தமிழ் ஒலிப்புமுறை - கட்டுரை.

தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும்.

தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழுத்துக்கள் கூடி நிற்காதவை என்று பற்பல விதிகள் உள்ளன. பெருமுயற்சி இல்லாமலே சொற்களை ஒலிப்பதற்கு உதவும் விதிகள் தமிழில் உள்ளன. பாக், வீச், பாட், பத், துப், காற் என்று வல்லொலிகள் இறுதியில் அமைந்தால், ஒலிக்கும் முயற்சி அரிதாகின்றது. குற்றியலுகரம் சேர்த்து, பாக்கு, வீச்சு, பாட்டு, பத்து, காற்று என முயற்சியை எளிதாக்குவது தமிழ் வழக்கு. அதனாலேயே, இங்கிலாந்து, கிறிஸ்து முதலியன ஈற்றில் உகரம் பெறுகின்றன.

தமிழ் மொழி ஒலியன்கள்:

ஒலியன் என்பது தமிழில் காணப்படும் சொற்களின் பொருள்களை வேறுபடுத்தி அறிவதற்கு உரிய அடிப்படையான ஒலி அலகு.. எடுத்துக்காட்டாகத் தமிழில் காணப்படும் அடு, ஆடு, இடு, ஈடு முதலியன பொருள் கொள்ளுதலில் தம்முள் வேறுபட்டவை ஆகும்.

இவ்வேறுபாட்டை இச் சொற்களில் காணப்படும் அ(a), ஆ(a:), இ(i), ஈ(i:), ஆகிய ஒலியன்கள் காட்டுகின்றன. எனவே அ, ஆ இ, ஈ முதலியன ஆகியவை தமிழ் மொழியில் காணப்படும் தனித்தனி உயிர் ஒலியன்களாகக் கருதப்படுகின்றன.

இவ்வாறு தமிழ் மொழியில் காணப்படும் சொற்கள் அனைத்தையும் ஆ(ரா)யும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர் எழுத்துக்களும், க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம், ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய 18 மெய் எழுத்துக்களும்,ஃ என்னும் எழுத்தால் குறிக்கப்படும் ஆய்தமும் ஆகிய 31 ஒலியன்கள் உள்ளன.

மெய்யெழுத்துக்களின் ஒலிப்புமுறை வெளிப்படும் விதம்:

மெல்லண்ண மெய்கள் (1): 

க், ங்

அண்ண மெய்கள் (2): 

ச், ஞ்

நரம்பு ஒலி மெய்கள் (3):

ட், ண்

நுனிநாப் பல்லின மெய்கள் (4):

த், ந்

இதழின மெய்கள் (5): 

ப், ம்

அரை உயிர் மெய்கள் : 

ய், ர், ல், வ்

தனித்துவ தமிழ் மெய்கள் :

ழ், ள், ற், ன்

ஒலி வகைகள்:

ஒலிகள் அவை பாவிக்கப்படும் போது பயன்படும் ஒலி உறுப்புக்களின் இடத்தையும்(place) அவை பாவிக்கப்படும் முறையையும்(manner) அடிப்படையாக வைத்துப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படும்.

ஒலி உறுப்புக்கள்:

1. காற்றறைகள் (air chambers) :

நெஞ்சு, தொண்டை, வாய், மூக்கு - நெஞ்சிலிருந்து எழும் காற்று தொண்டை வழி சென்று வாய், மூக்கு ஆகியன வழி வெளிப்படும்போதுதான் இவ்வொலிகள் உண்டாகின்றன.

2. ஒலி எழுப்பிகள் (articulators) :

பல், இதழ், நாக்கு, அண்ணம், குரல்வளை - இவற்றுள் பல், அண்ணம் ஆகியன அசையா உறுப்புக்கள்; இதழ், நாக்கு, குரல்வளை மடல்கள்(voice chords) அசையும் உறுப்புக்கள்.

3. வாய் ஒலிகளும் மூக்கு ஒலிகளும்(oral & nasal):

காற்று வாய்வழி வரும்பொழுது மூக்கறை அடைபட்டு வாய்வழி ஒலி வரும்போது உருவாகும் ஒலி அலைகள் .

வாய் ஒலிகள்(oral sound) :

அ,இ,க்,ச்,ட் போன்றவை.

வாய் அடைக்கப்பட்டு மூக்கு வழி வரும் ஒலி அலைகள் மூக்கொலிகள்(nasal) :

ங்,ஞ்,ண்,ம்,ந்,ன் போன்றவை.

Comments

  1. விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் திண்டுக்கல் தனபாலன் .

      Delete

Post a Comment