வேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3- 42. தியாகத் திருமகள்.






வசந்தமண்டத்தில் இருந்த ஒரு தூணைச் சரித்து விட்டால் மாபெரும் சோழசாம்ராஜ்யத்தையே சரித்துவிடலாம் என்ற துணிவு வீரமல்லனுக்கு. கள்வெறி கொண்டவன்போல் அவன் சுற்றுப்புற உலகத்தையே மறந்து அந்தத் தூணைச் சாடிக் கொண்டிருந்தான்.

உறுதியான வேல் முனையை முறித்து வைத்து, அதை ஆணிபோல் தூணுக்குள் அறைந்து கொண்டிருந்தார்கள் வீரமல்லனும் அவனுடைய ஆட்கள் இருவரும். தொளையிட்டு நீரை உள்ளே புகுத்திவிட்டால் பிறகு நீரின் வலிமையின் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாதல்லவா அந்தத் தூண்?

இரும்பு உலக்கைகள் எழுப்பிய சத்தத்தால் அந்த மண்டபம் முழுதுமே அதிர்ந்தது. இளங்கோவின் முடிவைப்பற்றிய ஐயமே வீரமல்லனுக்கு ஏற்படவில்லை.

“முடிந்து போனான் அவன்!”

ஆனால், நீருக்குள் தலைக்குப்புறச் சென்று நினைவை இழந்துவிட்ட இளங்கோ, தன்னைத் தேடிவரும் சுறாமீனைக் கண்டவுடன் சிறிது சிறிதாகச் சுய நினைவைத் திரும்பப் பெற்றான். கடைசி நேரத்திலும் ஒரு கடும்பகையா? தான் இறந்து போவதற்கு முன்னால் தன்னை அழிக்கவரும் உயிரை அழித்து விடவேண்டும் என்ற ஆத்திரம் அவனுக்கு.

உயிர்த் துடிப்பின் கடைசிப் போராட்டம் என்றால் வீரர்களின் வலிமை எங்கிருந்தோ திரும்பி வந்துவிடும் போலும்! சரேலெனத் திரும்பினான்; தன்னை நெருங்கி வரும் மீனின் கண்களையே கவனித்தான். அந்தக் கண்களில் ஏன் இத்தனை வேதனை? ஏன் இத்தனை கனிவு? திடீரென்று அதன் செதில்கள் மறைந்து, வாழைக் குருத்துக்கள் போன்ற இரு கரங்கள் தெரிகின்றனவே! நிலவால் வார்த்தெடுத்த மிருதுவான மெல்லுடன் உண்டா

அதற்கு? என்ன! மச்சகன்னிகை என்பவள் இவள்தானா? கனவில் நடப்பவைபோல் ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் நடந்த கொண்டிருந்தன. தனது மென்மையான பொற்கரங்களால் அந்தக் கன்னிகை அவனை வளைத்துக் கொண்டாள். விழுங்குவதற்கு மாறாக அவனை விழிகளால் விழுங்கிக்கொண்டே நீரில் மேற்பரப்புக்குக் கொண்டு வந்தாள்.

நீர்ப்பரப்பில் மிதந்து கொண்டிருந்த தோணி ஒன்று அவர்களை நெருங்கி வந்தது. அதற்குள்ளிருந்த பெண்கள் இருவர் அவனைப் பற்றி இழுத்துத் தோணிக்குள் கொண்டு வந்தனர். மச்சகன்னியும் தோணியில் ஏறிக்கொண்டாள். மண்டபத்தை நெருங்கிவந்து அதன் மறைவில் ஓர் ஓரமாக கட்டப்பட்டது தோணி. இளங்கோ அந்தக் கன்னிகையின் மடியில் கிடந்தான். அவன் உட்கொண்ட நீரனைத்தும் வெளியில் வந்தது. சிறிது சிறிதாக அவன் உணர்வுபெற்றுத் தன்னுடைய விழிகளைத் திறந்தான்.

திறந்த விழிகளை இமைப்பதற்கு அவனுக்கு மனமில்லை. கண் இமைக்கும் நேரத்தில் தான் காணும் காட்சி கனவாக மறைந்துபோய்விடுமோ என்ற அச்சம் அவனுக்கு பார்த்துக் கொண்டேயிருந்தான். மல்லிகை மொட்டுக்களைப் போன்ற கண்ணீர்த்துளிகள் அவன் நெற்றியில் உதிர்ந்தன. அந்தத் துளிகளில்தான் எத்தனை நறுமணம்!

