Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 38. திருமொழியாள்.


ரோகிணி தன் தந்தையிடம் சோழநாட்டுப் பாதுகாப்பு இரகசியங்களைக் கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருந்த சமயத்தில், எதிர்பாராதவாறு அங்கு அருள்மொழி வந்து சேர்ந்தாளல்லவா? அவளைக் கண்டவுடன் பதறி எழுந்த மகிந்தர் தான் போகிற போக்கில் ரோகிணிக்குச் சைகை செய்து, ஒரு முக்கியமான எச்சரிக்கையோடு உள்ளே சென்றார். காசிபனின் மரணச் செய்தியைப் பற்றிய எச்சரிக்கை அது.

அந்தச் செய்தியை வெளியிட்டால் அதனால் தங்களுக்கே ஆபத்து என்பதால், அதை மறைத்து வைப்பதில் மிகவும் கவனமாக இருந்தார் மகிந்தர். ‘அந்தச் செய்தி அவருக்கு எப்படி எட்டியது? அப்படியானால் அவருக்கும் சதிக்கூட்டத்துக்கும் தொடர்பு உண்டா? காசிபனையும் தூண்டிவிட்டது மகிந்தராக இருக்குமோ?’ -இது போன்ற ஐயங்கள் தஞ்சை அரண்மனையில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மகிந்தரின் கவலை. அவருடைய குமாரத்தி அதை இளங்கோவிடம் வெளியிட்டுவிட்ட விவரம் அவருக்குத் தெரியாது. ஆகவே, ‘உன் தம்பியின் முடிவு பற்றி இந்தப் பெண்ணிடம் வாய் திறக்காதே’ என்று ரோகிணியைக் கண்களால் எச்சரித்துவிட்டுச் சென்றார்.

மகிந்தரின் எச்சரிக்கையைப் புரிந்து கொள்ளும் நிலையிலோ அதைப் பொருட்படுத்தும் நிலையிலோ ரோகிணி அப்போது இல்லை. அருள்மொழியைக் கண்டவுடனேயே அவளுடைய முகம் வெளுத்துவிட்டது. உயிர் குன்றிவிட்டது. செய்யத்தகாத ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டுவிட்ட உணர்ச்சி ரோகிணிக்கு. நங்கையின் முகத்தில் விழிப்பதற்கு நடுநடுங்கிவிட்டாள் அவள். அவளுடைய நடுக்கத்திலிருந்து அதை விடுவிப்பவள் போல், அருள்மொழி ரோகிணியை அன்புடன் அணைத்துக் கொண்டு ரோகிணியின் அறைக்குச் சென்றாள். அருகில் அவளை அமர்த்திக்கொண்டு, குனிந்திருந்த ரோகிணியின் முகத்தைப் பரிவோடு உயர்த்தினாள். அருள்மொழியின் கரத்தில் ரோகிணியின் கண்ணீர்த் துளிகள பொலபொலவென்று உதிர்ந்து சிதறின.

“ரோகிணி! இருந்தாற் போலிருந்து உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’’

ரோகிணி தனக்குள் பொருமினாளே தவிர, வாய் திறக்கவில்லை.

“சொல் ரோகிணி! நாங்கள் உனக்கு என்ன தீங்கு செய்துவிட்டோம்? எதற்காக நீ எங்களுடைய நாட்டு ரகசியங்களை உன் தந்தையிடம் கூறிக்கொண்டிருந்தாய்? எனக்குக்கூடத் தெரியாத அரசியல் அந்தரங்கச் செய்திகளை நீ எப்படித் தெரிந்துகொண்டாய்? இப்போது ஏன் அதை அவரிடம் கூறினாய்? உன்னுடைய நோக்கந்தான் என்ன ரோகிணி?’’

ரோகிணியைப் பற்றிக்கொண்டு உலுக்கினாள் அருள்மொழி. அவள் குரலில் அன்பு மட்டுமல்ல; கண்டிப்பும் கடுமையும் கலந்திருந்தன. ரோகிணி அதற்கும் வாய் திறக்கவில்லை.

