அவன்யூ சாம்ஸ் எலிசே இல் அணிவகுப்பு
பிரெஞ்சுப் புரட்சி (1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் (inalienable rights) போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர்.
1789 இல் பிரெஞ்சு பாராளுமன்றம் கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் மன்னராட்சியின் வலது சாரி ஆதரவாளர்கள், மிதவாதிகள், இடது சாரி தீவிரவாதிகள், பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியோருக்கிடையே பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் பலப்பரீட்சை நடந்தது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர்பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டுகில்லட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரப் போட்டிகள் மிகுந்து பிரான்சு 1793 இல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியரின் சர்வாதிகாரப் பிடியில் சிக்கியது. 1794இல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் அவரது பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது. பின் 1799 வரை டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதற்குப் பின் நெப்போலியன் பொனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றி சில ஆண்டுகளில் தன்னைத் தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார்.
பாஸ்டில் சிறையுடைப்பு, ஜூலை 14 1789
நவீன வரலாற்று யுகத்தின் வளர்ச்சியில் பிரெஞ்சுப் புரட்சியின் பங்கு பெரியது. குடியரசுஆட்சிமுறை, புதிய அரசியல் கொள்கைகள், தாராண்மிய மக்களாட்சி முறை, மதச்சார்பின்மை,ஒட்டுமொத்தப் போர்முறை ஆகியவை பிரெஞ்சு புரட்சியால் உருவாகி வளர்ச்சி பெற்ற விசயங்களுள் அடங்கும். 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கங்கள் காணக் கிடைக்கின்றன.
புரட்சிக்கு முந்தைய பிரான்சின் “பழைய ஆட்சி”யின் (Ancien Régime) கூறுகளே பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த பிரிவுகள் பசி, ஊட்டச்சத்துகுறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் அறுவடை தொய்வடைந்திருந்ததால் ரொட்டியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. அறுவடைகளில் தொய்வு, உணவுப் பொருள் விலையேற்றம், ஊர்ப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்ல போதிய போக்குவரத்து கட்டமைப்பின்மை போன்ற பொருளாதார காரணிகள் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகளில் பிரெஞ்சு குடிமைச் சமூகத்தை நிலை குலையச் செய்திருந்தன.
முந்தைய ஆண்டுகளில் பிரான்சு ஈடுபட்டிருந்த போர்களின் விளைவாக அந்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சின் ஈடுபாட்டால் பெரும் பொருள் செலவாகியிருந்தது. வட அமெரிக்காவிலிருந்த தனது காலனிகளின் கட்டுப்பாட்டை பிரான்சு இழந்ததும், பெருகி வந்த பிரித்தானிய வர்த்தக ஆதிக்கமும் போர்களினால் விளைந்த சமூகத் தாக்கத்தை அதிகமாக்கின. பிரான்சின் திறனற்ற பொருளாதார முறைமை அரசின் கடன்சுமையை சமாளிக்க இயலாமல் திணறியது. நாட்டின் வரிவசூல் முறையின் போதாமையால் இக்கடன்சுமை கூடிக் கொண்டே சென்றது. அரசு கடன்சுமையால் திவாலாவதைத் தவிர்க்க அரசர் புதிய நிதி திரட்ட முனைந்தார். இதற்கு ஒப்புதல் பெற 1787 இல் குறிப்பிடத்தக்கவர்களின் மன்றத்தைக் (Assembly of Notables) கூட்டினார்.
வெர்சாயில் அமைந்திருந்த அரசவை கீழ்தட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளாது ஒதுங்கியிருக்கிறதென்ற பிம்பம் உருவாகி வலுப்பட்டது. மன்னர் பதினாறாம் லூயி சர்வாதிகாரம் பெற்றவராயினும் மன உறுதியற்றவராக இருந்தார். கடுமையான எதிர்ப்பு எழுந்தால் தனது முடிவுகளை மாற்றிக் கொள்பவராக இருந்தார். லூயி அரசின் செலவுகளைக் குறைத்தாலும், நாடாளுமன்றத்தில் அவரது எதிரிகள் அவரது சீர்திருத்த முயற்சிகளைத் தோற்கடித்து விட்டனர். லூயியின் கொள்கைகளை எதிர்த்தவர்கள் அரசு மற்றும் அதிகாரிகளைத் தாக்கி துண்டறிக்கைகளை அச்சடித்து விநியோகம் செய்தனர். இச்செயல்கள் அரசின் அதிகார மையத்தை உலுக்கியதுடன், அதற்கு எதிராக மக்களைத் தூண்டின.
