தமிழ்ச்சமூகத்தில் வரி- கட்டுரை. பாகம் 2 .


பல்லவர் காலத்தையடுத்த முற்காலப் பாண்டியர் ஆட்சிக்குப் பின்னா சோழப்பேரரசு உருவாகியது. கி.பி 850 தொடங்கி 1300 வரையிலான இக்காலம் தமிழக நிலவுடைமைச் சமுகம் வளர்ச்சி பெற்ற காலமாகும். வேளாண்மை வணிகம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு செழித்து வளர்ந்திருந்தன. அரசின் வருவாய் இனமாக நிலவரியும் பல்வேறு வகையான தொழில் வரிகளும் இக்காலத்தில் நடைமுறையிலிருந்தன.

வரிகளைக் கணக்கிடவும் வாங்கவும் பதிவுசெய்யும் ஒரு முறையான நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வமைப்பில் பல்வேறு படிநிலைகளில் அரசு அலுவலர்கள் பணிபுரிந்தனர். கரணம் என்பவர் வரிக் கணக்குகளைப் பதிவு செய்யும் அடிநிலை ஊழியராவார். கணக்கு மத்தியஸ்தன் என்றும் இப்பதவி அழைக்கப்பட்டது. பணியாற்றும் நிறுவனத்துடன் இப்பதவி தொடர்புபடுத்தப்பட்டு நாடுகரணம், கோயில்கரணம், வாரியக்கரணம், ஊர்க்கரணம், என அழைக்கப்பட்டது. வரிகுறித்த கணக்குகளை எழுதி வைக்கும் புத்தகத்தைப் பராமரிப்பவன் ‘வரிப் பொத்தகம்’ எனப்பட்டான். சில வரிகள் குறித்த நிர்வாக அமைப்பு ‘புரவு வரித் திணைக்களம்’ என்ற பெயரில் இருந்தது. இதில் பணிபுரியும் அதிகாரி ‘புரவு வரித் திணைக்களத்துக் கண்காணி’ என்றழைக்கப்பட்டான். ஆனால் ஓலையில் எழுதப்பட்ட கணக்குகள் எதுவும் நமக்குக் கிட்டவில்லை.

ஏறத்தாள 9000 சோழர்காலக் கல்வெட்டுக்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்று நொ.பொரு கராஷிமா குறிப்பிடுகிறார். வெளியான கல்வெட்டுக்களைப் பயன்படுத்தி கல்வெட்டுக்களில் அதிக அளவில் இடம்பெறும் வரிகளை அட்டவணைப்படுத்தியுள்ளார். அவரது அட்டவணையில் 27 வரிகள் இடம்பெற்றுள்ளன. கால அடிப்படையில் இவ்வரிகளை ஆராய்ந்து சோழராட்சியில் காலந்தோறும் வருவாய் இனங்கள் கூடிக்கொண்டு சென்றன என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இவ்வரிகளில் சில நாம் முன்னர் பார்த்த பல்லவர் காலத்தில் வழக்கிலிருந்தவை. சில புதிதாக அறிமுகமானவை.

இவ்வரிகளில் நிலவரியானது கடமை காணிக்கடன் புரவு என்ற பெயர்களில் நில உரிமையாளர்களிடமிருந்து விளைச்சலில் ஆறில் ஒருபங்கு என்ற அளவில் வாங்கப்பட்டது. இவ்வாறு வாங்கும் நெல்லை அளக்க ‘பஞ்சவாரக்கால்’ என்ற முகத்தளவைக் கருவி பயன்படுத்தப்பட்டது. சில இடங்களில் பொன்னாகவும் வரி வாங்கப்பட்டது.

சோழர் காலத்திற்கு முந்தைய முற்காலப் பாண்டியர்காலத்தில் வழக்கிலிருந்த ஆறுவரிகளாகப் பின்வரும் வரிகளை நொபுரு கரோஷிமா குறிப்பிடுகிறார்.

(1) அச்சுவரி : இவ்வரியை அச்சுக்காசுகளாகச் செலுத்த வேண்டும்.

(2) இலாஞ்சினைப்பேறு : அரசு முத்திரையை வைத்திருக்கும் அலுவலருக்குச் செலுத்தும் வரி.

(3) காரிய ஆராய்ச்சி : அரசு அலுவலர்களுக்காகச் செலுத்தும் வரி.

(4) சந்திவிக்கிரகப்பேறு : அரசனின் தூதுவர் அல்லது அலுவலருக்குச் செலுத்தும் வரி.

(5) தட்டொலி : தட்டை என்னும் வாத்தியத்தைக் கொட்டுவோர் மீது விதிக்கப்பட்ட வரி.

(6) பஞ்சபீலி : கொட்டை நீக்கிய பஞ்சின் மீது விதிக்கப்பட்ட வரி.

சோழர்காலத்தில் சில வரிகள் பெயர்மாற்றம் பெற்றுள்ளன. பல்லவர்காலத்தில் இடைப்பூச்சி என்ற பெயரில் கால்நடை வளர்ப்போரிடம் வாங்கப்பட்ட வரி, இடையர்வரி என்று பாண்டியர் காலத்திலும், ‘இடைப்பாட்டம்’ என்று சோழர்காலத்திலும் அழைக்கப்பட்டது.

அரசு ஊழியர்களின் உணவுக்காகத் தருவது ‘எச்சோறு’ எனப்பட்டது. செக்கு ஆட்டும் தொழில் செய்வோர் ‘செக்கு இறை’ என்ற வரியையும் தட்டார்கள் ‘தட்டார் பாட்டம்’ என்ற வரியையும் நெசவாளர்கள் ‘தறி இறை’ எனற வரியையும் செலுத்தினர். வண்ணார்கள் செலுத்திய வரி ‘வண்ணாரப் பாறை’ ‘வண்ணார் கற்காசு’ எனப்பட்டது. நடனமகளிர் தம் முகம் பாhக்கும் கண்ணாடிக்கும் வரி செலுத்தினர்.

குதிரை யானைகளுக்கு முறையே ‘குதிரைப்பந்தி’ ‘யானைச்சாலை’ என்ற பெயரில் வரிவாங்கப்பட்டது. மாடு வளர்ப்போர் ‘நல் எருது’ ‘நல் எருமை’ என்ற பெயரில் வரிகட்ட வேண்டியிருந்தது. கம்மாளர் கொல்லர் போன்று பட்டறை அமைத்துத் தொழில் செய்வோரிடம் ‘தட்டொலி’ என்ற வரி வாங்கப்பட்டது. ஏரியில் மீன் பிடிப்போர் ‘ஏரிமீன்பாட்டம்’ என்ற வரியைச் செலுத்தினர். சொந்தமாக உழுகருவியான ஏர் வைத்திருப்போரிடமிருந்து ஏர்வரியும் பொது இடத்தைப் பயன்படுத்துவோரிடமிருந்து ‘கடைக் கூட்டிலக்கை’ என்ற வரியும் வாங்கப்பட்டது. கிராமத்தில் குடியிருப்போரிடம் ‘ஆள்வரி’ என்ற பெயரில் வரிவாங்கப்பட்டது. நாட்டின் பொதுக் காரியங்களுக்காக ‘நாட்டு விநியோகம்’ என்ற வரியும் நிலத்தீர்வைக் கணக்குகளை எழுதும் செலவுகளுக்காக ‘நாட்டுக் கணக்கு வரி’ என்ற வரியும் வாங்கப்பட்டது. சோழர் நாட்டில் ஓடும் காவிரியில் வெள்ளக்காலாங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து கரை உடைவது நிகழும். இதைத் தடுக்க காவிரியின் கரையைப் பலப்படுத்துவதற்கு ஆகும் செலவைச் சரிக்கட்ட ‘காவிரிக் குலை’ என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது.

தம் மறுமைப் பயன்கருதி சோழ மன்னர்கள் மேற்கொண்ட செயல்களுள் ஒன்று ‘துலாபாரதானம்’ இது குறித்து கல்லெட்டறிஞர் கோவிந்தராசன் கூறும் செய்தி வருமாறு:

அரசனும் மிக்க செல்வரும் இம்மை மறுமைப் பயன்கருதி வேதியர்க்குச் சடங்கின் வழிச் செய்யும் பெருந்தானங்களில் ஒன்றாகும். இத்தானம் ஆண்கள் மட்டுமே செய்யத்தகுந்ததென்பதாக ‘துலாபுருஷதானம்’ என்று ஆகமம் கூறும்.

துலாபாரதானம் செய்யும் அரசன் புதிதாக மண்டபம் ஒன்றினை அமைத்து, அதன் நடுவே துலாக்கோல ஒன்றை நிறுத்தி, அத்துலாக்கோலை அலங்கரித்து, வேதியர்களைக் கொண்டு, வேள்வியாசிரியன் முன்னர் ஆகுதி முதலிய கிரியைகள் செய்து துலாக்கோலை வழிபட்டு, ஒரு தட்டில் அமர்ந்து கொள்வான். அவன் எடைக்குச் சரியாக மற்றோர் தட்டில் பொன்னை நிரப்புவார்கள். பின்னர் அப்பொன்னில் பாதியை வேள்வியாசிரியனுக்கும் மிகுதியைத் திருகோயில்கட்கும் வேதியர்கட்கும் அரசன் தானமாக் கொடுப்பான். இவ்வாறு செய்தவன் மிக்க புகழுடன் ஆயுளையும் பெற்று, திருமாலின் பதம் புகுவான் என்பது அருமறை வழக்காம்.

இவ்வாறு துலாபாரதானம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளத் தேவையான பொருளை மக்களிடம் வரி வாங்குவதன் வாயிலாகவே பெற்றுக் கொண்டனர். இவ்வரி ‘துலாபார வரி’ எனப்பட்டது.

நிலத்தில் விளையும் பயிர்களுக்கேற்ப நிலவரி விதிக்கப்பட்டது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 22 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (கி.பி.1289-90)

ஆடிக்குறுவை விளைந்த நிலத்துக்கு

தினை வரகு விளைந்த நிலத்துக்கு

மஞ்சள் கருணை விளைந்த நிலத்துக்கு

கரும்பு கொடிக்கால் விளைந்த நிலத்துக்கு

என்று பயிருக்கு ஏற்ப வரியை பாகுபடுத்துகிறது. இது போன்றே

வியாபாரிகள் பேர் ஒன்றுக்கு ஆறுபணம்

கைக்கோளர் தறி ஒன்றுக்கு ஆறுபணம்

சாவியர் தறி ஒன்றுக்கு ஆறுபணம்

வாணியர் தறி ஒன்றுக்கு ஆறுபணம்

என்று ஜடாவர்மன் இரண்டாம் சுந்தர பாண்டியன் காலத்துக் கல்வெட்டான்று (1289-90) பாகுபடுத்திக் குறிப்பிடுகிறது.

மாறவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டொன்று (1343-44) கால்நடை வளர்க்கும் மன்றாடிகள் ஆண்டொன்றுக்குச் செலுத்த வேண்டிய வரியை

பத்துமாட்டுக்கு ஒரு பணம்

அஞ்சு எருமைக்கு ஒரு பணம்

ஐம்பது ஆட்டுக்கு ஒரு பணம்

என்று வரையரை செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது.

இதுபோன்றே ‘வான்பயிர்’ ‘புன்பயிர்’ என்று பயிர்களை இரண்டாகப் பகுத்துள்ளனர். வான்பயிர் என்பது வளமான பகுதியில் வளர்வது. தெங்கு, வாழை கொழுந்து, மஞ்சள், இஞ்சி, கருணை, கரும்பு, செங்கமுநிர் என்பன வான்பயிர்கள் என்ற வகைமையில் குறிப்பிடப்படுகின்றன. புன்பயிர் என்பது மழையை எதிர்நோக்கி வளரும் புன்செய் நிலப்பயிர்களாகும். புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு (சோளம்) ஆமணக்கு, பருத்தி, வழுதலை, பூசணி, எள்ளு, கொள்ளு பயறு அவரை துவரை என்பன புன்பயிர்களாகும்.

(செம்மலர் செப்டம்பர் 2011 இதழில் வெளியானது)


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16571:-2&catid=25:tamilnadu&Itemid=137







Comments