புலியின் வரிகள்- -சிறுகதை.







என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ந . பிச்சமூர்த்தியும் ஒருவர் . நான் சிறுவயதில் கலைமகளில் அவரின் கதை ஒன்று வாசித்தேன் . பல வருடங்கள் கடந்து மீண்டும் அதே கதையை இணையத்தில் வாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் மீண்டும் எனக்குக் கிடைத்தது . அவரின் இந்தக்கதை 60 களில் வெளிவந்தாலும் , குறிப்பாக எம்மிடையே இப்பொழுது நடக்கின்ற சம்பவங்கழுக்கு ஒரு செய்தியை இந்தக் கதைமூலம் 60 களிலேயே சொல்லியிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது . உங்களுக்காக இதைப் பகிர்கின்றேன்.....................................

நேசமுடன் கோமகன்

000000000000000000000000000

ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற வர்ணம் மட்டும் உடலில் பரவி இருந்தது.

காட்டு வழியே வரிக்கோடுகள் நடந்து வந்து கொண்டிருந்தன. ஆதி முதற்கொண்டு வரிகள் தனித்து ஓரியாக இருந்தன. தனிமையின் தன்மையில் தம்மையே உணர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. பொருள்கள் மோதினால்தானே, இணைந்தால்தானே உணர்வு பிறக்கும், பொறி பறக்கும்? குகையை விட்டு வரும் அரிமாவைப் போல நான் என்னும் நினைப்பு, பிடரி மயிரைச் சிலிர்த்துப் பெருமிதம் அடைய முடியும்? ஆனால் வரிகள் ஒன்றியாகப் பயனற்றிருந்தன. தவிப்பை முறித்தெறியப் பாதை வழியே அவை நடந்து வந்து கொண்டிருந்தன.

'என்ன அழகிய மூங்கில் கொத்து! என்ன அழகிய புலி!' என்று, ஒரு நிமிஷம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே விர்ரென்று விஷ அம்பு ஒன்று புலி மேல் பாய்ந்தது. காடு நடுங்க உறுமிக் கொண்டே புலி இறந்தது. புலிதான் போய்விட்டதே என்ற தைரியத்தில், கோடாலிக்காரன் விரைந்து வந்து மூங்கில்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து வீடுகட்ட எடுத்துப் போய்விட்டான். மிஞ்சி இருந்த இரண்டு மூங்கில்கள் உராய்ந்து கொண்டே துயரத்தால் ஓலமிட்டன. புலிக்கு நாம் துணை, நமக்குப் புலி துணை என்று நினைத்தோமே, ஏமாந்து விட்டோ மே என்று புலம்பின.

பயந்து போய் வரிக்கோடுகள் மேலே நடந்து சென்றன. "ஓரியாக இருந்தால் இன்பம் இல்லை" என்றது ஒரு கோடு.

"இரண்டாக இருந்தால் மூன்றாவது எதிரி வருகிறான்" என்றது மற்றொரு வரி.

"பின் என்ன செய்யலாம்?"

"ஒன்றியாக இல்லாமல் இரண்டாகவும் இல்லாமல் ஒன்றிவிட்டால் இன்பம் உண்டு. பலவாக இருப்பது ஒன்றிவிட்டாலும் பகை தெரியாது. பெருமிதம் மிஞ்சும்."

"அதுதான் சரி" என்று வரிகள் முடிவு செய்தன.

கொஞ்ச தூரத்துக்கும் அப்பால் மற்றொரு மூங்கில் புதரும் புலியும் தெரிந்தன. புலியைப் பார்த்த உடனேயே வரிகள் புலியின் தோலுடன் தனித்தனியாக ஒன்றி, கறுப்புப் பட்டுப்போல் மின்னி மகிழ்ந்தன. வெயிலும் நிழலும் கலந்த மூங்கில் கொத்தும் வரிப்புலியும் எல்லாம் ஒன்றாகிவிட்டன. எது எதுவென்றே தெரியவில்லை.

கோடாலிக்காரன் வரும் வாசனையை உணர்ந்த புலி பயங்கரமாக உறுமிற்று. உறுமல் அலையலையாகப் பரவி வேடனை எச்சரித்தது. எழுந்து பார்த்தான். புலி இருக்கும் இடம் தெரியவில்லை. வெயிலும் மூங்கில்களின் நிழல்களும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. 'உருவத்தைப் பார்த்தால் இலக்கு வைக்கலாம். குரலைக் குறித்து எப்படி இலக்கு வைக்க முடியும்?' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே போனான். கோடாலிக்காரன் புலி உறுமுகிறதென்று போய்விட்டான்.

கோடாலிக்காரனும் வேடனும் திரும்பிச் சென்றதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூங்கில்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. தங்களுடைய உடல் புலியைப் போன்ற வண்ணம் கொண்டதைக் காண வியப்பாக இருந்தது.

வரி வேங்கை ஆனந்தமாய்த் தூங்கக் கொட்டாவி விட்டது. என்ன பயங்கரமான குகைவாய், கோரப் பற்கள்!

(கலைமகள் - ஜூன் 1960)


கோமகன்

02 கார்த்திகை 2011


Comments