“ரோகிணி! நீ செய்திருப்பது வெறும் குற்றமல்ல, மிகப் பெரிய குற்றம்! பாவம் ரோகிணி! மகாப் பாவம்! கோடிக்கணக்கான மக்களின் உயிர், உடமை, மானம் இவைகளைக் காற்றில் பறக்கவிட எப்படித்தான் நீ மனம் துணிந்தாயோ?’’

ரோகிணியின் இதழ்கள் துடித்தன. “அக்கா! எல்லாம் அந்தக் கொடும்பாளூர் இளவரசரால் வந்த வினை அக்கா! என் காசிபனை - அவர் கொன்றுவிட்டாரக்கா!’’ என்று குமுறினாள்.

“என்ன, உன் தம்பியைக் கொன்றுவிட்டாரா? இருக்கவே இருக்காது! யாரோ உன்னிடம் பொய் கூறியிருக்கிறார்கள். அவரையா நீ குறை சொல்கிறாய்? உன்னைவிட அவரை எனக்குப் பல ஆண்டுகளாய்த் தெரியும். ஒருக்காலும் அவர் இந்த இழிசெயலைச் செய்திருக்க மாட்டார்!’’

“உண்மைதான், அக்கா!’’

“இல்லை! கொடும்பாளூர் இளவரசரின் வெளித் தோற்றந்தான் கொடுமையானது. கடுமையான பாறைக்கிடையில் கசிந்துருகும் குளிர் அருவியை நீ பார்த்திருக்கிறாயா? அது போன்று நெக்குருகும் அன்பு மனம் கொண்டவர் அவர். பாறையைக் கண்டு நீ பயந்துவிட்டாய்; அன்பருவியின் அருமையை நீ இன்னும் உணரவில்லை.’’

அருள்மொழியின் கூற்று மெய்யாக இருக்கவேண்டும் என்று தவியாய்த் தவித்தது ரோகிணியின் மனம். என்றாலும் இளங்கோ அவனைக் கொன்றிருக்க மாட்டான் என்று நம்புவதற்கும் அவள் சித்தமாக இல்லை.

“அவரே அதை என்னிடம் ஒப்புக் கொண்டுவிட்டார், அக்கா! அதன் பிறகுமா நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரிந்த அளவு எனக்கு அவரைத் தெரியாவிட்டாலும் காசிபனிடம் அவருக்கிருந்த வெறுப்பை நான் அறிவேன் அக்கா!’’

அருள்மொழியின் தலையில் அந்த மாளிகையே பெயர்ந்து விழுந்தாற்போலிருந்தது. அதுவரையில் ரோகிணி தலை குனிந்தது போக, இப்போது அருள்மொழி தலைக்குனிந்தாள். ரோகிணியின் துயரத்தை அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அருள்மொழி பேசமுடியாது தடுமாறினாள்.

“என்னுடைய நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள், அக்கா?’’ என்று கேட்டாள் ரோகிணி. மறுமொழி கூறத் தயங்கினாள் அருள்மொழி. அந்தத் தயக்கத்தால் துணிவுபெற்ற ரோகிணி, “சொல்லுங்கள் அக்கா? நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?’’ என்று மீண்டும் அவளைக் கேட்டாள். அருள்மொழி ஒருகணம் தன்னை அவளுடைய நிலையில் வைத்துப் பார்த்துச் சிந்தனை செய்தாள். இளகிப் போய்ப் பாகாய் நெகிழ்ந்து கொண்டிருந்த அவள் மனம் திடீரென்று இரும்பாக மாறிவிட்டது.

“ரோகிணி! உன்னுடைய துன்பத்தையெல்லாம் சிறிது நேரம் மறந்து நான் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள்’’ என்று அருள்மொழி தொடங்கவே, அவளுடைய குரலில் ஒலித்த உறுதி ரோகிணியை என்னவோ செய்தது.

“முதலில் உன்னுடைய நிலையில் நான் இருந்திருந்தால் என் மனத்தை வேற்று நாட்டு ஆடவரிடம் ‘பறிகொடுப்பதற்கு’ முன்பு ஓராயிரம் முறை சிந்தனை செய்திருப்பேன். அதன் பின்விளைவுகளை எண்ணிப் பார்த்திருப்பேன். தக்கவர்களிடம் ஆலோசனை கேட்டிருப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்திருப்பேன்.’’