அறிவொளிக்காலக் கொள்கைகள் பிரெஞ்சு சமூகத்தில் பரவியதும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மன்னராட்சியின் முழுச்சர்வாதிகாரம், பிரபுக்கள் அனுபவித்து வந்த உரிமைகள், நாட்டின் நிருவாகத்தில் திருச்சபையின் தலையீடு போன்றவற்றுக்கு எதிராக உழவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கலக உணர்வு எழுந்தது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சமதர்மத்தை அவர்கள் விரும்பலாயினர். அரசி மரீ அன்டோனைட்டுக்கு எதிராக மக்களின் உணர்வு திரும்பியது. அவரை ஆஸ்திரியப் பேரரசின் கையாளாகவும் உளவாளியாகவும் மக்கள் கருதினர். மக்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட நிதி அமைச்சர் ஜாக் நெக்கரை லூயி பதவியிறக்கியது மக்களின் கோபத்தை அதிகமாக்கியது. புரட்சி வெடிக்க இவை கூடுதல் காரணங்களாக அமைந்தன.
அரசியல்சட்ட முடியாட்சியின் உருவாக்கம் கொண்டாடப்படுகிறது (ஜூலை 14, 1790)
நெக்கர் வெளிப்படையாக மக்களைத் தூண்டி விட்டது, பிரெஞ்சு அரசவையில் அவருக்கு பல எதிரிகளை உருவாக்கியிருந்தது. அரசி மரீ அன்டோய்னெட், அரசரின் தம்பி காம்டி தே ஆர்டாய்ஸ் மற்றும் பிற பழமைவாதிகள் நெக்கரை பதவி நீக்கம் செய்யும்படி அரசரை வலியுறுத்தினர். நெக்கர், அரசின் கடன்சுமை பற்றி பிழையான ஒரு அறிக்கையை உருவாக்கி பொது மக்கள் பார்வைக்கு அளித்தார். இதன் பின்னர் ஜூலை 11, 1789 அன்று அரசர் லூயி அவரை பதவி நீக்கம் செய்து நிதி அமைச்சகத்தை முழுமையாகப் புனரமைத்தார்.
லூயியின் முடிவுகள் தேசிய மன்றத்தைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன என பல பாரிசுக்காரர்கள் கருதினர். நெக்கரின் பதவி நீக்கம் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்ட முதல் நாளே வெளிப்படையாக அரசருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். தேசிய மன்றத்தை மூட வெளிநாட்டுக் கூலிப்படையினர் வரவழைக்கப்படலாமென்றும் அவர்கள் அஞ்சினர். வெர்சாயில் கூடிய தேசிய மன்றம், அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க இடைவிடாத கூட்டமொன்றைத் தொடங்கியது. பாரிஸ் முழுவதும் கலவரமும் வன்முறையும் பரவின. கலவரக்காரர்கள் விரைவில் நகரக் காவல்படையினர் சிலரது ஆதரவையும் பெற்றனர்.
ஜூலை 14ம் நாள் கலவரக்காரர்களின் கவனம் பாஸ்டில் கோட்டைச் சிறையின் உள்ளே அமைந்திருந்த பெரும் ஆயுதக் கிடங்கு பக்கம் திரும்பியது. பாஸ்டில் முடியாட்சியின் அதிகாரச் சின்னமாகக் கருதப்பட்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் கலகக்காரர்கள் பாஸ்டிலைக் கைப்பறினர். பாஸ்டிலின் ஆளுனர் பெர்னார்ட் தே லானே கொல்லப்பட்டார். பின் அங்கிருந்து நகர மன்றத்துக்குச் சென்ற கலவரக்காரர்கள் நகரத் தந்தை ஜாக் தே ஃபிளசெல்சை மக்கள் துரோகியெனக் குற்றம் சாட்டி கொலை செய்தனர்.[23] வன்முறையைக் கண்டு அஞ்சிய அரசர் தனது இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தினார். மார்க்கி தே லா ஃபயாட் பாரிசு நகரக் காவல்படையின் தளபதியாகவும், தேசிய மன்றத் தலைவர் பெய்லி நகரத் தந்தையாகவும் அறிவிக்கப்பட்டார். ஜூலை 17ம் தேதி பாரிசுக்குச் சென்ற லூயிக்கு அங்கு பிரெஞ்சு மூவர்ணக் கொடி நிறம் கொண்ட சின்னம் (cockade) அளிக்கப்பட்டது (சிவப்பு-வெள்ளை-நீலம் மூவர்ணக் கொடி பிரெஞ்சு புரட்சிக்காரர்களின் அடையாளமாகக் கருதப்பட்டது).[24] நெக்கர் மீண்டும் நிதி ஆலோசகர் ஆக்கப்பட்டார். ஆனால் அவர் தனக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோரியது அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கை வெகுவாகக் குறைத்து விட்டது.
நகரங்களில் அதிகாரிகளின் கட்டுப்பாடு வேகமாக சீர்குலைந்து வன்முறையும் திருட்டும் அதிகரித்தன. இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்தென அஞ்சிய பிரபுக்கள் பலர் தங்கள் குடும்பங்களோடு அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடினர். அங்கிருந்தபடி எதிர் புரட்சியாளர்களுக்கு நிதியுதவி செய்து வந்தனர். மேலும் அண்டை நாட்டு மன்னர்களைப் பிரெஞ்சு நிலவரத்தில் தலையிட்டு எதிர் புரட்சிக்குப் படையுதவி செய்யும்படி கோரினர்.
ஜூலை இறுதி கட்டத்தில் "மக்களின் இறையாண்மை" என்ற கருத்து பிரான்சு முழுவதும் பரவி விட்டது. அயல்நாட்டு படையெடுப்புகளை எதிர்கொள்ள ஊர்ப்புறங்களில் பொதுமக்கள் ஆயுதமேந்திய குழுக்களை உருவாக்கினர். அவர்களில் சிலர் பிரபுக்களின் மாளிகைகளையும் தாக்கினர். வேகமாகப் பரவிய வதந்திகளும் பொதுமக்களின் அச்சமும் மேலும் மேலும் கலவரங்களுக்கு வித்திட்டன. சட்டஒழுங்கின் சீர்குலைவு தொடர்ந்தது.
உலக அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய பிரெஞ்சுப் புரட்சியை வரலாற்றாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கையின் வழியாகவே நோக்குகினறனர். புரட்சியின் காரணிகள், போக்கு, வரலாற்றுத் தாக்கம் ஆகியவற்றை பற்றி வரலாற்றாளர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன. வசதி கூடிய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சமூக நிலையின் முக்கியத்தை உணர்ந்ததால் புரட்சி நடைபெற்றதென அலெக்சிஸ் தே டோக்வில் கருதுகிறார்.எட்மண்ட் பர்க் போன்ற பழமைவாத அறிஞர்கள், குறிப்பிட்ட சில சதிகாரர்கள் மக்கள் திரளை மூளைச் சலவை செய்து, பழைய ஆட்சிக்கு எதிராகத் தூண்டி விட்டதால் தான் புரட்சி ஏற்பட்டதெனக் கருதினர். புரட்சி ஏற்பட நியாயமான காரணங்கள் ஏதுமில்லை என்பது அவர்கள் வாதம். மார்க்சிய தாக்கம் உடைய வரலாற்றாளர்கள் பிரெஞ்சுப் புரட்சியை விவசாயிகளும், நகரத் தொழிலாளர்களும் நடத்திய ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டமாகப் பார்க்கின்றனர்.
எனினும் பிரெஞ்சுப் புரட்சி மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அனைத்து தரப்பு வரலாற்றாளர்களாலும் கருதப்படுகிறது. வரலாற்றின் தொடக்க நவீன காலத்தின் (சுமார் கி.பி 1500 இல் தொடங்கியது) முடிவாகவும் நவீன காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.பிரான்சில் பிரபுக்களின் ஆதிக்கத்தை முடக்கியதுடன், திருச்சபையின் செல்வ வளத்தை அழித்தது. இவ்விரு குழுக்களும் பிரெஞ்சுப் புரட்சியினால் கடும் பாதிப்புக்குள்ளாகினாலும் அறவே அழியாமல் தப்பின. 1815 இல் முதல் பிரெஞ்சுப் பேரரசு வீழ்ந்த பின், பிரெஞ்சுப் புரட்சி முதல் குடிமக்களுக்குக் கிட்டியிருந்த உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்பட்டன. ஆனால் புரட்சியின் அனுபவங்களை குடிமைச் சமூகம் மறக்கவில்லை. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதையும், புரட்சி செய்வதையும், குடியரசுவாதத்தைப் பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டனர்.புரட்சியின் விளைவாக பிரெஞ்சு குடிமக்களின் சுய அடையாளத்தில், அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன என சில வரலாற்றாளர்கள் வாதிடுகின்றனர். சமூகத்தில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை மாறி சமத்துவம், மனித உரிமைகள் போன்ற கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கின.
பிரெஞ்சுப் புரட்சி அதுவரை வரலாற்றில் எதேச்சதிகார ஆட்சி முறைக்கு எதிராக நடைபெற்றருந்த முயற்சிகளில் மிக முக்கியமான அமைந்தது. இறுதியில் தோல்வியடைந்தாலும், ஐரோப்பாவிலும் பின்பு உலகெங்கும் மக்களாட்சிக் கருத்துகள் பரவ வித்திட்டது. 1917ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியிலும் சீனாவில் நடைபெற்ற மா சே துங்கின் புரட்சியிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் உண்டு
Comments
Post a Comment