வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 3- 41. சோழகங்கத்தில் புயல்.


கங்காபுரியில் சங்கமமாகும் பல்வேறு சாலைகளிலும் மக்கள் கூட்டம் பொங்கிப் புரண்டெழுந்து வந்ததல்லவா! அந்த வெள்ளத்தோடு வெள்ளமாகப் பல்லாயிரம் கள்வர்களும் சேர்ந்துகொண்டு விட்டனர். பாண்டிய நாட்டு மகர மீன்களும் சளுக்க நாட்டு முதலைகளும் அந்த வெள்ளத்துக்குள் நீந்திவந்தன.

நெற்றியிலே பொறிக்கப்பட்ட திரிசூலம் அவர்களுடைய ரகசியச் சின்னம். எளிதில் அழிக்க முடியாத இரத்தச் சிவப்பில் அதை அவர்கள் பொறித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்துக்கிடையில் தங்களைச் சேர்ந்தவர்களையெல்லாம் தெரிந்து கொள்வதற்காக அதைச் செய்திருந்தார்கள். வண்டி வண்டியாக ஆயுதங்களைச் சுமந்துகொண்டு விழாவுக்கு வரும் யாத்ரீகர்களைப் போல் அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். 

முயங்கியில் முறியடிக்கப்பட்டு, ஓடி ஒளிந்த சளுக்க நாட்டு ஐயசிம்மர் அவர்களது தலைவர், அந்தத் தலைவரின் துணைவன் வீரமல்லன். அவனே அவர்களது அந்தரங்க ஆலோசகன். கூட்டத்துக்கிடையில் வீரமல்லனை மட்டும் காணவில்லை. அவன் எங்கு சென்றானோ, என்ன செய்து கொண்டிருந்தானோ தெரியவில்லை. அவர்களுடைய சதித் திட்டம் இது:- 

ஆறேழு நாட்கள் விழாவில் கலந்து கொண்டவர்கள் ஆடிப்பாடி அயர்ந்து விடுவார்கள். சோழப் பெரும்படையும் விழாப் பொறுப்புக்களில் ஈடுபட்டுக் களைத்துவிடும். திடீரென்று ஒருநாள் சோழபுரத்துக்குள் வெள்ளம் பாயும்! அதுவே போரைத் தொடங்குவதற்கான அறிகுறி. பிறகு கோட்டைக்குள்ளிருந்து கொண்டே கொன்று குவிக்க வேண்டியதுதான்!...முடிவு! வெற்றி விழா இவர்களது தோல்வி விழாவாக வேண்டும். 

சதித் திட்டமென்னவோ மதியூகத்துடன்தான் வகுக்கப் பட்டிருந்தது. வெற்றிச் செருக்கால் நடைபெறும் விழாவாக இருந்திருந்தால் கட்டாயம் அப்போதே சோழசாம்ராஜ்யம் சரிவு கண்டிருக்கும். ஆனால் செருக்கு விழாவல்ல இது. வலிமையின் பெருக்கு விழா. 

கொடும்பாளூரிலிருந்து இளங்கோ அனுப்பி வைத்த குதிரைப்படை பல பகுதிகளாகப் பிரிந்து பல சாலைகளையும் ஊடுருவிச் சென்றது. அங்கங்கே பகைவர்களை வளைத்துக் கொண்டது. தனக்குப் பின்பலமாக சோழநாட்டுப் பெருங்கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டது. 

திரிசூலமேந்திக் காளமுகர்களாக வந்தவர்கள் பாசுபத வேடதாரிகள், வேல் விளையாட்டு விற்பன்னர்களாக வேற்றுப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் போல் நடித்தவர்கள் இவ்வளவு பேர்களையும் குலைநடுங்கச் செய்தனர் கொடும்பாளூர்க் குதிரை வீரர்கள். 

வண்டி வண்டியாகப் பகைவர்கள் ஏற்றிவந்த ஆயுதங்கள் அவர்களையே பழிவாங்கிக் கொண்டன. அலறிப் புடைத்தார்கள். திக்கெட்டும் திசை தடுமாறி ஓடினார்கள், சரிந்து விழுந்தார்கள்; சரணடைந்து தாள் பணிந்தார்கள். 

மேலே மேலே கங்காபுரியை நோக்கிக் களை எடுத்துக் கொண்டே சென்றது கொடும்பாளூர்ப்படை. படையினரின் கண்களுக்குத் தப்பியவர்கள் கூட மக்களிடமிருந்து தப்ப முடியவில்லை. இரவு வந்தது; அத்துடன் நிலவும் சேர்ந்தது. 

வளர்பிறைச் சிறுநிலவு சோழகங்கப் பேரேரியில் மிதந்த வண்ணத் தோணிபோல் வானத்தில் மிதந்தது. புது நகரத்தை அடுத்த சோழகங்கமே நிலவின் மங்கலான ஒளியில் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. நகரத்தின் 

திருவிழாவைத் தன்னால் காண முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பிறந்த சோம்பல் போலும்! 

ஏரியின் வசந்த மண்டபத்துக் காவலர்களுக்குக் காவல் மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது. ஆனால் காவலர்கள் இன்னும் வந்து சேரவில்லை. ஏரியின் எதிர்க் கரையிலிருந்து அவர்கள் வந்தாக வேண்டும். 

காவல் மாற்றிக்கொண்டவுடன் நகரத்துக்குள் போய் விழாவைக் காண வேண்டுமென்ற ஆத்திரம் அவர்களுக்கு. 

“விழாக்கூட்டத்தில் மதிமயங்கி விட்டார்கள் போலிருக்கிறது, வரட்டும் சொல்கிறேன்’’ என்று புழுங்கினான் காவலாளிகளின் தலைவன். 

“தலைவருக்கு இப்போதே கோட்டைக்குள் குதித்துக் கூத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆத்திரம்’’ என்றான் ஒருவன். எல்லோருமே சிரித்து விட்டார்கள். 

இதற்குள், “அதோ!” என்று எதிர்க் கரையைச் சுட்டிக் காட்டினான் ஒருவன். எல்லோருடைய கண்களும் அங்கே திரும்பின. தோணியொன்று மெல்ல மெல்ல வசந்த மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. தோணி அருகில் நெருங்க நெருங்கக் காவலர்களுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. 

முனையில் கயிற்றைக் கட்டிவிட்டு முதலில் ஒருவன் குதித்தோடி வந்தான். பிறகு அவனைத் தொடர்ந்து பலர் வந்தார்கள். இவ்வளவு பேர்கள் எதற்கு? 

“காளிங்கா? காவல் படையை இரட்டித்திருக்கிறார்களா?’’ என்று கேட்டான் மண்டபத்தில் நின்ற தலைவன். வந்தவன் காளிங்கனாக இருந்திருந்தால் மறுமொழி கூறியிருப்பான். அவனும் அவனுடைய வீரர்களுந்தான் கரையோரத்திலேயே வீரசுவர்க்கம் கண்டு விட்டார்களே! 

“காளிங்கனல்ல. தாத்தா, நான் வீரமல்லன்!’’ 

அவ்வளவுதான்! 

நொடிப் பொழுதுக்குள் ஏரிக்கரை வசந்த மண்டபத்துக்குள் ஒரு சூறாவளியே உருவாகிவிட்டது. கழுகுகளைப் போல் பாய்ந்து வந்து வாள் சுழற்றினர் வீரமல்லனின் ஆட்கள். வேல்களும் இரும்புலக்கைகளும் இன்னும் பல்வேறு ஆயுதங்களும் மளமளவென்று தோணிக்குள்ளிருந்து வெளிவந்தன. 

மின்வெட்டும் நேரந்தான். அங்கே மின்னல்கள் நெளிந்தன; இடிகள் இடித்தன; சிறு புயல் எழுந்தது. வாளோடு வாள், வேலோடு வேல், மனிதனோடு மனிதன்! 

