மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று:
ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய வள்ளங்களில் சென்று கோட்டைக்குள் புக முயன்றார்கள். புலிகளின் ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன. இராணுவத்தினருக்கு அது சீவமரணப் போராட்டம். அவர்கள் கோட்டையைப் பாதுகாக்க இரவுபகலாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். ஜுலை மாதத்தில் கோட்டைக்குள் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் வீச முயன்ற இராணுவ உலங்குவானூர்திகள் இரண்டு புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் வெடிபொருட்களும் உணவுப் பொருட்களும் முற்றாகத் தீர்ந்திருந்த நிலையில் இராணுத்தினர் புலிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாயிற்று. இராணுவத்தினர் சரணடைவதற்கான ஏற்பாடுகளைத் தாங்கள் முன்னின்று செய்வதாகச் செஞ்சிலுவைச் சங்கம் அரசுக்குத் தெரிவித்த மறுநாள் காலையில் யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து 14 கிலோமீற்றர்கள் தென்மேற்குத் திசையில் ஊறாத்துறையில் இராணுவத்தின் மீட்புப் படைகள் கடல்மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் தரையிறக்கப்பட்டன. அந்த அணிகள் மெதுவாக யாழ்ப்பாணக் கோட்டையை நோக்கி நகரத் தொடங்கின. எறிகணைகளை வீசிக்கொண்டும் வானிலிருந்து குண்டுகளை வீசிக்கொண்டும் ஊறாத்துறையிலிருந்து இராணுவம் ஊர்ந்தவாறே முன்னேறியது.
ஊறாத்துறையில் இராணுவத்தினர் தரையிறங்குவார்கள் என்பதைப் புலிகள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஊறாத்துறைக்கு யாழ்ப்பாணத்திலிருந்தோ வன்னியிலிருந்தோ தமது அணிகளை நகர்த்துதானால் கடல்மார்க்கத்தைத் தவிரப் புலிகளுக்கு வேறு வழியில்லை. கடற்பகுதி ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. கடலில் முழத்துக்கு முழம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. ஊறாத்துறையிலிருந்த சொற்ப புலிகள் “ஓடுங்கள்” என்று மக்களுக்கு அறிவுறுத்தியவாறே பின்வாங்கத் தொடங்கினார்கள்.
அன்றைய மதியப் பொழுதில் சுருவில் கிராமத்திற்குள் நுழைந்து “நாளைக் காலைக்குள் இராணுவம் இந்தக் கிராமத்திற்குள் நுழைந்துவிடும், ஓடுங்கள்” எனச் சொல்லியபடியே புலிகள் வாகனங்களில் விரைந்தார்கள். அந்த முனையில் இராணுவம், இந்த முனையில் கோட்டை, மற்றைய இரண்டு பக்கங்களும் கடல் என்றிருக்க அய்ந்தாவது திசையொன்றைத் தேடிச் சனங்கள் சிதறி ஓடலானார்கள். சுருவில் கிராமத்தின் இருபது மற்றும் பதினெட்டு வயதான இளைஞர்கள் கிறிஸ்டியும் பொஸ்கோவும் அவர்களது தகப்பனிடம் சென்று “ஐயா நாங்கள் இந்தியாவுக்குப் படகில் செல்லப்போகிறோம்” என்று சொன்னார்கள். அந்த இரண்டு இளைஞர்களது முகங்களிலும் உயிரச்சம் உறைந்திருந்தது.
பொன்ராசா தனது வலது கையால் இடது கன்னத்தைத் தேய்த்தவாறே அச்சத்தில் உறைந்திருந்த தனது மகன்களையே சற்றுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு “வேண்டியதில்லை நீங்கள் இங்கேயே இருக்கலாம், இங்கே இராணுவத்தினர்கள் வரமாட்டார்கள்” என்றார்.
மகன்மாருக்கு ஏமாற்றமும் துயரமும் கலந்து பொங்கின. அவர்களுக்கும் இது சீவமரணப் போராட்டம். பொன்ராசாவோ வெகு அலட்சியமாகப் பேசிக்கொண்டிருப்பது அவர்களிற்கு எரிச்சலையும் ஊட்டலாயிற்று. இளையவன் பொஸ்கோ சற்றுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு “இயக்கப் பொடியன்கள் எல்லோரையும் வெளியேறுமாறு சொல்லிக்கொண்டு போகிறார்கள், இராணுவத்தினர் எந்த நேரமும் இங்கே வந்துவிடலாம்” என்றான்.
குடிசையின் முற்றத்தில் நின்றிருந்த பொன்ராசா அப்படியே மணலில் குந்தினார். மகன்களையும் கீழே குந்தச் சொல்லிவிட்டு அவர் மணலை கைகளால் அளைந்து நிரல்படுத்திவிட்டு மணலில் கடகடவெனப் படம் வரையத் தொடங்கினார். அவரது தழும்பேறிய சுட்டுவிரல் மண்ணைக் கிழித்துக் கோடுகளை உருவாக்கின. “இது ஊறாத்துறை, இங்கேதான் இராணுவம் இப்போது இறங்கியிருக்கிறது”, அவரது விரல் வரைபடத்தின் கோடிக்குச் சர்ரென ஓடிற்று. “இது கோட்டை”, அவரது விரல் சடுதியில் மறுகோடிக்கு ஓடிற்று. “இராணுவம் இப்படியே வடக்கு வீதிவழியாக வடக்குக் கடற்கரையை ஒட்டி கரம்பன், நாரந்தனை, சரவணை, அராலிச் சந்தி, மண்கும்பான் அல்லைப்பிட்டி, மண்டைதீவுச்சந்தி வழியாகத்தான் கோட்டைக்குப் போவார்கள். அவர்களுடைய நோக்கம் கோட்டையைப் பிடிப்பதேயொழிய நோஞ்சான்களான உங்கள் இரண்டுபேரையும் பிடிப்பதல்ல. அவர்கள் தெற்கே திரும்பிச் சுருவிலுக்கு வர வாய்ப்பில்லை. அப்படியே அவர்கள் சுருவிலுக்குள் வந்தாலும் நான் உங்களைக் காப்பாற்றுவேன். எனக்குச் சிங்களம் தெரியும், நான் இராணுவத்துடன் பேசிக்கொள்கிறேன்” என்றார் பொன்ராசா.
மூத்தவன் கிறிஸ்டி சற்றுக் குரலை உயர்த்தி ” இராணுவத்தினர் கொலைவெறியில் வருவார்கள் அவர்கள் உங்களோடு பேசப்போவதில்லை, வயதான உங்களை ஒருவேளை அவர்கள் விட்டுவிடலாம் ஆனால் எங்களைக் கொல்வார்கள் ” என்று சொல்லிவிட்டு குடிசையின் வாசலில் உட்கார்ந்திருந்த தாயாரைத் திரும்பிப் பார்த்தான். அவனது கண்கள் தாயாரைக் கெஞ்சின.
நிலத்திலிருந்து தனது வலிய கால்களால் உந்தியெழுந்த பொன்ராசா ஒருமுறை நீளமாக ஓங்காளித்துக் காறித்துப்பினார். பின்பு, “இந்தியாவுக்கு எப்படிப் போவீர்கள் கடலுக்குள்ளால் நீச்சலடித்தே போய்விடுவீர்களா?” என ஆங்காரமாகக் கேட்டார்.
மூத்தவன் தலையைக் குனிந்தவாறே “வேலணை முக்குவ துறையிலிருந்து படகுகள் இந்தியாவுக்குப் போகின்றன. ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்கள் வாங்குகிறார்கள்” என்றான். இளையவன் “துறையில் இயக்கம் இந்தியாவுக்குச் செல்கிறவர்களிடம் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் வரி வசூலிக்கிறார்களாம், பத்தாயிரம் ரூபாய்கள் இருந்தால் நாங்களிருவரும் இந்தியாவுக்குப் போய்விடுவோம்” என்று அழுவாரைப் போல சொன்னான்.
“பத்தாயிரமோ! வைத்திருக்கிறீர்களா?” என அலட்சியமாகக் கேட்டார் பொன்ராசா. “அக்கா காசு அனுப்பவில்லையா” என்று முணுமுணுத்தான் மூத்தவன்.
“ஓ அப்படியா! அதை உங்களிடம் தந்துவிட்டு நானும் அம்மாவும் பட்டினியா கிடப்பது” எனக் கேட்டுவிட்டுக் கொடியில் கிடந்த சட்டையை உருவி எடுத்துத் தோளின்மீது போட்டு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்ராசா வெளியே கிளம்பினார். படலைக்குள் நின்று உரத்த குரலில் “டேய் கிறிஸ்டி, டேய் பொஸ்கோ நல்லாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.. இருபது வருடங்களாக உங்களைக் காப்பாற்றி வளர்த்த எனக்கு இனியும் உங்களை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியும்” என்று சொல்லிவிட்டு தெருவில் நின்று சட்டையை மாட்டிகொண்டார்.
சுருவில் தெருக்களில் மக்கள் பெட்டிகளும் சட்டிபானைகளுமாகக் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். எங்கே ஓடுவது என்பதுதான் அவர்களது கேள்வியாயிருந்தது. அய்ந்தாவது திசையொன்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லோருமாகக் கிழக்கு நோக்கி 4 கிலோமீற்றர்கள் நடந்துபோய் சாட்டி சிந்தாத்திரை மாதா கோவிலில் கூட்டமாகத் தங்கியிருப்பதே நல்லது என அவர்கள் பேசிக்கொண்டார்கள். பொன்ராசா “உயிருக்குப் பயந்த கோழைகள்” என அவர்களைத் திட்டினார். அந்தக் கிராமத்து மக்கள் பொதுவாகப் பொன்ராசாவுடன் பிரச்சினைக்குப் போக விரும்புவதில்லை. ஏதாவது ஒரு சிறிய வாக்குவாதமோ, உரசலோ ஏற்பட்டால்கூட பொன்ராசா தொடர்ந்து இரண்டு வருடங்களிற்கு ஒருநாள் விடாமல ஒவ்வொரு இரவும் எதிராளியின் வீட்டின் முன்நின்று கத்திக் கூச்சல் போடுவார். ஒரே நேரத்தில் இருவருடன் சண்டை என்றால் ஒருவர் வீட்டின்முன்பு காலைநேரக் கள்ளுக்குப் பின்னாகவும் மற்றைய எதிராளி வீட்டின்முன்பு மாலைநேரக் கள்ளுக்குப் பின்னாகவும் நேர அட்டவணை வகுத்துக்கொண்டு அதன் பிரகாரம் தவறாமல் சென்று சண்டையிடுபவர் பொன்ராசா. ஊருக்குள் அவரை ‘அலுப்பன்’ பொன்ராசா என்றும் சொல்வார்கள்.
