கங்காபுரியில் வந்து கூடும், ராஜபாட்டைகள், நெடுஞ் சாலைகள், காட்டு வழிகள், ஒற்றையடிப் பாதைகள் அனைத்துமே புதுவெள்ளப் பெருக்கெடுத்த நதிகளாக மாறி மக்களை அங்கே திரட்டிக் கொண்டு வந்தன. சாலைகள் தோறும் சாரை சாரையாக மனிதர்கள், மாட்டு வண்டிகள் பூட்டிய, ரதங்கள், பல்லக்குகள்!
சோழபுரத்தின் திருவிழாவோ சோழ சாம்ராஜ்யத்தின் புது வாழ்வுப் பொன்விழா! அதற்காக ஐந்து காதம் பத்துக் காதம் தொலைவிலுள்ள நாடு நகரங்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் புறப்பட்டது.
விழாவுக்கு முதல்நாளே கங்கைப் புதுநகரம் அலைமோதும் வங்கப் பெருங்கடலாகிவிட்டது. நகரத்தில் நிறைந்து விட்டவர்கள் ஒரு பகுதி என்றால், நிறைவு காண வந்து கொண்டிருந்தவர்களோ ஒன்பது பகுதி. ஒன்பது நாள் விழாவல்லவா!
கோயிலின் கும்பாபிஷேகத் திருவிழா, புதுநகர் புகுவிழா. கங்கை நாடு கொண்ட வெற்றிவிழா!
தெருக்கள்தோறும் ஆடல்கள், பாடல்கள், கூத்துக்கள், குதூகல நிகழ்ச்சிகள்! திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் வசதிக்காக அன்னசத்திரங்கள், உறைவிடங்கள், மறைவிடங்கள்! எங்கு நோக்கினும் இயல், இசை, நாடகத் தமிழின் இன்ப முழக்கம்!
லட்சோப லட்சம் மக்களின் பக்திப் பரவசக் கண்ணீர் பொழியக் கங்கை கொண்ட சோழீசுவரருக்குக் கங்கை நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. உயர்ந்த கோயில் கோபுரத்தின் உச்சியைப் போலவே தங்களது சோழவள நாடும் உலகின் கண் உயர்ந்து விளங்குவதைக் கண்டு பூரிப்படைந்தனர் அங்கு கூடி நின்ற தமிழ்ப் பெருமக்கள்.
கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு மாமன்னர் திருச்சிற்றம்பலச் சிற்பியாரோடு அதன் வெளிப் பிரகாரத்தை வலம்வரத் தொடங்கினார். சிற்பியாரின் உடலில் அப்போது ஊனில்லை. உயிரும் அதன் ஒளியுமே அவர் கண்களில் ஊசலாடிக் கொண்டிருந்தன. கடுமையான விரதம், ஏகாக்கிரகச் சிந்தனை, ஓயாத உழைப்பு இவ்வளவுமாகச் சேர்ந்து அவரை நடப்பதற்குக் கூடச் சக்தியற்றவராகச் செய்திருந்தன. மாமன்னரின் கைத்தாங்கலில் அவர் மெல்ல ஊர்ந்து வந்தார்.
சுற்றுப் பிரகாரத்தில் தோன்றிய ஒவ்வொரு சிற்பமும் மாமன்னரிடம் ஒரு கவிதை பாடியது. ஒவ்வொரு சிற்பத்தின் முன்பும் சிலை போல் நின்றுவிட்டு, சண்டேசுவர அநுக்கிரக மூர்த்தியின் அருகில் வந்தார் சக்கரவர்த்தி. மெய் சிலிர்த்தது அவருக்கு. கைத்தாங்கலில் வந்த சிற்பியாரின் கரங்களைப் பற்றிக் கொண்டார். பேச நா எழவில்லை.
சிற்பியாரே பேசினார், “சக்கரவர்த்திகளே, எம்பெருமானின் தாள் பணிந்து நிற்கும் சண்டேசுவர மூர்த்தியை நான் கற்பனை செய்வதற்கு வித்தாக இருந்தவர்கள் தாங்கள்தாம். இங்கு நான் சிற்பத்தில் தங்களையே காணுகின்றேன். தங்களுடைய நெடுநாள் ஆட்சியில் தாங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளுக்காகவும், இனிப் பெறவிருக்கும் வெற்றிகளுக்காகவும் இறைவனே
மனமகிழ்ந்து தங்கள் சிரத்தில் வெற்றி மாலை சூடுவதுபோல் கற்பனை செய்திருக்கிறேன். என்னுடைய ஆத்ம நிறைவுக்காகத் தங்களின் கட்டளை
பெறாமல் நான் செய்த சிற்பம் இது. தாங்கள் இதற்காக என்னை மன்னித்தருள வேண்டும்.’’
