வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 3- 34- நங்கையும் தந்தையும்.


வெளியுலகில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோலாகலங்களுக்கும் களியாட்டங்களுக்கும் காரணமாக இருந்த இருவர் எதிலுமே பற்றில்லாதவர்களைப் போன்று தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் சிவபெருமானின் முன்பு அமைதியாகக் கரம் கூப்பி நின்றனர். ஒருவர் கங்கைகொண்ட சோழர்; மற்றொருவர் அரையன் இராஜராஜன்.

மூவருக்கு நீராட்டுதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இமயப் பனிவரையில் பிறந்து வளர்ந்த கங்கை எங்கோ தெற்கு மூலையில் வீற்றிருந்த தன் தலைவர் மீது இன்பவெள்ளமாய்ப் பொழிந்து கொண்டிருந்தாள். அந்தக் காட்சியைக் கண் குளிரக் கண்டு நின்றனர் இருவரும். இராஜேந்திரர் ஆனந்தப் பரவசம்கொண்டு, தமக்குள் இறைவனைத் துதிக்கலானார்:

“தென்னாடுடைய சிவனே! தஞ்சையம்பதியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! தங்களது திருவடி நிழலில் தஞ்சம் புகுந்திருக்கும் என் தந்தையாரிடம், ‘தாங்கள் இட்ட கட்டளைகளைத் தங்கள் மைந்தன், அவனால் இயன்ற வரையில் நிறைவேற்றி விட்டான்’ என்று சொல்லுங்கள். தந்தையாரின் ஆவிகுளிர, அவர்களுக்கும் தங்கள் திருமேனி தோய்ந்த கங்கை நீரைச் சிறிது அனுப்பிவையுங்கள்!... என்னுடைய நாட்டு மக்களின் புது வாழ்வுக்காக ஒரு புது நகரம் எழுப்பியிருக்கிறேன். தாங்கள் என் தந்தையாருடன் அங்கு எழுந்தருளி அனைவருக்கும் ஆசி வழங்குங்கள்!’’

தஞ்சைப் பெரிய கோலிலுக்கு இராஜேந்திரர் செல்லும் போதெல்லாம் அவருக்கு அவருடைய தந்தையாரின் நினைவு வருவதுண்டு. அவர் எழுப்பிய ஆலயம் என்ற காரணம் மட்டுமல்ல; அந்த ஆலயத்துக்கு உடையவனின்

திருவடிகளின் கீழ்தான் அவரும் குடி புகுந்திந்தார். இன்றுமிருக்கிறார்; ஆலயம் உள்ளவரை என்றும் இருப்பார். பூசை முடிந்தது.

தமது தந்தையாரின் இறுதிநாள் ஆவலை நிறைவேற்றி வைத்த ஆறுதலுடன் ஆலயத்திலிருந்து திரும்பினார் இராஜேந்திரர். அரையன் இராஜராஜனும் அவரைப் பின்பற்றி வந்தார். சித்தமாகக் காத்திருந்த ரதத்தில் அவர்கள் ஏறிக்கொண்டதும் அந்தரங்க ஆலோசனை மண்டபத்தை நோக்கி அது விரைந்தது.

சக்கரவர்த்திகளின் அந்தரங்க ஆலாசனை மண்டபத்தைச் சுற்றிலும் வேல் பிடித்த வீரர்கள் வெண்கலச் சிலைகளென நின்று கொண்டிருந்தனர். சக்கரவர்த்திகள் வெற்றியோடு திரும்பி வந்ததால் ஏற்பட்ட ஆனந்த நிறைவு அவர்களது முகங்களில் பிரதிபலித்தது.