இராணுவத்தினர் எதுவரை முன்னேறியிருக்கிறார்கள் எனப் பொன்ராசா கேட்டபோது அங்கிருந்த யாருக்கும் பதில் தெரியவில்லை. இராணுவம் எதுவரை முன்னேறியிருக்கிறது எனப் பார்த்துவருவதாக அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டுப் பொன்ராசா மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். அவரின் தலை மறைந்ததும் அங்கிருந்தவர்கள் “சனங்கள் வீடுகளை விட்டு ஓடியிருக்கும் தருணம் பார்த்து ‘அலுப்பன்’ பொன்ராசா ஆளில்லாத வீடுகளில் கோழியோ தேங்காயோ திருடப் போகிறான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
சரவணைக் கிராமத்துக்குள் நுழைந்து வடக்கு வீதியின் எட்டாம் கட்டைச் சந்தியில் பொன்ராசா மிதந்தார். சரவணை வரை சனங்களின் நடமாட்டமிருந்தது. எட்டாம் கட்டைச் சந்தியோ வெறிச்சோடிக் கிடந்தது. குறிப்பாக அந்தச் சந்தியிலிருந்த கள்ளுத் தவறணை மூடப்பட்டிருந்தது அவரை ஆத்திரமுட்டியது. தனது வலிய காலால் தவறணையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெற்றுப் பீப்பாவை எத்தினார். பீப்பா மூன்று கரணம் போட்டு நிலத்தில் வீழ்ந்தது.
வடக்கு வீதியை ஒட்டியிருந்த வயல்வெளிகளுக்குள்ளால் கிழக்கு நோக்கி நடந்துகொண்டிருந்த பொன்ராசா செக்கல் பொழுதாகி நிலம் மறையத் தொடங்கியபோது சடுதியில் வானத்தில் முளைத்த குண்டுவீச்சு விமானத்தைக் கண்டு அருகிலிருந்த ஒற்றைப் பனையொன்றின் பின்னால் மறைந்துகொண்டார். குண்டுவீச்சு விமானம் வட்டமடித்தபோது பனையைச் சுற்றிச்சுற்றி வந்தார். சுற்றிக்கொண்டிருந்த விமானம் திடீரெனக் காணமற்போனது. இப்போது வடக்குக் கடல் பக்கமாக குண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்டன.
நாரந்தனைச் சந்திவரை பொன்ராசா வந்துவிட்டார். சனங்கள் ஏற்கனவே வீடுகளை விட்டு வெளியேறியிருந்தார்கள். தூரத்தே வெடிச்சத்தங்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாலும் இராணுவம் முன்னேறிவருவதற்கான எந்த அறிகுறியுமில்லை. “பயத்தில் மோட்டுச் சிங்களவன் பண்டார வெடி வைக்கிறான்” என்று பொன்ராசா உதடுகளுக்குள் முணுமுணுத்தார். இனி இரவில் இராணுவம் முன்னேறப் போவதுமில்லை, அதிகாலையில்தான் அவர்கள் திரும்பவும் முன்னேறத் தொடங்குவார்கள் என நினைத்துக்கொண்டே பொன்ராசா சுருவில் கிராமத்தை நோக்கி நடந்தார். இரவு அவரவர் வீடுகளில் தூங்கிவிட்டு காலையில் நிலமையைப் பார்த்து முடிவெடுக்கலாம் எனச் சனங்களுக்கச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டே அவர் தனது நீண்ட கால்களை எட்டிப்போட்டு வேகமாக நடந்தார்;.
இரவு எட்டுமணியளவில் அவர் சுருவில் கிராமத்திற்கு வந்தபோது கிராமம் இருளடைந்து கிடந்தது. வீதிகளில் ஒரு குஞ்சு குருமானும் இல்லை. ஒருமுறை காறித் துப்பிவிட்டுத் தனது குடிசையை நோக்கி நடந்தார். குடிசைக்குள் வெளிச்சத்தைக் காணாததால் வெளியே நின்று “ஞானம்மா.. ஞானம்மா” என்று மனைவியைக் கூப்பிட்டார். ஒரு பதிலுமில்லை. ஆத்திரத்துடன் குடிசைக்குள் நுழைந்து விளக்கைப் பற்றவைத்தார். குடிசை வெறுமையாக இருந்தது. பெட்டி படுக்கைள், சட்டி பானைகள் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டிருப்பது தெரிந்தது. தாயும் பிள்ளைகள் இருவரும் சனங்களுடன் சேர்ந்து சாட்டி மாதா கோயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்று நினைத்தார். அவரின் சொல்லை மதியாமல் அவர்கள் புறப்பட்டுப்போனதை நினைக்கும்போது அவருக்கு அண்டபுண்டமெல்லாம் பற்றியெரிந்தது. குடிசையின் தெற்கு மூலையில் கைகளால் தரையைக் கிளறி அங்கே புதைத்து வைக்கப்பட்டிருந்த டப்பாவை எடுத்துத் திறந்து பார்த்தார். வைத்த காசு வைத்தபடியே இருந்தது. டப்பாவை மறுபடியும் இறுக மூடிப் புதைத்து வைத்தார். செத்தைக்குள் கைவைத்துச் சாராயப் போத்தலை எடுத்தார். அரைப் போத்தல் மிச்சமிருந்தது. அதில் பாதியை ஒரே மடக்கில் குடித்துவிட்டுக் குறைப் போத்தலைக் கடதாசியில் சுற்றிக் கைகளில் எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக மனைவியையும் பிள்ளைகளையும் தேடிக் கிழக்கு முன்னாகச் சென்றார். எப்படியும் வழியில் வைத்தே அவர்களைப் பிடித்து, பிடித்த கையோடு தாயையும் பிள்ளைகளையும் அடித்து நொருக்கிவிடுவதாகத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வழி முழுவதும் வெறுமையாகயிருந்தது. அருகிலிருந்த வீடுகளிற்குள் நுழைந்து பார்த்தார். எவருமில்லை. அவர் சாட்டி மாதா கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது இரவு பதினொரு மணியாகியிருந்தது.
மாதா கோயிலில் சூழவரவுள்ள ஏழெட்டுக் கிரமங்களின் மக்கள் நிறைந்திருந்தார்கள். கோயில் மண்டபத்திலும் கோயிலுக்கு வெளியே மணிலிலும் மக்கள் படுத்திருந்தார்கள். கோயிலுக்குப் பின்புறம் கிணற்றையொட்டி சமையல் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. அந்தக் கூட்டத்திடையே தனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடி ஆத்திரத்துடன் வேகமாக நடந்தார் பொன்ராசா. “வீடு வாசலை விட்டுவிட்டு வேசைக் கூட்டம் எடுபட்டுத்திரிகிறது” என அடிக்கடி பற்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டார். கோயிலின் தூணோடு சாய்ந்திருந்த ஞானம்மாவைக் கண்டதும் ஞானம்மாவை நெருங்கிக் கையைப் பிடித்து வெளியே கொறகொறவென இழுத்து வந்தார். இருள்மறைவுக்கு வந்ததும் ஞானம்மாவின் கன்னத்தைப் பொத்தி ஓங்கி அறைந்தார். கிறிஸ்டியும், பொஸ்கோவும் எங்கே எனப் பொன்ராசா கேட்டபோது ஞானம்மா மவுனமாயிருந்தார். ஞானம்மாவின் கழுத்தை நெரிப்பதற்காகப் பொன்ராசா கையை வைத்தபோது ஞானம்மா வடித்திருந்த கண்ணீரால் கழுத்துப் பிசுபிசுத்தது. கையை உதறிக்கொண்டே மறுபடியும் “கிறிஸ்டியும், பொஸ்கோவும் எங்கே” எனப் பொன்ராசா உறுமினார். ஞானம்மா மெதுவாக “அவர்கள் இந்தியாவுக்குப் போய்விட்டார்கள்” என்றார். பொன்ராசா அப்படியே மணலில் மெதுவாக உட்கார்ந்தார். கடதாசியைப் பிரித்துப் போத்தலை எடுத்து மிச்சமிருந்த சாராயத்தையும் குடித்தார். எழுந்து மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு விறுவிறுவெனக் கோயிலை நோக்கி நடந்தார்.
கட்டி எடுத்துவந்திருந்த சோறை, கோயில் மண்டபத்தில் வைத்து ஞானம்மா கணவனுக்குக் கொடுத்தார். பொன்ராசா நெற்றியைச் சுருக்கி யோசித்தவாறே சோற்றை அளைந்துகொண்டிருந்தார். அவரது கண்கள் போதையாலும் ஆத்திரத்தாலும் சிவந்திருந்தன. “அவர்கள் போவதற்குக் காசு?” எனக் கேட்டார். “என்னுடைய நான்கு பவுண் சங்கிலியை அவர்களிடம் கொடுத்துவிட்டேன்” என்றார் ஞானம்மா. பொன்ராசாவின் வலிய கை ஞானம்மாவை அறைந்தபோது ஞானம்மாவின் முகம் முழுவதும் சோறும் குழம்புமானது. “காதுத் தோடுகளைக் கழற்றிக்கொடு” என்று பொன்ராசா கைகளை நீட்டினார். ஞானம்மா மறுபேச்சில்லாமல் நீலக் கற்கள் பதித்த அந்தத் தோடுகளைக் கழற்றிக்கொடுத்தார். அந்தத் தோடுகள் பொன்ராசா, ஞானம்மாவைக் கல்யாணம் செய்தபோது வரப்பிரகாசம் பாதிரியார் ஞானம்மாவுக்குப் பரிசளித்த தோடுகள். அவற்றை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பரிசோதித்துவிட்டு அவற்றை மடியில் சொருகிக்கொண்டு பொன்ராசா எழுந்து வெளியே வந்து நின்றார். கால்கள் சற்றுத் தளும்புவதை உணர்ந்தார். தலையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
பொன்ராசா வேலணை முக்குவதுறையை வந்தடைந்தபோது நேரம் அதிகாலை ஒன்றைத் தாண்டிவிட்டது. அங்கிருந்துதான் படகுகள் இந்தியாவிற்குக் கிளம்புவதாக மகன்மார்கள் சொல்லியிருந்தார்கள். பின்நிலவு வெளிச்சத்தில் கடற்கரை ஆளரவமற்றுக் கிடந்தது. ‘தாயோளிகள் போய்விட்டார்கள்’ என்று சொல்லியவாறே தனது வலதுகாலால் மணலில் சிலதடவைகள் ஓங்கிக் குத்தினார். பின்பு கடற்கரையில் இரண்டு தடவைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். கரையில் முழங்காலளவு தண்ணீரில் வரிசையாகப் படகுகள் கட்டப்பட்டிருந்தன. அந்தப் படகுகளுக்குள் யாருமிருக்கிறார்களா என நோட்டமிட்டார். ஒரு படகில் தாவி ஏறி அந்தப் படகைப் பரிசோதித்தார். அந்த நீல நிற பிளாஸ்டிக் படகில் வலைகளும் தாங்கு கம்புகளுமிருந்தன. மோட்டர் இணைக்கப்பட்டிருக்கும் பகுதி வெறுமையாயிருந்தது. படகுக்காரன் படகைக் கரையில் நங்கூரம் போட்டுவிட்டு மோட்டரைக் கையோடு எடுத்துச் சென்றிருக்கவேண்டும்.
