தனது இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குகொண்டு தன்னைப்போலவே ஆகிவிட்ட சரக்கொன்றை மரத்தடிக்கு மித்திரையுடன் போய்ச் சேர்ந்தாள் ரோகிணி. அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தபோது அவளுடைய மனச் சுமை இரு மடங்காகியது.
சில தினங்களுக்கு முன்பு வரையில் அங்கே பொன் மலர்கள் பூத்துச் சொரிந்தன. செந்தளிர்கள் குறுநகை புரிந்தன. இயற்கைத்தேவி அதில் பொன்னூஞ்சல் ஆடிக்களித்தாள். இப்போது...?
நீண்ட பெருமூச்சு ரோகிணியின் இதயத்தை அறுத்துக் கொண்டு வெளியே வந்தது. நினைவு தடுமாறிய நிலையில் மரத்தின் மீது சாய்ந்தாள். சுருக்கென்று ஏதோ ஒன்று அவள் தோளைக் குத்திக் கிழித்தது. அதிலிருந்து இரத்தமும் பெருக்கெடுத்தது.
ரோகிணிக்கு வலி தெரியவில்லை. இரத்தக் கசிவையும் அவள் கவனிக்கவில்லை.
பதறிக்கொண்டு அதைத் துடைத்துவிடப் போனாள் மித்திரை. அவள் பரிவைக் கண்டு துயரத்துடன் சிரித்தாள் ரோகிணி.
“இரத்தம் கொட்டுகிறது, இளவரசி?’’
“கொட்டாமல் என்ன செய்யும்? நான் ஒடித்த மரக்கிளை என்னையே வஞ்சம் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறது! நன்றாக என்னைப் பழிவாங்கிக் கொள்ளட்டும்; -நானே இதயத்தைக் குத்திக் கிழித்துக்கொண்டு விட்டேன், மித்திரை! நானே இதன் அழகையெல்லாம் அழித்து விட்டேன்!’’
காய்ந்துபோய்க் கீழே சருகாய்க் கிடந்த மலரிதழ்களை வாரியெடுத்தாள் ரோகிணி. ஒரு சொட்டுக் கண்ணீர் அதில் உதிர்ந்தது.
மித்திரைக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சரஞ்சரமாகப் பூத்து நின்ற போது அந்த மரத்தை அவள் பார்த்திருக்கிறாள். “நீங்களா இப்படிச் செய்தீர்கள்?’’ என்று வெகுண்டு போய்க் கேட்டாள்.
ரோகிணியின் நினைவு அதற்குள் மாற்றமடைந்து, “நான் ஒடித்தேனா? யார் அப்படிக் கூறியது. இல்லவே இல்லை. காசிபன் இருக்கிறானே; அவன்தான் இவ்வளவையும் ஒடித்தான், முறித்தான், அழித்தான்! இந்தச் சொர்க்கத்தை நரகமாக்கியவன் அவன்தான்!... எனக்கு எதுவுமே தெரியாது மித்திரை!’’ ரோகிணியின் குரல் தழுதழுத்தது; அவள் தொண்டையை அடைத்தது.
மித்திரை பயந்தாள். ‘இளவரசியாருக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டு விட்டதா?’
“இளவரசி! திடீரென்று உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?’’
மித்திரையின் கேள்வி ரோகிணியின் செவியில் விழவில்லை. தன்னுடைய உலகத்தில் மூழ்கியிருந்த அவள்,
“மித்திரை! கொடும்பாளூர் இளவரசரின் இதயம் அன்பு பொங்கும் அருவியாமே! அது மெய்தானா?
பாவம் நங்கையார் கூறியதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? இவ்வளவு நாள் பழகியும் நானே அவரை அறிந்துகொள்ளவில்லை’’ என்று தனக்குத்தானே பேசுவதுபோல் கூறினாள்.
“நீங்கள் கூறுவதொன்றும் எனக்கு விளங்கவில்லை, இளவரசி’’ என்றாள் மித்திரை.
“போனால் போகிறது! நீ இந்த மரத்தடியை இதற்கு முன்னார் பார்த்திருக்கிறாயா? முன்பு இருந்ததுபோல மீண்டும் இங்கே பசுமை நிழல் பரவுமா? பொன்மலர் சொரியுமா? பூஞ்சிட்டுப் பாடுமா? தென்றல் தவழுமா? தேன்துளி சிந்துமா-சொல், மித்திரை.’’
