யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து.
1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.
சங்கிலி மன்னனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பிலுள்ள வளைவின் ஒரு தோற்றம்போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை. அக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், கந்தசுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.
நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித்தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள மந்திரிமனை எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது.
Comments
Post a Comment