படகில் நின்று வானத்தை உற்றுப் பார்த்தார். நட்சத்திரங்களை வைத்துத் திசையைக் கணக்கிட்டார். வடக்குத் திசையில் ஒன்றன்பின் ஒன்றாக நட்சத்திரங்கள் கோடிழுத்தது போல அணிவகுத்திருக்கக் கண்டார். இந்தியாவுக்குச் செல்வதற்கான திசைவழி அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. சட்டையைக் கழற்றிக் கையில் பிடித்து மேலே பறக்கவிட்டு காற்றின் திசையை மதிப்பிட்டார். சட்டை, வடக்கு நோக்கிப் படபடத்துப் பறந்தது. படகிலிருந்த வலைகளைத் தூக்கிக் கடலுக்குள் போட்டார். நங்கூரத்தை இழுத்துப் படகிற்குள் போட்டார். இந்தியாவை நோக்கி வடதிசையில் கம்பு ஊன்றி படகைச் செலுத்தத் தொடங்கினார். படகு நகர்வதுபோலத்தான் தெரிந்தது. சற்று நேரத்திலேயே பொன்ராசா களைத்தப்போனார். ‘தாயோளி எப்படித்தான் இந்தப் படகைச் செலுத்துகிறார்களோ தெரியவில்லையே’ என அலுத்தவாறு படகின் அணியத்தில் அமர்ந்தார். அவர் கம்பு ஊன்றாத போதும் படகு மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருப்பதை அவதானித்தார். எழுந்து இரண்டு தாங்கு கம்புகளை அணியத்தில் நிறுத்தி படகில் கிடந்த கயிற்றால் அவற்றைப் படாதபாடுபட்டுச் சமாந்தரமாகப் பிணைத்தார். தனது வேட்டியை உரிந்தெடுத்து அந்தக் கம்புகளின் நடுவில் பாயாகக் கட்டினார். இப்போது படகு காற்றின் திசையில் வேகமெடுத்துச் சென்றது. அணியத்தில் ஏறியிருந்து ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டே வடக்கு நோக்கி இருளில் பார்த்துக்கொண்டிருந்தார். தனது மகன்கள் கிறிஸ்டியையும், பொஸ்கோவையும் கண்டுபிடிக்காமல் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்புவதில்லை எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். தண்ணீரத் தாகம் எடுத்தபோது தண்ணீர் எடுத்துவர மறந்துவிட்டோமே என்றெல்லாம் அவர் கலங்கினாரில்லை. அப்படியே கைகளால் கடல்நீரை வாரியெடுத்துக் கொப்பளித்து உமிழ்ந்தார். இந்தியாவில் தரையிறங்கியதும் யாராவது நீலக் கற்கள் பதித்த தோடுகளைப் பறித்துவிடக் கூடும் என நினைத்து எச்சரிக்கையாக அவற்றை எடுத்து உள்புறமாக ஜட்டிக்குள் வைத்துச் சிறிய முடிச்சிட்டார். கச்சதீவு தாண்டினால் இராமேஸ்வரம் கோயிலின் கோபுர வெளிச்சம் தெரியுமெனக் கேள்விப்பட்டிருந்ததால் அந்த வெளிச்சத்திற்காகக் காத்திருந்தார். குடித்த சாராயம் குமட்டிக்கொண்டு வந்தது. அவருக்கு இதுதான் முதலாவது தொலைதூரக் கடற்பயணம். முதற் கடற்பயணத்தின் போது குமட்டல் வரும் எனக் கேள்விப்பட்டிருந்ததால் அது குறித்து அவருக்குப் பெரிய கவலையில்லை. ஆனால் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. வாயிலிருந்து புறப்பட்ட ஏப்பத்தில் சாரயம் மணத்தது. அப்படியே அணியத்தில் சரிந்தவர், தன்னையறியாது அயர்ந்து தூங்கிப்போனார்.
வெயில் சுள்ளிட்டபோது பொன்ராசா பதறிக்கொண்டி துள்ளி எழுந்தார். தூரத்தே கோயிற் கோபுரம் தெரிந்தது. தட்டத் தனியனாக வேட்டியைப் பாயாகக் கட்டியே இந்தியாவிற்கு வந்ததற்காகத் தன்னைத்தானே மெச்சிக்கொண்டார். இப்போது அவர் படகைக் கவனித்தபோது அது முன்னேயும் செல்லாமல் பின்னேயும் செல்லாமல் ஒரேயிடத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. கையை உயரே தூக்கிப் பார்த்தார். காற்று என்ற ஒன்றே கடலில் இல்லாமலிருந்தது. தாங்கு கம்பையெடுத்து அவர் ஊன்ற முயற்சித்தபோது கம்பு நிலத்தைத் தொட்டது அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் படகு அசைய மறுத்தது. ஆவது ஆகட்டும் எனப் படகை விட்டுக் குதித்து நீச்சலடித்தே கரைக்குச் சென்றுவிடலாம் என அவர் முடிவெடுத்தபோது, இரண்டு படகுகள் அதிவேகத்தில் அவரின் படகை நோக்கி வருவதைக் கண்டார். படகுகள் கிட்ட நெருங்கும் போதே; ‘இந்தியன் நேவி’ எனப் பொன்ராசா உற்சாகமாகச் சீட்டியடித்தார் கடற்படையினரே அழைத்துச் சென்று இராமேஸ்வரத்தில் இறக்கிவிடுவார்கள் என நிம்மதியடைந்தார்.
பொன்ராசாவின் படகைக் கடற்படையினரின் படகுகள் அணைத்தபோது பொன்ராசா வேட்டியை ஒழுங்காகக் கட்டி, சட்டையின் பொத்தான்களை எல்லாம் கழுத்துவரை போட்டு, சட்டையை முழுக்கையாக விட்டு ஒரு பண்பான கோலத்தில் அகதிக்குரிய முகபாவத்தை வரவழைத்துக்கொண்டு “வணக்கம் சேர்” எனக் கைகளைக் குவித்துத் தலைக்குமேல் உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார். பொன்ராசாவின் படகுக்குள் தாவியேறிய நான்கு படையினர் கேட்டுக் கேள்வியில்லாமல் பொன்ராசாவை அடித்துத் துவைத்தனர். “சேர் நான் தமிழன்” எனப் பொன்ராசா குழறினார். அடி நின்றபாடில்லை. உதடு வெடித்து வெள்ளைச் சட்டையில் இரத்தம் கோடாய் வழிந்தது. பொன்ராசவைத் தங்களது படகுக்குள் தூக்கிப்போட்டு பொன்ராசா வந்த படகைத் தங்களது படகில் கட்டியிழுத்துக்கொண்டு கரையை நோக்கிக் கடற்படையினரின் படகுகள் விரைந்தபோதுதான் தூரத்தே தெரிவது இராமேஸ்வரக் கோயில் கோபுரமல்ல, அது நயினாதீவு நாகபூசணியம்மன் கோயில் கோபுரமே என்பது பொன்ராசாவிற்குத் தெரிந்தது. வேலணையிலிருந்து புறப்பட்டு இரவிரவாகப் பயணம் செய்து வேலணைக்கு அடுத்த தீவான நயினாதீவிற்கே தான் வந்து சேர்ந்திருப்பதை நினைத்து அவருக்கு வெறுப்பாயிருந்தது.
நயினாதீவு இலங்கைக் கடற்படையின் வலுவான தளம். அங்கிருந்து படகுகள் புறப்படுவதோ அங்கே படகுகள் வருவதோ கடற்படையினரின் அனுமதி பெற்றே நடக்கும் காரியம். அப்போது நாலாயிரத்துச் சொச்ச மக்கள் நயினாதீவில் வசித்தார்கள். கடற்படையினருக்குத் தெரியாமல் அந்தத் தீவில் ஒரு துரும்பும் அசையாது. அந்த இரும்புக் கோட்டையைத் தகரத்துக்கொண்டல்லவா பொன்ராசாவின் நீலப்படகு அங்கே அத்துமீறி நுழைந்திருக்கிறது.
அங்கேயிருந்த உபதளபதி ஒருவனின் அலுவலகத்தின் முன்பிருந்த கொடிக்கம்பத்தில் பொன்ராசா முழு நிர்வாணமாகக் கட்டப்பட்டிருந்தார். கொடிமரத்தின் அரைவாசி உயரத்தில் பொன்ராசா இருந்தார். அவரது திரணை திரணையான கைகால்களையும் அகன்ற மார்பையும் உறுதியான தோள்களையும் பார்த்தபோது கடற்படையினர் நிச்சயம் பொறாமைப்பட்டிருப்பார்கள். அவரது கரிய உடலில் இரத்தத் துளிகள் இரத்தின ஆபரணங்களைப் போல பூத்துக்கொண்டேயிருந்தன. பொன்ராசாவின் ஜட்டிக்குள்ளிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகள் இப்போது உபதளபதியின் மேசை இழுப்பறைக்குள்ளிருந்தன. அகப்பட்டிருப்பது என்ன வகையான புலி எனக் கடற்படையினர் துப்புத் துலக்குவதில் மும்மூரமாக ஈடுபட்டிருந்தார்கள். புலிக்கு அய்ம்பது வயதுக்கு மேலிருக்கும் என்பதுதான் அவர்களைக் கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தியது. பிரபாகரனுக்கே அப்போது 36 வயதுதான்.
