Skip to main content

வேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3- 36- அரசகுல தர்மம்.


இளங்கோவை மணந்துகொள்ளும்படி அருள்மொழியிடம் இராஜேந்திரர் முதல் முறையாகக் கூறியபோது, அவள் அதை அவ்வளவு பிடிவாதமாக மறுத்துவிடுவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தயங்குவாள், யோசனை செய்வாள், பின்பு காரணம் கூறித் தனது நிலையை விளக்க முன் வருவாள் என்றே அவர் நினைத்தார்.

அருள்மொழியின் மறுப்பை அவர் முற்றிலும் எதிர் பார்க்காமலும் இல்லை. ஆனால் அது படிப்படியாக இருக்குமென நம்பினார். நங்கையார் எளிதில் உணர்ச்சி வயப்படாத பெண். ஆகவே தக்க காரணங்களைக் கூறி அவளுடைய மனத்தை மாற்ற முடியும் என்ற எண்ணம் மாமன்னருக்கு இருந்தது.

அந்த எண்ணத்தை அரைநாழிகைப் பொழுதுக்குள் அடியோடு அசைக்கத் தொடங்கிவிட்டாள் அருள்மொழி. உணச்சிகளை மறைக்கத் துணிந்தவளின் உள்ளக்குமுறல் வெளியானால் அது அப்படித்தான் இருக்குமோ? அருள்மொழியின் பிடிவாதமும் மறுப்புமே அவளுக்கு இளங்கோவிடமிருந்துவந்த ஆழ்ந்த அன்பை மாமன்னரிடம் காட்டிக் கொடுத்துவிட்டன.

ஆனால் எதற்காகவும் இராஜேந்திரர் தம்முடைய முடிவை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவருடைய முடிவு இளங்கோ இரண்டு இளரவசிகளையும் மணந்து கொள்ள வேண்டுமென்பதே!

அருள்மொழியிடம் முதலில் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு, அடுத்தாற்போல் ரோகிணியைப் பற்றியும் கூற விரும்பினார். சம்மதம் கிடைக்கவில்லை; மறுத்துவிட்டாள் நங்கை.

அவளுடைய மறுப்பின் காரணம் அவருக்குத் தெரியாததல்ல. அவளுடைய அந்த மன நிலையில் அவளை அதிகமாக வற்புறுத்த வேண்டாமென்பதற்காக நேரே வல்லவரையரிடம் வந்தார்.

அரசியல் இராஜதந்திரிகள் இருவரும் சிறிது நேரத்துக்குக் குடும்பவியல் இராஜதந்திரிகளாக மாறினார்கள். தங்கள் தங்களது வீட்டமைச்சர்களான வீரமாதேவியார், பெரிய குந்தவையார் இவர்களிடம் பெற்று வந்த ஆலோசனைகளையும் அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்து இருவரும் ஒன்றாக அருள்மொழியைக் காணச் சென்றார்கள்.

எத்தனையோ செயற்கரிய செயல்களைத் தனித்து நின்று சாதித்த மாமன்னருக்கு இப்போது வல்லவரையரின் துணை மிக மிக அவசியமாகத் தோன்றியது. இராஜேந்திரரின் தந்தையான அருள்மொழிவர்மரின்

பேத்தியல்லவா இந்த அருள்மொழி! அவளுடைய தாய்வழி கொடும்பாளூர்க் குலவழியல்லவா?

பெரியவர்கள் இருவரும் தனது இருப்பிடம் தேடி வருவதைக் கண்டவுடன் அவர்கள் வந்த காரணத்தை அறிந்து கொண்டாள் அருள்மொழி. மாமன்னரிடமிருந்து அவள் பெற்ற அதிர்ச்சி இன்னும் அவளை

விட்டகலவில்லை.

