வணக்கம் வாசகர்களே !!
இத்துடன் வேங்கையின் மைந்தன் சரித்திர நாவலை நிறைவு செய்கின்றேன் . நாம் யார் ??? எமது பின்னணி என்ன ??? எமது இனம் செய்த வீரதீரங்கள் என்பனவற்றை இந்த சரித்திர நாவலில் அகிலன் சரியாகவே சொல்லியிருக்கின்றார் . நான் இந்த நாவலில் கற்றுக்கொண்டது என்னவென்றால் , இந்த நாவல் ஓர் வரலாற்றுப் புதினமாக இருந்தாலும் , இதில் வருகின்ற ரோகணத்து ஐந்தாம் மகிந்தர் , அவருடைய சதித்திட்டங்கள் இறுதியில் சோழரிடம் படுதோல்வியில் முடிந்தாலும் , கால ஓட்டத்தில் அதே பெயரை நவீன மகிந்தராக வரித்துகொண்டு அதே ஈழத்தில் புதுயுகம் படைக்க வந்த சோழசாம்ராஜயத்தின் வாரிசுகளை சூழ்சியால் வென்ற சரித்திரத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . ஒரு கற்பனையான வரலாற்றுப்புதினம் எவ்வாறு எமது மண்ணில் உண்மையானது ???? இங்குதான் நாவலாசிரியர் அகிலனின் இந்தக் கதையின் உயிர்ப்பு எனக்குத் தூக்கலாகத் தெரிகன்றது. வழமைபோலவே உங்கள் விமர்சனங்களை நாடி நிற்கின்றேன் .
நேசமுடன் கோமகன்
00000000000000000000000000000000000
ஓயாது ஒழியாது நிற்காது நிலையாது ஓடிக்கொண்டேயிருக்கும் காலவெள்ளப் பெருக்கின் ஒரே ஓர் அணுத்துளி, அதற்குப் பெயர் ஓராண்டு. அது உருண்டோடி பெருவெள்ளத்துடன் கலந்தது.
அந்தச் சிறு துளிக்குள்ளேதான் எத்தனை எத்தனை பேரலைகள், மாற்றங்கள், திருப்பங்கள், போராட்டங்கள்!
கடல் சூழ்ந்த கடாரத்தில் மாபெரும் கொந்தளிப்பு! கலமேறிக் களம் நோக்கிச் சென்று விட்டான். காளை காத்திருந்தனர் கன்னியர்; ஆத்தி மாலைகளோடு காத்திருந்தனர். வழி பார்த்திருந்தனர்; விழி பூத்திருந்தனர். ஆத்தி மலர் வாடவில்லை; அலை கடலோ ஓயவில்லை. காற்றே! நீ கடாரத்திலிருந்து செய்தி கொண்டுவர மாட்டாயா?
வெள்ளிமுரசம் விம்மியது; வெண்சங்கம் பொங்கியது. கடாரத்தின் காற்று கன்னித் தமிழரின் கலங்களை களிநடம் புரியச் செய்தது!
அலைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரித்து எழுகின்றது? தமிழ் மக்களது வீரத்தின் எல்லையை அது கண்டுவிட்டதா? கடாரத்திலிருந்து வெற்றியுடன் திரும்பும் கலங்களைச் சுமந்து வருகிறோம் என்ற ஆனந்தமா?
கங்கை கொண்ட மாமன்னரின் திருமுடிக்கு, கடாரம் என்ற மற்றொரு மணமலரையும் கொய்துகொண்டு வந்தான் தென்னவன் இளங்கோ. அத்துடன் அவன் நிற்கவில்லை. வழியிலிருந்த மானக்கவரம் தீவுகளிலும் வெற்றிப் புலிக்கொடி நாட்டி வந்தான். புகழ் ஈட்டி வந்தான்.