சக்கரவர்த்தி சிற்பியாரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.
“ஆமாம்! தங்களது திருஉருவத்தை இங்கு செலுக்கி வைப்பதற்குத் தாங்கள் எனக்கு அநுமதி அளிக்கவில்லை. தங்கள் முகத்தைக் காணமுடியாவிட்டாலும் கலையுள்ளம் கொண்டவர்களுக்குத் தாங்கள் அகம் தெரிய வேண்டுமல்லவா? எதிர்காலத்தில் வரும் கலைஞர்கள் அதைக் கண்டு கொள்வார்கள்.’’
“சிற்பியாரே, நான் எத்தனையோ நாடுகளை வென்றவன்தான். அனால் தாங்கள் என்னையே வென்று விட்டீர்கள். முடிசூடிய மன்னனாக இருந்தாலும், மன்னாதி மன்னர்களுக்கெல்லாம் தலைவனான எம்பெருமானுக்கு அடிமைதான் என்ற பேருண்மையை இங்கு நிலைநாட்டி விட்டீர்கள். கலைஞர்கள் கடவுளுக்கு அடுத்தவர்கள் அல்லவா? என்னுடைய பிறவிப் பயனை என் கண்ணெதிரில் காட்டிவிட்டீர்கள், கலைஞரே!’’
“நான் என் பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன்!’’ என்று உள்ள நிறைவோடு பெருமூச்சு விட்டார் திருச்சிற்றம்பலச் சிற்பியார்.
“தாங்கள் பயன் பெற்றுவிட்டீர்கள், மெய்தான். ஆனாலும் தங்களுக்கு என்னுடைய நன்றிக்கடன் ஒன்று இருக்கிறதே! அதை எப்படிச் செலுத்துவது?
தங்களது கலைத்திறனுக்கு ஈடான வெகுமதி எதுவென்றே எனக்குத் தோன்றவில்லை. தங்களுக்கு எது விருப்பமோ அதை இப்போதே கேட்டுப் பெறுங்கள்! இப்போதே கேளுங்கள், சிற்பியாரே!’’
சிற்பியார் ஒருகணம் சிந்தனை செய்துவிட்டுக் கூறினார்.
“என் வாழ்வில் எனக்கு ஒரு குறையுமில்லாமல் தாங்கள் செய்து வைத்திருக்கிறீர்கள். இந்த நகரமும் சிவாலயமும் முடியும் வரையில் நான் உயிர்வாழ விரும்பினேன். அந்த ஆசையும் இறைவன் திருவருளால் நிறைவேறி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களோ, வாரங்களோ, மாதங்களோதான் என்னுடைய காலம்.’’
“சிற்பியாரே!’’ மன்னாதி மன்னர் பதறினார்.
“மெய்தான்! இப்போதே இறைவனின் அழைப்பு என் செவிகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அவருடைய திருவடி சேரும் நாளில், தாங்கள் பெற்றுத்தந்த வெற்றியில் எனக்கும் பங்கு வேண்டும்.’’
மாமன்னர் யோசனை செய்தார். “வெற்றியில் பங்கா?’’
“என் உயிர் பிரிந்தவுடன் என் பூத உடலுக்கு ஒரு குடம் கங்கை நீர் வேண்டும். இந்தப் பிறவியில் நான் தெரிந்தோ
தெரியாமலோ செய்த குற்றங் குறைகளைக் கங்கை நீரால் கழுவிக்கொண்டு நான் இறைவனிடம் செல்ல விரும்புகிறேன். இந்தப் பேராசைக்காரனுக்கு ஒரே ஒரு குடம் கங்கை நீர் பரிசளிப்பீர்களா?’’
சிற்பியார் சமைத்துவிட்ட சித்திரமாகி நின்றார் சக்கரவர்த்தி. மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், மாபெரும் கற்றளி, கடல் போன்ற ஏரி இவ்வளவையும் தோற்றுவித்த சிற்றம்பலனாரின் ஆசை அவரையே எங்கேயோ வானத்துக்குக் கொண்டு சென்றது; ஒரு குடம் கங்கை நீர்!