‘அதற்குள் மீண்டும் எதற்காக வந்திருக்கிறார்கள்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“நங்கையாரே! தமது வாழ்வில் தோல்வி என்பதைக் கண்டறியாத சக்கரவர்த்திகள் உங்களிடம் தோற்றுப் போய்விட்டதாக என்னிடம் வந்து கூறினார்கள். இது மெய்தானா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்

வல்லவரையர் வந்தியத்தேவர்.

அருள்மொழி தன் தந்தையாரின் கண்களை ஏறிட்டுப் பார்த்தாள். வல்லவரையரின் விழிகளில் தென்பட்ட தெளிவு அவற்றில் காணப்படவில்லை.

அதைக் கண்ட அருள்மொழியின் கண்களும் கலக்கமுற்றன.

நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே அருகிலிருந்த ஆசனத்தில் மௌனமாக அமர்ந்தார் இராஜேந்திரர். இனி அவருடைய எண்ணங்கள் வல்லவரையரின் வாய்மொழியாக வெளிவரும் என்று தெரிந்து கொண்டாள் அருள்மொழி. இராஜேந்திரருடைய கடைசி ஆயுதம் மௌனம். அதை அவர் எடுத்த எடுப்பிலேயே பிரயோகம்

செய்து விட்டார்! ஆகவே அருள்மொழி வல்லவரையரிடம் திரும்பி,

“தாத்தா!

தந்தையாரிடம் நான் கேட்ட வரத்தை மறுப்பதற்காகத் தாங்களும் அவர்களோடு துணைக்கு வந்திருக்கிறீர்கள் போலும்’’ என்றாள். “நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் அது எனக்கு அமைதி தரும். தந்தையாருக்கும் இறைவனுக்கும் பணி செய்துகொண்டே நான் இன்பத்தோடு வாழ்வேன். இதில் யாருக்குமே துன்பமிருக்காது.’’

“நங்கையாரே! நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுடைய விருப்பத்துக்கும் நீங்கள் சிறிது செவிசாய்க்க வேண்டும்.’’அருள்மொழியின் நெற்றி சுருங்கியது; “என்ன தாத்தா?’’

“ரோகிணியைக் கட்டாயம் இளங்கோ மணந்து கொள்ளத்தான் போகிறான். அதைத் தடுத்து நிறுத்திவிட்டு உங்களுடைய திருமணத்தை நடத்துவதற்கு நாங்கள் முன் வரவில்லை. அவன் உங்கள் இருவரோடும் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.’’

“என்ன!’’ என்று பதறித் துடித்தாள் அருள்மொழி.

“முன்பு உங்களிடம் இந்தச் செய்தியைக் கூறவந்த சக்கரவர்த்திகள் முழுவதும் கூறாமலே திரும்பிவிட்டார்கள். இப்போது நான் கூறுகிறேன், - நமக்கு இனி இருப்பது ஒரே ஒரு வழி! அந்த வழியின்படி ஆலோசனை செய்துதான் முடிவு செய்திருக்கிறோம். அரச குல வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்துவிடவில்லை.’’

துன்பம் தோய்ந்த சிரிப்பென்று வெளிப்பட்டது அருள்மொழியிடமிருந்து. சற்று நேரம் சிந்தனை செய்துவிட்டுப் பிறகு பேசலானாள்.

“தாத்தா! அம்மங்கை தேவி எப்படி என் உடன்பிறந்த தங்கையோ

அதேபோல ரோகிணி என் உடன் பிறவாத தங்கை உடன்பிறந்த தங்கையைவிட, உடன் பிறவாதவள் என்பதாலேயே அவளிடம் நான் அதிகமாகப் பற்றுதல் கொண்டிருக்கிறேன். என் தங்கை என்று ரோகிணியைச் சொல்வதைவிட, என்னையே அவளிடம் காணுகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. நான் என்னையே அப்படி நாளுக்கு நாள் மாற்றிக்கொண்டு விட்டேன். அவள் பெறும் இன்பமெல்லாம் நான் பெறும் இன்பம். அவள் பெறும் மகிழ்ச்சியெல்லாம் நான் பெறும் மகிழ்ச்சி; என்னை நான் அவளுக்கே கொடுத்து விட்டேன். அதுவும் எனக்காகவே கொடுத்துவிட்டேன். உங்களுக்கு விளங்குகிறதா, தாத்தா?’’