கலங்கள் கரை சேர்ந்தன. நாகப்பட்டினம் துறைமுகத்தில் மணலை எண்ணிவிடலாம்; மனிதர்களை எண்ணிவிட முடியாது. கரையோரத்தில் அரச குடும்பத்துக்காக ஒரே ஒரு கூடாரம் மட்டிலும் கூட்டத்துக்கிடையில் தலைதூக்கி நின்றது.
கலத்திலிருந்து இறங்கியவுடன் ஓடோடியும் கரைக்கு வந்தான் இளங்கோ. மாமன்னர், பெரிய வேளார், வல்லவரையர் இவர்களது அடிகளில் முடிவைத்து வணங்கி நின்றான். மாமன்னர் அவனைத் தழுவியவாறு அவன் காதருகில் ஏதோ கூறவே அவன் கண்கள் கூடாரத்தின் பக்கம் திரும்பின.
கூடாரத்திற்குள் அவன் நுழைந்தவுடன் அங்கே இரு பொற்சிலைகள் தங்களது மென்தளிர்க் கரங்களில் ஆத்திமாலைகளோடு நின்று கொண்டிருந்தன. அவற்றைக் கண்டவுடன் இளங்கோவும் சிலையானான்.
அவனது நினைவு திரும்புவதற்குள் அவன் கழுத்தில் மாலைகள் ஒன்றன்பின் னொன்றாக விழுந்தன. இருபுறம் இருவர் நாணத்தோடு தலைகுனிந்து நின்றனர் - இளங்கோ இளமுருகனைப் போல் வெற்றிப் பெருமிதத்தோடு அவர்களை அன்போடு தழுவிக் கொண்டான்.
ஆத்திமாலைகள் போதாவென்று முத்து மாலைகள் தொடுக்கத் தொடங்கினார் இருவரும். கருநீலக் கடலில் விளைந்த நன் முத்துக்களல்ல அவை. அவற்றைவிட உயர்ந்தவை; கண்ணீர் முத்துக்கள்.
இளங்கோவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
அருள்மொழி மெல்ல அவனை ஏறிட்டு நோக்கி, “எந்த நேரமும் ரோகிணிக்கு உங்கள் நினைவுதான்’’ என்றாள்.
“உனக்கு?’’ என்று புன்னகையோடு கேட்டான் இளங்கோ. நங்கையார் நாணித் தலைகவிழ்ந்தாள்.
ரோகிணி தன் முகத்தை உயர்த்தினாள். “தமக்கையார் நான் எழுந்து நடமாடும் வரையில் எப்போதும் என்னருகிலேயே இருந்தார்கள். அவர்கள் அருகிலிருந்த போதெல்லாம் நீங்களும் எங்களுக்கு மத்தியிலேயே இருந்தீர்கள். இப்போதிருப்பதைப் போலவே இருந்தீர்கள்.’’
இளங்கோ சிரித்தான், “கடாரத்துக் காடுகளில் நான் போரிடும் போதெல்லாம் என் இரு தோள்களுக்கும் வலிமை தந்தவர்கள் நீங்கள்தான்’’ என்றான். அவனது சிரித்த முகத்தைக் கண்ணிமையாது கண்டு பெருமிதம் கொண்டனர் பெண்கள். கூடாரத்துக்கு வெளியே ஒரே குதூகலம். மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி வான் முகட்டுக்கே உயர்ந்து விட்டது.
“கடாரம் கொண்ட மாமன்னர் வாழ்க.’’
“அதை வென்று வந்த கொடும்பாளூர்க் கோமகன் வாழ்க!”
பட்டொளி வீசிப் பறந்த கொடிகளில் பொறிக்கப் பெற்றிருந்த வேங்கைகளின் கூட்டம் உயிர் பெற்று வீர கர்ஜனை செய்வது போன்றிருந்தது மக்களது மகிழ்ச்சி ஆரவாரம்.
“அடைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்தித்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும்
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்டார் கோப்பர கேசரி’’
- மெய்க்கீர்த்தி
முற்றும்
Comments
Post a Comment