Skip to main content

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 43. குடி புகுந்தாள் )

பாகம் 3 , 43. குடி புகுந்தாள்


இரவில் மூன்றாம் சாமத்தில் மாளிகையை விட்டுத் தனியே கிளம்பிய
ரோகிணி, ஒருகணம் மரத்தடியில் நின்று யோசனை செய்துவிட்டு, நேரே
தஞ்சை அரண்மனையின் உள்முகப்புக்குச் சென்றாள். அந்த நேரத்தில்
அவளை அந்த இடத்தில் கண்ட வாயில்காவலர்களுக்கு ஒன்றுமே
விளங்கவில்லை. பணிவோடு ரோகிணியைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

“வல்லவரையர் தாத்தாவிடம் போய் நான் வந்திருப்பதாகச்
சொல்லுங்கள். மிக மிக அவசரமென்றும் கூறுங்கள்.’’

அவளுடைய குரல் காவலர்களுக்குக் கட்டளையிடும் குரலாக இருந்தது.
விரைந்து சென்று படுக்கையிலிருந்தவரை எழுப்பினார்கள். அவரே வாயிலுக்கு
வந்து ரோகிணி நிற்கும் கோலத்தை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். பின்பு
“வா, ரோகிணி! என்ன செய்தி?’’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே
அழைத்துச் சென்றார். “இந்த நேரத்தில் நீ என்னைக் காணும்படியாக உனக்கு
என்ன நேர்ந்தது?’’ என்று கேட்டார்.

“தாத்தா!’’ என்று விம்மினாள் ரோகிணி, பிறகு ஒருவாறு தன்
உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கூறினாள்:

“எனக்கு என்ன நேர்ந்தாலும் நான் இங்கு வந்திருக்க மாட்டேன்.
ஆனால் கொடும்பாளூருக்கும் அதன் இளவரசருக்கும் இப்போது ஆபத்து
நேர்ந்திருக்கிறது. இனித் தாமதிக்க நேரமில்லை. உடனே படைகளுடன்
சென்றால் ஒருவேளை காப்பாற்றலாம்.’’

திடுக்கிட்ட வல்லவரையர் வந்தியத்தேவர், “உனக்கு எப்படித் தெரியும்
ரோகிணி!” என்று கேட்டார்.

“தயவு செய்து என்னிடம் எதையும் கேட்காதீர்கள், தாத்தா! எனக்குத்
தெரியக்கூடாத செய்திகள் எனக்குத் தெரிந்ததனால் வந்த வினைகள்தான்
இவ்வளவும். என் சொல்லை நம்பினால் உடனே புறப்படுங்கள். இல்லா
விட்டால் என்மீது இரக்கம் கொண்டு, எனக்கு ஒரு குதிரை கொடுத்து
உதவுங்கள். இதையாவது உடனே செய்யுங்கள்.’’

வல்லவரையர் ரோகிணியின் முகத்தை ஒரு கணம் கூர்ந்து நோக்கினார்.
பிறகு எழுந்து சென்று காவலர்களுக்கு ஏதோ கட்டளைகள் இட்டார். திரும்பி
வந்து, “சரி புறப்படு ரோகிணி!” என்றார்.

நொடிப் பொழுதில் நூற்றுக்கணக்கான குதிரை வீரர்கள் அரண்மனை
வாயிலில் அணிவகுத்து நின்றனர்; மகிந்தர் மாளிகையைச் சுற்றிலும்
காவற்படை வளைத்துக் கொண்டு நின்றது. வீரர்களின் அரவம் கேட்டு
விழித்துக் கொண்ட மகிந்தர் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தார்.
அவருடைய கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை.

‘என்ன! வல்லவரையரும் ரோகிணியுமா முன்னின்று படைகளை
நடத்திச் செல்லுகிறார்கள்! எங்கே செல்லுகிறார்கள்?’’

பதறியடித்துக்கொண்டு போய்க் கந்துலனைப் பற்றி எழுப்பினார்
மகிந்தர்.

“காரியம் கெட்டுவிட்டது, கந்துலா! காரியம் கெட்டு விட்டது!’’ என்று
தலைதலையாக அடித்துக்கொண்டார்.