அருள்மொழியின் சொற்கள் மின்வெட்டுகளைப்போல் தங்கள் நெஞ்சில் பாய்வதைப் பெரியவர்கள் இருவரும் ஒன்றாக உணர்ந்தார்கள். அவர்களுடைய மனதுக்குள் ஒரே ஒளி வெள்ளம். அந்த ஒளியின் வழியே தெரிந்த அருள்மொழியின் அழகுருவம் வானத்துக்கும் பூமிக்கும் ஒன்றாக உயர்ந்து விளங்கியது.

சாம்ராஜ்யத்துக்காக எத்தனை எத்தனையோ தியாகங்களைச் செய்த சக்கரவர்த்தி தம் புதல்வியின் முடிவுகேட்டு அயர்ந்து போனார். காதலுக்காகக்

காதலையே தியாகம் செய்கிறாளே இவள்! அவளுடைய ஒரே சாம்ராஜ்யம் எதுவோ அதற்காக அதையே தியாகம் செய்துவிடுவதா?

என்றாலும் சக்கரவர்த்தியின் மௌனம் கலையவில்லை.

வல்லவரையர், “நங்கையாரே!’’ என்று எதையோ கூற முன் வந்தார்.

“தாத்தா! நான் கூறியதையெல்லாம் நீங்கள் அப்படியே நம்பவேண்டும், தாத்தா! உணர்ச்சி வயப்பட்டு நான் ஒன்றையும் கூறவில்லை. சிறிது சிறிதாக அவைகளை வென்ற பின்புதான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.’’

“அத்தனை பெரிய தியாகம் எதற்கு அம்மா அருள்மொழி!’’

“இதில் அணுவளவு கூடத் தியாகமில்லை, தாத்தா!’’ என்றாள் அவள்.

“தியாக உணர்ச்சியைக்கூடத் தியாகம் செய்துவிடப் பார்க்கிறார் நங்கையார்!’’ வல்லவரையர் மாமன்னரைத் திரும்பிப் பார்த்தார். இதுபோன்ற ஓர் அருந்தவப் புதல்வியைப் பெற்றெடுத்த பெருமைக்காக அவர் மாமன்னரை வாழ்த்துவது போன்றிருந்தது அந்தப் பார்வை.

“ரோகிணியும் நானும் ஒன்றாகிவிட்டபோது, அவளுக்குத் திருமணம் நடந்தால் அதுவே என் திருமணம். அந்த விருப்பத்தை மட்டிலும் நிறைவேற்றுங்கள். ஒருத்தியிருக்க வீணே இருவர் எதற்கு?’’

“அரசகுலத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றவர்களுடைய திருமணங்களைப் போன்றவையல்ல அருள்மொழி. அரசகுலத் தர்மம் வேறு. மக்கள் வழித் தர்மம் வேறல்லவா? ஏகதாரம் என்ற முறையை அரச குலத்தில் பிறக்கும் ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை நங்கையாரே.’’

“அதற்காக நான் சொல்லவில்லை தாத்தா! ரோகிணியைத் தவிர இன்னும் வேற்று நாட்டுப் பெண் யாரையேனும் நீங்கள் விரும்பினால் கொடும்பாளூர் இளவரசருக்கு மணம் செய்து வையுங்கள். எனக்கு மட்டும் தனித்திருக்க அனுமதி கொடுத்தால் போதும்!’’

அதுவரையில் மௌனத்தைக் கடைப்பிடித்த இராஜேந்திரர்,

“அருள்மொழி!’’ என்று அதட்டினார்.

அருள்மொழி தன் தந்தையைத் திரும்பி நோக்கினாள்.

