வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 37. பெண் செய்த பெரும் பிழை )

பாகம் 3 ,   37. பெண் செய்த பெரும் பிழை 


ரோகணத்துப் பெண்புலியின் ஆத்திரம் கொடும்பாளூர் கொடு வேங்கையின் மீது சீறிப் பாய்ந்து அவன் இதயத்தை இருகூறாகக் கிழித்த பின்னரும் அடங்கவில்லை.

தன்னை விட்டுப் பிரிந்து சென்ற இளங்கோவை ரோகிணி வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். சிறிது தூரம் சென்ற பிறகு, மீண்டும் தன்னிடம் திரும்பி வருவான் என்று நினைத்தாள். ஆனால் இளங்கோவோ அதற்குள்
வெகுதூரம் போய்விட்டான்.

ரோகிணி வாய்விட்டுக் கத்தினாள்.

“இளவரசே! உங்களுடைய வீரம் இப்போது எங்கே போய்விட்டது? நீங்கள் கூறியதுபோல் என்னைக்
கொன்றுவிட்டுப் போவதுதானே? துணிவில்லையா உங்களுக்கு?’’

எவனுடைய கரம் தன்மீது பட்டால் தனக்கு நரகம் கூடக் கிடைக்காது என்று சற்று முன்பு கூறினாளோ அவனையே தன்னை வந்து சொல்லச் சொல்லி அழைத்தாள் ரோகிணி.

ஆனால் இளங்கோ அவளுக்குச் செவிசாய்த்துக் கொண்டு அங்கு நிற்கவில்லை. அவளுடைய குரலைக் கேடடுக்கொண்டு, ஒன்றும் கேளாதவனைப்போல் அவன் நடந்தான். அவனுடைய அலட்சியம் ரோகிணியின் விழிகளில் நெருப்பைக் கொட்டியது.

‘காசிபனைக் கொன்று குவித்துவிட்டு அதற்காக என்னிடம் ஒரே ஒரு ஆறுதல்மொழி கூடத் கூறாதிருக்க வேண்டுமானால் இவர் மனித இதயம் படைத்தவர்தானா? மனிதரா இவர்? அல்லது கொலையையே தொழிலாகக்
கொண்ட எமதூதரா?’

விநாடிக்கு விநாடி வெறுப்பும் கசப்பும் மிகுந்தன ரோகிணிக்கு. மொட்டையாய் நின்ற சரக்கொன்றை மரத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பிறகு மௌனமாகத் தனது மாளிகையை நோக்கி நடந்தாள்.

மாளிகையில் மித்திரையிடம் கூட அவள் முகம் கொடுத்துப்  பேசவில்லை. அவளுடைய தந்தையார் காசிபனைப் பற்றிய செய்தி கேட்டதிலிருந்து அவளிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். தன் அறையில்
கிடக்கப் பிடிக்காமல் வெளி வாயிலுக்குச் சென்றாள் ரோகிணி. மித்திரையும் மெல்ல அவளோடு நடந்தாள்.

அரண்மனை முகப்பில் வரிசையாகப் பல குதிரை வீரர்கள்
அணிவகுத்துச் சித்தமாக இருந்தனர். அவர்களுக்கு முன்னே இளங்கோ புரவியின் மீது சிலைபோல் வீற்றிருந்தான்! குதிரைகள் மெல்ல நகர்ந்தன.

“இளவரசர் கொடும்பாளூருக்குச் செல்கிறார். இளவரசி!’’ என்று இளங்கோவை ரோகிணிக்குச் சுட்டிக் காட்டினாள் மித்திரை.

இளங்கோவின் முகம் ஒருமுறைகூட மகிந்தர் மாளிகைப் பக்கம் திரும்பவில்லை. அவனும் அவனுடைய வீரர்களும் சென்ற பின்பு  அரண்மனைக் கதவுகள் மூடிக்கொண்டன. இளங்கோவின் மனக்கதவும் அவ்வாறே ரோகிணிக்கு மூடப்பட்டு விட்டதா?

“அகந்தையைப் பார்த்தாயா மித்திரை? இளவரசரின் இறுமாப்பைப் பார்த்தாயா?’’ என்று பொங்கிவரும் கண்ணீரை அடிக்க முடியாமல் கேட்டாள்
ரோகிணி. “நான் ஏமாந்துவிட்டேன் மித்திரை! நடந்ததெல்லாம் நடிப்பென்றும் துரோகமென்றும் எனக்கு இதுவரையில் தெரியவில்லை. துரோகம், துரோகம்,
மன்னிக்க முடியாத துரோகம்’’ என்று கதறினாள்.

“துரோகி அவனல்ல!’’ என்ற குரல் தலையிலடிப்பது போல்
பின்புறமிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தாள். மகிந்தர் அருகே நின்று கொண்டிருந்தார்.

“அப்பா!’’ என்று கத்தியபடியே அவர் கரங்களைப் பற்றினாள். அவர் அவளை உதறிக்கொண்டு விலகிச் சென்றார். ஆனால் ரோகிணி அவரை விடவில்லை. மித்திரை மெல்ல அங்கிருந்து நழுவிச் சென்றாள்.

“அப்பா! என்னை மன்னித்து விடுங்களப்பா! அவர்களுடைய வாழ்க்கையே பல ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை என்று எனக்குத்  தெரியாமல் போய்விட்டதப்பா! கொடும்பாளூர்ச் சுரங்கவாயிலைப் போலவே
அவர்களுடைய சொந்த வாழ்க்கையும் பயங்கரமானது அப்பா! எல்லாம்  எனக்கு இப்போதுதான் தெரிகிறது.’’

மகிந்தரின் நெற்றிப் புருவங்கள் வளைந்தன.


“கொடும்பாளூரில் சுரங்கவாயில் ஏது ரோகிணி? அந்தப்புர உள்வாயிலைச் சொல்கிறாயா?’’

“அவர் என்னெதிரிலேயே அன்றைக்கு உங்களை ஏமாற்றி விட்டார். உண்மையில் அதுதான் சுரங்கவாயில். மூவர் கோயில் வடக்கு மூலைப் பிரகார ஆலயம்தான் அதற்கு வெளியே செல்லும் வழி.’’

“என்ன?’’

“இவ்வளவுதான் அவர்களுடைய ரகசியமென்று நினைக்கிறீர்களா! உலகத்தையே ஏமாற்றுவதற்காக அவர்கள் எத்தனை எத்தனையே
வித்தைகளைச் செய்து வைத்திருக்கிறார்கள் கங்கைகொண்ட சோழபுரமென்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே, அதன் பாதுகாப்பெல்லாம் ஏரிக்கு
மத்தியிலுள்ள வசந்த மண்டபத்திற்குள்ளேதான் இருக்கிறது. அந்த மண்டபத்தின் நடுத்தூணை உடைத்து விட்டால் பிறகு கங்கை கொண்ட சோழபுரம் கங்கை வெள்ளத்துக்குள் முழுக வேண்டியதுதான். வீரமாம் வீரம்!
இவர்களிடம் வீரம் ஏது? மறைந்திருந்து பாறையை உருட்டி நம்முடைய காசிபனைக் கொன்றதனால்தான் இவர்களுடைய வீரம் வெளிப்பட்டிருக்கிறது.
நன்றி கொன்றவர்கள்! அன்றைக்கே ரோகணத்தில் நீங்கள் மரண தண்டனை விதித்தபோது நான் தடுத்தேன் பாருங்கள், அது என் தவறு! என் தவறு!”

மகிந்தரின் கரங்கள் தமது மகளை அன்போடு தழுவிக் கொண்டன.


‘பழிக்குப் பழி!’ என்று அவர் நெஞ்சு துடித்தது. காசிபனின் பிரிவினால் ஏற்பட்ட துயரத்தைக்கூட அந்தக் கணப்பொழுதுக்கு அவர் மறந்து விட்டார். ஒரே சமயத்தில் இரண்டு மாபெரும் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து
விட்டன.

“மகளே! உனக்கு மட்டிலும் துயரம் இல்லாமலா இருக்கும்?’’ என்று ரோகிணியின் கண்ணீரை மெல்லத் துடைத்தார் மகிந்தர்.

இந்தச் சமயத்தில் வாசற்கதவு நடுங்கியது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அங்கே அருள்மொழி திகைப்புடன் நின்று கொண்டிருந்தாள். நின்றவள் உள்ளே நுழையவில்லை.

எத்தனை நேரமாக அவள் அங்கு வந்து நின்றாளோ?

“அக்கா!’’ என்று ஓடிப்போய் அலறிக்கொண்டே அவளைக் கட்டிக் கொண்டாள் ரோகிணி.

“ரோகிணி! நான் அவ்வளவையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்’’ என்றாள் அருள்மொழி.

அதற்குள் மகிந்தரும் கந்துலனும் தங்கள் மத்திராலோசனையைத் தொடங்கிவிட்டார்கள். “பழிக்குப் பழி தெரிந்ததா, கந்துலா’’ என்று அவன் காதோடு காதாகச் செய்தி கூறிக் கொண்டிருந்தார் மகிந்தர்.

ரோகிணி! அடிப்பாவி! நீ என்னசெய்து விட்டாய்? நீ என்ன
செய்துவிட்டாய்?’ என்ற அலறித் துடித்தது அருள்மொழியின் மனம்.

தொடரும்


Comments