வெட்கப்பட்ட ஆறு!-இலக்கிய ரசம்.தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும்அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்..

எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….
எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!
மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!
உடல் பாழ்பட பசலையும் படர்ந்தது!
உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!

(புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுபோலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள்ளது.)

இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.

கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?

நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!
என்கிறாள்.

(கடன்கொடுத்தவரைப் பார்த்தவுடன் கடன் வாங்கியவர் எப்படியாவது தன்னை மறைத்துக்கொண்டு தப்பிஓட முயல்வாரே அதுபோல ஆறும்,
அவரை மடக்கிப் பிடிப்பாரே கடன் கொடுத்தவர் அதுபோல தலைவியும் இங்கே காட்சியளிப்பதும் ஒப்புநோக்கத்தக்கனவாக உள்ளன.)

ஆறு மலர்களைச் சுமந்து வருவதும்
உடல் மெலிதலும் இயல்பானவையே என்றாலும்..

தலைவி அருவியிடமும், உடலிடமும் இவ்வாறு பேசுவது இவளது ஆற்றாமையையே உணர்த்துவதாக இருந்தாலும் இவளது நிலையைக் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.

முனைவர் இரா.குணசீலன்
Comments