“ரோகிணியும் நீயும் ஒன்று என்பது உன் எண்ணம். அதுவே எங்களது எண்ணமாக இருந்திருந்தால் நாங்கள் இவ்வளவு தூரம் உன்னை வற்புறுத்தியிருக்கமாட்டோம். நீ நினைப்பது உண்மையல்ல, அருள்மொழி; நாங்கள் இப்போது இளங்கோவின் நலனின் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. எதிர்காலத்துக் கொடும்பாளூர்க் கோனாடு அவனுடையது. அந்தக் கோனாடோ சோழ சாம்ராஜ்யத்தின் அடித்தளம் போன்றது. நான் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் இந்த நாட்டின் நலனோடு ஒன்றிப் பார்க்கவேண்டியிருக்கிறது. அவனுடைய நல்வாழ்வு இந்நாட்டின் நல்வாழ்வு என்பதை மறந்து விடக்கூடாது, அருள்மொழி!’’

“அவருடைய நல்வாழ்வுக்கு ரோகிணியால் என்ன குறை வந்துவிடும்? இருவரும் ஒருவரையொருவர் தங்கள் உயிரைவிடப் பெரியதாக மதிக்கிறார்கள்.

அவர்களுடைய அன்பின் ஆழம் எனக்கு நன்றாகத் தெரியும்!’’

“நங்கையாரே! உங்களுக்கு அன்பு மட்டிலும் தெரியும். ஆனால் அதன் ஆழம் தெரியாது’’ என்றார் வல்லவரையர். அருள்மொழியின் கண்கள் சிவந்தன. வல்லவரையரைச் சினந்து நோக்கி, என்னுடைய ரோகிணியையா நீங்கள் குறை கூறத் துணிந்தீர்கள்?’’ என்று ஆத்திரத்தோடு கேட்டாள்.“ரோகிணியைக் குறை கூறவில்லை அம்மா! பெண்ணுக்குப் பெண் குண வேறுபாடுகள் நிறைய உண்டு. நீயும் ரோகிணியும் ஒன்றாகிவிட முடியாது. குண வேறுபாடுகளை நான் கவனித்து விட்டுதான் சொல்கிறேன். குறை கூறவில்லை, அருள்மொழி!’’

அருள்மொழிக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீங்கள் என்ன கூறுகிறீர்கள், தாத்தா?’’ என்று கேட்டாள்.

“அவர்கள் நெருங்கிப் பழகத் தொடங்கியதற்கே மூல காரணம் நாங்கள்தான். எங்களுக்கு ஒருவேளையில் அதனால் வெற்றி கிடைத்தது. ஆனால் அந்த வெற்றிக்குப் பிறகு அவர்களை நான் பிரிக்க விரும்பவில்லை. தூரத்திலிருந்து கொண்டே அவ்வப்போது அவர்களை நான் கண்காணித்து வந்திருக்கிறேன். அதனால் எனக்கு ஓரளவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ரோகிணியும் இளங்கோவும் மகிழ்ந்திருந்த நேரத்தைவிட அவர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொண்டே நேரமே அதிகம். நான் எப்படி அதை உணர்ந்து கொண்டேன் என்பதை உன்னிடம் வெளிப்படையாகச் சொல்லட்டுமா?... ரோகிணி இதுவரையில் இளங்கோவைத் தன்னுடைய அன்பு மிகுதியால் கொடுமைப்படுத்தியே வந்திருக்கிறாள். கொடுமை நிறைந்த குரூரமான அன்பு அவளுடையது.’’

திடுக்கிட்டுப் போனாள் அருள்மொழி. ரோகிணிக்காக இளங்கோ நிலவறைச் சிறைக்குள் புழுங்கிய காட்சி அவள் மனக்கண் முன் வந்தது. என்றாலும் ரோகிணியால் இளங்கோவுக்குக் கிடைத்த வெற்றிகளையும் அவள் மறந்து விடவில்லை. அவற்றையெல்லாம் வல்லவரையருக்கும் மாமன்னருக்கும் நினவூட்டினாள் அருள்மொழி. மாமன்னர் இராஜேந்திரர் தமக்குள் நகைத்துக் கொண்டார்.