“எந்த முடிவுக்கு வந்திருப்பீர்கள், அக்கா?’’ என்று கேட்டாள் ரோகிணி.

“முடிவு என்பது இரண்டில் ஒன்றுதானே? ஒன்று அவரை ஏற்றுக்கொள்ளுவதனால் அவரை அவரது குறைவு நிறைவுகளோடு அப்படியே முழு மனத்தோடு ஏற்றுக்கொள்ளுவது. இல்லையென்றால், நமது பிறப்பு, வளர்ப்பு, ஆசாபாசங்கள் இவை அவருக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கு மென்றால் அவரை மறந்துவிடுவது. ஆண்கள் மரங்கள்! நாம் கொடிகள். கொடிகள் தான் மரங்களை வளைத்துக்கொள்ளுமே தவிர, மரங்கள் கொடிகளைச் சுற்றி வளைவதில்லை. அவைகள் வளையவும் கூடாது!’’

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அக்கா?’’ என்று பதறினாள் ரோகிணி.

“நான் இந்த நாட்டுப் பரம்பரை வழக்கத்தைத்தான் சொல்லுகிறேன். ஒருத்தி ஒருவரை மனத்தால் தலைவராக வரித்துவிட்டால், பின்னர் அவருக்கு எதிராகத் திரும்பி அவருடைய நாட்டு ரகசியங்களை யாரிடமும் வெளியிட மாட்டாள். அவர் அவளுடைய தம்பியைக் கொன்றிருந்தாலும் சரி, தந்தையைக் கொன்றிருந்தாலும் சரி, நானாக இருந்தால் என் தலைவருக்குப் பின்புதான் நிற்பேன். அவருடைய நலனை நினைப்பவர்கள் என் உறவினர்கள்; அவரை வெறுப்பவர்கள் யாரானாலும் சரி, அவர்கள் என் பகைவர்கள்!’’“அக்கா!’’ என்று அலறினாள் ரோகிணி.

“தெரிந்துகொள் ரோகிணி! இந்த நாட்டில் பெண்ணுக்குக் கடவுள் கூடக் கணவனுக்குப் பிறகுதான். ஆண்கள் இந்த நாட்டில் பெண்களை மறந்து விட்டுத் துறவு பூண்டிருக்கிறார்களே தவிர, பெண்கள் ஆண்களைத் துறந்துவிட்டுக் கடவுளிடம் கூடச் சென்றதில்லை. அப்படிச் சென்றவர்களை நாங்கள் போற்றுவதில்லை.’’

ரோகிணிக்கு மெய்சிலிர்த்தது.

“ரோகிணி! நான் என்னுடைய நிலையைச் சொல்லி விட்டேன். இப்போது உன்னிடம் கேட்கிறேன். நீ மெய்யாகவே கொடும்பாளூர் இளவரசர் மீது அன்பு வைத்திருக்கிறாயா? அன்பென்றால் பொறுப்பில்லாத கடமைகளில்லாத வெளி மனத்தின் இன்ப உணர்ச்சி என்று பொருளில்லை பொறுமையிருக்கிறதா உனக்கு அவரிடம் அன்பு செலுத்துவதற்கு?’’

“வேண்டாம் அக்கா; இப்போது என்னிடம் ஒன்றுமே கேட்காதீர்கள். என்மீது சிறிது இரக்கம் காட்டுங்கள்’’ என்று கெஞ்சினாள் ரோகிணி.

அருள்மொழிக்கு ரோகிணியின் துன்பம் தெரியாமலில்லை. அவள் குரல் தழுதழுத்தது. “ரோகிணி உன் மீது எனக்கு அன்பில்லாவிட்டால் நீ உன் தந்தையிடம் கூறிய செய்திகளைக் கேட்ட பிறகும் நான் உன் முகத்தில் விழித்திருக்க மாட்டேன். அந்தச் செய்திகளை உனது நன்மைக்காக நான் இப்போது யாரிடமும் வெளியிடவில்லை. நீயும் உன் தந்தையிடம் கூறிக் கவனமாக இருக்கச் சொல் - இப்போது உன் முடிவைக் கூறிவிடு. காசிபனை இழந்து விட்டதற்காகக் கொடும்பாளூர் இளவரசரையும் மறந்துவிடப் போகிறாயா?’’

