நயமான ஊடல்-இலக்கிய ரசம்.




பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் புதல்வனைத் தூக்கி விளையாடினான்.. தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை.. பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப் பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும் நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்..

அழகான உவமை.

பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு,

ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது!

அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன!

இக்காட்சியானது புகழ்பெற்ற ஆடுமகளின் அழகிய நெற்றியில் தாழும்படி

அழகுடன் செருகி இருந்த “வயந்தகம்“ போல இருந்தது!

இத்தகைய குளிந்த துறையினைக் கொண்ட ஊரனே கேள்...

நயமான ஊடல்.

பரத்தையர் அணிந்த அணிகளோடு இங்கு வந்து நீ எம் புதல்வனைத்
தூக்கவேண்டாம்...

மணியை ஒத்த அவனது சிவந்த வாயிலிருந்து ஊரும் நீரெல்லாம் உன் மார்பில் அணிந்த சந்தனத்தை அழித்துவிடும். பிறகு உன்னை அனுப்பிய பரத்தை நீ வேறு மகளிரோடு கூடினாயோ என்று வருந்துவாள் அல்லவா? எம் புதல்வனை நீ தழுவுதல் வேண்டாம். அவன் உன் மார்பில் அணியப்பட்ட வடங்களாகிய முத்தாரத்தைப் பிடித்து அறுப்பான். பின்.. உன் பரத்தையர் அவரிட்ட அடையளம் காணாது... உன்னோடு ஊடிவிடுவார்களல்லவா?

எம் புதல்வனை நீ தேடி எடுத்துக்கொள்ளாதபோதும் அவன் உன்னிடம் வருதல் கண்டாலும் அவனைத் தூக்கிக்கொள்ளாதே.. நின் தலையில் வண்டுகள் ஒலிக்கும் மலர்க்கொத்துகள் அணிந்துள்ளாய்! அவன் அம்மாலையை அறுப்பான். உன்னைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை
அறிய அடையாளமாக வைத்த மாலை அழகிழந்திருப்பதை அறிந்து அப்பரத்தையர் உன் மீது சினம் கொள்வாள் அல்லவா?

மலர் போல அழகிய கண்களைக் கொண்ட புதல்வனைப் பொய் பல சொல்லிப் பாராட்டி அவனைவிட்டு நீங்காமலும்... உன் பரத்தையர் உனக்கு அடையாளமாக அணிவித்து அனுப்பிய மாலை, அணிகலன், சந்தனம் உள்ளிட்டவை சிதையாது அவனிடமிருந்து பாதுகாத்தும் உன்னால் இருக்கமுடியாது அதனால் நீ எம் வாயிலில் நிற்காதே.. நின்றால் அவன் உன் அணியைச் சிதைப்பான்...

அதனால் எம் புதல்வனை எம்மிடம் தந்துவிட்டு நீ மீண்டும் பரதையரிடமே செல்வாயாக..... என்றாள் தலைவி..

பாடல் இதோ..

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும்
தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின்
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ;
புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்;
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ;
கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;
'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின்
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ;
என ஆங்கு
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

கலித்தொகை -79

ஊடற் காலத்தே தலைவி தலைவனைச் செல்க எனக் கூறிவிடுத்தனள். தலைவன், இடமும் காலமும் பற்றி அறிந்து இனிச் செல்லான், உடன் இருப்பான் என்ற நிலையில் ஊடல் உள்ளத்தால் கூடப் பெறாதாள் செல்க எனக்கூறி விடுத்து ஆற்றினள்.

பாடல் வழியே..தலைவன் பரத்தையரிடம் செல்வது சங்ககால வழக்கமாக இருந்தது என்பதையும் அதனைச் சமூகம் தண்டிக்காவிட்டாலும். குடும்பத் தலைவி விரும்பவில்லை என்பதையும் பாடல் சுட்டுகிறது. தாமரை மலர் மீது நெற்கதிர்கள் தலைசாய்ந்திருப்பது ஆடுமகளின் நெற்றிச்சுட்டி போல இருந்தது என்ற உவமை மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது. தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டாலும் நயமாகப் பேசும் விதம் தலைவன் தன் தவறை உணர தக்க கருவியாக அமைகிறது.

தமிழ்ச் சொல் அறிவோம்:

இமிழ்தல் – ஒலித்தல்
செரிஇய - செருகிய
வயந்தகம் – நெற்றிச்சுட்டி
பல்காழ் – பல்வடம் (அணிகலன்)
காய்ககுவள் – வருந்துவள்.

முனைவர் இரா.குணசீலன்

Comments