மண்டபத்துக்குள் மாமன்னர் வீற்றிருக்க, அவரைச் சுற்றிலும் வல்லவரையர், பெரிய வேளார், அரையன் இராஜராஜன், இளங்கோ ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

மாமன்னரின் கரத்தில் வல்லவரையர் கொடுத்த நறுக்கோலை ஒன்று துடித்துக் கொண்டிருந்தது. அதைப் படித்துவிட்டு, சிறிது நேரம் சிந்தனை செய்தபின் வந்தியத்தேவரின் முகத்தைப் பார்த்தார் சக்கரவர்த்தி.

“சுந்தரபாண்டியரைச் சிறை செய்தபோது அவரிடமிருந்து கைப்பற்றிய ஓலை இது’’ என்றார் வல்லவரையர்.

“இந்த ஓலையைத் தவிர அவர்களிடமிருந்து வாய்மொழியாக வேறு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. வற்புறுத்திப் பெறுவதற்கும் வழியில்லை’’ என்றார்.

“போராட்டங்களெல்லாம் முடிந்து விட்டதென்று நினைத்தோம். அதற்கொரு முடிவே இருக்காது போலும்!’’ என்று கூறி வருத்தத்துடன் நகைத்தார் சக்கரவர்த்தி. “சாதனைகள் நிறைவேறப்போகும் சமயத்தில் புதிதாக ஒரு சோதனை முளைத்திருக்கிறது. என்ன செய்வது? அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.’’

“சோதனையா?’’ என்று பதட்டத்தோடு கேட்டார் பெரிய வேளார்.

“ஆமாம், நம்முடைய நண்பராக இருந்த கடாரத்தரசர் சங்கிராம விஜயோத்துங்க வர்மர் இப்போது பகைவராக மாறியிருக்கிறார். பாண்டியரைச் சார்ந்தவர்களின் தூண்டுதல்களால், நம்முடைய வாணிபக் கலங்களையே கொள்ளையிடும் அளவுக்கு அவருக்கு மெய்த்துணிவு பிறந்திருக்கிறது. நம்முடைய கடல் வாணிபத்துக்கு இதுவரையில் அவரையே காவலாக நம்பியிருந்தோம். வேலியே பயிரை மேயத் தொடங்கிவிட்டது.’’

“முன்பே ஜெகவீர நாச்சியப்பர் இதை என்னிடம் கூறியபோது, கடாரத்தரசருக்கு அந்தக் கடற்கொள்ளையில் பங்கு இருக்காதென்று நினைத்து தவறாகிவிட்டது’’ என்றார் வந்தியத்தேவர்.

“சக்கரவர்த்திகளே!’’ என்று துடித்துக் கொண்டு எழுந்த இளங்கோ, “எனக்கு அனுமதி தாருங்கள், சக்கரவர்த்திகளே! படைக்கலங்களோடு நான்

கடாரத்துக்குச் சென்று வருகிறேன்’’ என்றான். “தரைப்படை கங்கையை வென்றது; கடற்படை கடாரம் கொண்டது என்று பெயர் விளங்கட்டும்!’’

“கடாரம் என்ன ஈழநாட்டைப் போல் அவ்வளவு அருகில் இருக்கிறது என்று நினைத்தாயா?’’ -சக்கரவர்த்திகள் வினவினார்.

“தரை வழியாக வங்கத்துக்குச் சென்று வந்தோமல்லவா? அதைவிட நெடுந்தொலைவு கடல்வழி போகவேண்டும். புயல், மழை, கொந்தளிப்பு, கடற்பாறைகள், திமிங்கலங்கள் இவையெல்லாம் கடந்து கடாரத்தை அடையவேண்டும்.

எத்தனை போர்க்கலங்கள் செல்வது? எத்தனை வீரர்களை அழைத்துப் போவாய்? எத்தனை நாட்களுக்கு அவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லமுடியும்? எளிதல்ல, இளங்கோ!’’ -அரையன் இராஜராஜன் இளங்கோவுக்கு எடுத்துக் கூறினார்.

இளங்கோவின் உறுதி இதனால் மிகுதியாகியதே தவிரக் குறையவில்லை. “வருவதெல்லாம் வரட்டும்! பெரியவர்கள் அனைவரும் இங்கே இருந்து கொண்டு வெற்றி விழாவைச் சிறப்புற நடைபெறச் செய்யுங்கள். எனக்கு மட்டும் அனுமதி தாருங்கள்.’’

“பொறுமை வேண்டும், இளங்கோ!’’ என்றார் சக்கரவர்த்திகள்.

இளங்கோவின் கண்கள் கலக்கமுற்றன. “பாண்டியநாடு, சளுக்க நாடு, வங்க நாடு, எங்குமே என்னை அழைத்துச் செல்லவில்லை. என் ஆற்றலில் குறைகண்டால் கையில் வாளெடுக்கக் கூடாதென்று சக்கரவர்த்திகள் எனக்குக் கட்டளையிட்டுவிடலாம். ஆனால் இதுபோன்ற செய்திகளை கேட்ட பின்னரும் என்னால் பொறுக்க முடியவில்லை.’’

பெரிய வேளார் பெருமை தாங்காது கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்தார். வல்லவரையர் தமக்குள் சிரித்துச் சக்கரவர்த்திகளைக் கூர்ந்து நோக்கினார்.

“நானும் உன் வயதில் இப்படித்தான் இருந்தேன்’’ என்றார் கண்டோர் நடுங்கும் காலன்.

சக்கரவர்த்திகள் சற்றே யோசித்துவிட்டு “சரி இளங்கோ! உன் விருப்பப்படி நீயே புறப்படலாம்’’ என்றார்.

“நன்றி சக்கரவர்த்திளே!’’ என்று நாத் தழுதழுக்கக் கூறினான் இளங்கோ. ஆத்திரக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியது.

“ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் விழா முடிந்த பிறகுதான் கடாரத்துப் படையெடுப்பு. அதுவரையில் உனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன’’ என்றார் இராஜேந்திரர். ஓலைச் செய்தியின் பிற்பகுதியை அடுத்தாற்போல் கூறியபோது, வல்லவரையரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே திடுக்கிட்டார்கள்.

“தோல்வி கண்ட சளுக்க மன்னர் ஜயசிம்மரின் வீரர்கள் பலர் சுந்தரபாண்டியரின் வீரர்களோடு அப்போது சோழ நாட்டில்தான் மறைந்திருந்தார்களாம். எங்கெல்லாம் மறைந்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. எந்த நாளில் அவர்கள் என்ன செய்யக் காத்திருந்தார்கள் என்பதும் விளங்கவில்லை. வெற்றி விழாவின்போது திடீரென்று ஏதேனும் குழப்பங்கள் நேர்ந்தாலும் நேரலாம். தஞ்சைத் தலைநகருக்கு ஆபத்து வந்தாலும் வரலாம்.’’

செய்தியை வெளியிட்ட மாமன்னர் அதனால் சிறிதுகூடக் கலங்கவில்லை.

“திட்டமிட்டபடியே ஒன்பது தினங்களுக்குக் கங்கைகொண்ட சோழபுரத்தில் விழா நடத்துவோம். அப்போது தஞ்சைத் தலைநகரத்தை வல்லவரையர் மாமா அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். கொடும்பாளூரின் பொறுப்பு இளங்கோவிடம் இருக்கும்.’’

“என் கடமை?’’ என்றார் அரையர் இராஜராஜன்.

“நீங்களும் பெரிய வேளாரும் மற்ற எல்லோரும் என்னோடு விழாவல் கலந்துகொள்வீர்கள். சோழபுரத்தின் விழா ஏற்பாடுகளுக்குப் பெரிய வேளாரும் நீங்களும் பொறுப்பு! விழாவின் கடைசி தினத்தில் மட்டும் இளங்கோவும் மாமா அவர்களும் சோழபுரத்துக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.’’