மரத்தைப் பார்த்துவிட்டு மங்கையை நோக்கினாள் மித்திரை. “இளவரசி! பட்டமரந்தான் தழைக்காது, ஆனால் இது பச்சைமரம். பேணி வளர்த்தால் இதில் மறுபடியும் மலர் சொரியும்.’’
ஆனந்த வெள்ளப் பெருக்கெடுத்து வழிந்தது, ரோகிணியின் விழிகளில்.
“மித்திரை! நீ என் உயிருக்குயிரானவள். நீ கூறியது மட்டிலும் மெய்யாகிவிட வேண்டுமென்று புத்தபிரானை வேண்டிக் கொள். நான் இனி அதை என் கண்ணீராலேயே வளர்க்கப் போகிறேன். தினந்தோறும் இங்கு வந்து கண்ணீர் சொரிகிறேன்.’’
“இவ்வளவும் எதற்காக இளவரசி?’’
“எதற்காகவா? எல்லாம் என் இளவரசருக்காகத்தான். சோலைவனத்தைப் பாலைவனமாக்கிவிட்டேனல்லவா? அப்பாவத்துக்கு இங்கே கண்ணீர் சொரிந்தால் போதாது. செந்நீர் கொட்டி இதை முதலில் வளர்த்துவிட வேண்டும். பிறகு இளவரசரை அழைத்து அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டு கதறவேண்டும், ‘இளவரசே! இந்தப் பாவியை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். இவளுக்கு உங்கள் அரண்மனையில் புகலிடம் தருவதாக வாக்களியுங்கள். வாக்களித்தால் நான் அதற்காக என்னுடைய எல்லாப் பந்தங்களையும் உதறிவிட்டு உங்களிடம் வருகிறேன். அதன் பிறகு எனக்குத் தாய் எதற்கு? தந்தை எதற்கு? கடவுள் எதற்கு? எல்லாம் நீங்கள், நீங்கள், நீங்கள்தான் இளவரசே, என்று அவரிடம் மன்றாட வேண்டும்...’’
அம்புபட்ட அன்னப் பறவையென ரோகிணி துடி துடிப்பதைக் கண்டு மித்திரை திக்குமுக்காடிப் போனாள். காசிபனுக்காக அதுவரை துடித்தவள், அருள்மொழியைச் சந்தித்தபின் இளங்கோவுக்காத் துடிப்பானேன்? இதென்ன விசித்திரமான மாயம்?... எவனைத் துரோகியென்றும், கொடியவன் என்றும் வஞ்சகன் என்றும் தூற்றினாளோ அவனுக்காகவா இப்போது அனைவரையுமே துறந்துவிடுவதாகச் சொல்கிறாள்? மறந்துவிட மனந்துணிகிறாள்! தன்னையும் எங்கே மறந்துவிடுவாளோ என்ற பயம் மித்திரைக்கு.
“இளவரசி! என்னையும் மறந்துவிடப் போகிறீர்களா?’’
“ரோகணத்திலிருந்து வந்தவர்களில் நீ ஒருத்திதான் எனக்குச் சொந்தம்! உன்தந்தை கந்துலனை மறந்துவிட்டு வருவதானால் உன்னையும் என்னோடு அழைத்துக் கொள்கிறேன். கொடும்பாளூர் அந்தப்புரத்துக்கு நீ என் தோழியாக வருகிறாயா?’’
“அது என் பாக்கியம்!’’ என்று முகமலர்ச்சியோடு கூறினாள் மித்திரை.
பொழுது சாய்ந்தவுடன் இருவரும் மாளிகைக்குத் திரும்பினார்கள். நேரம் சென்றது, உணவு முடிந்தது.
ரோகிணி மெல்லத் தனது தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள். கெஞ்சும் பாவனையில் அவர் முகத்தை நோக்கினாள். மகிந்தர் திரும்பினார்,
“என்ன ரோகிணி?’’
“கட்டாயம் நான் சோழபுரத் திருவிழாவுக்குச் செல்லவேண்டும். அப்பா! நீங்களும் அன்னையாரும் வரமுடியாது என்று எனக்குத் தெரியும். நானும் மித்திரையும் வல்லவரையர் தாத்தா புறப்படும்போது ஒன்றாகச் செல்கிறோம். மறுக்காதீர்கள், அப்பா!’’
