண்டிருந்த ஒரே ஒருவரை மட்டிலும் இனம் கண்டு கொண்டான் இளங்கோ.

“தாத்தா! அதோ பாருங்கள், சுந்தரபாண்டியர்!’’ என்று வல்லவரையருக்குச் சுட்டிக் காட்டினான்.

அடுத்த நடவடிக்கையைப் பற்றி இருவரும் ஆலோசித்தனர். உடன் வந்திருக்கும் வீரர்களோ, எண்ணிக்கையில் குறைந்தவர்கள். பாண்டியரின் வீரர்களோ, சோழநாட்டு வீரர்களைவிட எந்த வகையிலும் வலி குன்றாத வீரர்கள். வீரத்திலும் தீரத்திலும் சமமானவர்கள். எண்ணிக்கை மிகுந்தவர்கள்.

குகை, இரண்டு பாறைகள் ஒன்றின் மேலொன்று சாய்ந்து நின்றதால் உருவாகியிருந்தது. அவற்றை இணைப்பதுபோல் உச்சியில் ஒரு வட்டப்பாறை நின்றது. வட்டப்பாறை அளவில் சிறியதுதான். ஆனால் அதன் வலிமையால்தான் அந்தக் குகையே கூடம்போல் விளங்கியது. அதை அகற்றி உருட்ட முடிந்தால்...?

“அந்த முயற்சியில் முதலில் பலியாகப் போகிறவர்கள் நாமாகத்தான் இருப்போம்!’’ என்று கூறிச் சிரித்தார் வல்லவரையர். “பாறை முதலில் நம்மைச் சரித்து விட்டுத்தான் பிறகு பகைவரிடம் செல்லும்’’ என்றார்.

அருகில் சென்று பார்த்தார்கள். அவர்கள் அபாயமின்றித் தப்புவதற்கு, மற்றொரு பாறை அருகே நீண்டிருந்தது. அதன் மேல் நின்றுகொண்டு வேல்களின் அடிப்புறத்தை வட்டப்பாறையின் கீழே கொடுத்தார்கள். இருவர் முகத்தின் நரம்புகளும் புடைத்தெழுந்தன. இருவருடைய விழிகளிலும் இரத்தம் பாய்ந்தது. இருவருடைய கரங்களும் இரும்புகளாக மாறின. இருவரும் தங்கள் மூச்சை அடக்கிக்கொண்டு, பாறையைப் புரட்டி விடுவதற்காக வேல் கொண்டு ஏற்றினார்கள்.

படீர் படீரென்று இரண்டு வேல்களும் முறிந்தன. அந்தச் சத்தம் ஓய்வதற்குள் அந்த மலைச் சாரலில் பூகம்பமே ஏற்பட்டுவிட்டது. ஒரு பாறைபுரண்டு வீழ்ந்ததால், ஒன்பது பாறைகள் தொடர்ந்து சரிந்தன.

இளங்கோவை இழுத்துப் பற்றிக் கொண்டு, பின்புறம் சாய்ந்தார் வல்லவரையர். எங்கும் கூக்குரல்! எங்கும் குழப்பம்! எங்கும் மரண ஓலம்! தீவர்த்திகள் அங்குமிங்கும் இருளில் அலைந்தன. மனிதர்கள் சிதறி ஓடினார்கள். ஓட முடியாதவர்கள் ஒடிந்து வீழ்ந்தார்கள். புதர்களுக்குப்பின் மறைந்து நின்ற சோழர் சிறுபடைகள் தம் கணைகளைத் தொடுக்கத் தொடங்கின. முடிந்த வரையில் உயிரோடு கைப்பற்றினார்கள். கைப்பற்ற முடியாத நிலையில் இருளோடு இருளாகத் தப்பிச் சென்றவர்கள் சிலர். ஏற்கனவே மலைச்சரிவில் உயிர் இழந்தவர்கள் பலர். உடல்களைக் கொண்டு மனிதர்களை இனம் கண்டு கொள்ள முடியவில்லை. இதற்குள் வல்லவரையரும் இளங்கோவும் குன்றின் உச்சியிலிருந்து இறங்கி ஓடி வந்தார்கள். தப்பிச் சென்ற இருவர் திரும்பி இந்த வழியில்தான் வரவேண்டும்.

கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவர்களை பாய்ந்து பற்றினான். கீழே கொண்டு வந்தார்கள். தீவர்த்தி ஒளியில் அவர்களது முகங்களைக் கண்டார்கள். முகங்கள் ஒரு கணம் கீழே கவிழ்ந்து பிறகு நிமிர்ந்தன. ஆனால் அவற்றில் வீரமோ, செருக்கோ சிறிதளவும் குன்றவில்லை.

“வணக்கம், சுந்தர பாண்டியரே!’’ என்று கூறி, சிறிதுகூடச் செருக்கின்றித் தமது பிடியில் இருந்தவரைப் பார்த்தார் வல்லவரையர்.

“தாத்தா, இவர் பெரும்பிடுகு முத்தரையர்!’’ என்று கூவித் தன் பிடியில் இருந்தவர் பக்கம் அவர் கவனத்தைத் திருப்பினான் இளங்கோ.

சுந்தரபாண்டியர் அலட்சியமாகச் சிரித்தார். இளங்கோ திடுக்கிட்டான். வல்லவரையர் வந்தியத்தேவர் அவனைக் கையமர்த்தி அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.

“ஒரு சுந்தரபாண்டியனைப் பிடித்துவிட்டீர்கள். ஆனால் உங்களை அழிக்க இன்னும் ஆயிரமாயிரம் சுந்தரபாண்டியர்கள் காத்திருக்கிறார்கள்’’ என்று அமைதியோடு கூறினார் பாண்டியர்.

“பாண்டியர்களின் கரங்களால் மட்டும் நாங்கள் அழிக்கப் படுவோமானால் அது எங்கள் பாக்கியம், அரசே! தமிழரல்லாத வேற்று நாட்டவர்களின் துணைகொண்டு தமிழருக்கே துரோகம் செய்ய வேண்டாமல்லவா?’’ என்றான் இளங்கோ.

சுந்தரபாண்டியர் ஓரக்கண்களால் இளங்கோவைப் பார்த்துப் புன்னகை செய்தார். “வீரத்தமிழ் மகனே, பொறு பொறு! உனக்கே அது விரைவில் தெரிந்து விடும். நீயும் ஓர் ஈழநாட்டுப் பெண்ணை விரும்புவதாகத்தான் எனக்கும் செய்தி கிடைத்தது.’’

இளங்கோவுக்கு மெய்சிலிர்த்தது. அமைச்சர் கீர்த்தியின் சொந்த மைத்துனரல்லவா சுந்தரபாண்டியர். அவரது தங்கையை மணந்தவர் அல்லவா?

ஏனோ அப்போது திடீரென்று காசிபனை நினைத்துக் கொண்டான் இளங்கோ. ஒரு வேளை, காசிபனும் பாண்டியர்களோடு குகைக்குள் வந்திருந்தால்...

குகைக்குள் மறைந்திருந்தவர்களில் பலர் உருவமே தெரியாதவாறு அழிந்துவிட்டார்கள் என்ற செய்தியை ஒரு வீரன் வந்து அப்போது வல்லவரையரிடம் கூறிக் கொண்டிருந்தார்கள்.

தொடரும் 







Comments