உச்சி வெயிலுக்குள் கட்டப்பட்டிருந்த பொன்ராசா வாய்விட்டுக் கதறிக்கொண்டிருந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இரந்து நின்றார். ‘எப்படியும் இந்தக் கண்டத்திலிருந்து நான் தப்பித்துவிடுவேன்’ என அவரது மனது சொல்லிக்கொண்டது. ஆனால் விறைப்பாயிருந்தால் நேவிக்காரன் சுட்டுக் கடலில் போட்டாலும் போட்டுவிடுவான். அதனால் அவர் இடைவிடாமல் கதறிக் கண்ணீர் விட்டு மாய்மாலம் போட்டவாறேயிருந்தார். தண்ணீர் கேட்டு அவர் துடித்தபோது கடலின் உப்புநீர் அவருக்குப் புகட்டப்பட்டது. பொன்ராசாவும் ஒரு பிழையைச் செய்துவிட்டார். பிடிபட்டவுடனேயே, இந்தியாவிற்குப் போன பிள்ளைகளைத் தேடிக் குடிபோதையில் படகொன்றைத் திருடிக்கொண்டு தெரியாத்தனமாகப் புறப்பட்டதை அவர் ஒத்துக்கொண்டிருக்கலாம். இந்தியாவுக்குக் கிளம்பியதைச் சொன்னால் பெரிய பிரச்சினையாகலாம் என நினைத்து மீன்பிடிக்கக் கிளம்பித் திசைமாறி வந்துவிட்டதாக உளறிவிட்டார். கடற்படையினர் இரண்டு கேள்விகளிலேயே இவருக்குக் கடல் குறித்து எதுவும் தெரியாது என்பதையும் அது திருடப்பட்ட படகென்பதையும் கண்டுபிடித்துவிட்டனர்.
இரண்டு நாட்களாக அன்னம் தண்ணியில்லாமல் பொன்ராசா கொடிமரத்திலேயே கட்டப்பட்டு வாடிப்போய்க் கிடந்தார். மூன்றாவது நாள் அவர் ஓர் அறைக்குள் அடைக்கப்பட்டார். அந்த அறைக்குள் பாம்பு, பல்லி, பூரான் எல்லாம் தாராளமாக வந்து சென்றன. மாலை நேரமானால் பொன்ராசாவை நரகம் சூழ்ந்தது. நல்ல போதையில் வரும் கடற்படையினர் பொன்ராசாவை அறையிலிருந்து வெளியே இழுத்துவருவார்கள். விசாரணை என்ற பெயரில் அலட்டலான கேள்விகளைக் கேட்பார்கள். பொன்ராசா அதைவிட அலட்டலாகப் பதில் சொல்வார். மண்ணில் படம் வரைந்து யாழ்ப்பாணத்தில் எந்த எந்த இடத்தில் புலிகளின் முகாம் இருக்கிறது, எங்கே புலிகளின் தலைவர் இருக்கக் கூடும், குறிப்பாகக் கடற்புலித் தளபதி சூசை இப்போது எங்கேயிருக்கக் கூடும் என்று கடற்படையினருக்குப் பொன்ராசா விளக்கினார். அடுத்தநாள் அதே வரைபடத்தை வரைந்துகாட்டச் சொல்லிக் கடற்படையினர் கேட்பார்கள். முதல்நாள் வரைந்த படத்திற்கு எதிர்மாறாக வேறொன்றைப் பொன்ராசா வரைவார். முதல்நாள் பருத்தித்துறையிலிருந்த பிரபாகரனின் முகாம் இப்போது சாவகச்சேரியிலிருக்கும். தென்னைமட்டைகள், கயிறு, மொத்தமான தடிகள் எல்லாவற்றாலும் பொன்ராசவைக் கடற்படையினர் அடித்தார்கள். ஒருவாரத்திற்குள் பொன்ராசாவின் உடலின் பாதியிடத்தில் தோல் உரிந்துவிட்டது.
ஒருவாரத்திற்குப் பின்பு அடி ஆய்க்கினைகள் குறைந்தன. தாங்கள் பிடித்துவைத்திருப்பது ஒரு திருடனையே தவிர, புலியை அல்ல என்பது கடற்படையினருக்குத் தெளிவாக விளங்கியது. பொன்ராசா கடற்படையினருக்கு ஏற்றவாறு தாளம் போடுவதிலும் இப்போது தேர்ச்சி பெற்றிருந்தார். பொன்ராசா ஒரு சமையல் மன்னனாயிருந்தார். அவர் தளபதிகளுக்குச் சுவையாகச் சமைத்துப்போட்டு தளபதிகளின் இரக்கத்தைக் பெற்றார். கடற்படையினருக்கு ஒரு செல்லப்பிராணிபோல பொன்ராசா ஆகிவிட்டார். இப்போது கடற்படையினர் பொன்ராசாவை ஊருக்கள் சென்றுவரவும் அனுமதித்தார்கள். பகல் முழுவதும் ஊருக்குள் சுற்றித்திரியும் பொன்ராசா இரவில் முகாமுக்குத் திரும்பித் தனது அறையில் படுத்துக்கொள்வார். அவர் தனது அறையை சுத்தப்படுத்தி அதற்குள் மரப்பலகைகளால் ஒரு படுக்கையும் இணக்கிப் போட்டுக்கொண்டார்.
ஊருக்குள் சனங்கள் பொன்ராசாவை ‘ நேவி ஐயா’ என அழைத்தார்கள். பொன்ராசா நேவியின் ஆள் என்ற அச்சம் சனங்களுக்கிருந்தது. நயினாதீவில் கள்ளும் மீனும் தாராளமாக் கிடைத்தன. அங்கிருந்து கடற்படையினருக்குத் தெரியாமல் தப்பித்துச் செல்வதும் நடவாத ஒன்று என்பதற்கப்பால் அங்கிருந்து தப்பிச் செல்வது குறித்துப் பொன்ராசா யோசிக்கவேயில்லை. இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற மகன்மாரைக் குறித்தும் இப்போது அவர் குறைபட்டுக்கொள்வதில்லை. இந்தக் கிழவனையே ஆடாகக் கட்டித் தோலாக உரித்தெடுத்வர்களிடம் அந்த இளைஞர்கள் சிக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இப்போது அவர் அறிந்திருக்கக்கூடும். அவ்வப்போதுதான் பொன்ராசா கடற்படை முகாமுக்குச் சென்று வந்தார். மற்றப்படிக்கு அவர் கோயில் மண்டபத்திலேயே தங்கிக்கொண்டார். அந்தத் தீவு மணிமேகலைக்கு அமுதசுரபியை வழங்கிய தீவல்லவா. பொன்ராசாவுக்கு மட்டும் சோற்றுக்குப் பஞ்சம் வந்துவிடுமா என்ன! கோயில் சோறும், அன்னதான மடமும், கடற்படை முகாமின் பட்டரும் ஜாமுமாக அவர் கொழுத்துத் திரித்தார்.
நயினாதீவிலிருந்து கடற்படையினரின் கடுமையான சோதனைக்குப் பிறகு காலையில் ஒரு பயணிகள் இயந்திரப் படகு புங்குடுதீவின் குறிகட்டுவான் துறைக்குச் செல்லும். மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே அந்தத் தீவிலிருந்து மக்களை வெளியேறக் கடற்படையினர் அனுமதித்தார்கள். அவ்வாறு சென்ற ஒரு பயணியிடம் தனது மனைவியிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கடிதத்தைப் பொன்ராசா கொடுத்தனுப்பினார்.
மூன்று மாதங்களாகக் கணவன் இருக்குமிடம் தெரியாமல் செத்தவீடு கொண்டாடிக்கொண்டிருந்த ஞானம்மாவின் கையில் அந்தக் கடிதம் கிடைத்தபோது அவர் செய்வதறியாது விழித்தார். அந்தக் கடிதத்தில் ‘ நயினாதீவில் சிவில் நிர்வாகம் நன்றாகயிருக்கிறது, இக்கடிதம் கண்டதும் புறப்பட்டு நயினாதீவுக்கு வரவும், இங்கே நேவிக்காரர்கள் எனக்கு மிகவும் ஆதரவாகயிருக்கிறார்கள்’ என எழுதப்பட்டிருந்தது. ஞானம்மா பக்கத்து வீட்டுப் பொடியனிடம் கடிதத்தைக் காட்டியபோது அவன் அந்தக் கடிதத்தை இயக்கத்திடம் கொண்டுபோய்க் கொடுப்பதே சரியாயிருக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் ஏதோ சதி ஒளிந்திருக்கிறது என்றும் சொன்னான். இவ்வாறாக அந்தக் கடிதம் புலிகளின் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தது.
புத்தாண்டுக் கொண்டாட்டம் கடற்படை முகாமில் அட்டகாசமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அன்று பொன்ராசா விசேடமாகக் கணவாய், இறால், நண்டு என பொரித்துக் கரித்துச் சமைத்துத் தளபதிகளை மகிழ்ச்சிப்படுத்தினார். தளபதியிடமிருந்து ஒரு முழு ‘மெண்டிஸ்’ சாராயப் போத்தல் அவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது. கடற்கரையில் உட்கார்ந்திருந்து அதை இரசித்து இரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார். மார்கழியின் குளிர்காற்று வீசிக்கொண்டிருக்க உடல் சில்லிட்டது. தெற்கே புங்குடுதீவிலிருந்து ஓர் ஆகாயவாணம் மேலே கிளம்பி ஆகாயத்தில் வண்ணமயமாகப் பூத்ததைக் கவனித்தார். அரைப் போத்தல் சாராயம் முடிந்தபோது உடல் முறுக்கேறி நின்றது. போத்தலை கையிலெடுத்தவாறு முகாமை நோக்கி நடந்தார். முகாமில் சிங்கள பைலாப் பாடல்கள் முழங்கிக்கொண்டிருந்தன. இந்த நேரத்தில் புலிகள் தாக்கினால் வலுசுலபமாக இந்த முகாமை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டார். அவரது கால்கள் அவரை ஊர்மனைக்குள் இழுத்துச் சென்றன. எல்லா வீடுகளும் இருளில் மூழ்க்கிக் கிடந்தன. இவ்வாறான கொண்டாட்ட நாட்களில் மதுபோதையுடன் கடற்படையினர் வீடுகளுக்குள் நுழைவது, பெண்களோடு சேட்டை செய்வது சர்வ சாதாரணமாக நிகழுமென்பதால் இத்தகைய நாட்களில் மக்கள் இன்னும் எச்சரிக்கையாக இருப்பதுண்டு என அவர் அறிந்திருந்தார். மனம் காமம் குறித்த நினைவுகளால் அலைக்கப்படலாயிற்று. கையிலிருந்து போத்தலைக் கடகடவென வாய்க்குள் சரித்தார். போத்தலில் இன்னும் கால்பகுதி மீந்திருந்தது. கடற்கரைக்குத் திரும்பியவர் போத்தலைக் கடற்கரையில் வைத்துவிட்டு உடைகளையும் களைந்துவிட்டு நிர்வாணமாகக் கடலுக்குள் இறங்கி இடுப்புவரையான நீருக்குள் நடந்து சென்றார். கண்களை மூடியவாறு நீருக்குள் கரமைதுனம் செய்யத் தொடங்கினார். சில நிமிடங்களில் சலிப்புடனும் வெறுப்புடனும் கரையை நோக்கி நடந்துவந்து உடைகளை அணிந்துகொண்டார். சாராயப் போத்தலை எடுத்து அதைத் திறந்தபோது அவரது கழுத்தில் அந்த வலுவான அடி விழுந்தது. தாக்கப்பட்ட ஒரு வலிய மிருகம் போல சுழன்று திரும்பினார். அவரது மூளை நிதானிப்பதற்குள்ளாகவே அவரது கையிலிருந்த போத்தல் எதிராளியின் தலையில் மோதிச் சிதறிய ஓசையைக் கேட்டார்.
