தமிழர்கள் ஏன் இப்படி...?-கட்டுரை .






தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.

பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம் கண்ட குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.

முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்த குடும்ப பிரச்சனையில ஊரில இருக்கிற நாலு "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு வந்து நிக்கும்.. இது தேவையா?

அடுத்தவனை, அடுத்தவன் வீட்டை எட்டி பார்ப்பது என்பது நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது என்று சொன்னாலும் மிகை இல்லை. நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்! ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு நிக்கும்.

அதுமட்டும் இல்ல. தன்ர பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் நம்ம சனம்... என்ற உண்மையை நம்ம பதிவர்கள் யாரோ எழுதியதாக நினைவு..! அடச்சே ...அவன் வெளிநாட்டில உழைச்சு வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா என்ன, வீட்டுக்க டொயிலேட் கட்டினா என்ன..! அத போய் எட்டிப்பாத்து ...............!!

இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ஆனா நம்ம ஆக்கள் இருக்கார்களே வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே நிக்கிறார்கள் நம்மவர்கள்.

பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே. அதை விடுத்து ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள். ஆனால் நம்ம சனம் இருக்கே..எவனாச்சும் வெளிநாட்டால வந்து சொகுசாய் சுத்தி திரிஞ்சா பொறுக்காது.. செருப்பே இல்லாமல் திரிஞ்சதுகளுக்கு இப்ப பள்சர் கேக்குதாம் எண்டு புகைக்க தொடங்கிடுகிறார்களாம்..

இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?






Comments

  1. மொதல்ல நம்ம காலச்சாராம் பண்பாடு பத்தி நல்லா செருஞ்சிகினு அப்பாறம் நீ எழுதலாம் யாரவது புதியவர்கள் வந்தாலும் அவர்கலுக்கு வயிர் அறா சாப்பிட உணவு கொடுத்து அனுப்புவது நம்ம பழக்க வழக்கம் அனைவறையும் தப்பா பாக்கறா பழகரது மேல்நாட்டு கலச்சாரம்

    ReplyDelete
    Replies
    1. Tamilarasan ArasanMay 8, 2013 at 6:27 AM

      மொதல்ல நம்ம காலச்சாராம் பண்பாடு பத்தி நல்லா செருஞ்சிகினு அப்பாறம் நீ எழுதலாம் யாரவது புதியவர்கள் வந்தாலும் அவர்கலுக்கு வயிர் அறா சாப்பிட உணவு கொடுத்து அனுப்புவது நம்ம பழக்க வழக்கம் அனைவறையும் தப்பா பாக்கறா பழகரது மேல்நாட்டு கலச்சாரம் /////
      வணக்கம் தமிழ்அரசன் அரசன் , முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் . இந்தப்படைப்பு எனது சொந்த ஆக்கம் இல்லை என்பதை இந்தப் பதிவின் அடிப்பகுதியில் உள்ள இணைப்பில் நீங்கள் காணலாம் . உங்கள் எழுத்துக்களில் நான் இனிமையை காணவில்லை . ஏனெனில் முகம் தெரியாதவர்களை நாங்கள் ( ஈழத்தவர்கள் ) ஒருமையில் நீ நான் என்று விழிப்பதை ஓர் நல்ல பண்பாடாகக் கொள்வதில்லை .

      Delete

Post a Comment