மலரினும் மெல்லியது காமம்-இலக்கிய ரசம்.சிறிய கூதளச்செடிகள் காற்றில் ஆடும் பெரிய மலை! அங்கு ஒரு பெரிய தேனடை! அதைக் கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல...

என் காதலர் என்னை நினைக்கவோ, விரும்பவோ இல்லை, எனினும் அவரை பலமுறை காண்பது கூட என் உள்ளத்துக்கு இனியதே!

அவரைக் இப்போது காணாததால் அந்த இன்பமும் இப்போது எனக்கு இல்லாமல் போனது என்று தன் ஆற்றாமையைத் தோழியிடம் புலப்படுத்துகிறாள் தலைவி.

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.

குறுந்தொகை 60
பரணர்.

(பிரிவிடை ஆற்றாமையால் தலைவி தோழிக்கு உரைத்தது.)

பாடல் வழியே..

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல என்று இன்றுவரை வழங்கப்பட்டுவரும் உவமை குறுந்தொகையிலேயே இடம்பெற்றுள்ளமை அறிந்துகொள்ளமுடிகிறது.

தலைவன் தன்மீது பற்றில்லாமல் பரத்தையை நாடிச் செல்கிறான் என்பதைக் குறிப்பால் உணர்ந்த தலைவி, “பரத்தையர் என் காதலரைக் கூடினால் கூடக் கிடைக்காத இன்பம் நான் அவரைக் காண்பதாலேயே கிடைக்கிறது“என்கிறாள். இது தலைவியின் இயலாமை தந்த வலியின் புலம்பல் என்று மட்டும் காணாது. மலரினும் மெல்லிது காதல் அது உடலைவிட, உள்ளத்தையே அதிகம் விரும்பக்கூடியது என்ற கருத்தை எடுத்தியம்புவதாகவே இப்பாடலைக் கொள்ளமுடிகிறது.

இந்த சங்கஇலக்கியப்பாடல், நினைவுபடுத்தும் திருக்குறள்கள் இரண்டு.

1. மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் ( 1289) 

காமம் மலரை விட மென்மையானதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்லபயனைப் பெறக்கூடியவர் சிலரே.

அந்த சிலருள் குறுந்தொகைத் தலைவியும் ஒருத்தி என்று பாடல் வழியே உணரமுடிகிறது.

2. பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று ( 913 ) 

பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது என்ற வள்ளுவர் சுட்டும் பொருட்பெண்டிர், சங்ககாலப் பரத்தையரோடு ஒப்பிடத் தக்கவர்களாக உள்ளனர்.

குறுந்தொகைப் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

On the tall hill
where short stemmed night shade quivers,
a squatting cripple
sights a honey hive,
above,
points to the honey,
cups his hand ,
and licks his fingers:
so too ,
even if one’s lover
doesn’t love or care
it still feels good
inside
just to see him
now and then.

Poet : Paranar

Translated by A.K. Ramanujan 

முனைவர் இரா.குணசீலன்


Comments