அடுத்தநாள் காலையில் அவரது கழுத்தில் கல்லைக் கட்டிப் படகில் ஏற்றிக் கடற்படையினர் கடலுக்குள் அழைத்துச் சென்றனர். இவரால் இரவு தாக்கப்பட்ட கடற்படை வீரன் தலையில் காயத்திற்குப் போடப்பட்ட துணிக்கட்டோடு இவரையே உற்றுப் பார்த்தவாறிருந்தான். பொன்ராசா மவுனமாயிருந்தார். அவரைக் கல்லோடு அவர்கள் கடலுக்குள் ஒரு நீள் கயிற்றில் இறக்கினார்கள். கடலம்மாவின் கருவறையில் பொன்ராசா போய் விழுந்தார். கைகளையும கால்களையும் ஒரு குழந்தைபோல அவர் அடித்தார். அவரது அடிவயிற்றில் சரளைக் கற்கள் குத்துவதை உணர்ந்தார், தனது தலை வெடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். மூளைக்குள் கருமை மட்டுமே படரத் தொடங்கியது. அப்போது மறுபடியும் கயிற்றினால் மேலே இழுக்கப்பட்டார். முக்கால் பிணமாகப் பொன்ராசா மேலே வந்தார். சில தடவைகள் இந்த விளையாட்டு நடந்ததன் பின்பாக அவரை மறுபடியும் படகில் ஏற்றினார்கள். நயினாதீவுத் துறையிலிருந்து குறிகட்டுவானுக்குப் புறப்பட்ட பயணிகள் படகு தூரத்தே வந்துகொண்டிருந்தது. அந்தப் படகைக் கடற்படையின் படகு நெருங்கி அணைத்தது. பொன்ராசா அந்தப் பயணிகள் படகில் ஏற்றப்பட்டார். அவரது கையில் உபதளபதியால் ஒரு சிறிய பொட்டலம் கொடுக்கப்பட்டது. அந்தப் பொட்டலத்தில் நீலக் கற்கள் பதித்த இரண்டு தோடுகளிருந்தன. தளபதி சிங்களத்தில் பொன்ராசாவிடம் சொன்னான்:”மரணம் என்றால் என்னவென்று இப்போது பொன்ராசாவுக்குத் தெரியும்”.
பொன்ராசா நீலக் கற்கள் பதித்த தோடுகளைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார். குறிகட்டுவான் துறையில் இறங்கியதும் விறுவிறுவென நடந்துபோய் அங்கு நின்றிருந்த மினிபஸ்ஸில் ஏறி உட்கார்ந்தார். இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்காது ” ஐயா கொஞ்சம் வெளியே இறங்கி வாங்க” என்ற குரல் கேட்டது. அங்கே விடுதலைப் புலிகள் நின்றிருந்தார்கள். பொன்ராசா இறங்கி வெளியே வந்ததும் அவரது கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டன.
புலிகளின் சிறைச்சாலையில் இருநூறுவரையான கைதிகள் அடைபட்டிருந்தார்கள். அந்தச் சிறைச்சாலை எங்கேயிருக்கிறது என்பது அங்கிருந்த யாருக்குமே தெரியவில்லை. பொன்ராசாவிடம் குறுக்கு விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை. அவரிடமிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகளைக் கைது செய்தவுடனேயே புலிகள் எடுத்துக்கொண்டார்கள். அவருக்குச் சிறைச் சீருடை வழங்கப்பட்டது. ஒரு சாரத்தைப் பாதியாக்கிய பாதித்துண்டு மட்டுமே சிறைச் சீருடை. வேறெந்த உடைகளும் கிடையாது. உள்ளாடை அணியவும் தடையிருந்தது. அவரது கால்கள் மூன்று குண்டுகள் வைத்த சங்கிலியால் பிணைக்கப்பட்டன. பொன்ராசா குறித்த விபரங்கள் எல்லாமே புலிகளிடமிருந்தன. அவர் திருடிச் சென்ற படகின் உரிமையாளரும் புலிகளிடம் முறையீடு செய்திருந்தார். பொன்ராசா நயினாதீவிலிருந்து தனது மனைவிக்கு அனுப்பிய கடிதமும் அவர்களிடமிருந்தது. அவர் தனியனாகப் படகில் சென்றதால் அவர் ‘கப்டன்’ என்றே அங்கிருந்த புலிகளால் அழைக்கப்பட்டார். அவர்கள் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க!” பொன்ராசா உள்ளது, இல்லாதது, பொல்லாதது எல்லாவற்றையும் சொன்னார். அதைப் பொறுமையாகக் கேட்டு ஒரு பேரேட்டில் பதிவுசெய்துவிட்டு அவர்கள் மறுபடியும் கேட்டார்கள்: “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க”. கடற்படையினர் அடிக்கும்போது பொன்ராசாவிற்கு கோபம் வரவில்லை. ஆனால் புலிகள் அடித்தபோது அவருக்கு அளவிட முடியாத கோபம் வந்தது. அவர்கள் அடிக்கும் போது அவர் கண்களை இறுக மூடிக்கொள்வார். ‘ஆள்களைப் பார்..மூன்றாம் நம்பர் ரீல்கட்டைகள் மாதிரி இருந்துகொண்டு மல்லா மலையான என்னில் கைவைக்கிறார்களே’ என அவரது மனம் அடங்காத ஆத்திரத்துடன் கொந்தளிக்கும். நயினாதீவு கடற்படைத் தளத்தின் அமைப்பைப் பொன்ராசா படம் வரைந்துகாட்டியபோது உண்மையிலேயே புலிகள் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள்.
பொன்ராசா வரைந்துகொடுத்த படத்தையே பார்த்துக்கொண்டிருந்த பொறுப்பாளன் “அந்த சிவில் என்ஜினியரைக் கூட்டிக்கொண்டு வா” என அருகில் நின்ற ஒருவனுக்கு உத்திரவிட்டான். சற்று நேரத்தில் கைகளும் கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் முழந்தாள்களில் நடக்க வைக்கப்பட்டு நாய்போலே அங்கே இழுத்துவரப்பட்டான். அந்த இளைஞனின் முன்பு பொன்ராசா வரைந்த படத்தைக் காட்டிய பொறுப்பாளன் “நீ என்னடா சிவில் என்ஜினியர், இங்கே கப்டன் வரைந்திருக்கும் படத்தைப் பார்த்தாயா! உன்னால் ஆறுமாதமாகக் கேவலம் பூந்தோட்ட முகாமின் படத்தைச் சரியாக வரைந்துகாட்ட முடியவில்லையே” என்று சொல்லிவிட்டுப் பொன்ராசாவைத் திரும்பிப் பார்த்தவாறே ஒரு மண்வெட்டிப் பிடியை எடுத்து அதை அவரிடம் கொடுத்து “கப்டன் அடியுங்கள் இவனை, அப்படியாவது இவனுக்குப் படித்ததெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறதா பார்க்கலாம்” என்றான். பொன்ராசா கொஞ்சமும் தயங்காமால் கையை நீட்டி அந்த மண்வெட்டிப் பிடியை வாங்கி இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டார். முதலாவது அடி அந்த இளைஞனின் முதுகில் விழுந்தது. பொன்ராசா உரத்த குரலில் “டேய் துரோகி உன்னைப் போன்றவர்களால்தான் எங்களுக்குத் தமிழீழம் கிடைக்காமலிருக்கிறது…இந்தப் பிள்ளைகள் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்க நீங்கள் துரோகமா செய்கிறீர்கள், தமிழர்கள் படும் கஸ்டத்தைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா?” என உறுமியவாறே அந்த இளைஞனை அடித்தார். இளைஞனின் உடல் துடித்ததே தவிர அவனிடமிருந்து ஒரு முனகல் கூட வரவில்லை. பொன்ராசா பாய்ந்து அடிக்க முயற்சித்தபோது அவரது கால்களில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலி தடக்கி அவர் அந்த இளைஞன் மேலேயே குப்புற விழுந்து போனார். அந்த இளைஞன் யார் எவர் என்பதெல்லாம் பொன்ராசாவுக்குத் தெரியாது.