“முடியாது அக்கா! அவரை மறக்க முடியாது!’’ என்று இரைந்து கத்தினாள் ரோகிணி.

“மறக்க முடியாதென்றால் அவரை வெறுப்பதை அடியோடு நிறுத்திவிடு. பெற்ற இடத்துப் பாசமும் பிறிதோர் இடத்துத் தலைவனின் அன்பும் ஒன்றாகப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் பாக்கியசாலிகள். அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையென்றால், அப்போது இரண்டில் ஒன்றை மறந்து விடுவதே உத்தமம். இரண்டையுமே விரும்பினால் இரண்டுமே கிடைக்காமற் போகலாம்!’’

மளமளவென்று கண்ணீர் சொரிந்தாள் ரோகிணி. அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ரோகிணி! நீ ஒன்றை இழந்துவிட்ட துன்பத்தில் மற்றொன்றையும் இழந்து விடப் பார்க்கிறாய். வேண்டாம்! வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழியை உடைத்து விடாதே!” என்று கூறினாள் அருள்மொழி.

பாவம் அருள்மொழிக்கு அவள் ஏற்கெனவே தாழியைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டாள் என்பது தெரியாது. கொடும்பாளூர்க் கோமான் அவளிடம் கொன்றை மரத்தடியில் பட்ட துன்பங்களை அருள்மொழி அறியவில்லை.

நேரம் சென்றது. இரண்டு பெண்களுமே இரண்டு சிலைகளாக அமர்ந்து தங்கள் மனத்தைத் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அருள்மொழி வேறு ஏதேதோ விஷயங்களை ரோகிணியிடம் பேசவேண்டுமென்று நினைத்துக்கொண்டு வந்தாள். ரோகிணியின் மனப்போக்கில் தெளிவற்ற நிலையைக் கண்ட பிறகு அவளிடம் வேறு எதுவுமே பேசத் தோன்றவில்லை.

‘விதி என்பது இப்படித்தான் குறுக்கிடும் போலும்!’ என்று தங்களுக்குள் இரண்டு பெண்களும் ஒரே சமயத்தில் நினைத்துக் கொண்டார்கள். அறைக்கு வெளியே கூடத்தில் ஏதோ குரல்கள் கேட்டன. இருவருமே ஒன்றாக எழுந்து வந்து பார்த்தனர்.

சக்கரவர்த்திகளே அங்கே நேரில் வந்து மகிந்தரைச் சோழபுர விழாவிற்குக் குடும்பத்தோடு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார். மகிந்தர் தனது மகிஷியாரின் உடல் நலனைக் காரணமாகக் கூறிப் பணிவோடு மறுத்துக் கொண்டிருந்தார்.

ரோகிணியைக் கண்ட மாமன்னர், “அப்படியானால் நங்கையோடு ரோகிணியையாவது அனுப்பி வைக்கலாம்’’ என்றார். ரோகிணியும் அனுமதி வேண்டி ஆவலோடு தன் தந்தையின் முகத்தை நோக்கினாள்.

“ரோகிணியின் துணை இங்கு அவள் அன்னைக்கு ஆறுதல் தரும். மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்திகளே!’’ என்றார் மகிந்தர்.

“அப்படியானால் ஒன்பதாவது நாள் விழாவுக்காவது அனைவரும் வந்து சேருங்கள். வல்லவரையர் இங்குதான் இருக்கிறார், அவரோடு புறப்பட்டு வாருங்கள்.’’

மகிந்தர் மறுக்கவுமில்லை; உடன்படவுமில்லை. மறுநாள் பொழுது புலரும் சமயத்தில் தஞ்சையிலிருந்து அரச குடும்பங்கள் அனைத்தும் சோழபுரத்துக்குக் கிளம்பின. இந்தக் காட்சியைக் கண்ணுற்ற ரோகிணி தன் உள்ளக் குமுறலை அடக்க முடியாதவாறு வேதனையுற்றாள்.

ரதத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அருள்மொழியின் விழிகளிலும் ரோகிணிக்காகக் கண்ணீர்த்திரை படர்ந்திருந்தது.

தொடரும்
Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…