“நங்கையாரே!’’ என்று நெடுமூச்செறிந்தான் இளங்கோ.

அந்தக் குரல் ஒலித்தவுடன் நங்கையார் நங்கையாராக இல்லை. சோழ சாம்ராஜ்யத்துச் சக்கரவர்த்திகளின் குமாரத்தியாக இல்லை. அவளுக்கே உரித்தான கம்பீரமும் அழுத்தமும், மனத்திண்மையும் எங்கோ மாயமாய் மறைந்துகொண்டன.

காலமெல்லாம் மூடி மறைத்துவிட முடியும் என்று அவள் நம்பிக்கொண்டிருந்த இதயத்தின் சாளரங்கள் படீர் படீரெனத் திறந்துகொண்டுவிட்டன. உள்மனத்தின் சோகக் குமுறல் ஒரு பெரும் புயலாக எழும்பிவந்தது. அவளைத் துரும்பாக மாற்றிச் சுழல வைத்தது.

மாமன்னரின் மகள் என்ற முகத்திரையும் ஒருங்கே கிழிந்தது. மனிதப் பெண்ணானாள் அருள்மொழி.

அருகிலிருந்த தோழிகளையும் கவனியாது அவன்மேல் விழுந்து குமுறினாள்; குலுங்கினாள்; புலம்பினாள்.

“இளவரசே! இளவரசே! இளவரசே”

என்று புழுவாய்த் துடித்துவிட்டாள். வேதனைக்கிடையில் வியப்படைந்தான் இளங்கோ!

‘நங்கையார்தானா? இவள்? அல்லது ஆயிரமாயிரம் ரோகிணிகள் ஒன்றாகத் திரண்டு வந்து உருமாறி வந்து அருள்மொழி உருவத்தில் தோன்றியிருக்கிறார்களா?’

பெண்கள் அனைவரையும் பிரம்மன் ஒரே வகைக் களிமண்ணால் உருவாக்கிவிடுவானோ என்னவோ? முகத் தோற்றத்தில் சிற்சில மாறுதல்கள்; அகத் தோற்றத்தில் சிற்சில வளைவு நெளிவுகள்; அடிப்படை ஒன்றுதானா?

கால் நாழிகைப் பொழுதுக்குள் காட்டு யானையின் வலிமை திரும்பியது இளங்கோவுக்கு. நங்கையாரின் அன்பு வெள்ளப்பிரவாகத்தில் அவன் தன்னுடைய அறிவு சுடர்விடுவதைக் கண்டான். கடமை அவன் கண்முன்னே நின்றது.

துள்ளி எழுந்து மண்டபத்தின்மீது தாவி நேரே மையத் தூணுக்குச் செல்லும் படிகளின் பக்கம் திரும்பினான். நிலைமையை அறிந்துகொண்ட அருள்மொழி தன் தோழிகளில் ஒருத்தியை அருகில் அழைத்து அவள் செவியில் ஏதோ கூறினாள். பிறகு மற்றொருத்தியோடு இளங்கோவைப் பின்பற்றினாள்.

முன்னே ஓடிய இளங்கோவின் கால்களில் மாங்குடி மாறனின் மலைபோன்ற சரீரம் தட்டுப்பட்டவுடன் ஒரே ஒரு கணம் கீழே குனிந்தான் இளங்கோ. பிறகு நெஞ்சில் பற்றிய நெருப்போடு நிமிர்ந்தான். கோடையிடிகள் தூணருகே இடித்தன. தூணில் தலைகள் மோதிச் சிதறின. சரிந்தனர் இருவர்; பணிந்து நின்றான் பழைய நண்பன்., வீரமல்லனின் முகத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் அவனை வெளியே இழுத்து வந்து சிறு தூண் ஒன்றில் கட்டி வைத்தான். பிறகு மாங்குடி மாறனிடம் கதறிக் கொண்டு ஓடோடியும் வந்தான் இளங்கோ.