புலிகளின் சிறையில் இரண்டு வேளைகள் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. வெள்ளையரிசிக் கஞ்சிக்குள் சீனி போட்டுக் கொடுப்பார்கள். அது கால்வயிற்றுக்குக் கூடப் போதாது. ஏதோ கண்களைக் கட்டினார்கள், கூட்டி வந்தார்கள், இரண்டு அடியைப் போட்டு விசாரித்துவிட்டுப் பின்பு துரத்திவிடுவார்கள் என்றுதான் இங்கே வரும்போது பொன்ராசா நினைத்திருந்தார். ஆனால் மாதக்கணக்கில் பட்டினியும் சிறையும் சித்திரவதையும் கிடைக்கும் என அவர் நினைத்திருக்கவேயில்லை. ஒருநாள் விசாரணையின் போது அவர்கள் “கப்டன் உள்ளதைச் சொல்லிப்போடுங்க” என்றபோது பொன்ராசா பொறுக்கமுடியாமல் உள்ளதைச் சொல்லியும் விட்டார்: “தம்பிமார் நான் உங்களுடைய தகப்பனுக்குச் சமம், ஒரு மிருகத்தைப் போல என்னைச் சங்கிலியால் கட்டி அரை நிர்வாணமாக நீங்கள் வைத்திருப்பதெல்லாம் சரியான தவறு. நான் உங்களுக்கு நயினாதீவு முகாமின் வரைபடத்தைக் கொடுத்திருக்கிறேன். அந்த முகாமைத் தாக்கும் வேலையை விட்டுவிட்டு நீங்கள் இந்தக் கிழவனைப் போட்டுச் சிறுகச் சிறுக வதைப்பது நியாயமற்றது. நான் ஏற்கனவே நேவியிடம் போதுமான அடி வாங்கியிருக்கிறேன். தமிழனுக்குத் தமிழனே இப்படிச் செய்யக்கூடாது” என்று கொஞ்சம் கடுப்பாகத்தான் பொன்ராசா பேசிவிட்டார். அவர் பேசியதைப் பொறுப்பாளன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு அவரை அவன் ‘கரப்பு’க்கு அனுப்பிவைத்தான்.
கோழிகளை அடைத்து வைக்கும் பிரம்புகளால் இழைக்கப்பட்டிருக்கும் கரப்புவைப் பாரத்திருப்பீர்கள்தானே. இது முட்கம்பிகளால் இழைக்கப்பட்ட கரப்பு. முக்கோண வடிவில் ஒரு ஆள் உட்கார்ந்திருக்கும் உயரத்திற்கு முட்கம்பிகளால் அந்தக் கூண்டு பின்னப்பட்டிருக்கும். அதற்குள் மூன்று நாட்களுக்குப் பொன்ராசாவைப் போட்டுவிட்டார்கள். “கப்டன் அரசியல் பேசுகிறார்” என்று பொறுப்பாளன் குறைபட்டுக்கொண்டானாம். அந்தக் கூண்டுக்குள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப முடியாது. அசைந்தால் முட்கம்பி உடலைக் கிழித்துவிடும்.
உணவோ தூக்கமோ இல்லாமல் மூன்று நாட்கள் அந்தக் கூண்டுக்குள் பைத்தியம் பிடித்ததுபோல பொன்ராசா உட்கார்ந்திருந்தார். தூங்கி விழுந்தபோது முட்கம்பிகள் அவரை இரத்தம் வரக் குத்தி எழுப்பிவிட்டன. முள்ளுச் சட்டையை அணிந்திருந்தது போல அவர் அவதிப்பட்டார். மூன்று நாட்களில் அவரது உடல் முழுவதும் தோலும் தசையுமாகக் கிழிந்திருந்தன. தலையில் மட்டும்தான் காயம் ஏதுமில்லை. தலையில் ஒரு முட்கிரீடமும் வைத்திருந்தால் அந்தக் குறையும் தீர்ந்திருக்கும் என்று அந்த நரகவேதனையிலும் பொன்ராசா நினைத்துக்கொண்டார்.
1958ம் ஆண்டு இன வன்முறை நடக்கும்போது பொன்ராசாவுக்குச் சரியாக இருபது வயது. அப்போது அவர் சிங்கள நாட்டுப்பக்கத்திலுள்ள ‘நிற்றம்புவ’ என்ற சிறுநகரத்தில் ‘மரியாம்பிள்ளை அன்ட் சன்ஸ்’ துணிக்கடையில் சமையற்காரனாயிருந்தார். தனது பதின்முன்று வயதில் சமையல் எடுபிடியாக இங்கே வேலைக்குச் சேர்ந்தவர் இப்போது சமையற்காரனாகிவிட்டார். முதலாளி கரம்பனைச் சேர்ந்தவர். அவருக்குப் பொன்ராசாவின் சமையல் வெகுவாகப் பிடித்துக்கொண்டது. பொன்ராசா கொஞ்சம் குழப்படிகாரர் என்பதனால் அவரது கையில் சம்பளம் எதுவும் முதலாளி கொடுப்பதில்லை. முதலாளி ஊருக்குப் போகும்போது பொன்ராசாவின் அப்புவை வீட்டுக்குக் கூப்பிட்டு மொத்தமாகச் சம்பளப் பணத்தைக் கொடுத்துவிடுவார்.
அந்த வன்முறையின்போது ‘மரியாம்பிள்ளை அன்ட் சன்ஸ்’ கொள்ளையிடப்பட்டு எரிக்கப்பட்டது. முதலாளி மரியாம்பிள்ளை உயிருடன் எரியும் நெருப்பில் தூக்கிப் போடப்பட்டார். பொன்ராசாவைப் பிடிக்கவந்த காடையர்கள் இருவரை நின்ற நிலையில் பொம்மைகள் போலத் தூக்கி எறிந்துவிட்டுப் பொன்ராசா ரம்புட்டான் தோட்டங்களிற்குள் ஓடி ஒளிந்துகொண்டார். அடுத்தநாள் காலையில் வீதியால் இராணுவ வாகனங்கள் போவதைக் கவனித்துவிட்டு அவற்றை நோக்கி ஓடிப்போனார். இராணுவத்தினர் அவரை அகதிமுகாமில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.
வன்செயல்கள் தணிந்தவுடன் உடுத்த உடுப்புடனும் அகதிமுகாமில் கொடுக்கப்பட்ட துவாயுடனும் பொன்ராசா ஊருக்கு வந்தார். அவரது ஊரிலிருந்து இன்னொரு இளைஞர்கள் கூட்டம் அப்போது சிங்கள நாட்டுப்பக்கக் கடைகளில் வேலைக்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. பொன்ராசாவும் திரும்பவும் கொழும்புக்குப் போய் வேலை தேடலாம் எனப் புறப்படத் தயாரானபோதுதான் அவருக்கு அவரது ஊர்ப் பாதிரியார் மூலம் பெரிய கோயில் பாதிரியார் வரப்பிரகாசத்திடம் ‘ கோக்கி’ வேலை கிடைத்தது.
யாழ்ப்பாணப் பெரிய கோயிலை ஆசனக்கோயில் என்றும் சொல்வார்கள். அப்போது அந்தக் கோயிலில் மட்டும்தான் வழிபடுபவர்கள் உட்காருவதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்ததால் அந்தப் பெயர். வரப்பிரகாசம் பாதிரியாருக்கும் பொன்ராசாவின் சமையல் பிடித்துக்கொண்டது. பாதிரியாரின் அறைவீட்டிலேயே தங்கிக்கொள்வதற்குப் பொன்ராசாவுக்கு இடம் கிடைத்தது. பாதிரியார் மலேசியாவில் பிறந்து இத்தாலியில் படித்தவர். அவருக்குத் தமிழ் பேசுவதற்கு அவ்வளவாக வராது. அவர் பெரிய கோயிலில் லத்தீன் மொழிப் பூசைக்குப் பொறுப்பாயிருந்தார். அவர் பொன்ராசாவிடம் ஆங்கிலத்திலேயே பேசுவார். பொன்ராசா தனது சமையல் திறமையால் பாதிரியாருக்குப் பதில் சொன்னார். அங்கே வேலைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆனபோது பெரிய கோயில் மரியாயின் சேனையின் பாடகிகள் குழுவிலிருந்த ஞானம்மாவுக்கும் பொன்ராசாவுக்கும் காதல் உருவானது. ஞானம்மாவின் வீட்டில் பெரிய எதிர்ப்புக் கிளம்பியபோது பொன்ராசா இரவோடு இரவாக ஞானம்மாவை அழைத்துக்கொண்டு படகேறிச் சுருவிலுக்கு வந்துவிட்டார்.
பொன்ராசா ஞானம்மாவுடன் ஓடிவந்த மூன்றாவது நாளில் வரப்பிரகாசம் பாதிரியாரும் ஞானம்மாவின் தகப்பனும் சுருவிலுக்குத் தேடிவந்தார்கள். பொன்ராசாவின் வீட்டின் முன்னால் நின்று உரத்த குரலில் பாதிரியார் ” கோக்கி…கோக்கி” எனக் கூப்பிட்டார். யாழ்ப்பாணம் பெரிய கோயிலில் வைத்துக் காலைப் பூசையில் பொன்ராசாவுக்கும் ஞானம்மாவுக்கும் தலையில் முட்கிரீடங்கள் வைக்கப்பட்டன. அந்தத் தண்டனைக்குப் பிறகு வரப்பிரகாசம் பாதிரியாரே இருவருக்கும் கைபிடித்து வைத்தார். திருமணப் பரிசாக ஞானம்மாவுக்கு நீலக் கற்கள் பதித்த தோடுகளைப் பாதிரியார் வழங்கினார்.
புலிப்படையின் மூன்றுநாட்கள் முட்கம்பிக் கூண்டுத் தண்டனையுடன் பொன்ராசா ஒடுங்கிப்போனார். அவரது உடல் எப்போதும் நடுங்கியவாறேயிருந்தது. அவரது உடல் வேகமாக உருக்குலையலாயிற்று. ஒரு பட்டுப்போன பனைமரம்போல உள்ளுக்குள்ளால் அவர் உளுத்துப்போனார். எப்போதும் அவர் படுத்தே கிடந்தார். விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் கால்கள் பின்னச் சங்கிலியை இழுத்து இழுத்துத் தள்ளாடி நடந்துசென்றார். இப்போதெல்லாம் அடிவிழும்போது அவர் ஓலமிட்டு அழத்தொடங்கினார். தனது மனைவியை ஒருதடவையாவது பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. ஆனால் அதை அவர் புலிகளிடம் சொல்லவில்லை. முட்கம்பிக் கூண்டுத் தண்டனையாவது பரவாயில்லை. பங்கர் சிறைக்குள் போட்டார்கள் என்றால் இருபத்திநான்கு மணித்தியாலங்களில் தனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என அவர் நினைத்துக்கொண்டார்.
ஒருநாள் மாலையில் பொன்ராசாவினதும் இன்னும் ஆறு கைதிகளினதும் கால் விலங்குகள் நீக்கப்பட்டன. அவர்கள் எல்லோரும் ஐம்பது வயதைக் கடந்த கைதிகளாகவேயிருந்தார்கள். எல்லோருக்கும் புதிய சாரமும் சட்டையும் வழங்கப்பட்டது. விடுதலை செய்யப் போகிறார்கள் என்றுதான் பொன்ராசா நினைத்தார். அவர்களது கண்கள் கறுப்புத்துணிகளால் கட்டப்பட்டன. இரவோடு இரவாக அந்த ஏழு கைதிகளும் யாழ்ப்பாண நகரத்து முகாமொன்றுக்கு மாற்றப்பட்டார்கள்.
