வேங்கையின் மைந்தன்--புதினம் - பாகம் 3- 33. பாச வெறி.தஞ்சைமாநகரத்து மக்களுக்கும் சுற்றுப்புறத்துக் கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கும் வெற்றிச் செய்தி கிடைத்தவுடன் ஆனந்த வெறி பிடிக்கத் தொடங்கியது. செய்தி சென்ற இடங்களுக்கெல்லாம் அந்த வெறியும் தொடர்ந்து பரவியது.

எங்கு திரும்பினாலும் மாவிலைத் தோரணங்கள், தென்னங்குருத்துக்கள், கமுகு, ஈஞ்சு, கதலிக்குலைகள் வரிசை வரிசையாகக் குலுங்கின. கூடகோபுரங்கள் முதல் குடிசைகள் வரையில் புலிக்கொடிகள். வீடுகள் யாவும் திருமண வீடுகளின் கோலம் பூண்டு விளங்கின.

ஆடல், பாடல், கூத்து, குரவை முதலிய கேளிக்கைகளுக்குக் குறைவே இல்லை. தோற்கருவிகளின் முழக்கங்கள் ஒரு புறம் துளைக்கருவிகளின் இன்னிசை ஒருபுறம். ஆலயமணிகளின் பேரொலி ஒருபுறம்-இவ்வாறு எங்குமே குதூகலம் ஆட்சி செய்தது.

பொழுது புலர்ந்தவுடன் தொடங்கிய மகிழ்ச்சிப் பெருக்கு பொழுது சாயும் தருணத்தில் காட்டாற்று வெள்ளம்போல் கரை புரண்டு பாய்ந்தது. தீபாலங்கார வரிசைகள் போதாதென்று வாணவேடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள் தஞ்சை நகரப் பெருமக்கள்.

ஆகாயம் நந்தவனமாக மாறியது. கண்ணைப் பறிக்கும் வண்ணமலர்கள் அங்கே பூத்துப் பூத்துச் சொரிந்தன. தஞ்சைப் பெரிய கோயிலோ ஒளி உருவமாகவே திகழ்ந்து ஜொலித்தது. கோபுரங்கள் மீதும் சுற்று மதில்கள் மீதும் வரிசை வரிசையாக விளக்குகள்!

நான்கு புரவிகள் பூட்டிய ரதம் காத்து நின்றது. மாமன்னரும் மாதண்ட நாயகரும் அதில் ஏறிப் பவனி வந்தார்கள். கூட்டமும் குதூகலமும் நிறைந்த தெருக்களைக் கடந்து அரண்மனைக் கோட்ட வாயிலுக்குள் நுழைந்தது ரதம்.

கோட்டைக்குள் ரதம் சென்ற சில விநாடிகளுக்கெல்லாம் பின்புறம் குதிரைக் குளம்பொலி கேட்டது. மாமன்னர் ரதத்தை நிறுத்திவிட்டுப் பின்புறம் திரும்பிப் பார்த்தார். மாதண்ட நாயகரின் விழிகள் வியப்பால் விரிந்தன.

வல்லவரையரும் இளங்கோவும் இருபுறமும் வர இடையில் சுந்தரபாண்டியரும் பெரும்பிடுகு முத்தரையரும் குனிந்த தலைகளோடு குதிரைகளில் அமர்ந்திருந்தனர். சுற்றிலும் வந்த வீரர்களின் விழிகள் சிறைபட்டவர் மீது நிலை குத்தியிருந்தன.

“சக்கரவர்த்திகளே, பாண்டியரும் பணிந்துவிட்டார்’’ என்று உற்சாகத்தோடு கூறினார் மாதண்டநாயகர்.

“பணியவில்லை; சிறைப்பட்டிருக்கிறார்’’ என்று பதிலளித்து விட்டு ரதத்தை மேலே செலுத்தச் செய்தார் சக்கரவர்த்தி.

செருக்குக் குலையாத சுந்தரபாண்டியரின் விழிகள் ரதத்தில் சென்றவரைக் கண்டுவிட்டன. ஆனால் மாமன்னரோ ஏதும் அறியாதவர் போல் சென்றார். அரண்மனை முகப்புக்கும் உள் வாயிலுக்கும் இடையில் தென்பட்ட இந்தக் காட்சியை மகிந்தர் மாளிகையின் மேல் மாடத்திலிருந்து சிலர் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கந்துலனைத் தவிர மகிந்தர் குடும்பம் முழுவதும் அங்கே நின்று கொண்டிருந்தது.

