இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப் பெற்றோருக்கும் இந்நிலை தான், அதனால் ஆண் குழந்தையைப் பெருவது பெருமையானது இல்லை என்று தனிமையில் இருக்கும் பொழுது தான் பெற்றோர் உணரத் துவங்கியுள்ளனர். ஆணைப் பெற்றவர்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆணைப் பெற்றவர்களிடம் பிறர் மருமகள் சேர்த்துக் கொள்வாளா என்ற எந்த ஒரு கேள்வியும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் உங்க மகன் வீட்டில் இருக்கலாமே ? என்று கேட்பார்கள், அதன் சிக்கல் பெற்றோர்களுக்கு தெரியும் என்பதால் நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கவுரவமாக சொல்லிக் கொள்ள முடியும், பெண்ணைப் பெற்றவர்களுக்கு மருமகன் வீட்டில் இருப்பது இழுக்கு என்று நினைத்துக் கொள்வார்கள், மாமனார் மாமியார்களையும் பெற்றோர்களாக நினைத்து கூட வாழ அனுமதிக்கும் மருமகன்கள் இன்றும் குறைவே, இதிலும் யாரையும் குறை சொல்ல முடியாது, வேலை முடிந்து அலுப்புடன் வந்தால் பணி விடை செய்யும் மனைவி இன்று கிடையாது, அவளும் வேலைக்கு சென்று அதே அலுப்புடன் தான் திரும்பி இருப்பாள், இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனைவியையும் வேலைக்கு அனுப்புவது தவிர்க்க முடியாது என்பதால் வயதான பெற்றோர்களை உடன் வைத்திருந்தால் கவனிப்பது யார் என்ற கேள்வி, அதைப் புரிந்து கொண்ட பெற்றோர் தனிமையிலேயே வாழ முடிவு செய்துக் கொள்கின்றனர். வயது ஆனாலும் கணவன் மனைவி இருவரும் இருக்கும் வரை இருவருக்கும் பாதுகாப்பு
உணவு, பணம் பற்றி எந்த ஒரு பிரச்சனைகளும் பெரிதாக எழுவதில்லை. ஆனால் அதில் ஒருவர் மறையும் பொழுது சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்றோர் என்ற நிலைக்கு ஆளாகின்றனர், எங்கு செல்வது எங்கு காலம் தள்ளுவது ? என்ற கேள்விகளுக்கு முன்பு விடையாக முதியோர் இல்லங்கள் தான் விடைகளாக இருக்கின்றன.
சென்னைக்கு சென்றிருந்த பொழுது பழைய பெண் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரது தாயார் தனிமையில் இருப்பது பற்றி தெரிவித்தார், தாம் கூட வைத்திருக்க விரும்பினாலும் வர மறுப்பதாகவும் கூறினார், அவரது தாயாருக்கு 85 வயதை கடந்து இருந்தது, காலை வேளையில் ஒரு பணிப் பெண் அன்றைக்கு தேவையானதை சமைத்துக் கொடுத்துவிட்டு வீட்டை துப்புறவு செய்துவிட்டு செல்வது தவிர்த்து வேறு யாரும் எட்டிப் பார்ப்பது இல்லையாம், இவருக்கு கவலை தாயார் ஏடாகூடமாக கழிவறை செல்லும் பொழுது விழுந்து கிடந்தால் என்ன ஆகுமோ ? ஒருவழியாக முதியோர் இல்லத்தில் சேர தாயார் ஒப்புக் கொண்டாராம், ஆனால் இவர்கள் பார்த்து வைத்துள்ள பெருங்களத்தூர் முதியோர் இல்லத்தில் தற்போதைக்கு இடமில்லை, பதிந்து வைத்துள்ளோம், யாராவது போய் சேர்ந்தால் தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் யாராவது சீக்கரம் போய் சேரனும் பெருமாளே என்று வேண்டி வருவதாக கூறினார், காரணம் அந்த முதியோர் இல்லம் பல வசதிகளுடன் தனி அறை, தனிக் கட்டில், தனி தொலைகாட்சி மற்றும் விருப்பப் பட்டால் தாம் பயன்படுத்தி வருகின்ற குளிச்சாதன பெட்டி கட்டில் ஆகியவற்றை எடுத்துச் சென்று வீட்டில் வசித்தது போலவே வசிக்கலாமாம், பணிவிடைகளும், தனிப்பட்ட கவனிப்புகளும் உண்டாம். சென்னையில் இருப்பதிலேயே நல்ல முதியோர் இல்லம், வாரம் ஒருமுறையாவது சென்று பார்த்து வரவவும் வசதியானது என்று கூறினார், யாராவது போய் சேர்ந்தால் தகவல் சொல்லி அனுப்புவார்கள், இடம் கிடைக்கும் என்று
காத்திருக்கிறார்கள்.