ரோகிணிக்காக அருள்மொழி பரிந்து பேசியது முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, “மெய்தான் நங்கையாரே’’ என்றார் வல்லவரையர். “ஒரு பாதி ரோகிணியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், மறு பாதியையும் நான் அறிந்திருக்கிறேன். இளங்கோவுக்கோ சிந்திக்க நேரமில்லை. சிந்தனையை மறைக்கும் அளவுக்கு அவன் அவள்மீது அன்பு கொண்டிருக்கிறான். இன்றைக்கு அவர்கள் பழகும் விதம் வேறு, திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வாழப்போகும் வாழ்க்கை வேறு. அதை நினைத்துத்தான், உங்களையும் இணைத்து அவன் வாழ்வில் நிறைவுதேடிக் கொடுக்க முயற்சி செய்கிறோம்.’’

‘இளவரசரின் நன்மைக்காகவா என்னை வலிந்து மணம் செய்து வைக்கப் பார்க்கிறார்கள்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் அருள்மொழி. அவளுடைய உள்ளத்தில் ஓர் இன்ப அருவி ஊற்றுப் பெருக்கெடுக்கத் தொடங்கியது. என்றாலும் ரோகிணியைப் பற்றி வல்லவரையர் கூறியதை அவள் முழுவதும் நம்பவில்லை.

வல்லவரையர் கூறலானார்:

“காரணத்தை விதியென்று சொல்வதா, அல்லது அவரவர் பிறப்பு வளர்ப்பென்று சொல்வதா, அல்லது அவர்கள் இருவருக்குமிடையில் ஏதோ எதிர்ப்புச்சக்தி மறைந்திருக்கிறதென்று சொல்வதா என்றே விளங்கவில்லை. இந்த நிலையில் இளங்கோவுக்கு நாங்கள் எதையும் எடுத்துச் சொல்லி அவனைத் திருப்பிவிட முடியாது. அவனுடைய எதிர்காலக் கனவுகளே அதனால் சிதைந்துவிடக் கூடும். திருமணத்திற்குப் பிறகு, ஒருவேளை ரோகிணி உங்களுடைய பழக்கத்தால் மாறி விடுவாள் என்று நம்புகிறோம். அல்லது அவன் அவளிடம் தேடிக் காணாத அன்பின் ஆழத்தை நங்கையாரிடம் காண முடியும். அவனுடைய நன்மையைக் கருதியே நாங்கள் இதைச் செய்கிறோம். ஆழம் நிறைந்திருக்கும் கடல் பகுதியில் அடிக்கடி அலைகள் எழும்புவதில்லை. ஆனால் அவர்களுடைய அன்பில் அடிக்கடி ஆத்திரம் பொங்குவதை நான் கண்டிருக்கிறேன்.’’

வல்லவரையர் இதைக் கூறி முடித்த பின்பு நங்கையாரின் முகத்தை நோக்கினார். நங்கையாரின் தலை கீழே கவிழ்ந்திருந்தது. இளங்கோவுக்காக இரண்டு நீர் மணிகள் அவள் விழிகளில் திரண்டிருந்தன.

“அருள்மொழி! உன் முடிவுதான் என்ன?’’ என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“கொடும்பாளூர் இளவரசருக்காக நான் எதையும் செய்யக் காத்திருக்கிறேன், தந்தையாரே’’ என்றாள் அவள் கலக்கத்துடன். அத்துடன் அவள் நிறுத்தவில்லை.

“எதற்கும் நான் ரோகிணியின் எண்ணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றாள்.

பெரியவர்கள் மெதுவாக அங்கிருந்து எழுந்து சென்றார்கள். அவர்கள் சென்றவுடன் அருள்மொழி கண்களைத் துடைத்துக்கொண்டு மகிந்தரின் மாளிகையை நோக்கி நடந்தாள்.

தொடரும்Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…