கொடும்பாளூரிலிருந்து திரும்பியவுடன் கந்துலனை நகரத்துக்குள் அனுப்பியிருந்தார் மகிந்தர். வீரமல்லனைச் சந்தித்து ஏதும் செய்திகள் இருந்தால் கேட்டு வரும்படி அனுப்பியிருந்தார். காலையில் சென்றவன் பொழுது சாய்ந்த பிறகும் திரும்பவில்லை.

வெற்றிவிழாக் காட்சிகள் ரோகிணிக்கும் அவள் அன்னையாருக்கும் மகிழ்ச்சி தந்தன. மகிந்தருக்கோ பொறுக்க முடியவில்லை. காதுகளை அடிக்கடி அடைத்துக் கொண்டார்; கண்களை மூடிக்கொண்டார்.

“சோழ நாட்டு மக்களுக்குச் சித்தம் கலங்கிவிட்டது!’’ என்று ஒருமுறை கத்தினார் மகிந்தர்.

“அவர்களுக்குக் கலங்கவில்லை அப்பா’’ என்று எங்கோ கவனமாகக் கூறினாள் ரோகிணி. மகிந்தர் பற்களைக் கடித்துக் கொண்டார்.

குதிரைகளின் மீது வந்தவர்களை இனம் கண்டு கொண்டவுடன் மகிந்தரின் ஆத்திரம் அளவு கடந்துவிட்டது. ரோகிணிக்கோ இளங்கோ ஒருவனைத் தவிர மற்றவர்கள் கண்ணில் படவே இல்லை. குதித்துக் கொண்டே “அதோ இளவரசர் வந்துவிட்டார். அப்பா!’’ என்று சுட்டிக் காட்டினாள். அவள் பேச்சுக்குச் செவிசாய்க்கவில்லை மகிந்தர். “போய்விட்டது, போய்விட்டது! எல்லாமே போய்விட்டது’’ என்று புலம்பத் தொடங்கினார். வந்துவிட்டவனைப் பார்த்து, “போய்விட்டது!’’ என்று தவிக்கிறாரே என்று கோபத்துடன் திரும்பினாள் ரோகிணி.

“உன்னுடைய இளவரசன் என்ன செய்துகொண்டு திரும்பியிருக்கிறான், பார்! -யார் யாரைச் சிறை செய்து கொண்டு திரும்பியிருக்கிறான் பார் - சுந்தரபாண்டியரும் அவர் சேனாபதியும் சிறைப்பட்டு விட்டார்கள். ரோகிணி அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள்!’’

ரோகிணி திடுக்கிட்டாள்.

“பார் நன்றாக உற்றுப் பார். அவர்களோடு உன் தம்பியும் அமைச்சரும் இருக்கிறார்களா என்று பார்! பாண்டியருக்கே இந்தக்கதி நேர்ந்ததென்றால், அவர்களுடைய கதி என்ன ஆகியிருக்கும்?’’

ரோகிணியின் கண்கள் கூட்டத்துக்குள் அலைந்து களைத்தன. அதற்குள் குதிரைகள்மீது வந்தவர்களும் ஒரு திருப்பத்தில் மறைந்து சென்றுவிட்டார்கள். மகிந்தர், மகிஷி, ரோகிணி மூவர் கண்களும் இமைக்கவில்லை.

பின்புறம் காலடி ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள். கந்துலன் வாயில் துணியை வைத்து அடைத்தபடி தள்ளாடித் தடுமாறி வந்து கொண்டிருந்தான்; கண்கள் கலங்கிக் கண்ணீர் உகுத்தன.

“என்ன கந்துலா? பார்த்து வந்தாயா?’’

மறுமொழி கூறவில்லை கந்துலன். அவன் தலை கவிழ்ந்தது, உடல் குலுங்கியது. அவனுடைய மௌனத்தைக் கண்டு ரோகிணியும் மகிஷியும் கூடப் பதறிவிட்டார்கள்.