மகிந்தரின் முகம் சுருங்கியது. அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,
“உனக்குச் சித்த சுவாதீனமில்லையா?’’ என்றார்.
“சோழபுரத்துக்குப் போனால் எல்லாம் சரியாகி விடும், அப்பா!’’
“ரோகிணி!’’ என்று அதட்டிவிட்டு, பேராசையால் விரிந்த கண்களோடு உருக்கி வார்த்த இரும்புத்தகடு போன்ற குரலில் அவளிடம் பேசினார்:
“நீ சோழபுரத்துக்குப் போய்ச் சேர்வதற்குள், சோழபுரமே இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறது. இல்லை, புதுநகர் புதைவிழா நடந்துவிடும். எல்லோரும் மடிந்து போய்விடுவார்கள்!’’
“அப்பா!’’
மகளின் வாயைப் பொத்தினார் மகிந்தர்.
“இப்போது நாம் எதற்குமே வாயைத் திறக்கக்கூடாது ரோகிணி! சோழபுரத்தை நோக்கிக் கூட்டத்தோடு கூட்டமாய்ப் பாண்டியர்களும் சளுக்கர்களும் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பகைவர்களைக் கொண்டே அவர்களை அழிக்கப் போகிறோம் நாம். நடப்பது வெற்றிபெற்றவர்களுடைய வெற்றி விழாவல்ல; தோல்வியுற்றவர்களின் வெற்றிவிழா! எல்லாம் தலைகீழாக மாறப் போகிறது!’’
ரோகிணி நடுநடுங்கினாள்.
‘எது தலைகீழாக மாறப் போகிறது? இளவரசர் இப்போது எங்கு இருக்கிறார்? புத்தர் பெருமானே! இளவரசர் கொடும்பாளூரை விட்டு எங்கும் போய்விடாதிருக்க வேண்டும்; அவரை எப்படியாவது காப்பாற்றிவிடு, கருணை வள்ளலே!’
“ரோகிணி! இனிமேல் முடிவு தெரியும்வரையில் நீ இந்த மாளிகையை விட்டு எங்குமே வெளியில் செல்லக்கூடாது. எப்போதும் உன் அன்னையின் அருகிலேயே இருந்துவிடு. தோட்டத்தின் பக்கம்கூட நடமாட வேண்டாம். விரைவில் நம் துன்பமெல்லாம் தீர்ந்துவிடும்; வழியும் பிறந்துவிடும் - கவனமாக இரு மகளே’’ என்றார் மகிந்தர்.
ரோகிணியை உறங்கச் சொல்லிவிட்டு, தம்முடைய கட்டிலுக்குச் சென்றார் மகிந்தர். அவர் கூறிய செய்திகளைக் கேட்ட பின்னர் ரோகிணியின் மனதில் ஆயிரமாயிரம் நினைவுகள் ஒரே சமயத்தில் அலைமோதின. அவளுக்கு உறக்கம் எப்படி வரும்?
அருகில், அடுத்த கட்டிலில் அவருடைய அன்னையார் தமது புதல்வனை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தார். செய்தியைக் கேள்வியுற்ற நாளிலிருந்தே அந்த மாளிகையில் ஒருவருக்கும் உறக்கமில்லை. கூடத்தின் கோடியில் மகிந்தர் தமது திட்டங்களில் மூழ்கிக் கிடந்தார்.
நள்ளிரவு நேரம் தாண்டியது. மகிந்தர் தமது மகிஷியிடம் ஆறுதல் கூறுவதற்காக எழுந்து வந்தார். எழுந்து வந்தவர் நேரே மகிஷியிடம் செல்லவில்லை. ரோகிணியை உற்றுப் பார்த்துவிட்டு, அவள் உறங்குவதாக நினைத்துக் கொண்டு மகிஷியை அணுகினார் மகிந்தர். ரோகிணியின் செவிகள் கூர்மை பெற்றன.
“காசிபனை நினைத்துக்கொண்டு இனி நாம் அழக்கூடாது, தேவி! அவன் உயிரோடிருக்கிறான்; அவனுக்கு ஒரு துன்பமும் நேரவில்லை!’’
“என்ன?’’ வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார் மகிஷி.
ரோகிணியின் இதயத் துடிப்பு நின்று மீண்டும் தொடங்கியது.
“ரோகிணிக்கு இப்போது இது தெரியக்கூடாது. பேசாதிரு.’’