முதிர்கண்ணன்கள் பெருவிட்ட காலத்திலும் முதிர்கன்னி கவிதை எழுதுவோர் உண்டு முதியோர் இல்லம் என்றால் எதோ சமூகம் சீரழிந்து வருகிறது என்று பொங்குபவர்களும் உண்டு, இவையெல்லாம் காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் முதியோர் இல்லம் குறித்து கண்ணீர் கவிதை எழுதிவருகிறார்கள், தாமும் வயதான பிறகு முதியோர் இல்லம் தான் செல்வோம் என்று நல்ல தெளிவு உள்ளவர்கள் தயங்காமல் பெற்றோர்களை அங்கு அனுப்புகிறார்கள். முதியோர் இல்லங்களுக்கு பெற்றவர்களை அனுப்புவது அவர்களை புறக்கணிப்பது என்று பலர் புரிந்துள்ளது போல் அல்ல, அவர்களது எஞ்சிய காலம் கவனிக்கப்பட வேண்டும் .
அவர்களை ஒத்த வயதினருடன் பொழுது போக்கிக் கொள்வது மற்றும் தனிப்பட்ட கவனிப்பு, பாதுகாப்பு எப்போதும் இருக்கும் என்பதால் தான் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இவை வெகு சாதாரண நடைமுறை, நமக்கு இவை அதிர்ச்சியாக தெரிகிறது, இன்னும் 30 - 40 ஆண்டுகளில் இவை நடைமுறை ஆகிவிடும். நண்பரிடம் பேசியதில் இருந்து நல்லொதொரு முதியோர் இல்லம் கிடைப்பது தான் தற்பொழுது பெரிய பிரச்சனை மற்றபட செல்லுபவருக்கோ, அனுப்பி வைக்கப்படுவருக்கோ எந்த ஒரு மனத் தடையும் இல்லை.
எல்கேஜி அனுமதிக்கு வயிற்றில் இருக்கும் பொழுதே பதிய வேண்டும் என்பது போல் ஐம்பதாவது வயதில் முன்கூட்டியே பதியாமல் விட்டால் நல்லதொரு முதியோர் இல்லம் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படலாம்.
முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்புவர்கள் குறித்து புரிந்துணர்வு இன்றி தூற்றுவதும் அவ்வாறு செல்பவர்களை ஆதரவற்றோர் என்று நினைப்பதையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும், தாய் மட்டுமல்ல தந்தையும் கூட அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர், பள்ளி வாழ்க்கை முடிந்ததும் கல்லூரி வாழ்கையில் ஆஸ்டல் வாழ்க்கையை நாம் ஏற்கனவே பழகி இருக்கிறோம் அவையெல்லாம் உறுத்தாத போது முதியோர் இல்லங்கள் மட்டும் ஏன் நாம் கலாச்சார சீரழிவாக நினைக்க வேண்டும் ? முடிந்தால் நல்லொதொரு முதியோர் இல்லங்களை அமைப்பது தொழிலாகவும், சேவையாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம்.
...ம்... கலாச்சார சீரழிவை இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்...
ReplyDeleteஅதே சமயம் பல சேவை நிறுவனங்கள் செய்கின்ற சேவையை வாழ்த்துவோம்...
புதிய ஒழுங்கமைக்கபட்ட உலகில் அன்பு பாசங்களையும் பணமே தீர்மானிக்கின்றது . காவோலை விழக் குருத்தோலை சிரித்த கதையைப் போலவே இருந்ததால் இதை இணைத்தேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDelete