சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும் -கவிதை .



ஐந்து முட்கள் கண்களில் குத்திக்கொண்டிருந்தன
அது கனவு தான் அவை சில நாட்களாக
திரும்பத்திரும்ப என் பார்வையில் பட்ட
காயங்களின் எண்ணிக்கைகளாயிருக்கலாம்.

அவன் தம்பியைப் போலிருந்ததாகவும்
மகனைப் போலிருந்ததாயும்
அயலானைப் போலுமென
எண்ணிக்கலங்குகின்றனர்
முகப்புத்தக நண்பர்கள்.
எனக்கும் அவனைப் போல மகன் . 
பன்னிருவயதுக் குழந்தை

சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும்
பாசிசத்தின் நிழலும் புகைப்படத்தில்.
சரணடையும் குழந்தைகளின் சாவிற்கான குறியீடாக
யுத்த நியாயத்துக்கான கேள்வி அவன் பிணம்.

தொலைக்காட்சிச் செய்திகளில் 
முந்த நாள் ஆந்திராவில்
நேற்று பாகிஸ்தானில்
இன்று சிரியாவிலென்று
நாளாந்தம் இரத்தங்கள், காயங்கள், மரணங்கள்.
கண்களைத் திருப்பியபடியே
உணவுத்தட்டிலிருந்து கை வாய்க்குப் போனது.
அடிக்கடி பார்த்தால் கனவு வரும்.
கனவுக்கென்ன பயம் எனக்கு?

-தர்மினி- 


http://thoomai.wordp...்டுகளும்-ஐந்து/

Comments

  1. சிந்தனை வரிகள் அருமை...

    பயப்படாத கனவுகள் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் திண்டுக்கல் தனபாலன் .

      Delete

Post a Comment