“சொல்லுங்கள்!” என்று கத்தினார் மகிஷி.
“அவன் இறந்துவிட்டான் என்றுதான் நானும் முதலில் நம்பினேன். நமக்குச் செய்தி அனுப்பிய வீரமல்லன் சிறிது அவசரப்பட்டுவிட்டான்! அந்த அவசரமும் நமக்கு ஒருவகையில் பெரிய உதவி செய்திருக்கிறது. அதிர்ச்சி தாங்காமல் ரோகிணி என்னிடம் பல ரகசியங்களைச் சொல்லி விட்டாள். தீமை நிறைந்த செய்தியால் நமக்கு நன்மை விளைந்திருக்கிறது, தேவி!”
“அந்தப் பாதகன் வேண்டுமென்றே பொய்யான செய்தி அனுப்பியிருப்பான்’’ என்று கூறினார் மகிஷி.
“இருக்கட்டுமே! அதன் பலன் என்ன? பலனை நினைத்துப் பார்!’’
ரோகிணியின் இதயம் போர்முரசு கொட்டத் தொடங்கியது.
மகிஷியின் குரல் எழும்பிற்று, “எங்கே காசிபன்? அவன் இப்போது எங்கே இக்கிறான்? இந்தச் செய்தி ஏன் பொய்யாக இருக்கக் கூடாது?’’
மகிந்தர் மெல்லச் சிரித்தார். “அவன் இப்போது பழிவாங்கும் படலத்தில் இருக்கிறான். நம்முடைய நாட்டிலிருந்து எவன் மணிமுடியை மீட்டுவந்தானோ, அவனுடைய நாட்டில் இருக்கிறான் காசிபன். அவனுடைய நாட்டை முதலில் காடாக்குவான். அவனை அழிப்பான். அல்லது சிறைப்பிடிப்பான்; பிறகு நம்மைச் சிறை மீட்க வருவான்! அவனுக்குப் பின்னால் ஆயிரமாயிரம் வீரர்களும் நம் அமைச்சரும் இருக்கிறார்கள்.’’
ரோகிணியின் நெஞ்சில் நெருப்புத் திவலைகள் கொழுந்து விட்டன.
‘கொடும்பாளூர்க் கோனாட்டில் படைகளோடு காசிபன்! என்னுடைய இளவரசரின் நாடாயிற்றே அது! அங்கென்ன இவனுக்கு வேலை? இந்தப் பகைவனுக்கு அவரிடம் என்ன வேலை! காசிபா! நீ என்னைப் பொறுத்தவரையில் இறந்து விட்டாய்! இன்னும் உயிரோடிருக்கிறாயா?
அப்படியானால் நீ என் தம்பியல்ல; என் பகைவன்; பகைவன்!’
பற்களைக் கடித்துக் கொண்டு, கண்ணீரை அடக்கிக் கொண்டு, பெருமூச்சை நிறுத்திக்கொண்டு கட்டிலில் கிடந்து புழுவாய்த் துடித்தாள் ரோகிணி. மூன்றாம் சாமமாகியது. அதுநாள் வரையில் உறங்காத அவள் பெற்றோர் அமைதியுடன் உறங்கினார்கள்.
ரோகிணி சந்தடியின்றி எழுந்தாள். சுவர்க்கோழியின் குரல் பயங்கரமாக அவள் செவிகளைத் துளைத்தது. பின்புறத் தோட்டத்தில் ஏதோ பறவைகளின் சிறகொலி எழுந்தது.
அவைகளைத் தவிர எங்குமே நிசப்தம்; எங்குமே அமைதி; எங்குமே இருள். அடிமேல் அடிவைத்து நகர்ந்தாள். மாளிகையின் வெளி வாயில் கதவு கிறீச்சிட்டது. அதற்கு வெளியே உற்று நோக்கினாள். நெடுந்தூரத்துக்கு ஒரே இருள் சூழ்ந்திருந்தது. கோட்டை வாயிலில் தீப்பந்தங்கள் நெருப்புத் துண்டுகள் போல் தெரிந்தன. வேறு புறம் திரும்பினாள். ரோகிணியின் நெஞ்சிலே நெருப்பு நிறைந்திருந்தது; அவள் மெல்லுடலைக் கனத்த இருள் தழுவியது.
தொடரும்
Comments
Post a Comment