பொழுது புலரும் வேளையில் புறப்பட்ட குதிரைப்படை உச்சிப்
பொழுதின் உக்கிரத்தோடு கொடும்பாளூரை நெருங்கிக் கொண்டிருந்தது.

அதற்குப் பின்னால் மற்றொரு பெரும்படை பறந்து வருவது அதற்குத்
தெரியாது. நள்ளிரவில் சோழபுரத்திலிருந்து கிளம்பியவர்களும் அங்குதான்
விரைந்து வருகிறார்கள் என்பதை வல்லவரையர் அறியவில்லை.

நகரத்தின் எல்லைக்கு வந்தவுடன் வல்லவரையர் திடுக்கிட்டார்.
ரோகிணி வாய்விட்டு அலறினாள்.

கரிய பெரிய புகை மண்டலங்கள் ரோகிணிக்குக் கொடும்பாளூரிலிருந்து
கொண்டு வரவேற்புக் கூறின. சிதறி ஓடும் மக்களின் கூக்குரல் அவளுக்கு
நாவலித்தது. கன்றுகாலிகளும் முதியோரும் பெண்டிரும் நாலா திசைகளிலும்
பாய்ந்து பரவித் தடுமாறி, அவளுக்கே அவள் செய்கையைச் சுட்டிக்
காட்டினர்.

வந்தியத் தேவரின் விழிகளில் ஒரே இரத்தச் சிவப்பு.

புரவிகளோ கால்கள் தரையில் பாய்வது தெரியாமல் புகைமண்டலத்துக்
கெதிராக புழுிமண்டலம் எழுப்பின. அவைகளின் வாய்களிலே பஞ்சுக்
குவியல் போன்ற நுரை, நாசிகளில் அனல் வீச்சு, கண்களில் செந்நீர்.

கொடும்பாளூர் அரண்மனையோ தன் கோட்டைக்குள்
கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது. உச்சிவானில் ஊசலாடிய கதிரவன்
அதன்மீது உடைந்து விழுந்து விட்டானோ?

சங்ககாலத்துக்கு முன்பிருந்தே மங்காப் பெருமை கொண்டு விளங்கிய
மாநகரமே! வீரர்களும் வள்ளல்களுமாக விளங்கிய வேளிர்குல மக்களின்
பொன்னரகமே! சோழ சாம்ராஜ்யத்தையே உருவாக்கி, அதற்குள்ளாகவே
வளர்ந்து, அதற்காகவே வாழ்ந்த அற்புதத் திருநகரே, நீ இப்போது
தமிழகத்தின் பொற்காலத்தைக் கனிய வைத்தவர்களுக்காக வெற்றி விழாக்
கொண்டாடுகிறாயா? கங்கையை வென்று வந்த கங்காபுரியைத் தோற்றுவித்த
வீரர்களுக்காக ஆனந்தம் தாங்காது பொங்கிப் பூரிக்கிறாயா?

கங்காபுரியோடு ஒன்றிவிடுவதற்காக நீ இப்போது தீக்குளித்து
உன்னையே புனிதப்படுத்திக் கொள்கிறாயா?

கொடும்பாளூர் அரண்மனையின் செந்தழல்கள் தங்களது
வாழ்த்துக்களைக் கங்காபுரிக்குக் காற்றின் மூலம் சொல்லியனுப்பிக்
கொண்டிருந்தன.

‘விஜயாலய சோழருக்குப் பின்பலமாக நின்று சோழர் குலத்தின்
வித்தைத் தஞ்சையில் ஊன்றச் செய்தேன் நான். ஈழத்துப்பட்ட சிறிய வேளார்
போன்ற எத்தனையோ அரசர்களை உனக்குப் பலி கொடுத்தேன் நான்.
இப்போது உனக்காக என்னையே அர்ப்பணிக்கிறேன்! நீ கொண்டாடும்
ராஜசூய யாகத்தின் வேள்வித் தீயும் ஆகுதியும் நானேதான்! என்னை
ஏற்றுக்கொள்!’

தீக் கொழுந்துகளின் குரல் ரோகிணியின் செவிகளில் மட்டிலும்
கணீரென்று ஒலித்தது. வெறிகொண்ட விழிகளால் அவைகளிடம்,
“என்னுடைய இளவரசர் எங்கே?’’ என்று கேட்டுவிட்டு, குதிரையினின்றும்
குதித்து, அரண்மனைக்குள் ஓட முற்பட்டாள்.

“இளவரசே! நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் இளவரசே?’’

ஓடிச்சென்று முதலில் அவளை இழுத்து நிறுத்தினார் வல்லவரையர்.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, உட்கோட்டை மதில் படிகளின் மீது அவளையும்
பற்றிக் கொண்டு பாய்ந்தோடினார். மதிலின் உயர்ந்த மேற்பகுதி, வீரர்களின்
நடமாட்டத்திற்காக விசாலமாகக் கட்டப்பெற்றிருந்தது. அரண்
மனையையொட்டி நான்குபுறங்களிலும் வளைந்து சென்ற அதன் உச்சியில்
தாராளமான ஒற்றையடிப்பாதை இருந்தது.

உள்ளே சூழன்று வீசிய தீக்கொழுந்துகள் இன்னும் மதிலின் உயரத்தை
எட்டவில்லை, மதிலின் மீது அங்கும் இங்கும் ஓடியலைந்தவாறே, “இளவரசே!
இளவரசே!’’ என்று அலறினாள் ரோகிணி.

அவளுடைய குரலுக்கு எதிர்க்குரல் எங்கிருந்தும் வரவில்லை.

ரோகிணியை விட்டுச் சற்றே விலகி நின்ற வல்லவரையர்
கொடும்பாளூரில் தங்கியிருந்த காவலன் வாயிலாக இளங்கோவும் படைகளும்
அங்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார். வெளியில்
நெருப்புத்திவலைகளுக்கு அப்பால் சில ரதங்கள் வந்து நிற்பதை அவர்
கவனிக்கவில்லை.

இளங்கோவைத் தேடி அலைந்தவளிடம் அவன் அங்கில்லை
என்பதைக் கூறுவதற்காக விரைந்தோடி வந்தார் அவர். “ரோகிணி! இளங்கோ
இங்கே இல்லை, ரோகிணி...ரோகிணி!”

“நான் வந்துவிட்டேன் தாத்தா!” என்ற வெண்கலக்குரல் அவருக்குப்
பின்னாலிருந்து திடீரென்று எழுந்தது. சட்டெனத் திரும்பினார் வல்லவரையர்.
கூண்டிலிருந்து விடுபட்ட வேங்கையெனத் தொலைவிலிருந்து ஓடி வந்தான்
இளங்கோ. அவன் முகத்தில் ரோகிணியைக் கண்ட மாத்திரத்தில் குரூரக்களை
தாண்டவமாடியது.

“இளவரசே!” ரோகிணியின் இதயத்தைக் கீறிக்கொண்டு வெளி வந்தது
அழைப்பு. அவன் காலடியில் வீழ்ந்தாள்; அவன் பாதங்களை இறுகப் பற்றித்
தழுவிக்கொண்டாள்.

“துரோகி! துரோகி! துரோகி!” -நெருப்பு அரண்மனையிலிருந்து
இளங்கோவின் விழிகளுக்குத் தாவியது.

“நான் துரோகிதான். இளவரசே! இனி இந்த ஜன்மத்தில் என்
துரோகத்துக்குப் பிராயச்சித்தமே கிடையாது. ஆனால் ஒன்றே ஒன்று
கூறுகிறேன்.’’

விம்மலும் விக்கலும் தொடர அவள் கூறி முடித்தாள்:

“இளவரசே நான் இப்போது உங்களைத் தவிர வேறு எல்லோரையும்
மறந்துவிட்டேன். என் இதயமெல்லாம் இப்போது நீங்கள் மட்டுமே
நிறைந்திருக்கிறீர்கள். நீங்கள் அங்கே, நெருப்பாய் எரிவதால், என்
உயிர்நெருப்பையும் நீங்களே உங்கள் கரத்தால் அணைத்துவிடுங்கள்.
இளவரசே உங்கள் கரம்பட்டு இறப்பதுதான் என் பாவங்களுக்கெல்லாம்
மன்னிப்பு - என்னை மன்னித்து மாய்த்துவிடுங்கள்! மன்னித்து
மாய்த்துவிடுங்கள்!”

மளமளவென்று தீக்கொழுந்துகள் கோட்டையின் உயரத்திற்கே வளர்ந்து
கொண்டிருந்தன.

நெருப்பையும் ரோகிணியையும் மாறி மாறிப் பார்த்தான் இளங்கோ.
நெருப்பு, பெருநெருப்பு, அணைக்க முடியாது. ஆனால் ரோகிணி?

அவனுடைய வலது கரம் மெல்ல உடைவாளின் அருகில் சென்றது.
அதைப்பற்றிக் கொண்டது. ஆனால் ஏனோ கரத்தின் நடுக்கத்தை அவனால்
தவிர்க்க முடியவில்லை.

இதற்குள் அங்கு இராஜேந்திரர் பெரிய வேளாரை
அணைத்துக்கொண்டே வந்து சேர்ந்தார். எல்லை கடந்த துயரத்தால்
பெரியவேளாருக்கு நினைவு தடுமாறியது. கண்ணீர் கட்டுக்கடங்காமல் தாரை
தாரையாகப் பொழிந்தது.

தந்தையாரின் கண்ணீரைக் கண்டவுடன் இளங்கோவின் கை நடுக்கம்
நின்றது. சரேலென்று வாளை உருவிக் கொண்டு ரோகிணியைப் பற்றி ஒரு
கரத்தால் நிறுத்தினான். வல்லவரையரின் கரம் நிதானமாக முன் வந்து
இளங்கோவின் வாளை ஒதுக்கியது.

“ரோகிணிதான் என்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்தாள்.
அபாயத்தைத் தடுப்பதற்காகத்தான் இவள் நடுநிசியில் என்னிடம் வந்து செய்தி
கூறினாள்! ஆனால்...’’

ரோகிணி குறுக்கிட்டு, “என்னைக் கொல்லமாட்டீர்களா, இளவரசே?
அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்காதா? கிடைக்கவே கிடைக்காதா?’’ என்று
கதறினாள்.

பிறகு சரேலென யாரும் எதிர்பார்ப்பதற்கு முன்பே “இது என்னுடைய
வீடு! இது என்னுடைய மாளிகை! இது என்னுடைய அரண்மனை! இதை
எரியவிடமாட்டேன்!’’ என்று புலம்பிக் கொண்டே திரும்பி ஓடினாள்.
கோட்டைச் சுவரின் கோடிக்கே விரைந்தாள்.

‘என்னுடைய அரண்மனை!’ என்று அவள் கூறிய சொற்கள், அங்கு
நின்ற அனைவரையுமே நெகிழச் செய்து விட்டன.

மின்னல் கீற்றென அவளைப் பின் தொடர்ந்தான் இளங்கோ. ஆனால்
அவளுடைய கால்களுக்கு எங்கிருந்துதான் அத்தனை வலிமை வந்ததோ...
ஓடினாள்...ஓடினாள்...ஓடினாள்... அவள் நிற்கவேயில்லை.

உட்கோட்டை மூலை வரைக்கும் சென்று அவளுடைய கரத்தை எட்டிப்
பிடித்துவிட்டான் இளங்கோ.

சட்டென்று ரோகிணி அவன் கரத்தை வெறியோடு தன் கண்களில்
ஒற்றிக்கொண்டே, “உங்கள் கரம் பட்டுவிட்டது. இனி நான் கட்டாயம்
சொர்க்கத்துக்குப் போவேன்!’’ என்று ஆனந்தக் கண்ணீர் பொங்கக்
கூறினாள்.

அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். வானத்தில் எங்கிருந்தோ திரள்
திரளாக மேகக் கூட்டங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

அதே சமயம் கீழே அரண்மனைப் பகுதியிலிருந்து “ரோகிணி! அடி
துரோகி!” என்ற வெறிக் குரல் ஒன்று கிளம்பியது - ரோகிணியும்
இளங்கோவும் திகைப்போடு திரும்பினார்கள்.

அரண்மனை நெருப்புச் சூழாத பகுதியில் வளைத்துக் கொள்ளப்பட்ட
பாண்டியப் படைகளிடையே, காசிபன் நின்று கொண்டிருந்தான்.

காசிபனைக் கண்ட ரோகிணியின் கண்கள் கோபவெறி கொண்ட
புலிக்கண்களாக மாறின. அதற்கு முன்பெல்லாம் இளங்கோவுக்கு எதிராக
அப்படி மாறிய விழிகள் இப்போது அவள் தம்பியிடமே செந்தீ உமிழ்ந்தன.

“அடப்பாவி, இன்னுமா நீ உயிரோடிருக்கிறாய்?’’ என்று சீறினாள்.

பின்னர் அதே விழிகள் இளங்கோவின் முகத்தை நோக்கித்
திரும்பியவுடன் அவற்றில் நிலவின் குளுமை ததும்பியது. தன் ஆவல் தீர
இளங்கோவைப் பார்த்துவிட்டு வெடுக்கென அவன் பிடியிலிருந்து தன்
கரத்தை உதறினாள் ரோகிணி. மதில் மீதிருந்து மறைந்தாள்.

மதிலின் விளிம்பிலிருந்து தாவிக் குதித்தவள் கீழே கீழே கீழே
போய்க்கொண்டிருந்தாள். நெருப்புத் திவலைகள் மேலே-மேலே-மேலே-
எழும்பிக் கொண்டிருந்தன.

யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.

“ரோகிணி!” என்று அலறிக்கொண்டு அவளோடு பாயத்துடித்த
இளங்கோவைக் கட்டிப் பிடித்து நிறுத்தினார்

வல்லவரையர். இளங்கோ திமிறினான். வல்லவரையரின் இரும்புப்
பிடியிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. அவரிடம் கெஞ்சினான்,
மன்றாடினான், பதறினான், பயனில்லை.

இதற்குள் ஒருபுறம் வேள்வித் தீ போன்ற நெருப்பு வானுற ஓங்கி
வளர்ந்த வண்ணமாகவே இருந்தது. அதே சமயம் வானத்திலும் பல
திசைகளிலிருந்தும் சூல்கொண்ட மேகங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

எங்கே ரோகிணி? எங்கும் காணவில்லையே! நீராக உருகிப்போய்
நெடுங்காற்றில் நெட்டுயிர்த்து விட்டாளா? நீக்கமற நெருப்பில் நிறைந்து
விட்டாளா?

மின்வெட்டும் நேரத்தில் ஏதேதோ நிகழ்ந்தன. திகைத்துப்போய் நின்று
விட்ட பெரிய வேளாருக்கும் இராஜேந்திரருக்கும் இடையில் அகப்பட்டுத்
தவித்தாள் அருள்மொழி! துடியாய்த் துடித்துக்கொண்டே “சக்கரவர்த்திகளே!
பேசாது நின்று கொண்டிருக்கிறீர்களே!” என்று கதறினாள்.

ஆனால், இராஜேந்திரர் தாம் நின்று கொண்டிருந்தாரே தவிர, அவரது
விழிகள் நெருப்புக்குள் ஊடுருவித் துளைத்தன. பிறகு காவலர்கள் பக்கம்
திரும்பின.

கீழே, நெருப்புச் சூழலில் புகைக் கூட்டத்திற்கிடையில் முதலில்
ஒன்றுமே தெரியவில்லை. காவலர் தங்களது உயிரை மறந்து குதித்தார்கள்.
தேடி அலைந்தார்கள்.

அருள்மொழி தனது சுயநினைவை இழக்கத் தொடங்கினாள்.

அப்போது ரோகிணி குதித்த இடத்திலிருந்து ஏதோ சலனம் தெரிந்தது.
யாரோ ஒருவன் தீப்பற்றிய உடைகளோடும், கருகிய உடலோடும்
ரோகிணியின் மெல்லுடலைச் சுமந்துகொண்டு தீக்குள்ளிருந்து வெளிப்பட்டான்.

நெருப்புக்காக அவன் சிறிதும் அஞ்சவில்லை. நேரே ரோகிணியைச்
சுமந்து கொண்டு கோட்டைச் சுவர்மீது ஓடோடியும் வந்தான். இளங்கோவின்
காலடியில் கிடத்தி விட்டு, “இளங்கோ!” என்று தழுதழுத்த குரலில்
அழைத்தான்.

