வல்லவரையரிடமிருந்து கொடும்பாளூர் செல்வதற்கான கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு, மாங்குடி மாறனிடம் ஆயத்தமாக இருக்கும்படிக் கூறிவிட்டு, மாலைப்பொழுது வந்தவுடன் மகிந்தர் மாளிகையை நோக்கி நடந்தான் இளங்கோ.
இளங்கோவின் மனம் இளவேனிற் காலத்து மாலைப் பொழுதைப்போல் இன்பம் நிறையப் பெற்றிருந்தது. அங்கே பூங்குயில்கள் கூவின; பொன்மலர்கள் சிரித்தன; நறுமணம் தென்றலில் கமழ்ந்தது.
அவனுடைய வீரத்தை உணர்ந்த மாமன்னர் அவனுக்குக் கடாரம் செல்வதற்கு அனுமதி அளித்துவிட்டார். அவனது காதலை உணர்ந்து காதலுக்குரியவளையே விழாவின்போது பரிசாகவும் அளிக்கப்போகிறார்! ஒன்பதாம் நாள் விழாவுக்கு அவர் தன்னை அழைத்திருப்பதன் காரணத்தை முதலில் ரோகிணியிடம் போய்ச் சொல்ல வேண்டும். அவளை முன்னேற்பாடாகக் குடும்பத்தோடு கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மற்றவர்களுடன் சேர்ந்து புறப்படச் சொல்ல வேண்டும்! நெஞ்சு நிரம்பும்வரை காற்றை இழுத்துச் சுவாசித்துக் கொண்டு கைவீசி நடந்தான் இளங்கோ. தனக்க நிகராக யாருமே இந்த உலகத்தில் பிறந்திருக்க முடியாது என்ற கர்வம் அவனுக்கு.
மகிந்தர் மாளிகைக்குள் நுழைந்து அதன் தோற்றத்தைக் கண்டவுடனேயே அவனுடைய கர்வத்தில் பாதி கரைந்தது. கந்துலனின் மகள் மித்திரை அவனைக் கண்ட மாத்திரத்தில் உள்ளே ஓடிவிட்டாள். கந்துலனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ரோகிணியை அவள் அறையில் காணவில்லை. இளங்கோவின் படம் வரையப்பட்டிருந்த திரைச்சீலையின் கிழிந்த துண்டு காற்றில் பறந்து வந்து அவன் காலடியில் சுருண்டது. காசிபனின் சித்திரம் அங்கு காணப்படவில்லை.
இளங்கோவின் இதயத்துக்குள்ளிருந்து குபீரென்று ஓர் எரிமலை கிளம்பியது. யார் செய்த தீங்கிது? எங்கே ரோகிணி?
இன்பவெள்ளத்திலே மிதந்து வந்தவன் எரிநெருப்பில் புகுந்து மீள்வதுபோல் மகிந்தர் மாளிகையின் பின்புறவாயில் வழியாக வெளியில் சென்றான். அவனுடைய அரண்மனையில் தங்கி, விருந்து உண்டு திரும்பிய மகிஷியார் அவனைக் கண்டவுடன் உபசாரத்துக்காக ஒரு சிரிப்புக்கூடச் சிரிக்காமல், பேயைக் கண்டவர்போல் மிரண்டு ஒளிந்தார்.
என்ன நடந்தது? ஏன் இந்தப் புறக்கணிப்பு? ஏன் இந்த அவமானம்?
இளங்கோவுக்கு ஒன்றும் புரியவில்லை. மாளிகையின் பின்புறத் தோட்டத்தை நோக்கி அவன் சாரைப் பாம்பென விரைந்தான். அவனது காலில் மிதிபட்டு மலர்கள் நசுங்கின; செடிகள் முறிந்தன. தரையே அதிர்ந்தது.
அவன் கண்ட காட்சியும் அதற்குமேல்தான் இருந்தது.
சரக்கொன்றை மரங்கள் எங்கே? அவற்றில் கொத்துக் கொத்தாய்த் தொங்கிய பொன்மலர்கள் எங்கே? மரகதப் போர்வைபோல் சூழ்ந்து நின்ற இளந்தளிர்கள் எங்கே?
பட்டுப்போன பாழ்மரங்களைப்போல் மொட்டை மொட்டையாய் நின்றன கொன்றை மரங்கள். சிறிய கிளைகள் அனைத்தும் ஒடிக்கப்பட்டு, பயங்கரமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன. கொம்பும் கிளையுமாக, இலையும் பூவுமாக விளங்கிய மரங்கள் மனிதனின் எலும்புக் கூடுகள் போன்று விகாரமாகக் காட்சியளித்தன.
இளங்கோவுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. வெற்றிவிழா கொண்டாட்டத்தில் தோரணங்கள் கட்டுவதற்காக யாரும் இப்படிச் செய்துவிட்டார்களோ.’
மறுகணமே அந்தச் சந்தேகம் விலகியது. இலைகளும் மலர்களும் வேறெங்கும் போகவில்லை. அதே இடத்தில் தரையில் தாறுமாறாகக் குவிந்து கிடந்தன. அந்தக் குவியல் ஒன்றின்மீது தலைவிரி கோலமாக உட்கார்ந்து கொண்டு அடிமரத்தில் சாய்ந்திருந்தாள் ரோகிணி. ரோகிணிதானா அவள்?
ஏனோ அந்தக் கோலத்தில் அவளைக் காணப் பிடிக்கவில்லை இளங்கோவுக்கு. சந்தடியின்றி வந்த வழியாகவே திரும்பிச் செல்ல நினைத்தான். ஆனால் அவ்வளவு தூரம் வந்தபிறகு, அவளையும் கண்ட பின்பு, அவனுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை.
“ரோகிணி!’’ என்று குழைவோடு மெல்லக் குரல்கொடுத்தான்.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் ரோகிணி. அவளுடைய கண்கள் இளங்கோவைக் காணும் கண்களாகத் தோன்றவில்லை. கொலையாளியைப் பார்த்துவிட்ட குற்றவாளியைப் போல் பதறிக்கொண்டு எழுந்தாள்.
“இதெல்லாம் என்ன ரோகிணி! உனக்கு என்ன வந்து விட்டது?’’
மீண்டும் மறுமொழியில்லை. ஆனால் கண்கள் இரண்டும் இளங்கோவின் முகத்தில் நிலை குத்திவிட்டன. கண்களா அவை? பழுக்கக் காய்ச்சிய இரு இரும்பு வேல்கள்! நேரே இளங்கோவின் நெஞ்சில் பாய்ந்து அங்கிருந்த குருதி நாளங்களைச் சுட்டுப் பொசுக்கின.
அவள் அருகில் கிடந்த காசிபன் படத்தையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான் இளங்கோ. காரணம் முழுமையாக விளங்காவிட்டாலும், காரணத்தின் ஒரு பகுதி பளிச்செனப் புலப்பட்டது. ரோகிணி அப்போது ரோகிணியாக இல்லை. காசிபனின் தமக்கையாக மாறியிருந்தாள்!
காசிபன் என்ற இளம் புலிக்குட்டி அவள் உள்ளத்துக்குள் பதுங்கி உறுமுவதை அவள் கண்களின் வாயிலாகக் கண்டுகொண்டான் இளங்கோ. நிலவைப் பொழியும் விழிகள் நெருப்பைக் கொட்டுகின்றனவே!
“ரோகிணி! பேசமாட்டாயா? ரோகிணி! என் மீதுள்ள கோபத்துக்குக் காரணம் கூறமாட்டாயா?’’
சித்தப்பிரமை கொண்டவள்போல் கலகலவென்று சிரித்தாள் அவள். பெண் சிரிக்கும் சிரிப்பல்ல அது. அவனுடைய கேள்விக்கு விடையளிக்காமல்,
“இந்தச் சரக்கொன்றை மரம் ஏன் இப்படி ஆகிவிட்டதென்று நீங்கள் கேட்கவில்லையே?’’ என்று அவனையே திருப்பிக் கேட்டாள். “நான்தான் முறித்தேன்! நான்தான் ஒடித்தேன்! நான்தான் அழித்தேன்!’’ மீண்டும் அந்தப் பயங்கரச் சிரிப்பு.
“காரணமா கேட்கிறீர்கள்? அதுவும் என்னிடமா கேட்கிறீர்கள்? உங்கள் நெஞ்சைக் கேட்டுப் பாருங்கள்! நெஞ்சு என்று ஒன்று இருக்கிறதா உங்களுக்கு? இதோ இவனிடம் கேட்டுப் பாருங்கள்!... காசிபா, அவரிடம் சொல்லடா காரணத்தை!’’
அருகில் கிடந்த காசிபன் படத்தைச் சுட்டிக்காட்டி விட்டு, அவளுடைய பயங்கரமான விழிகளால் இளங்கோவை மென்று உறிஞ்சத் தொடங்கினாள்.
“வேண்டாம், ரோகிணி! முன்பே உன்னிடம் கூறியிருக்கிறேன்.
உன்னுடைய விழிகளுக்கு இந்தப் பார்வை கூடவே கூடாது! காரணம் எதுவாக இருந்தாலும் என்னிடம் மெதுவாக எடுத்துச்சொல். இல்லாவிட்டால் நான் வெறியனாகி விடுவேன்; முரடனாகி விடுவேன்! உன்னுடைய அந்த விழிகளால் என்னைக் கொடியவனாக்கி விடாதே ரோகிணி! கொலைகாரனாக மாற்றிவிடாதே!’’
அன்புக்கு மட்டிலும் கட்டுப்பட்ட ஒரு முரட்டு வீரனின் உயிர், ஆத்திரத்தில் அறிவிழந்து தடுமாறிய ஒரு பேதையின் உயிரிடம் அமைதி கேட்டுத் துடித்தது. அவளை மறைமுகமாக எச்சரித்தது.
“ஓ! இன்னும் நீங்கள் கொடியவராக மாறவில்லையா? கொலைபாதகராக மாறவில்லையா? ஒரு கொலை செய்து விட்டது போதாதென்று, மற்றொரு கொலை செய்வதற்கு வந்திருக்கிறீர்களா?’’ ஏளனமாக நகைத்தாள் ரோகிணி.
“என்ன?’’ கொடும்பாளூர்க் குலத்தின் பிறவிக் குணம் இளங்கோவின் இரத்தத்தில் கலந்து விட்டது. ரோகிணியின் கருங்கூந்தல் இளங்கோவின் பிடியில் இருந்தது. “என்ன கூறினாய்?’’
பெண்ணுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத உத்தமக் குலம் அது. ஆனால் அதற்காகப் பெண்ணின் ஏளனத்தையோ, வெறுப்பையோ, அலட்சியத்தையோ அதனால் தாங்கிக் கொள்ள முடியாது. அது ஆளப்பிறந்த வேளிர்குலம்! அடிமைப் பெண்ணின் ஆத்திரம் அதற்கு முன்?...
ரோகணத்துப் பெண்மட்டிலும் கொடுமை நிறைந்த கொடும்பாளூர் குலத்தவருக்குச் சிறிதும் இளைத்தவள் அல்லவே! பெரிய வேளாருக்கு அவன் ஒரே செல்வப் புதல்வனென்றால், அவளும் மன்னர் மகிந்தரின் ஒரே செல்வப் புதல்வியல்லவா! கொடும்பாளூரை விட ரோகணம் எந்த வகையில் குறைந்து விட்டது?
“என் தம்பியைச் சித்திரவதை செய்து கொன்று விட்டு இரத்தம் தோய்ந்த அதே முகத்துடன் என்னிடம் வந்திருக்கிறீர்களே, உங்களுக்குத் தன்மானமில்லை? அச்சமில்லை? வெட்கமில்லை? மனிதரா நீங்கள்? மனிதராக இருந்தால் என் முகத்தில் விழிப்பதற்கு உங்களுக்கு மெய்த்துணிவு ஏற்பட்டிருக்குமா?’’
இளங்கோவின் தலையில் இமயம் பெயர்ந்து விழுந்தது. “காசிபன் இறந்து விட்டானா?’’
அவன் பூமியின் அதல பாதாளத்துக்குள் அழுந்திக் கொண்டிருந்தான். அவனை அழுத்திய பாரம் அவனை தரையோடு தரையாக நசுக்கிய பிறகும், அவனை விடுவதாக இல்லை.
ரோகிணி அவன் உணர்ச்சிகளைச் சிறிதுகூடப் புரிந்து கொள்ளாமல், அவன் தவிப்பைச் சிறிதுகூடக் கண்டு கொள்ளாமல், மேலும் மேலும் நெருப்புமழை பொழிந்து கொண்டிருந்தாள்.
“இதற்காகத்தான் என்னிடம் காசிபனை மறந்துவிடச் சொல்லி ஆணை பெற்றீர்களா? இதற்காகத்தான் திருமயில் குன்றத்தில் என்னிடம் மகிழ்ந்து பேசிவிட்டுத் திடீரென்று கிளம்பிச் சென்றீர்களா? இதற்காகத்தான் இந்த நகரம் இத்தனை பெரிய விழாக் கொண்டாடிக் குதூகலிக்கிறதா? கூறுங்கள்!’’
அவளை ஏறிட்டுப் பார்த்தான் இளங்கோ. அந்தப் பார்வையின் வேதனையை அவள் அணுவளவாவது உணர்ந்திருந்தால், பேச்சை நிறுத்தியிருப்பாள்.
அவள் நிறுத்தவில்லை. “காசிபனைக் கொன்றுவிட்ட மாவீரத்துக்குப் பரிசாக என் கரத்தை உங்களுக்குச் சக்கரவர்த்தி கொடுக்கப் போகிறார்! இல்லையா?’’