யாழ்ப்பாணக் கோட்டைக்குள் முற்றுகைக்குள் சிக்கியிருந்த இராணுவத்தினரை மீட்புப் படைகள் மீட்டுச் சென்றதன் பின்னாக அந்தக் கோட்டை புலிகளின் கைகளில் வீழ்ந்தது. நானூறு வருடங்கள் பழமைவாய்ந்த அந்த வலிய கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கப் புலிகள் முடிவெடுத்தார்கள். அதிகாலை ஆறுமணிக்கே பொன்ராசா வைக்கப்பட்டிருந்த முகாமிலிருந்து ஒரு கைதிகள் அணி வேலைக்காகக் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. மாலை ஆறுமணிவரை அங்கே ஓயாத வேலைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. இவர்கள் வேலை செய்தபோது பத்தடி தூரத்திற்கு ஒரு புலி கையில் கொட்டானோடு நின்று இவர்களைக் கண்காணித்தது. கைதிகள் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது எனக் கண்டிப்பான உத்தரவிருந்தது. வேலையில் சுணங்கினாலோ சற்றே தடுமாறினாலோ கொட்டானால் முதுகுத்தோல் பிய்ய அடி விழுந்தது. மூன்று மாதங்கள் ஒரு ஊமைபோல பொன்ராசா அங்கே மதிற் கற்களை உடைந்தும் மண் அள்ளிக் கொட்டியும் கடூழியம் செய்தார்.
கோட்டையை உடைக்கும் வேலைகள் அனைத்தும் முடிந்த மாலைப்பொழுதில் பொன்ராசா புலிகளால் விடுவிக்கப்பட்டார். “கப்டன் இனியாவது தமிழீழத்துக்கு விசுவாசமாகயிருங்கள்” என்றொரு அறிவுரையும் அவருக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய நீலக் கற்கள் பதித்த தோடுகளை அவர்கள் திருப்பித் தருவார்கள் எனப் பொன்ராசா எதிர்பார்த்தார். அது திரும்பி வருவதாகத் தெரியவில்லை. விடுதலை என்ற செய்தியைக் கேட்டவுடனேயே பொன்ராசா பழைய பொன்ராசாவாகியிருந்தார். அவர் தனக்கு அறிவுரை சொன்னவனிடம் போய் மிதப்பான குரலில் “என்னுடைய நீலக் கற்கள் பதித்த தோடுகள் இரண்டு உங்களிடமுள்ளன, அவற்றைப் போராட்டத்திற்கான எனது பங்களிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அந்த இரவு நேரத்தில் திடுக்கடிமடக்காக பொன்ராசாவைக் கண்ட ஞானம்மா திகைத்துப்போனார். பொன்ராசா, ஞானம்மாவைக் கேட்ட முதலாவது கேள்வி “கோட்டையைப் பிடிக்கப் போன இராணுவம் சுருவில் கிராமத்திற்குள் வந்ததா?” என்பதாயிருந்தது. ‘இல்லை’ என்று ஞானம்மா தலையசைக்கவும் பொன்ராசா “அதைத்தானேயடி வேசை நானும் சொனன்னேன். அதைக் கேட்காமல்தானே உனது பிள்ளைகள் இந்தியாவுக்கு ஓடினார்கள்” எனச் சொன்னபடியே ஞானம்மாவின் காதைப் பொத்தி ஓங்கி அறைந்தார். அந்த அடியில் ஞானம்மாவின் காதிலிருந்த நீலக் கற்கள் பதித்த தோடு பறந்துபோய் தரையில் விழுந்து விளக்கொளியில் மினுங்கிக்கொண்டிருந்தது. அதைக் குனிந்து எடுத்த பொன்ராசா “இது இங்கே எப்படி வந்தது?” எனக் கேட்டார். “நான்கு மாதங்களிற்கு முன்பு இயக்கப் பொடியன்கள் கொண்டுவந்து தந்தார்கள்” என்றார் ஞானம்மா. பொன்ராசா படுத்திருந்தபோது அவரருகில் வந்த ஞானம்மா அவரது மார்பை வருடிக்கொடுத்துவிட்டு அவரது மார்பில் தலைவைத்துப் படுத்துக்கொண்டே “கிறிஸ்டியும், பொஸ்கோவும் இந்தியாவிலிருந்து பிரான்ஸுக்குப் போய்விட்டார்கள், தம்பிமார் இந்தியாவில் கஸ்டப்படக்கூடாதென்று கில்டா புருசனிடம் சொல்லி ஒரே மாதத்தில் இருவரையும் பிரான்ஸுக்கு கூப்பிட்டுவிட்டாள்” என்றார்.
2
மே மாதம், எட்டாம் தேதி கரையாம் முள்ளிவாய்க்காலில் வைத்துப் பொன்ராசா “இனியும் இங்கே இருக்க முடியாது, எந்த நேரமும் இங்கே இராணுவம் வந்துவிடும் நாங்கள் கடலுக்குள் இறங்கி அடுத்த பக்கம் போய்விடலாம்” என்று ஞானம்மாவிடம் நச்சரித்துக்கொண்டேயிருந்தார். “இல்லை இங்கே இராணுவம் வரப் பொடியன்கள் விடமாட்டார்கள், நாங்கள் இங்கேயே இருப்பதுதான் புத்தியான காரியம்” என்றார் ஞானம்மா. “இராணுவம் வந்தால் நீ பெண்ணென்று உன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள், என்னைத்தான் கொல்வார்கள்” என்று வெறுப்பான குரலில் சொன்னார் பொன்ராசா. அவர் அப்படியே கடற்கரை மணிலில் குந்தியிருந்து ஞானம்மாவின் கையைப் பிடித்துத் தன்னருகே உட்காரவைத்து நடுங்கும் விரலால் மணலில் வரைபடமொன்றை உருவாக்கினார். “இங்கே மண் அணைகள் உள்ளன, இங்கே கண்ணிவெடிகள் இருக்கின்றன, இங்கே புலிகள் நிற்கிறார்கள், இந்த வழியால் உடைத்துக்கொண்டு இராணுவம் உள்ளே வரும்” என அவர் ஞானம்மாவுக்கு விளக்கினார். அன்று நடுநிசியில் குண்டுச் சத்தம் கேட்டு ஞானம்மா திடுக்குற்று விழித்தபோது அருகில் படுத்திருந்த பொன்ராசா காணாமற் போயிருந்தார். தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஞானம்மா கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அதிகாலை மூன்று மணியளவில் பொன்ராசா பூனைபோல வந்து ஞானம்மாவுக்கு அருகே அமர்ந்துகொண்டார். இரகசியக் குரலில் “கடற்கரையில் வள்ளங்கள் நிற்கின்றன, ஒன்றை அவிழ்த்துக்கொண்டு அந்தப் பக்கம் போய்விடலாம் வருகிறாயா” எனக் கெஞ்சினார். “சும்மாயிருந்தால் ஒரு பக்கத்தால்தான் வெடி வாங்க வேண்டிவரும், ஏதாவது குழப்படி செய்தீர்களென்றால் இரண்டு பக்கத்தாலும் வெடி வாங்கவேண்டியிருக்கும்” என்றார் ஞானம்மா. “நான் செத்துப்போனால் நீதானடி பொறுப்பு தாசி அபராஞ்சி!” எனச் சொல்லிப் பொன்ராசா பற்களைக் கடித்தார்.
தாயையும் தகப்பனையும் குறித்துச் செய்திகள் ஏதும் கிடைக்காமல் கில்டாவும், கிறிஸ்டியும், பொஸ்கோவும் தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் வவுனியாவிலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. பொன்ராசாவும் ஞானம்மாவும் வவுனியா தடுப்பு முகாமொன்றில் இருப்பதாக அந்தச் செய்தி அறிவித்தது. அடுத்த வாரமே கில்டா பாரிஸிலிருந்து புறப்பட்டு வவுனியா வந்துவிட்டாள். காசை வவுனியா முழுவதும் விசிறியடித்தாள். தகப்பனையும் தாயையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வந்தாள். அடுத்த ஒருமாதத்திற்குள் ‘ஸ்பொன்ஸர்’ அலுவல் சரிவந்தது. இருவரையும் அழைத்துக்கொண்டு கில்டா பிரான்ஸுக்கு விமானம் ஏறினாள்.கில்டாவின் குடும்பம் பாரிஸில் இருந்தது. கிறிஸ்டியும், பொஸ்கோவும் தெற்குப் பிரான்ஸில் சென்திபோ என்ற ஊரில் ஆளுக்கொரு சிறிய கடை வைத்திருந்தார்கள். கிறிஸ்டி பாரிஸ் வந்து பொன்ராசாவையும் ஞானம்மாவையும் சென்திபோவுக்கு அழைத்துப்போனான்.
சென்திபோ ஆறுகளின் ஊர். திபோ ஆற்றங்கரையோரம் அமைதியான சூழலில் சிறுகாடுகளுக்கு நடுவில் கிறிஸ்டியின் வீடு இருந்தது. அங்கிருந்து அய்ந்து நிமிட நடை தூரத்தில் இளையவன் பொஸ்கோவின் அழகிய வீடிருந்தது. அவர்களது கடைகள் நெடுஞ்சாலையை ஒட்டி அருகருகாக இருந்தன.
அந்தச் சூழல் பொன்ராசாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்த கோடை காலத்திற்குள் பொன்ராசா முழுவதுமாக மாறிவிட்டார். சிங்கள நாட்டில் இரண்டு காடையர்களைப் பொம்மைகள் போல தூக்கியெறிந்த பொன்ராசாவாக அவர் இருந்தார். காலையில் பத்துமணிக்கு ஒரு பெக் விஸ்கி அருந்திவிட்டு கிறிஸ்டியின் வீட்டிலிருந்து பொஸ்கோ வீட்டிற்கு நடந்துபோய் அங்கே மருமகளை நாட்டாமை செய்வார். அங்கே இன்னொரு பெக் அருந்திவிட்டு மதியச் சாப்பாட்டிற்கு கிறிஸ்டியின் விட்டுக்கு வந்து இந்த மருமகளை நாட்டைமை செய்வார். தாத்தாவின் சிவந்த கண்களைக் கண்டதுமே பேரப்பிள்ளைகள் கப் சிப்பாக இருந்து விடுவார்கள். கிறிஸ்டிக்கும் பொஸ்கோவுக்கும் தகப்பனிடம் இன்னும் பயமிருக்கவே செய்தது. ‘அய்யா எவ்வளவு வேண்டுமென்றாலும் குடியுங்கள், ஆனால் சத்தம் மட்டும் போடாதீர்கள்’ என அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். ஞானம்மாவுக்கு பேரக் குழந்தைகளுடன் பொழுது கழிந்தது. பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு அம்மாவுக்கு நகைகளும் உடைகளும் வாங்கிப் பூட்டி அழகு பார்த்தார்கள். வரப்பிரகாசம் பாதிரியார் பரிசளித்த நீலக் கற்கள் பதித்த அந்தத் தோடுகள் இப்போது தேடுவரற்று ஞானம்மாவின் பெட்டிக்குள் கிடந்தன.
