வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்--பத்தி.




என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும்.

எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில், எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான்.

படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியில் இதைப் பொருத்தியிருப்பார்கள். மேற்பக்கத்தில், நீளமான ஒரு (தண்ணீர்க்) குழாயை ஒரு சுருட்டுச் சுருட்டி பெரிய வட்டவடிவாகக் கட்டி வைத்த்ருப்பார்கள். குழாயைத் தாங்கி நிற்க அடியில் (base)இல் இருந்து சரியான விதத்தில் ஆக்கிய இரும்புக் கம்பிகளை இணைத்திருப்பார்கள். இத்தோடு உடன்பிறவாச் சகோதரம் மாதிரி ஒரு சின்ன வாளியும் பயணப்படும். வாளிக்குள் இரண்டு முழம் நீளமான ஒரு வலிய கயிறு,ஒரு சின்ன Singer Oil Can –அதுக்குள் கொஞ்சம் பெற்றோல் கட்டாயம் இருக்கும். மேலதிகமாக கடந்த 10 வருடங்களில் உழைத்துக் களைத்துப்பபோன பிளக்குகள் (Spark Plugs) மூன்று, நான்கு, ஒரு கரி பிடித்த பழைய துண்டு/துணி, என்பனவும் இருக்கலாம்.

இந்த இறைப்பு மிசின்களைப் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தைத் தவிர வேறுநிறத்தில் நான் காணவில்லை.

இறைப்பு மிசின் விவசாயிகளின் நண்பன் என்றால், றலி சைக்கிள் எல்லாருக்கும் நண்பன். ஏசியா பைக், லுமாலா கூட்டணி வருமட்டும் யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களின் மகாராஜா றலி சைக்கிள்தான். எங்களூரில் கட்டாயமாக, குடும்பத்திற்கு ஒரு றலி சைக்கிள் இருந்திருக்கும். அநேகமாக (டைனமோ) விளக்கு இருந்தால், அதைச்சுற்றி ஒரு மஞ்சள் துணி கட்டப்பட்டிருக்கும். சத்தியமாக அது ஏன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. படத்தில் இருப்பது போலன்றி ‘ஸ்டான்ட்’ பின்புறம் ஒரு ‘கரியல்’ (carrier) உடன் இணைந்திருக்கும். ஒரு நாலைந்து குஞ்சங்களும் ஆங்காங்கே இருக்கும்.



சைக்கிள் என்றால் கட்டாயம் ஒரு மணியும் இருக்கும். அழகான இளம் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குக் கிட்ட சைக்கிள் போகும்போது இந்த சைக்கிள் மணிச் சத்தம் கொஞ்சம் வலுவாக ஒலிக்கும். மோட்டச் சைக்கிள், கைத் தொலைபேசி எல்லாம் பரவலாக வரமுன் இந்தச் சைக்கிளும் சைக்கிள் மணியும் எத்தனையோ காதலர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. அண்ணன் அவளின் வீட்டுக்குக் கிட்டவந்து மணியை ஒரு வித சங்கேத தொனியில் அடிப்பார். அவள் வீட்டு மதிலில் ‘கடதாசியை’ வைப்பார். அந்தப்பக்கம் ஒரு வளையல் அணிந்த கரம் அந்தக் கடதாசியைக் கணக்காக எடுத்து விட்டு, இன்னொரு கடதாசியை வைக்கும். (நிற்க, இது எந்தச் சைக்கிளுக்கும் பொருந்தும் றலி சைக்கிளுக்கு மட்டுமல்ல).

இனிக் கொஞ்சம் ‘சீரியஸ்’ஸான விடயத்திற்கு வந்தால், ஆறுகள் அற்ற, வரண்ட தட்டையான யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம், ஒருகாலத்தில் தந்நிறைவடைந்தது என்றால், அதற்கு யாழ் மக்களின் கடும் உழைப்புத்தான் காரணம். அந்த உழைப்பிற்கு உதவியதில் முக்கியமானது இந்த வில்லியர்ஸ்/றலி கூட்டணி.

“மீண்டும் காணமாட்டோமா அந்தப் பொற்காலத்தை” மனம் அடித்துக்கொள்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே -

- பாரதியார்

பாரதியார் இந்தியாவை நினைத்துப் பாடியது. “வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்” எழுதத் தொடங்கிய என் ஞாபகத்திற்கு வருகின்றது.

நன்றி – தகவல் – எஸ். சத்திவேல்
































Comments

  1. உழைப்பிற்கு உதவிய சைக்கிளையும், பாரதியின் வரிகளும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் திண்டுக்கல் தனபாலன்

      Delete

Post a Comment