இளங்கோவின் உதடுகள் துடித்தன. அவனது பரந்து விரிந்த மார்பு வெடித்துவிடும் போல விம்மியது. ‘ரோகிணி வேண்டுமென்றே நான் அவனைக் கொல்லவில்லை, ரோகிணி! காசிபன் அங்கிருந்தது தெரிந்திருந்தால் நான் என்னுடைய போர் முறையை வேறுவிதமாக மாற்றி அவனை உயிரோடு
கைப்பற்றி உன்னிடம் கொண்டு வந்திருப்பேன் ரோகிணி! தெரியாமல் நேர்ந்த தவறுதலுக்காக உன்னிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்கிறேன். ரோகிணி! நடந்துவிட்டதை இனி மாற்றி அமைக்க முடியாது. அதற்காக நான் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும், சொல்?’
இப்படி அவளிடம் கூற நினைத்தானே தவிர அவன் வாய்விட்டுக் கூறவில்லை. கூற நினைத்ததைக் கூறாமல் “காசிபன் இறந்து விட்டானென்பது எப்படித் தெரிந்தது?’’ என்று கேட்டான்.
பெண்புலி பெண் பேயாக மாறியது.
“கொன்றதை மூடி மறைத்துவிட்டு என்னிடம் குலவி மகிழ்வதற்கு வந்தீர்கள் போலும்! என்றென்றும் என்னை ஏமாற்றிவிட்டு, நீங்கள் இன்புற்றிருக்க நினைத்தீர்கள் போலும்! இப்போது தெரிகிறது. உங்கள் மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் ராஜதந்திரம்! உங்களுடைய அன்புகூட ராஜதந்திர அன்புதான்! வெறுப்புக்குரிய வெளி அன்பு! எல்லாமே வெளி வேடம்!’’
அன்புக்கும் ஓர் எல்லை உண்டு. மனித வாழ்வே எல்லைக்குள் அடங்கி நிற்கும்போது, மனித மனத்தின் உணர்வுக்கும் ஒரு வரையறை உண்டல்லவா?
இளங்கோவின் பிறவிக்குணம் திரும்பிவிட்டது. கொடும்பாளூர் இரத்தத்தால் அதன் கொதிப்பைத் தாங்க முடியவில்லை.
“ரோகிணி, உன் தம்பியைக் கொன்றதற்காக நான் இப்போது மகிழ்ச்சியடைகிறேன்! எங்களுடைய நாட்டுக்குத் துரோக மிழைத்தவர்களுக்குக் கிடைக்கவேண்டிய தண்டனை அவனுக்குக் கிடைத்திருக்கிறது. சதிக்கூட்டத்தாரோடு சேர்ந்ததன் பயனை அவன் அனுபவித்திருக்கிறான். ஆனால் அதற்காகக்கூட நான் மகிழ்ச்சியடையவில்லை. உன்னையும் உள்ளத்தால் என்னிடம் நெருங்கவிடாமல் உன் மனதிலிருந்து கொண்டே உன்னை எனக்கு எதிராகத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தானல்லவா, அதற்காக!’’
“இனி நாம் ஈருயிரும் ஓருயிராக ஒன்றிவிடுவோம் இல்லையா?’’ ரோகிணி மிகமிக அலட்சியமாக நகைத்தாள். “இனியும் நான் கொடும்பாளூருக்கு வந்து வாழ்வேன் என்று நம்புகிறீர்கள்! இல்லையா?’’
“இல்லை! இல்லவே இல்லை! இந்தக் கணத்திலேயே நீ கொடும்பாளூரான் கையால் மாளப் போகிறாய்!’’ என்று கூறிக்கொண்டே அவள்மீது பாய்ந்தான் இளங்கோ.
“தொடாதீர்கள்! தீண்டாதீர்கள்! உங்களுடைய கரம் பட்டு மடிந்தால்எனக்கு நரகத்தில்கூட இடம் கிடைக்காது’’ என்று அலறினாள் ரோகிணி. நீண்டு சென்ற இளங்கோவின் கரம் வெட்டப்பட்டு வீழ்வதுபோல் கீழே விழுந்தது. உடல் முழுதும் தீப்பற்றி எரிவதுபோல் உணர்ந்தான். தலையைக் குனிந்துகொண்டே தட்டுத் தடுமாறியபடி திரும்பி நடந்தான். ரோகணத்துப் பெண்புலி கொடும்பாளூர் ஆண்புலியின் இதயத்தைக்கவ்வி வெளியே இழுத்துப் போட்டுத் தன் கூரிய பற்களால் சல்லடைக்கண்களாகத் துளைத்து விட்டது!
தொடரும்
Comments
Post a Comment