Skip to main content

சிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...!-பத்தி.எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி!

நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்போம்!வட்டமாக சப்பாணி கட்டிக்கொண்டு கீழே இருந்து ஒருவரது தோளில் கைபோட்டுக்கொண்டு சாய்ந்து சாய்ந்து ஒரு பாட்டு பாடுவோம்! வலப்பக்கம் தீபா மச்சாளும், இடப்பக்கம் கௌரி மச்சாளும் இருக்க, நான் நடுவிலே இருந்து, அவர்களது தோளிலே கைபோட்டுக்கொண்டு ( ஹி ஹி ஹி சின்ன வயசில மட்டும்தான்! ) ஒரு பாட்டுப் படிப்போம்!

“ சிங்கிணி நோனா சந்தனக் கட்டி
அப்போ டிப்போ யார் கோ”

இந்தப் பாடலை பின்னர், கை மடக்கி விளையாடும் ஒரு விளையாட்டுக்கும் பயன்படுத்துவோம்!

இன்னொரு பாடல்!

“ குமார் குமார் லைட் அடி
கோழிக் குஞ்சுக்கு லைட் அடி
எத்தினை ரூபா சம்பளம்
பத்து ரூபா சம்பளம்”

இதுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாது! ஆனால் படிப்போம்! அதுபோல இன்னொரு பாட்டு, பாடப்புத்தகத்திலே இருந்தது,

“ என்ன பிடிக்கிறாய் அந்தோனி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி
பூறிக்கொண்டோடுது சிஞ்ஞோரே”

இப்படியே பாடிப் பாடி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, யாராவது வெடி விட்டு விடுவார்கள்! நாங்கள் எல்லோரும் மூக்கைப் பொத்துவோம்! விட்டவர் மூக்கைப் பொத்தினால், மூக்கிலே கட்டி வரும் என்று வெருட்டி வைத்திருப்போம்! அதனால் விட்டவர் மூக்கைப் பொத்துவதா விடுவதா என்ற குழப்பத்தில் இருப்பார்! உடனே நாம் அவரை இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம்! இதற்கும் ஒரு பாட்டும் வைத்திருக்கிறோம்! அதாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் ( வெடி விட்டவர் ). அதற்கு அடையாள அணிவகுப்பு நடத்துவது போல, நாமும் எல்லோரையும் அருகில் அழைத்து, அதில் ஒருவர், பின் வருமாறு பாடுவார்,

“ சுட்ட பிலாக்காய் வெடிக்க வெடிக்க
சூடும் பாலும் வத்த வத்த
நானும் கடவுளும் சிரிக்கலாம்!
மற்றவர்கள் சிரிக்க கூடாது!”

இப்படிச் சொன்னவுடன் யாருமே சிரிக்காமல் வாயைப் பொத்திக்கொண்டு, இருப்போம்! இதில் வெடி விட்டவருக்கு சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கும்! பெரிய கஷ்டப்பட்டு அடக்குவார்! அல்லது சிரித்தே விடுவார்! உடனே நாம் அவரை மிக இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம்!
மேலும்,

“ நெய் நெய் நெய்
அரைப்போத்தல் நெய்
கட்டப்பொம்மன் சொன்னதெல்லாம்
பொய் பொய் பொய்”

என்று ஒரு பாட்டுப் பாடுவோம்! இதிலே கட்டப்பொம்மன் என்பது யாரைக் குறிக்கும்? ஒருவேளை வீரபாண்டிய கட்டப்பொம்மனைக் குறிக்குமோ? ஹா ஹா ஹா எங்களுக்கு விபரம் தெரியாது! ஆனாலும் பாடுவோம்!


இந்தப் பாடல்கள் எல்லாம் பாடி முடிந்து ஓரளவு வளர்ந்து 7 , 8 வயது வந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாப் பாடல்கள் பக்கம் எமது கவனம் திரும்பும்! சினிமாவிலே வரும் வேடிக்கையான பாடல்கள் முதலில் எம்மைக் கவரும்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!

“ ராதே என் ராதே வாராதே” என்று ஒரு பாட்டு! அதிலே ஒரு பொம்மையும் சேர்ந்து பாடும்! நாங்கள் அந்தப் பொம்மை போலப் பாடி மகிழ்வோம்! எப்போது வானொலியில் அந்தப் பாடல் வரும் என்று காத்திருந்துவிட்டு, ஓடிப்போய் கேட்போம்! அது ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் இடம்பெற்ற பாடல் என்றும் அதில் நடித்தவர் கமல்ஹாசன் என்றும் அப்போது எமக்குத் தெரியாது!

இன்னொரு பாடல் “ ஆத்தாடி பாவாடை காத்தாட” என்று ஆரம்பிக்கும்! அந்தப் பாடல் காட்சி இன்றும் நன்றாக நினைவிருக்கிறது! கதாநாயகி குளிப்பார்! கதாநாயகன் எட்டி எட்டிப் பார்த்து பாட்டுப் படிப்பார்! நான் அம்மாவிடம் போய் “ அம்மா... அந்த அன்ரி குளிக்கிறத அந்த மாமா எட்டிப் பார்க்கிறார்” என்று முறைப்பாடாகச் சொன்னேனாம்! அம்மா சொன்னாராம் .

“ அந்த மாமாவுக்கு அப்பா அடிபோடுவார்! நீங்கள் போய்ப் படியுங்கோ” என்று! பெரியவனாக வளர்ந்த போது, அந்தப் பாடலில் நடித்தவர் முரளி என்று தெரிய வந்தது! முரளியையும் பிடித்துப் போனது !

அந்தக் காலத்தில் இந்தப் பாட்டு வானொலியில் போனால் நாம் மிகவும் ரசித்துக் கேட்போம்! கூடவே சிரிப்பும் வரும்! பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடி வாங்கியதை இன்று வரை மறக்கவில்லை!

பாருங்கள் அந்தக் காலத்திலேயே சினிமா சிறுவர்களாகிய எம்மை எந்தளவு பாதித்துள்ளது என்று! நடிகர் முரளி காலமானபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது இந்தப் பாடலும், மச்சாளை எட்டிப் பார்த்த அந்த சம்பவமும் தான்! இப்பாடலில் முரளியுடன் வருபவர் நடிகை குயிலி!

நன்றி : http://www.eelavayal.com/2011/12/blog-post_19.html 

கோமகன்
06 கார்த்திகை 2012
 

Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…