பல தினங்கள் நடைபெறும் விழாவில் முழுவதும் தன்னால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், ஒன்பதாவது நாள் விழாவுக்குத் தன்னைச் சக்கரவர்த்திகள் அழைத்ததில் இளங்கோவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அன்றைய தினம்தான் விழாவின் சிகரம் போன்ற தினம். அவனுடைய கனவுகள் நனவாகும் தினமென்றும் கொள்ளலாம்!

ஆலோசனைகள் முடிவுற்றன. அனைவரும் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். சக்கரவர்த்திகள் மட்டிலும் சிறிது நேரம் அங்கு தனித்திருந்துவிட்டு மெல்ல எழுந்து அந்தப்புரத்தை நோக்கி நடந்தார். அவருடைய சிந்தனை அரசியலிலிருந்து சற்றே விலகி, அருள்மொழியிடம் சென்றது.

அருள்மொழியின் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் இராஜேந்திரர். தன் கண்களையே நம்ப முடியாமல் திகைத்து நின்ற அருள்மொழி ஓடோடியும் வந்து தன் தந்தையாரைத் தழுவிக்கொண்டாள். கண்ணீர்ப் பெருக்கு அடங்கி ஓய்வதற்கு நெடுநேரம் சென்றது.

“ஓராண்டுக் காலத்துக்கு மேலாகிவிட்டது! அரண்மனைக்குத் திரும்பி வந்த பிறகுகூடத் தந்தையாரைச் சந்தித்துப் பேசும் பாக்கியம் கிடைக்கவில்லை!’’ அருள்மொழி அவர் கரத்தில் முகம் புதைத்து விம்மினாள்.

வடக்கிலிருந்து தஞ்சைக்குத் திரும்பிய பின்னரும் அரசியல் அலுவல்களிலிருந்து சக்கரவர்த்திகளால் இதுவரை விடுபட முடியவில்லை. பசுவைப் பிரிந்து நின்ற கன்றுகளைப்போல் அவருடைய அரசியல் குடும்பம் அவரைச் சூழ்ந்துகொண்டது. ஒருநாள் நள்ளிரவுக்குப் பிறகு ஒருமுறை அரசியார் வீரமாதேவியிடம் தனித்துப்பேச நேரம் கிடைத்தது. வல்லவரையரிடமிருந்து ஓரளவுக்குக் குடும்பச் செய்திகளைத் தெரிந்துகொண்டார்; அவ்வளவுதான்.

பெறாத மக்கள் நாடு முழுவதும் பரவியிருந்தபோது, பெற்ற மக்களிடம் பேசுவதற்குப் பொழுதேது? எதற்குமே கலங்காத இராஜேந்திரரின் விழிகள் அருள்மொழியின் தவிப்பைக் கண்டவுடன் கலங்கிவிட்டன.

“அருள்மொழி, என்னை மன்னித்துவிடம்மா! நாட்டுக்காக என்னையே கொடுத்துவிட்ட பிறகு, வீட்டுப்பாசத்தை மறப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இன்னும் சிறிது காலத்துக்குப் பிறகு கடைசியாக நான் கண்ணை மூடும்போது, இந்த ஒரே குறை மட்டும் என் மனத்தை விட்டு அகலாது. என்னை மன்னித்துவிடு, அருள்மொழி!’’ என்றார் அரசர்.

அருள்மொழி அதிர்ச்சியுற்றாள். அவளுக்கு விவரம் தெரிந்த நாளாகச் சக்கரவர்த்தியின் கலக்கத்தையோ கண்ணீரையோ அவள் கண்டதில்லை. மேலும் அவருடைய உடலில் என்று மில்லாதவாறு வயதின் தளர்ச்சி தெரிந்தது. சட்டென்று அருள்மொழி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

“எனக்கும் வயதாகிவிட்டது. உனக்கும் வயதாகிவிட்டது. நான் இந்த உலகத்தைவிட்டு வேறு உலகத்துக்குச் செல்லவேண்டும். நீயும் இந்த அரண்மனையை, விட்டு வேறு அரண்மனைக்குச் செல்லவேண்டும். என்ன, நங்கையாருக்கு நான் கூறுவது விளங்குகிறதா?’’

