சேவலும் முயலும்-நீதிக்கதை.சேவலும் முயலும் நீண்டகால நண்பர்கள். அடர்ந்து செறிந்த பற்றைக் காட்டில் அடிக்கடி சந்தித்து, இருவரும் ஒன்றாகவே இரைதேடி அலைவார்கள்.

அன்று நீண்டநேர அலைச்சலின் பின்னர் களைப்பாறவென்று, பச்சைப் பசேலெனக் கிளைபரப்பி வளர்ந்திருந்த புன்னைமர நிழலை நாடிச் சென்ற இருவருக்கும் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.

ஓநாயொன்று புன்னை மரத்தடியில் கண்ணை மூடி நிஷ்டையில் மூழ்கி இருந்தது! ஓநாயாரின் தெய்வீகக் கோலத்தைத் தூர இருந்தே பார்த்த சேவலும் முயலும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றன.

அன்பே உருவான சாந்த சொரூபியாய் தியானத்தில் சமைந்திருந்த ஓநாயாரின் திருவுருவில் தன்னை இழந்த முயலோ, பக்தி சிரத்தையோடு தன் பின்னங் கால்களில் குந்தியிருந்து, பவ்வியமாகச் சிரந்தாழ்த்தி முன்னங் கால்கூப்பி வணங்கியது.

இடுப்பில் காவியும், கையில் கமண்டலமும், கழுத்தில் உருத்திராக்கமும் இல்லாக் குறையாக, கைலாயம் நோக்கிப் புறப்படக் காத்திருப்பவர் போலக் காட்சி தரும் ஓநாயாரையும், அக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு நெக்குருகி நிற்கும் முயலையும் மாறி மாறி வியப்போடு பார்த்து நின்றது, சேவல்.

‘அடியார்களே, உங்களை ஆசீர்வதிக்கச் சித்தம் கொண்டுள்ளேன். அருகே வாருங்கள்’ பாதிக்கண் திறந்து சேவலையும் முயலையும் பார்த்துச் சைகை செய்தது, ஓநாய்.

‘இம்மையிலும் மறுமையிலும் இவர் போன்றதொரு மகானின் கடாட்ஷம் கிட்டுவது மகா கஷ்டம் சேவலாரே! வாருங்கள், அவரது பாதாரவிந்தங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து சரணடைவோம்.’ மௌனமாய் நின்ற சேவலைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டுக் கூறியது, முயல்!

‘பிஞ்சு மனமும், மென்பஞ்சுப் பொதியொத்த மேனியும் கொண்ட முயலாரே, கணீரெனும் குரலும், கண்கவர் உடலழகும் கொண்ட சேவலாரே, கவலை தவிர்ப்பீர்; என் காலடி வந்து சேர்வீர்’ எனக்கூறி ஓநாய் அவசரப்படுத்தியது.

அங்கு அரங்கேறிக்கொண்டிருந்த நாடகத்தைப் பாலை மரமொன்றில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்த கரிக்குருவி மெதுவாகச் சொன்னது –

‘ஆபத்தை விலைக்கு வாங்கவென ஆசைப்படாதீர்கள். போலிச் சாமியிடம் போய் மாட்டிக்கொள்ளாதீர்கள்.’

‘ஓம் எனும் பிரணவத்தை இடையறாது உச்சாடனம் செய்துகொண்டிருக்கும் இப்புனிதரைச் சந்தேகித்தல் இறை நிந்தையாகாதோ…..’ எனக் கூறிய முயல், ஓநாயின் முன்னால் ஓடிப்போய்ப் பணிந்து நின்றது.

தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த ஓநாய், கதறித் துடிக்கத் துடிக்க முயலைக் கௌவிக்கொண்டு ஒட்டம் பிடித்தது. நண்பனைப் பறிகொடுத்த சேவலோ தப்பினேன் பிழைத்தேனென்று காட்டுக்குள் மறைந்தது.

‘புத்திசாலிகளுக்குப் புத்திமதி தேவையில்லை. புத்தியற்றவர்கள் புத்திமதிகளைக் கேட்பதில்லை.’

தனக்குத் தானே சொல்லி வருந்திய கரிக்குருவி, கவலையோடு அங்கிருந்து பறந்து சென்றது!

—————————–
நன்றி, தூறல் – சாரல் 03:03

Comments

 1. /// புத்திசாலிகளுக்குப் புத்திமதி தேவையில்லை...
  புத்தியற்றவர்கள் புத்திமதிகளைக் கேட்பதில்லை... ///

  சொன்ன கதை அருமை...

  ReplyDelete
  Replies  1. திண்டுக்கல் தனபாலன்June 6, 2013 at 4:00 AM

   /// புத்திசாலிகளுக்குப் புத்திமதி தேவையில்லை...
   புத்தியற்றவர்கள் புத்திமதிகளைக் கேட்பதில்லை... ///

   சொன்ன கதை அருமை... ////
   உண்மைதான் திண்டுக்கல் தனபாலன் . இதைக் கெடுகுடி சொல்கேளாது என்றும் சொல்வார்கள் . உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள் .

   Delete

Post a Comment