மாங்குடி மாறனின் அருகில் வாய் திறந்தவாறு அமர்ந்திருந்தாள் அருள்மொழி. மெல்ல அவன் தலையைத் தூக்கி மடிமீது கிடத்திக்கொண்டான் இளங்கோ. உதடுகள் துடித்தன; சொற்கள் வெளிவரவில்லை.’

“மாறா! மாறா!’

மாறனின் கண்கள் மலர்களென விரிந்தன. பெருமை நிறைந்த புன்னகையொன்று அவன் இதழ்களில் மொட்டு விட்டது.

“இளவரசே, நான் பிழைத்தெழுந்தால் கட்டாயம் என்னைக் கடாரத்துக்கு அழைத்துச் செல்வீர்களா?’’

இளங்கோவின் இதய நரம்புகள் துடித்தன. மாறன் தன்னுடைய கேள்விக்கு விடையை எதிர்பார்க்கவில்லை. அது அவனுடைய கடைசிக் கேள்வி; கடைசி ஆசை. இந்தக் கேள்வி பிறந்தவுடன் அவனுடைய ஆவியும் இளங்கோவின் மடியில் பிரிந்தது.

சோழகங்கப் பேரேரி அவர்களோடு சேர்ந்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டது. மெதுவாக அவன் தலையைத் தரையில் வைத்துவிட்டு அருள்மொழியைத் திரும்பிப் பார்த்தான் இளங்கோ. அவள் அவனுடைய கண்ணீரைத் தன் விரல்களால் வழித்துச் சுண்டினாள். சற்று நேரம் மௌனத்தில் கழிந்தது.

“நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள், இளவரசி?’’ என்று கேட்டு மௌனத்தைக் கலைத்தான் இளங்கோ.

“வெளிக் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தோழிகளோடு ரதத்தில் வந்து கொணடிருந்தேன். ஏரிக்கரையிலிருந்து கொண்டு வசந்த மண்பத்தைக் காணவேண்டும் என்று தோன்றியது. ரதத்தைச் சாலையில் நிறுத்திவிட்டு நாங்கள் மட்டிலும் ஏரிக்கரைக்கு வந்தோம். மண்டபத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. சாரதியிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டுத் தோணியில் கிளம்பி வந்தேன்.’’

“இந்த மண்டபத்தைப் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?’’ என்று கேட்டான் இளங்கோ.

“தெரியும்’’ என்றாள் அருள்மொழி. ஆனால் எப்படித் தெரியவந்தது என்பதை அவள் வெளியிடவில்லை. இளங்கோ துணுக்குற்றான். ‘ரோகிணி இவளிடம் கூறிவிட்டாளா?’

அவனுடைய தவிப்பைத் தவிர்ப்பவள்போல்,

“வல்லவரையர் தாத்தா கூறினார்’’ என்றாள் நங்கையார். ரோகிணியை அவள் காட்டிக் கொடுக்கவில்லை.

ஆனால் இளங்கோ வீரமல்லனை அங்கு கண்டவுடனேயே காரணத்தை ஊகித்தறிந்து கொண்டான். ஆனைமங்கலம் மாளிகையில் முன்பொரு நாள் அவன் விட்டுச் சென்ற வளைஎறி இளங்கோவின் ஊகத்தை உறுதிப்படுத்தியது.

அருள்மொழியின் செய்தியோடு தோணியில் கரைக்குச் சென்ற அவள்தோழி அதற்குள் மாமன்னரிடம் செய்தியை எட்டவிட்டாள். ஏற்கனவே கங்காபுரிக்குள் நுழைந்த கொடும்பாளூர்க் குதிரைப்படை அவருக்கு ஒரு பகுதிச் செய்தியை அறிவித்தது. மறுபகுதியும் இப்போது வந்துவிட்டது.

விழாக்களுக்கு விக்கினமில்லாத முறையில் மாமன்னரும் பெரியவேளாரும் ஏரிக்குக் கிளம்பினார்கள். வீரர்கள் சிலரோடு அரண்மனைப் படகு மைய மண்டபத்தை நோக்கி விரைந்தது.

மண்டபத்துக்குள் மாமன்னர் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே, அவரையும் முந்திக்கொண்டு இளங்கோவிடம் ஓடி வந்தார் பெரிய வேளார். தம்முடைய மைந்தனை மார்புறத் தழுவிக்கொண்டு கண்ணீர் வடித்தார்.