“சொல் கந்துலா! என்ன செய்தி!’’ மகிந்தர் கந்துலனைப் பற்றி உலுக்கினார்.

“இளவரசர் காசிபன்... நம்முடைய இளவரசர்...’’

“என்ன?’’

காசிபன் இறந்துபோய் விட்டானென்று கூறி, கோவெனக் கதறியழத் தொடங்கினான் கந்துலன். அழுகையோடு அழுகையாக “கொடும்பாளூர் இளவரசர்தான் அவரைக் கொன்றுவிட்டாராம். பாறையை உருட்டிவிட்டு உருத்தெரியாமல் நசுக்கி விட்டாராம்’’ என்று திருவெண்ணயில் மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒருவாறு கூறி முடித்தான்.

“காசிபா!’’ என்று ஓலமிட்டுத் தரையில் சரிந்து விழுந்தார் மகிஷி.

மகிந்தரின் முகத்தில் பேய்க்களைத் தாண்டவமாடியது. அவர் ஆத்திரமெல்லாம் ரோகிணியின் மீது திரும்பியது.

“காசிபனை அவன் கொல்லவில்லை! நீ கொன்றாய். நீதான் கொன்றாய்!’’

என்று கத்திக்கொண்டே அவள்மேல் பாய்ந்து அவள் முகத்தில் அறையத் தொடங்கினார் மகிந்தர். “பாவி சண்டாளி, துரோகி, நீயும் தொலைந்து போ!’’ என்று குமுறினார்.

கந்துலன் குறுக்கே விழுந்து தடுத்திராவிட்டால், ரோகிணியின் உயிர் அன்று நிலைத்திருக்காது. ரோகிணியோ துன்பங்களைக் கடந்த நிலையில் உணர்வற்ற மரம் போலானாள். மகிந்தரும் நினைவிழந்து, நிலை தடுமாறி ஓய்ந்து போனார்.

சற்றுநேரம் பிரமை கொண்டவள்போல் நின்றுவிட்டு சுற்றும் முற்றும் கூர்ந்து நோக்கினாள் ரோகிணி. நகரத்து மக்கள் எழுப்பிக் கொண்டிருந்த ஒலியும் ஒளியும் அவளைப் பரிகாசம் செய்தன.

“ஆஹா! எங்கு திரும்பினாலும் ஆடல்கள் பாடல்கள் வாண வேடிக்கைகள்! காசிபனைக் கொன்றுவிட்டு இங்கே இவர்கள் கங்கைக்கு விழா எடுக்கிறார்களாம்! வெற்றி விழாவாம்!’’ ரோகிணி சிரித்தாள்; பிறகு அழுதாள். தன் தம்பியை அழைத்தாள். “காசிபா! நீ இங்கே வந்து நடக்கும் வேடிக்கைகளைப் பாரடா! உன்னைக் கொன்று விட்டதற்காக இங்கே விழாக் கொண்டாடுகிறார்கள், வந்து பார்க்க மாட்டாயா?’’

ரோகிணியின் கால்கள் அவளை அறியாது அவள் அறைக்கு அழைத்துச் சென்றன. அவள் அங்கே வரைந்து வைத்த காசிபனின் சித்திரம் அவளைக் கண்டு நகைத்தது. அதை எடுத்து அணைத்துக் கொண்டே நெடுநேரம் கண்ணீர் உதிர்த்தாள். “நீ உயிரோடிருக்கிறாய் காசிபா! உயிரோடுதானிருக்கிறாய்’’ என்று அவனிடம் பேசினாள்.

அடுத்தாற் போலிருந்த இளங்கோவின் சித்திரம் அவள் கண்களில் அனலைக் கொட்டியது. காசிபனின் ஓவியத்தை வீசி எறிந்துவிட்டு அதன்மேல் தாவினாள்.

“கடமை வீரரே! வெற்றி வீரரே! வருக வருக!’’

ரோகிணிக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டு விட்டதா? இளங்கோவின் சித்திரத்தை எண்ணற்ற சுக்கலாகக் கிழித்துக் காற்றில் வீசிவிட்டு எங்கோ பின்புறம் ஓடினாள். இருளை இருகூறாகப் பிளந்துகொண்டு இருளோடு இருளாய் இரணடறக் கலந்தாள்.

தொடரும் 


Comments