ஒரு மதியநேரம் திபோ ஆற்றங்கரையில் பொன்ராசா தனித்திருந்தபோது அந்த வெண்ணிறப் படகைப் பார்த்தார். துடுப்புகளை வலித்தவாறே ஐம்பது வயதுகள் மதிக்கத்தக்க ஒரு பிரஞ்சுப் பெண்மணி கரையை ஒட்டியே அந்தச் சிறிய படகில் வந்துகொண்டிருந்தார். பொன்ராசா கைளை உயர்த்திக்காட்டினார். அந்தப் பெண்மணியும் கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவித்துப் புன்னகைத்தார்.
மறுநாளும் அதேநேரத்திற்கு அந்தப் பெண்மணி படகில் கரையோரமாகவே வந்தபோது பொன்ராசா எழுந்து நடந்து சென்று படகை நிறுத்துமாறு சைகை செய்தார். அந்தப் பெண்மணி படகை நிறுத்தியதும் பொன்ராசா குதித்து ஆற்றுக்குள் இறங்கினார். அந்தப் பெண்மணி பதற்றத்துடன் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் எனச் சைகை செய்தார். பொன்ராசா ஒரு புன்னகையுடன் நடந்துபோய் அந்தப் படகைப் பிடித்துக்கொண்டார். அவர் படகுள்ளே ஏறுவதற்கு அந்தப் பெண்மணி கைகொடுத்தபோது பொன்ராசா சர்வ அலட்சியமாகப் பெண்மணியின் கையை விலக்கிவிட்டு தனது நீண்ட கால்களைத் தூக்கிப் போட்டுப் படகில் தொற்றி உள்ளே விழுந்தார். படகு ஓர் உலாஞ்சு உலாஞ்சிய போது அந்தப் பெண்மணி மார்பில் சிலுவைக் குறியிட்டுக் கூக்குரலிட்டாள். பொன்ராசா அவளை அமைதியாக இருக்குமாறு சைகை செய்துவிட்டு, சுட்டுவிரலால் தனது மார்பை இரண்டுதரம் தொட்டுக்காட்டி “கப்டன்” என்றார். அந்தப் பெண்மணி கண்கள் விரியப் புன்னகைத்தார். அந்தப் பெண்மணியின் பெயர் அன்னியஸ்.
அன்னியஸுக்கு நூறு ஆங்கிலச் சொற்களும் பொன்ராசாவுக்கு ஐம்பது ஆங்கிலச் சொற்களும் தெரிந்திருந்தன. அவர்கள் அந்தக் கோடை காலம் முழுவதும் அந்தச் சிறிய படகிலே திபோ ஆற்றிலே சுற்றித்திரிந்தார்கள். சிறுகாட்டுக்குள் நுழைந்து புற்தரையில் அருகருகே படுத்திருந்து வெயில் காய்ந்தார்கள்.
பொன்ராசா அன்னியஸை ‘ லேடி’ என்றும் அன்னியஸ் பொன்ராசாவை ‘ கப்டன்’ என்றும் அழைத்துக்கொண்டார்கள். ஒருநாள் அன்னியஸின் காரிலே அவர்கள் இருவரும் கிறிஸ்டியினதும் பொஸ்கோவினதும் கடைகளுக்குச் சென்றார்கள். அன்னியஸைத் தனது சிநேகிதியென மகன்களுக்குப் பொன்ராசா அறிமுகப்படுத்தி வைத்தார். அடுத்த குளிர்காலத்தின் ஒரு மாலைநேரத்தில் அன்னியஸின் வீட்டுப் படுக்கையறையிலிருந்த பதினைந்தாம் லூயி காலத்தைச் சேர்ந்த அழகிய விசாலமான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த வெண்மையான படுக்கை விரிப்பில் தனது நீண்ட இடதுகையால் அன்னியர்ஸை அணைத்தவாறே தூங்கிக்கொண்டிருந்த பொன்ராசாவின் கை தளர்ந்துபோனபோது பொன்ராசா இறந்துபோயிருந்தார்.
கிறிஸ்டியும் பொஸ்கோவும் அங்கே வந்து சேர்ந்தபோது கட்டிலின் அருகே நின்றிருந்த அன்னியஸ் கண்ணீர் வடித்தவாறிருந்தார். அம்புலன்ஸில் பொன்ராசாவின் உடல் ஏற்றப்பட்டபோது அன்னியஸ் ஓடிவந்து பொஸ்கோவைத் தழுவிக்கொண்டு கண்ணீர் உகுத்தார். பொஸ்கோ அவரது முதுகைத் தட்டிக்கொடுத்தபோது கிறிஸ்டி கண்கள் சிவக்கக் கண்களால் சைகை செய்தான். அந்தச் சைகை பொஸ்கோவுக்குப் புரியவில்லை.
ஆஸ்பத்திரியில் பொன்ராசாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அறை ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்பது மணிக்குத் திறக்கப்பட்டு பதினொரு மணிக்கு மூடப்பட்டது. ஒவ்வொருநாளும் அங்கே ஞானம்மாவும் பிள்ளைகளும் போய் உட்கார்ந்திருந்தார்கள். கில்டா அடிக்கடி மயங்கி விழுந்தாள். பொன்ராசா எங்கே இறந்தார் என்பதை மட்டும் கிறிஸ்டியும் பொஸ்கோவும் தாயிடமும் தமக்கையிடமும் சொல்லவில்லை. ஆற்றங்கரையில் படுத்திருந்தபோது அவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்று சொல்லிவைத்தார்கள். அன்னியஸ் அந்தப் பக்கமே வராமலிருந்தது அண்ணனுக்கும் தம்பிக்கும் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது.
சவ அடக்கத்திற்கு முந்தையநாள் மதியம் கிறிஸ்டியின் வீட்டில் அவர்கள் கூடியிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவும் அடுத்தநாள் காலையிலும் பாரிஸிலிருந்து உறவுக்காரர்களும் நண்பர்களும் சவ அடக்கத்துக்காக வந்துவிடுவார்கள். அவர்களைத் தங்கவைப்பது, சாப்பாடுக்கு ஏற்பாடு செய்வது போன்ற விசயங்களை அவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். எப்படியும் நூறு பேர்களிற்குக் குறையாமல் சவ அடக்கத்திற்கு வரக்கூடும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தபோது அங்கே அன்னியஸ் கையில் ஒரு பொதியுடன் நின்றிருந்தார். அவர் தலையை ஒரு துணியால் முக்காடிட்டுக் குளிரில் நடுங்கியவாறே நின்றிருந்தார். பொஸ்கோ அவரை உள்ளே வருமாறு அழைத்தான். அன்னியர்ஸ் அதிகம் பேசவில்லை. அந்தப் பொதியைப் பொஸ்கோவிடம் கொடுத்துவிட்டு “இதைத் திரு. பொன்ராசா அவர்களின் கல்லறையில் நீங்கள் பதித்துவைத்தால் நான் அதிர்ஷ்டம் செய்தவளாவேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பொஸ்கோ ஜன்னலால் பார்த்தபோது அன்னியஸ் உறைந்திருந்த பனிக்குள்ளால் திபோ ஆற்றங்கரையை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தார்.
அன்னியஸ் கொடுத்த அந்தப் பொதியை பொஸ்கோ அவதானமாகப் பிரித்தான். அது கல்லறையின் முகப்பில் பதிக்கும் சதுரவடிவிலான கறுப்பு நிறச் சலவைக் கல். அந்தக் கறுப்புக் கல்லில் கப்பலின் சுக்கானை இயக்கப் பயன்படும் சக்கரம் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்டு அதன் நடுவில் நங்கூரம் பொறிக்கப்பட்டிருந்தது. கப்பல் தலைவர்களது கல்லறைகளில் இந்தச் சின்னமிட்ட சலவைக்கல்லைப் பதித்து வைப்பது பிரஞ்சுக்காரர்களின் மரபு .
கிறிஸ்டி மெதுவாக எழுந்து வந்து பொஸ்கோவின் கையிலிருந்த அந்தச் சலவைக்கல்லை வாங்கித் தரையில் வீசியடித்தான். ” இதைக் கல்லறையில் பதித்தால் பார்க்கும் சனங்கள் எங்களைக் கரையார் என்றவல்லா நினைப்பார்கள்” என்று அவன் கத்தினான். இரண்டு துண்டாக உடைந்துகிடந்த அந்தச் சலவைக்கல்லை கால்களால் எத்திவிட்டான். கில்டா பதறிப்போய் ஓடிவந்து தம்பியாரின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். “வேண்டாமென்றால் விட்டுவிடு அதற்கு ஏன் இப்படிக் கோபப்படுகிறாய்” என்று அவள் பதற்றத்தடன் கேட்டாள். கில்டாவை உதறித்தள்ளிய கிறிஸ்டி ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து வெளியேறினான். அவன் கதவை அறைந்து மூடிய வேகத்தில் சன்னல்கள் சடசடத்தன.
ஒரு தீயணைப்புப் படைவீரனின் கல்லறைக்கும் ஒரு சீன வியாபாரியின் கல்லறைக்கும் நடுவாகச் சிறுசெடிகளும் புற்களும் முளைவிட்ட அந்தக் கல்லறை இருக்கிறது. அது யாருடைய கல்லறை என்பதற்கான தடயங்கள் ஏதுமில்லை.
அடுத்த வேனிற்காலத்தில் திபோ ஆற்றில் வெண்ணிறமான சிறிய படகில் தனியாகத் துடுப்பு வலித்துச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தில் வெயில் பட்டபோது அவளது காதுகளிலிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகள் பளீரென மின்னின.
காலம். - நவம்பர்
Comments
Post a Comment