“இளங்கோ! நீ என்னுடைய குமாரனாகப் பிறந்ததன் பலன்

இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. கொடும்பாளூர்க் குலத்தையே உயர்த்தியிருக்கிறாய். கோனாட்டின் பெருமையையே உயர்த்தியிருக்கிறாய். நம்முடைய படைகளை அனுப்பிப் பகைவர்களை அழித்ததுமல்லாமல், நீயே நேரில் வந்து மண்டபத்தைக் காத்தாயல்லவா? உயிர் கொடுத்துக் கடமை காக்க முன்வந்தாயல்லவா? இளங்கோ! நான் மிகப் பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன்!’’

தந்தையாரிடமிருந்து அந்த நாள் வரையில் சிறிதளவு பாராட்டைக் கூடப் பெற்றறியாத இளங்கோவுக்கு அவருடைய பரிவு கண்கலங்கச் செய்தது.

“என்னைவிட மாங்குடி மாறன் உயர்ந்துவிட்டான், தந்தையே!’’ என்று அவனைச் சுட்டிக் காட்டினான் இளங்கோ.



பெரிய வேளார், தமது மைந்தனை விட்டுவிட்டு மாறனின் நிலை கண்டு வெம்பினார்! சக்கரவர்த்திகளின் குரல் முதல் முதலாக இளங்கோவை நோக்கி எழுந்தது.

“கோனாட்டுப் படைகள் முழுவதையும் நீ இங்கே அனுப்பிவிட்டாய். நீயும் தலைநகரத்தில் இல்லை. உன்னுடைய நாட்டின் பொறுப்பை நீ மறந்துவிடலாமா இளங்கோ?’’

“மன்னித்துவிடுங்கள் சக்கரவர்த்திகளே! செய்தி கேட்டவுடன் எனக்கு வேறெதுவுமே செய்யத் தோன்றவில்லை’’ என்று தடுமாறினான் இளங்கோ.

அதற்குள் பெரிய வேளார் குறுக்கிட்டு , “எங்களுடைய செஞ்சோற்றுக் கடனை நாங்கள் எதற்காகவும், மறக்க மாட்டோம். சோழ சாம்ராஜ்யந்தான் எங்கள் உயிர் மூச்சு. அதைக் கட்டிக் காப்பதுதான் எங்களது முதல் கடமை பிறகுதான் எங்களுக்குக் கொடும்பாளூர்!’’ என்று குமுறினார்.

இளங்கோவிடம் சென்று அவனை இறுகத் தழுவிக் கொண்டார் இராஜேந்திரர்.

“உன் தந்தை சொல்வதைக் கேட்டாயா, இளங்கோ? கொடும்பாளூர்க் கோனாடு உங்களுக்கு மிகவும் சிறியதாகிவிட்டது. இனி உங்களுக்கு அது போதவே போதாது. வேளிர் குலமென்றும் சோழர் குலமென்றும் இனிப் பிரித்துப் பேசவேண்டாம். கொடும்பாளூர்ச் சோழர்குலம் இனிக் கங்காபுரிச் சோழர் குலத்துடன் ஒன்றி விடவேண்டியது தான். என்னுடைய காலத்தில் எனக்குப் பெரிய வேளார் இருப்பது போலவே நீயும் என் மைந்தன் இராஜாதிராஜனுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும், இளங்கோ!’’

அன்பு வெள்ளத்தில் அகப்பட்டுத் திக்குமுக்காடிப் போனான் இளங்கோ. இந்தச் சமயத்தில் அகங்கார வெள்ளம் கரைபுரண்டு கொண்டு வந்தது, தூணில் கட்டப்பட்டிருந்த வீரமல்லனிடமிருந்து.

“இளங்கோ, நீ செய்தது மிகப் பெரிய தியாகமடா! மிகப் பெரிய தியாகம்!” என்று கூறி, வெறிகொண்டவன் போல் நகைத்தான் அவன்.