“தங்களுக்கும் வயதாகவில்லை; நானும் தங்களை விட்டுப் பிரியப்போவதில்லை.’’

“நடக்கப் போவதைச் சொல்கிறேன் அருள்மொழி!’’

“இல்லவே இல்லை! தாங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்துகொண்டு இனி எந்தப் போர்க்களங்களுக்கும் செல்லாமல் நூறாண்டு வாழப்போகிறீர்கள். நானோ தங்களுக்கு அருகில் இருந்துகொண்டு என்றைக்கும் தங்களுக்குப் பணிவிடைகள் செய்யப்போகிறேன். தங்களுடைய அரண்மனைதான் என்னுடைய அரண்மனை!’’

“அருள்மொழி! நான் உன்னுடைய திருமணத்தைப் பற்றிக் கூறுகிறேன், அருள்மொழி.’’

“தந்தையார் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கும் விளங்குகிறது. தாங்கள் திரும்பி வந்தவுடன் நானும் தங்களிடம் ஒரு வரம் கேட்கவேண்டிய நாளும் வந்திருக்கிறது. இன்றைக்கே கேட்டுவிடுகிறேன். அதைத் தாங்கள் மறுக்காமல் எனக்குத் தந்தருள வேண்டும்!’’

அருள்மொழி இவ்வளவு ஆழமாகப் பேசக் கூடியவள் என்பதை மாமன்னர் முன்பே கண்டு வைத்திருந்தார். என்றாலும் தம்மையே சொற்களால் வளைத்துவிடக் கூடிய தன்மை அவளிடம் உண்டென்று அவர் நினைக்கவில்லை.

“வரமா? இறைவனிடம்தான் பக்தர்கள் வரம் கேட்பது வழக்கம். நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்?’’

“எனக்கு, தாங்களும் இறைவன்தான். எனவே கருணை கொண்டு எனக்குத் திருமண வாழ்விலிருந்து, தாங்கள் விடுதலை தேடித் தரவேண்டும். இதை நான் பலமுறை யோசனை செய்து, முடிவு கட்டிக் கொண்டு, தங்களிடம் கேட்கிறேன். தாங்கள் மறுத்தால் என் மனம் வெடித்துவிடும்.’’

“மகளே!’’ என்று அருள்மொழியை அன்போடு அணைத்துக்கொண்டார் மாமன்னர். மேலும் அவள் பேச்சைக் கேட்டால் தமது உறுதி தளர்ந்துவிடும் என்று உணர்ந்தார்.

"அருள்மொழி! நீ கொடும்பாளூர் அரண்மனைக்குச் சொந்தமான பெண். இளங்கோவுக்கு உன்னைத் திருமணம் செய்து வைத்துவிட்டால் எனது கடைசி ஆசைகளில் ஒன்று நிறைவேறிவிடும். மறுக்காதே அருள்மொழி!’’

அருள்மொழியின் விழிகள் குளங்களாக மாறிப் பின்னர் அருவிகளாகப் பெருக்கெடுத்தன. மளமளவென்று கண்ணீரைச் சொரிந்து கொண்டு சக்கரவர்த்தியின் காலடியில் சரிந்தாள். “வேண்டாம் தந்தையாரே! வேண்டாம்!’’ என்று கதறிக் கொண்டே அவர் பாதங்களில் வெம்மையான கண்மலர்த் துளிகளைத் தூவினாள்.

அருள்மொழியின் இதயம் தமது காலடியில் உடைந்து சிதறுவதைக் காணச் சகியாத மாமன்னர் அங்கிருந்து எழுந்து நடந்தார்.

தொடரும்


Comments