எத்தனை பகைவர்களை வெட்டிச் சாய்க்க முடியுமோ அத்தனை பேர்களை வெட்டிச் சாய்த்துவிட்டுத் தாங்களும் சரிந்து போனார்கள் மண்டபத்துக் காவலர்கள். பகைவர்களில் பத்துப்பேர் மிகுந்திருக்க, 

காவலர்களில் ஒருவர்கூட உயிருடன் இல்லை. மண்டபத்தின் மையத்தில் நீருக்குள் சில படிகள் சென்றன. அதற்குள்ளே மளமளவென்று இறங்கி இரும்புலக்கைகளால் தகர்க்கத் தொடங்கினர். தூண் என்ன இரும்பினால் வார்க்கப்பட்ட தூணா? ‘கணீர் கணீர்’ என்ற ஓசைதான் எழும்பியது. அது அசைந்து கொடுக்கவில்லை. தன்மீது பாய்ந்த உலக்கைகளையே அது திருப்பித் தாக்கியது. என்றாலும் பகைவர்களின் வெறி அடங்கவில்லை. வீரமல்லனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். ஆவேசம் கொண்டவன் போல் அடிமேல் அடிவைத்தான். 

“தயங்காதீர்கள், தகர்த்துத் தள்ளுங்கள்’’ என்றான். 

சோழ சாம்ராஜ்யம் எத்தனை வலிமையுடையது என்பதை அந்த ஒற்றைத் தூணே மெய்ப்பித்துவிடும் போலிருந்தது. அதைப் போலவே அதைச் சூழ்ந்த பகைவரின் கொடுமை 

எத்தகையது என்பதை அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். தூணிலிருந்து கதைகள் உதிர்ந்தன. உரம் பெற்றவர்கள் அதில் பிளவு காணப் பார்த்தார்கள். 

ஏரி நீரில் எங்கிருந்தோ சலசலப்புச் சத்தம் கேட்டது. இடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு மேலே எட்டிப் பார்த்தான் வீரமல்லன். பகீரென்று பற்றி எரிந்தது அவன் அடிவயிறு. 

நிலவின் மங்கலான வெளிச்சத்தில் நிழல்போல் ஒரு தோணி மிதந்து வருவது தெரிந்தது. 

சிலரைத் தூணிடம் விட்டு மற்றும் சிலரோடு தான் வந்த தோணியில் தாவினான் வீரமல்லன். ஏரிக்குள்ளே தோணிகளிரண்டும் மோதிக் கொண்டன. துடுப்புகளும், வேல்களும் மாறி மாறிச் சுழன்றன. அவர்கள் எழுப்பி விட்ட பேரலை அவர்களையே விழுங்கத் துடிப்பவை போல் கொக்கரித்தன. 

தோணிகளுக்குள்ளே கடும்போர்! தோணிகள் நீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்தன, அலைகள் சீறிச்சீறிப் பாய்ந்தன. 

“யாரது, நீயா?’’ என்றான் வீரமல்லன். 

“நீயா?’’ என்றான் இளங்கோ. 

துடுப்பு வலித்த மாங்குடி மாறன் தன் தோணியால் எதிர்த் தோணியை நெருங்கி, இரண்டையுமே மண்டபத்தருகில் கொண்டு வந்தான். எல்லோருமே மண்டபத்துக்குள் தாவினார்கள். மாறன் படிகளில் இறங்கித் தூணைத் தகர்ப்போரிடம் ஓடினான். 

இளங்கோவோ தன்னை எதிர்த்து நின்றவர்களின் இடையில் தனித்து நின்று சூறாவளியாகச் சுழன்றான். எந்தப் போர்க்களத்திலும் இத்தனைக் கடுமையான எதிர்ப்பு அவனுக்கு இல்லை. அவனுடைய திறமைகளை நன்கு அறிந்தவனல்லவா இப்போது எதிரில் நிற்கிறான்! மண்டபத்துத் தூணைத் தகர்க்க வந்த இரும்புலக்கைகள், மாங்குடி மாறனைத் தகர்க்க முற்பட்டு விட்டன. ஆளுக்கொரு புறமாக நின்றுகொண்டு அவர்கள் ஆவேசப் போர் புரிந்தார்கள். வசந்த மண்டபம் ரணகள மண்டபமாக மாறியது. அதனைச் சுற்றிச் சுற்றி வந்து, தன்னை எதிர்த்தோரை ஒவ்வொருவராகச் சாய்த்தான் இளங்கோவேள். ஆனால் வீரமல்லன் மட்டிலும் தனித்து நின்றபோது இளங்கோவின் கரம் நடுங்கியது. இளங்கோவின் பழைய நண்பன் வீரமல்லன். நெடுநாட்கள் இருவரும் ஒன்றாக உண்டு, உறங்கி உலவிப் பழகியவர்கள். நட்பு அவன் வாளில் கசிந்தது. அதைக் கனிய வைத்துவிடும் போலிருந்தது; ஒருகணம் தயங்கி நின்றான் இளங்கோ. 

போர்க்களங்களிலும் சரி, தனிப் போர்களிலும் சரி அந்த ஒரே ஒரு கணத்திற்கு வலிமை அதிகம். வெற்றி தோல்விகளை முடிவுகட்டும் கணப்பொழுது அது. 

இளங்கோவின் தயக்கம் வீரமல்லனின் வெற்றியாகி விடப்போகிறதா? அந்தக் கணப்பொழுதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான் வீரமல்லன். வீரமல்லனின் கூர்வாள் இளங்கோவின் மார்புக் கவசத்திடையே பாய முயன்று, மண்டபத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தவனை நீருக்குள் தள்ளிவிட்டது. கவசத்துடன் நீரில் தள்ளப்பட்டவனின் கதி என்ன ஆகும்? 

வீரமல்லனுக்கு அது போதவில்லை. தண்ணீருக்குள் அமிழ்ந்து சென்ற இளங்கோவை நோக்கித் தன்னுடைய வேலையும் குறிபார்த்து வீசினான். இளங்கோவின் உடல் நீர் மட்டத்தின் அடித்தளத்துக்கே போய்க் கொண்டிருந்தது. மேலே குமிழிகள் எழும்பின. வீரமல்லனுக்குத் தூணின் நினைவு வந்துவிட்டது. பதறிக்கொண்டு அங்கு ஓடினான். ஐவர் நின்று தகர்த்த இடத்தில் இருவர் மட்டிலுமே மிஞ்சியிருந்தார்கள். அருகில் மலைபோல மாங்குடி மல்லனின் உடல் கிடந்தது. அவன் வாய்வழியே செங்குருதி பாய்ந்தது. 

அவனை எற்றித் தள்ளிவிட்டு இரும்புலக்கையை எடுத்துக்கொண்டு தூணோடு போராடத் தொடங்கினான். செங்குருதி கலந்த ஏரி நீருக்குள்ளேயும் போராட்டம் ஓயவில்லை; முடியவில்லை. சோழபுரத்தின் ஆழத்தில் அமிழ்ந்து கொண்டிருந்த இளங்கோவுக்கு ஒரே 

ஒரு நிகழ்ச்சி மட்டிலும் கனவுபோல் நினைவுக்கு வந்தது. ஏரிக்குள்ளே அவன் தள்ளப்பட்ட அதே சமயத்தில் யாரோ திடுக்கிட்டு அலறினார்கள். அலறிய குரல் பெண் குரல்; பழக்கமான குரல். மெய்யாகவே குரல் ஒலித்ததா, அல்லது அவனுடைய மனப்பிரமையா? 

வாய், செவி, நாசி எங்குமே நீர் நிறைந்து அவனைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. நினைவு தடுமாறத் தொடங்கியது. அந்த நிலையிலும் அவனுக்கு அந்தக் குரல் மறக்கவில்லை. மீண்டும் ஒரு முறை அது ஒலிக்காதா? முடிவுக்கு முன்பே ஒரே ஒரு முறை மீண்டும் அதைக் கேட்க முடியாதா? 

எங்குமே நிசப்தம் நிலவி வருவது போன்ற உணர்ச்சி அவனைச் சுற்றிலும் பரவியது. நினைவிழந்தான்; செயலிழந்தான். தொலைவிலிருந்து ஒரு சுறாமீன் செதில்களை விரித்தவாறு அவனை நெருங்கியது. 

தொடரும்

Comments