“உன்னுடைய தலைநகரம் அங்கே தரைமட்டமாகிக் கொண்டிருக்கிறது; இங்கே நீ உயிர்த்தியாகம் செய்ய வந்தாயா? அறிவீனத்துக்குப் பெயர் தியாகமென்றால் நீ செய்திருப்பது தியாகந்தான்! இளங்கோ! இனி உன்னால் கொடும்பாளூரைக் காணவே முடியாது; கொடும்பாழூரைத்தான் நீ காணப் போகிறாய்!’’

மாமன்னரின் பிடியிலிருந்து பதறிக்கொண்டு விலகினான் இளங்கோ. இராஜேந்திரரின் விழிகள் கோவைக்கனிகளாக மாறின. பெரியவேளாரின் உடைவாள் மின்னலெனப் பாய்ந்து வீரமல்லனின் நெஞ்சுக்கெதிரே நீண்டது. மாமன்னர் அதைத் தடுக்கவில்லை. ஆனால் இளங்கோ அதன் குறுக்கே பாய்ந்து தடுத்து,

“நீ என்ன சொல்கிறாய், வீரமல்லா?’’ என்று வேதனை மிகுந்த குரலில் கேட்டான்.

“விஜயாலய சோழன் காலத்தில் அவனோடு சேர்ந்து கொண்டு எங்கள் தஞ்சை தலைநகரைச் சோழர்களுக்குப் பறித்துக் கொடுத்தீர்கள். இப்போது அவர்கள் புதிய தலைநகரத்து விழாக் கொண்டாடுகிறார்கள்! அவர்களுடைய வெற்றி விழாவின்போது, உங்களுடைய தலைநகரமே பறிபோய்க் கொண்டிருக்கிறது. கங்காபுரியைக் காப்பாற்ற வந்தாயே, உன் கொடும்பாளூரைக் காப்பாற்றுவது யார்? யார் இளங்கோ?’’

இளங்கோவின் முகத்தில் ஒவ்வொரு அணுவும் துடிதுடித்தது.

“வீரமல்லா! உன்னை நண்பனென்று நம்பினேனடா! உற்றவனென்று மதித்தேனடா... உனக்கு நான் செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்திருந்தால் இதற்கெல்லாம் துணிந்திருப்பாயா? இந்தச் சமயத்தில் உன் முன்னோர்களின் தலைநகரமாகிய சந்திரலேகைக்கே நீ சிற்றரசனாகியிருப்பாய், வீரமல்லா!... அட பாவி! உன்னையே நீ கெடுத்துக் கொண்டாயடா!”

வீரமல்லன் இதுபோன்ற தவிப்புக் குரலை இளங்கோவிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவன் கையால் தன் தலை உருளப் போகிறதென்று நினைத்தவன், அவனது பரிதவிப்பைக் கண்டவுடன் தலை கவிழ்ந்தான்.

பழைய நட்பை இளங்கோ மறந்து விடவில்லையா? தீமைகளை மட்டுமே மறந்துவிட்டானா? வீரமல்லனின் கண்களில் முதல் முறையாகக் கண்ணீர் கசிந்தது.

“விரைந்து கொடும்பாளூருக்குச் செல், இளங்கோ. பிரான் மலையிலிருக்கும் பாண்டியப் படைகளைக் கீர்த்தி முன்பே கொடும்பாளூருக்கு அனுப்பியிருப்பார். நகரம் இதற்குள் அழிந்திருந்தாலும் அழிந்திருக்கும். போய் அதைக் காப்பாற்ற முடியுமா என்று பார்!’’

பெரிய வேளார் செயலற்று நெடுநேரமென நின்றுவிட்டார். அவரைப் பற்றிக் குலுக்கினார் இராஜேந்திரர்.

“புறப்படுங்கள் கொடும்பாளூருக்கு! இங்கே விழா இடையூறில்லாமல் நடந்து கொண்டிருக்கட்டும். நாம் அங்கே போய் வருவோம்.’’

அருள்மொழியையும் தம்முடன் அழைத்துக்கொண்டார் மாமன்னர். அரண்மனை ரதங்களும் பல்வேறு குதிரைகளும் இரவோடு இரவாகக் கொடும்பாளூரை நோக்கி விரைந்தன. அப்போது வீரமல்லனும் இளங்கோவின் அருகில் இருந்தான்.

தொடரும்



Comments