“கங்கை நீரின் பெருமையை இப்போதுதான் நான் அதிகமாக உணருகிறேன், சிற்பியாரே. தாராளமாகத் தங்கள் விருப்பம் நிறைவேறும். இந்தப் பரிசளிப்பை ஒரு விழாவாகவே நடத்துவோம். பட்டத்து யானைமீது கங்கை ஊர்வலமாக வந்து தங்கள் மாளிகைக்குச் சேருவாள்!’’
சிற்பியார் உணர்ச்சிப் பெருக்கோடு சக்கரவர்த்திகளைச் சிரம்தாழ வணங்க முயன்றார். சக்கரவர்த்திகளோ அவரைத் தடுத்து நிறுத்தித் தமது மார்புறத் தழுவிக் கொண்டார். கொடும்பாளூர் நகரத்தில் முக்கால் பகுதிக்குமேல் கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்றுவிட்டதால் நகரத்தின் தெருக்கள் சந்தடியின்றிக் கிடந்தன. முதியவர்கள், கன்றுகாலிகளைக் கட்டிக் காக்கும் பணியாட்கள், நெடுந்தொலைவுப் பிரயாணம் செய்ய முடியாதவர்கள் ஆகியோரே நகரத்தில் எஞ்சியிருந்தனர். காவல் வீரர்களின் நடமாட்டம் மற்ற நாட்களைவிட
மிகுதியாக இருந்தது. நகரத்தின் நான்கு எல்லைகளைச் சுற்றிலும் சிற்சில வீரர்கள் உளவறியச் சென்றிருந்தார்கள். அரண்மனையின் கோட்டையை அடுத்த ஆயிரம் குதிரை வீரர்கள் ஆயுதம் தாங்கிச் சித்தமாக இருந்தனர்.
இளங்கோ அங்கு வந்து சேர்ந்து ஐந்தாறு தினங்களாகி விட்டன. இந்த ஐந்தாறு தினங்களிலும் அவன் மாங்குடி மாறனிடம் ஐந்தாறு முறைகூட முகம் கொடுத்துப் பேசவில்லை. இரவு வேளைகளில் இளங்கோ உறங்குவதில்லை என்பதும் மாறனுக்குத் தெரியும். எத்தனை தினங்களுக்குத் தான் அவனால் பொறுக்க முடியும்? ஆறாவது நாள் இரவில் பால் பொழியும் நிலவில் மாறன் மனம் துணிந்து இளங்கோவிடம் பேச்சுக் கொடுத்தான்.
“இளவரசே!’’
தலைதூக்கிப் பார்த்தான் இளங்கோ.
“சோழ சாம்ராஜ்யம் முழுவதுமே சில தினங்களாக ஆனந்தக் களியாட்டத்தில் மூழ்கியிருக்கிறது. நாம் அனைவருமே குதூகலத்துடன் இருக்கவேண்டிய சமயம் இது. மாபெரும் சாதனைகளை நிறைவேற்றி வந்திருக்கிறார் நம் சக்கரவர்த்திகள். இந்த நிலையில் தாங்கள்...’’
மாறனை அருகில் அழைத்து, அவனுக்குப் புல் தரையைச் சுட்டிக் காட்டினான் இளங்கோ. அதுவரையில் அவனுக்குள் குமுறிக் கொண்டிருந்த எண்ணங்கள் அப்போது அவனிடமிருந்து விடுதலை பெறத் துடித்தன.
“மாறா என்னுடைய மனத்திலும் ஓரளவு இந்தக் குதூகலம் குடிகொண்டிருப்பதால்தான் இன்னும் நான் என் கைகளைக் கட்டிக்கொண்டு பொறுமையோடு இருக்கிறேன். இல்லா விட்டால் இதற்குள் ஒருத்தியைச் சித்திரவதை செய்து எமனுலகுக்கு அனுப்பியிருப்பேன்!’’
“ரோகணத்து இளவரசியாரைச் சொல்லுகிறீர்களா?’’
“ஆமாம்.’’
“நானும் அப்படித்தான் நினைத்தேன். பயங்கரமாக ஏதாவது நடைபெற்றிருக்க வேண்டுமென்று சந்தேகப் பட்டேன்.’’
“இனி நடப்பதற்கு ஒன்றும் இல்லை, எல்லாமே முடிந்து விட்டது.’’
“என்ன கூறுகிறீர்கள், இளவரசே!’’ என்று துடித்தான் மாறன்.
“ஆமாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் மீண்டும் நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன். அமைதி எனக்குப் போர்க்களத்தில்தான் கிடைக்கும். விழா முடிந்தவுடன் என்னைக் கடாரத்துக்கு அனுப்புவதாக வாக்களித்திருக்கிறார் மாமன்னர். இன்றே அனுப்பி வைத்தால்கூட நான் மகிழ்ச்சியடைவேன்!”
“தங்களுடைய திருமணம்?’’
வருத்தமுடன் சிரித்தான் இளங்கோ.
“திருமணப்பெண் எனக்குக் கடாரத்தில் காத்திருக்கிறாள். அவள்தான் வெற்றித் திருமகள். வெற்றி பெற்றால் அவளை மணந்து விடுவேன். இல்லாவிட்டால், அவளுக்காக வீரசொர்க்கம் செல்வேன்.’’
“வேண்டாம் இளவரசே! மனமுடைந்து தகாதசொல் கூறாதீர்கள். எதிலும் எப்போதும் தங்களுக்கு வெற்றியே கிடைக்கும்’’ என்றான் மாறன்.
“போர்க்களங்களில் வெற்றி கிடைக்கலாம். ஆனால்...’’ இளங்கோவின் குரல் தழுதழுத்தது. மாறன் பதறினான். தாவிச் சென்று இளங்கோவின் கரங்களைப் பற்றினான்.
“இந்த நிலையில் தங்களிடம் நான் வந்ததே தவறு. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், இளவரசே! கடாரத்துக்கு என்னையும் மறவாமல் அழைத்துச்
செல்லுங்கள். எப்போதும் தங்களுடன் இருந்து தங்கள் பணியிலேயே செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் செய்யுங்கள்.’’
இந்தச் சமயத்தில்...
அரண்மனையின் வெளிக்கோட்டைக் கதவுகள் அவசர அவசரமாகத் திறக்கப்படும் சத்தம் கேட்டது. குதிரை ஒன்று வேகமாக அவர்களை நோக்கி விரைந்து வந்தது. அதிலிருந்து குதித்த ஒருவன் இளங்கோவை நாடி ஓடி வந்தான். அவன் கூறிய செய்திகள் பயங்கரமான செய்திகள். அவ்வளவையும் கேட்டுவிட்டு,
“உடனே ஆயிரம் குதிரை வீரர்களையும் சோழபுரம் நோக்கி அனுப்பி வை! மற்ற வீரர்கள் அனைவரையும் ஆங்காங்கே பிரித்து அனுப்பு! நீங்கள் யாவரும் முதலில் செல்லுங்கள்; இதோ நானும் கிளம்புகிறேன்’’ என்று துடித்துக்கொண்டு எழுந்தான் இளங்கோ.
படைத் தலைவன் கட்டளையைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றான்.
“புறப்படு, மாறா!’’
“நாம் அனைவருமே புறப்பட்டு விட்டால் கொடும்பாளூருக்குக் காவல்?’’
சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரம் பெரிதா, இல்லை, அதற்குள் அடங்கிய இந்தக் கோனாடு பெரிதா?’’
“சித்தம் இளவரசே!’’ என்று தணிந்துவிட்டான் மாறன்.
என்றாலும், ஒரு கடமையை அவன் மறக்கவில்லை.
“சக்கரவர்த்திகள் நம்மை இங்கே இருக்கும்படிக் கட்டளை இட்டிருக்கிறார்கள். அவர்களது கட்டளையை மறந்து...’
அவனுடைய சொல்லுக்குச் செவி சாய்க்கும் பொறுமை இளங்கோவுக்கு இல்லை. சோழபுரம் பாதையில் விழாக் கூட்டத்துடன் மாற்றுடையில் செல்லும் பகைவர் கூட்டம்தான் அப்போது அவன் கண்முன் நின்றது. பெயரளவுக்கு ஒரு சிறு படையை அங்கே நிறுத்திவிட்டுக் கிளம்பிவிட்டான்.
ஆயிரம் குதிரைகள் சென்ற இரண்டு நாழிகைப் பொழுதுக்குப் பிறகு, இரண்டு குதிரைகள் மட்டும் கொடும்பாளூரை விட்டுத் தனியே வடக்கில் சென்றன. அதைக் கண்ட கோனாட்டின் தலைநகரம் ஏக்கப் பெருமூச்சு விட்டு நின்றது, அந்த இரவு வேளையில்
தொடரும்
Comments
Post a Comment