இளங்கோவின் நெற்றிப் புருவங்கள் சுருங்கின. விழிகளில்
தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ‘யாரது-வீரமல்லனா!”

“இளங்கோ! தீயில் குதித்தெழுந்து ரோகணத்து இளவரசி புதுப்பிறவி
எடுத்துவிட்டார். நடந்த தவறுதல்களுக்கு இவர் காரணமல்ல, என்னை நீ
மன்னிக்க வேண்டாம். இவரை மன்னித்து ஏற்றுக்கொள் - இவர் பிழைத்து
விடுவார்.’’

பிறகு, தட்டுத் தடுமாறிச் சென்று இராஜேந்திரரின் கால்களைப்
பற்றிக்கொண்டு மூர்ச்சையுற்று விழுந்தான் வீரமல்லன். இதற்குள் அருள்மொழி
ஓடோடியும் வந்து ரோகிணியைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.
இளங்கோவும் அருகில் அமர்ந்து ரோகிணியின் கண்களையே உற்று
நோக்கினான். அருள்மொழியும் இளங்கோவும் ஒரே குரலில் “ரோகிணி!
ரோகிணி!” என்று கதறினார்கள்.

இராஜேந்திரர் அருகில் வந்து நின்று ரோகிணியைக் கவனித்தார்.
அவரது இதழ்களில் நம்பிக்கை நிறைந்த புன்னகைக் கீற்றொன்று
இழையோடியது.

“இளங்கோ! எனக்கு அருள்மொழியும் ரோகிணியும் ஒன்றுதான்.
இருவருமே என் புதல்விகள்! விரைவில் கொடும்பாளூரில் புது மாளிகைகள்
எழுப்பிவிடுவோம். அப்போது இருவருமே உன்னோடு ஒன்றாக இங்கு
குடிபுகுவார்கள்.’’

குற்றுயிராய்க் கிடந்த ரோகிணிக்கு சக்கரவர்த்திகளின் இந்தச் சொற்கள்
புத்துயிர் கொடுத்தன போலும்! மெல்லத் தன் விழிகளைத் திறந்தாள்.

“மகளே! உன் தம்பி காசிபனும் விடுதலை பெறுவான். கவலையுறாதே!”

ரோகிணியின் விழிகள் இளங்கோவையும் அருள்மொழியையும் மாறி
மாறிப் பார்த்தன. துடி துடிக்கும் இதயத்தோடு இளங்கோ, “ரோகிணி!” என்று
மெல்ல அழைத்தான்.

அருள்மொழியோ ரோகிணியின் முகத்தோடு முகம் தோய
வைத்துக்கொண்டு, “ரோகிணி! நாம் இருவருமே இளவரசரின் இரு
கண்களாவோம்’’ என்று நாத் தழுதழுக்கக் கூறினாள்.

அவர்களுடைய ஆனந்தக் கண்ணீர் ரோகிணியின் முகத்தில்
ஒன்றுகூடியது. தனது வேதனையனைத்தையும் மறந்து மெல்லச் சிரித்தாள் -
வானமும் தனது ஆனந்தப் பெருக்கை வெளியிடுவது போல் அமுத
தாரையைப் பொழியத் தொடங்கியது.

தொடரும்


Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 31. காதல் வெறி; கடமை வெறி!

பாகம் 3 ,  31. காதல் வெறி; கடமை வெறி! மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு  அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது.
கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில்
துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம்.

கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த  அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான்.

நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.

“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.

“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போக…

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 11. கடமை வெறியர்!

பாகம் 3 ,  11. கடமை வெறியர்! 


ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான்
அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று
அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக்
கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள்
எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்
கொட்டிவிடுகின்றன.

“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய
வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப்
புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று
மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.

“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா
நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.

“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக்
காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து
ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார்.
தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை
செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும்
தான் இருக்கும்.’’

இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல்
தழுதழுத்…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:

· புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.

· பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.

புதுக்கவிதையின் தோற்றம் :

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற…